‘நித்தி, எங்கடா இருக்கிறாய்?’ பிறந்து, முகம் பார்க்கத் தொடங்கிய காலத்திலிருந்தே அரவணைத்துப் போன நண்பனின் அருகாமைக்காக அவளின் ஆழ்மனது மிகவுமே ஏங்கியது.
எங்கே இருக்கிறானோ? எப்படி இருக்கிறானோ? அவனுக்கும் ஏதும் இன்னல்களோ? அவள் உயிராய் நேசிக்கும் எல்லோருமே எங்கோ தொலைவில் இருந்து அவளை வதைத்துக்கொண்டிருந்தனர். தேடிவந்த சொந்தம் கூடத் துரத்தியடிக்கிறது. விழியோரம் அரும்பிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். கண்ணீர் எதற்கும் மருந்தல்லவே!
மகளுடன் அனைத்தையும் பகிர்ந்துகொண்டது யாதவிக்குச் சற்றே தெம்பளிக்க வங்கியில் அன்றைக்கே அப்பொய்ன்மெண்ட் வாங்கிவிட்டு மெயில்களைச் சரிபார்த்தார். பலர் பணம் வைப்புச் செய்துவிட்டதை அறிவித்துப் பதில் அனுப்பி இருந்தனர். மிகுதிப்பேர் வரும் நாட்களில் வைப்புச் செய்யப்படும் என்று தகவல் தந்திருந்தனர். ஒருசிலரிடம் இருந்து மட்டுமே பதில் இல்லை. அனைத்துத் தரவுகளையும் தனித்தனியே எடுத்து வைத்துக்கொண்டு, கணவரைச் சென்று பார்த்து வைத்தியரோடும் கதைத்துவிட்டு நேராக வங்கிக்குச் சென்றார்.
கணவரின் நிலையையும் சொல்லி, வைப்புச் செய்யப்பட்ட பணத்தையும் சுட்டிக்காட்டி, வைப்புச் செய்வதாகச் சொன்ன மெயில்களையும் காட்டினார். கூடவே, பணத்துக்கு விரைவாக ஏற்பாடுகள் செய்துகொண்டிருப்பதாகச் சொல்லி மேலும் கொஞ்ச நாட்கள் அவகாசம் தரும்படி கேட்டுக்கொண்டார்.
அவர்கள் நெதர்லாந்துக்கு வந்த நாட்களில் இருந்தே அதே வங்கி என்பதாலும் வங்கி மேலாளரைத் தனியாகக் கணவருக்கு நன்கு பழக்கம் என்பதிலும், “உங்களின் கணவரின் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தபோதும், வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் என்னால் இயங்க முடியும் திருமதி பிரதாபன்.” என்று தன்மையாகவே தன் நிலையை எடுத்துரைத்துவிட்டு,
“உங்களுக்கு வரவேண்டிய வரவுகளை உங்களின் பிரைவேட் எக்கவுண்டுக்கு வருகிறபடிக்கு அந்த எக்கவுண்ட் நம்பரை அவர்களுக்கு உடனடியாக அனுப்பி வையுங்கள். அந்தப் பணத்தோடு தேவையான மிகுதிப் பணத்தையும் பிரட்டி அதே பிரைவேட் எக்கவுண்டில் இருந்து முதலில் எப்படியாவது வீட்டு லோனை அடையுங்கள். அப்படிச் செய்தால் வீட்டுக்கு ஆபத்து வராது.” என்று ஒரு வழியைக் கண்டுபிடித்துச் சொன்னார் அவர்.
‘அட ஆமாம்! அப்படிச் செய்யலாமே!’ என்றுதான் யாதவியும் அந்த நிமிடத்தில் நினைத்தார். “நிச்சயமாக! அப்படியே செய்கிறேன்!” என்று, ஒரு வழி கிடைத்த ஆசுவாசத்தோடு உரைத்தார்.
“ஆனால், உங்கள் கணவரின் வங்கிக்கணக்கு மைனஸ் இல்லாது போகிறவரைக்கும் முடக்கப்பட்டுத்தான் இருக்கும். அப்படியே இனி வருகிற ‘பில்’களையும் கட்டமுடியாது. நீங்கள் தான் உங்களின் பிரைவேட் எக்கவுண்ட் மூலம் அவற்றைக் கட்டவேண்டும். போட்டுக்காக வாங்கிய லோனும் மாதா மாதம் கட்டவேண்டிய தொகைதான். அதையும் கவனித்துக்கொள்ளுங்கள்.” என்று அவர் சொன்னபோது கேட்டுக்கொண்டார்.
எந்தக் கடனையும் வங்கி தள்ளிப்போடவில்லைதான். ஆனால், எல்லாம் கைமீறிப் போய்விட