மூக்குச் சிவந்து, காரத்தினால் வியர்வை அரும்பி என்று அவனுக்குள் இருந்த காதலனைத் தட்டி எழுப்பிக்கொண்டிருந்தாள் ஆர்கலி.
“உறைக்குது(காரம்) எண்டால் பிறகு என்னத்துக்கு அதைச் சாப்பிடுறாய்?” முதல் காரியமாக அவளின் தட்டினை நகர்த்தி வைத்துவிட்டு பிரெஷ் ஜூஸ் வரவழைத்துக் கொடுத்தான்.
“வீணாக்க வேண்டாம் எண்டுதான்.” வந்து இறங்கியதற்கு அவள் பேசிய முதல் வார்த்தைகள் இவைதான்.
“வீணாகாது!” என்றான் அவன்.
அது எப்படி? கேள்வியாக நோக்கிவிட்டு ஜூசினைப் பருகினாள் ஆர்கலி.
“கேக் மாதிரி ஏதாவது கொண்டுவரச் சொல்லவா?”
மறுத்துத் தலையசைத்தாள். ஆனாலும், கவனம் மட்டும் எப்படி அவளின் உணவு வீணாகாமல் போகும் என்பதிலேயே இருந்தது.
அவன் தன்னுடையதை உண்டுவிட்டு அவளுடைய தட்டினை எடுத்துச் சாவகாசமாக உண்ணத் தொடங்கினான். அவள் விழிகள் விரிந்தன. என்ன செய்கிறான் இவன்? அவளின் விழிகளை அவன் பார்வை எதிர்கொண்ட கணத்தில் தடுமாறிப் பார்வையைத் தளைத்துக்கொண்டாள்.
‘இதுக்கே இந்தப்பாடா!’ இன்னும் எவ்வளவு இருக்கு என்று பார்த்தான் அவன். அவளின் அந்தச் சின்ன வெட்கத்தில் இந்த இரண்டு நாட்களில் முதன் முறையாக அவன் உதட்டினில் சின்ன முறுவல் அரும்பிற்று. ரசனையோடு அவளைப் பார்த்தான். அதை உணர்ந்து உதடு கடித்தாள் அவள்!
அவனுக்குள் உல்லாசம் பொங்கிற்று. அவள் மீது அதுவரை இருந்த குமுறல்கள் கூட அடங்கிப்போனதாய் உணர்ந்தான். மனதும் இலேசாகிற்று! சின்ன செய்கைதான். அவர்களுக்குள் இருந்த நேசத்தைத் தட்டி எழுப்பிவிட்டிருந்தது.
அக்கா சொன்னதுபோல அவள்தானே அவனது உயிர். காலத்துக்கும். அதைவிட, யாரும் சொல்லாமலே அவளாகவே அவனைத் தேடி வந்திருக்கிறாளே.
அவளுடைய அன்னை இதற்குச் சாதாரணமாக ஒத்துக்கொண்டிருக்க மாட்டார். அவரிடம் பிடிவாதம் பிடித்துத்தான் வந்திருப்பாள். பெரிய சண்டையே நிச்சயம் நடந்திருக்கும். அவனுக்காக அவள் அவரோடு சண்டையிட்டிருப்பாள் என்கிற விடயம் ஏதோ ஒரு விதத்தில் அவனை அமைதிப்படுத்தியது. கோபங்களை ஆற்றியது.
அதில், அவளையே பார்த்தபடி உண்டான். அவள் தடுமாறுவது தெரிந்தது. அவனுக்குள் ஒரு உற்சாகம். தைரியம் இருந்தா என்ர கண்ணைப் பாரடி என்று தனக்குள்ளேயே அவளோடு சண்டையிட்டான்.
உண்டு முடித்ததும் வா என்று தானாகவே அவளின் கரம் பற்றி அழைத்துக்கொண்டு போனான்.
“நானே நடந்துவருவன்!” கையினை விடுவிக்க முயன்றபடி சொன்னாள்.
“கேக்கேல்ல!”
“எனக்கு நடக்கத் தெரியும்.”
“திரும்பவும் கேக்கேல்ல!” அவளின் பக்கமாய்க் குனிந்து சொன்னான் அவன்.
அவளிடம் வம்பு செய்கிறான் என்று அப்பட்டமாய் விளங்க முறைத்தாள் ஆர்கலி.
வரும்போதே திரும்பிச்செல்வதற்கும் ட்ரெயினுக்கு முன் பதிவு செய்துவிட்டுத்தான் வந்திருந்தான். எனவே சிரமமே இல்லாமல் அவளோடு சென்று அவர்களுக்கான பெட்டியில் அமர்ந்துகொண்டான்.
அருகருகே அமர்ந்திருந்தார்கள். மனங்களோ விரிசலில் கட்டுண்டு பிரிந்து கிடந்தது. உயிராய் நேசிக்கும் அவனுடைய காதலி அவனோடான எந்த நேச வார்த்தைகளுக்கும் தயாரில்லாமல் கைப்பேசியில் யாருக்கோ மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்தாள்.
ஏதோ ஒரு கணத்தில் அவனுடைய கட்டுப்பாட்டின் எல்லை முடிவடைந்தபோது வாயைத் திறந்திருந்தான் பிரணவன்.
“ஏன் பொம்மா, எப்பிடி இருக்கிறீங்க பிரணவன் எண்டு உன்னால ஒரு வார்த்தை கேக்க முடியேல்ல என்ன?” என்றான் மனத்தாங்கலாய்.
இரண்டு வருடப் பிரிவின் பின்னர் கண்ட காதலியை உரசிக்கொள்ளும் தூரத்தில் வைத்துக்கொண்டு, கட்டியணைக்காமல் முத்தமிடாமல் யாரோ போன்று இருக்க முடியவில்லை அவனால்.
அவனைத் திரும்பிப் பார்த்தாள் அவள்.
“நீங்க கேட்டீங்களா? இல்ல, பாத்ததும் ஒரு சிரிப்பாவது சிரிச்சீங்களா?” நிதானத்தோடு கேட்டாள்.
அதுதானே என்று வாயடைத்துப் பார்த்தான் அவன். அவனும் கேட்கவில்லை என்பதே அவனுக்கு அப்போதுதான் புத்தியில் பட்டது.
“அதுக்காக நீயும் கதைக்காம இருப்பியா?”
“உங்களோட கதைக்காம என்னால இருக்கேலாது.” கசப்போடு சொன்னாள்.


