இலக்கியாவின் சோர்ந்த தோற்றமும் கண்ணீரும் அஜியை மிகவும் கவலைகொள்ள வைத்தது. இருபத்தியிரண்டு வயதுதான். ஆனாலும் பல விசயங்களில் நல்ல முதிர்வோடு நடந்துகொள்வதைப் பார்த்து வியந்திருக்கிறாள், அஜி.
அஜி, மாறனைத் திருமணம் செய்தபின்னர் வெளிநாடு வந்தவள், ஐந்து வருடங்களுக்கு முன்னர். யாழ்ப்பாணத்திலிருக்கையில், வெளிநாட்டுப் பிள்ளைகள் அவர்களின் வளர்ப்பு என்ற கதை வருகையில் பொதுவாகவே அப்படி இப்படி என்றெல்லாம் நினைப்பதுவும் கதைப்பதுவும் உண்டே. அவர்களின் உணவிலிருந்து உடை, நடத்தை, பழக்கவழக்கங்கள் என்றெல்லாம் விமர்சிப்பதும் உண்டு. சொந்த மொழி தெரியாது, நம் கலாச்சாரம் அறியாது, எல்லா அடையாளங்களையும் தொலைத்துவிட்டு மேலை நாட்டு நாகரிகத்தில் மூழ்கிக் கிடப்பதுபோன்றதொரு மாயவலை அவர்கள் மீது வீசப்படுவதும் உண்டே!
அப்படிக் கேட்டுக் கேட்டு வளர்ந்த அஜி, தன் கணவன் வீட்டுச் சொந்தத்தில் உள்ள இளையவர்களைப் பார்த்தபின்னர் உண்மையிலும் வியந்திருந்தாள். அதை வாய்விட்டே மலரிடமும் கூறியிருந்தாள். கேட்டுவிட்டு வாய்விட்டுச் சிரித்திருந்தார், மலர்.
“நான் வெளிநாடு வரேக்க அம்பது வயது பிள்ளை. அதுவரைக்கும் நம்மட பழக்க வழக்கங்களில ஊறிபோயிருந்த நான் இண்டைக்கும் என்ன விலை எண்டாலும் தமிழ்க் கடையில மீன், மரக்கறி வாங்கிச் சமைச்சாத் தான் செமிக்கும் எண்டளவில தானே இருக்கிறன். அப்படி இங்க வந்திருக்கிற சனமெல்லாம் நினைக்கப் போய்த்தான் இண்டைக்கு நம்மட ஊர் போல இங்கயும் இருக்க முடியுது.
அப்படி இருக்க, பிள்ளைகளிட வளர்ப்பு மட்டும் எப்பிடி மாறும் சொல்லு பார்ப்பம்? என்ர சின்னப் பேரன், அதுதான் உன்ர மகன் கவினத் தவிர மிச்சவே என்ர பார்வையில வளர்ந்த பிள்ளைகள். உன்ர மனுசன யாழ்ப்பணத்தில எப்பிடி வளர்த்தனோ அப்பிடித்தான் அவையளையும் வளர்த்தன்.
என்னைப் போல வயசான மனுசர் இல்லாத வீடுகளிலும் வேலைக்குப் போற தாய் தகப்பன் கண்ணில எண்ணெய் ஊற்றிக்கொண்டு கவனமாய்ப் பிள்ள வளர்க்கிறவை தெரியுமோ? அப்படியிருக்க, அங்க இங்க கண்டபடியும் வளருதுகள் தான். அதுகள் இங்க எண்டில்ல எங்க இருந்தாலும் கண்டபடிதான் வாழுங்கள். இப்ப ஊர்ல என்ன திறமே யோசிச்சுப்பார். ஒரு பக்கம் கண்ணும் கருத்துமா வளருதுகள். கிடைக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்குப் பயன்படுத்தி நல்ல மனுசரா நேர் சீரா இருக்குது எண்டால், இன்னொருபக்கம் தறுதலைக் கூட்டம் குடியும் கூத்துமா எல்லா அலையுதுகள்? சீரழிஞ்சு திரியேல்லை எண்டு உன்னால சொல்ல முடியுமா சொல்லு பார்ப்பம்?” என்று கேட்ட போது அவளால் அதை மறுக்கவே முடியவில்லை.
“அப்பிடித்தான் எல்லா எல்லா இடமும். இதுக்க அவனவன் பொசிப்பும் எரிச்சலும் கொண்டு அலைஞ்சு வெளிநாட்டான் உள்நாட்டான், கனடாக்காரன், அமெரிக்காக்காரன், லண்டன் பிரான்ஸ்காரன் அப்பிடி இப்பிடி மாறி மாறி சேற்றை வாரித் தெளிக்க வேண்டியதுதான். ” என்றிருந்தார் மலர்.
மாறி மாறி அத்தனை பேர் கண்டிப்பும் அறிவுரையுமாகக் கதைக்கக் கதைக்கக் கண்ணீர் விட்டாளேயொழிய ஒரு வார்த்தை கதைக்கவில்லை, இலக்கியா. அதைப் பார்க்கப் பாவமாக இருந்தது, அஜிக்கு. அவளாக இருந்தால் விருட்டென்று எழுந்து சென்று அறைக்கதவை அடித்துச் சாத்திவிட்டுச் சரி முடங்கி இருப்பாள்.
அவளைப்போலவே மலருக்கும் இருந்திருக்கும் போல! “சரி சரி… இனி எல்லாரும் போய் உங்கட உங்கட வேலைகளைப் பாருங்க. திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டு. என்ர குஞ்சு ஏதோ ஆசையில போய்ட்டாள். இப்பிடியாகுமெண்டு தெரிஞ்சிருந்தாப் போகப் போறாளா என்ன? இனிமேல் எது செய்யமுதலும் ஒண்டுக்குப் பாத்தா யோசிப்பாள் எல்லா? விடுங்கோ!” கடிந்து கொண்டே இலக்கியாவின் அருகில் வந்தமர்ந்தார்.
“சொல்லுறனே…போங்கோ! அவரவர் வேலைகளைப் பாருங்க!” மீண்டும் ஒரு அதட்டலில் எல்லாரும் கலைந்து சென்றார்கள்.
மலர் அமர்ந்த மறுகணம் இலக்கியாவின் தலை அவர் மடிக்குள் புதைந்துகொண்டது. பரிவோடு பேத்தியின் தலையை வருடிக்கொடுத்தார், மலர்.
அப்போது உள்ளே நுழைந்தா சுதர்சனும் மாறனும், “என்னப்பு அந்தத் தம்பியக் கண்டீங்களா?” மலர் கேட்க, “இல்லம்மா, நாங்க போகேக்க அங்க ஒருத்தரும் இல்ல; போய்ட்டார் போல!” என்றபடி அமர்ந்தார்கள்.
“ஓ!” என்ற மலர், மாறனின் பார்வை இலக்கியாவில் கோபத்தோடு படியவும், “நீ எழும்பு பிள்ள, உள்ள போய் உன்ர அலுவலப் பார்!” என்றதும் மெல்ல எழுந்து அறைக்குள் புகுந்துகொண்டாளவள்.
மதியம் கடந்து மழை விட்டிருந்தது. காற்றும் தணிந்திருந்தது. மதிய உணவை முடித்துக்கொண்ட வேகத்தில் பெரியவர்களோடு நான்கைந்து பேராகச் சேர்ந்து போட்டிங் போயிருந்தார்கள், இளையவர்கள். கண்ணுக்கெட்டிய தூரத்தில் கானோ வலித்தார்கள். இலக்கியா மட்டும் அறைக்குள் அடைந்து கிடந்தாள்.
“இலக்கிம்மா, ரெண்டு மணியாகுது எழும்பிச் சாப்பிடு!” தாய் எழுப்ப எழும்பியவள், தாயின் கண்டிப்பில் கொஞ்சமாக உள்ளே தள்ளினான்.
“வந்ததே ஒரு கிழமைக்கு. அதில இதெல்லாம் தேவையா? இப்பப் பார், எல்லாரும் சந்தோசமா இருக்க, நீ மட்டும் தனிய அறைக்குள்ள இருக்கிற.” கடிந்து கொண்ட தாய், “வந்து வெளில இரு! காச்சல் இல்லையே!” தொட்டுப்பார்த்தவர், “இப்பத் தலையிடி ஏதும் இல்லையே!” பரிவோடு கேட்டு, மகள் முகத்தை வருடினார்.
“இல்லம்மா…தலையிடி காச்சல் எல்லாம் இல்ல. ஆனா உடம்பு கையெல்லாம் பயங்கரமா வலிக்குது. இன்னும் கொஞ்சநேரம் படுக்கப் போறன்.” மீண்டும் கட்டிலில் சுருண்டு விட்டாள்.
“எதிர்க்காத்தில துடுப்பு வலிச்சதால தான் கை நோ. அதெல்லாம் சுகம் வந்திரும்.” என்ற தாய், “கொஞ்ச நேரம் வெளில வந்திரு!” மீண்டும் அழைத்தார்.
“கொஞ்சத்தில் வாறன் மா.” அவள் சொன்னதும், “நாங்க முன்னுக்கு மரத்தடியில தான் இருக்கிறம் கொஞ்ச நேரத்தில வா.” என்றுவிட்டு அவர் விலக, அப்படியே படுத்திருந்தவளால் காலையில் நடந்த நிகழ்விலிருந்து அவ்வளவு சுலபமாக வெளிவர முடியவில்லை.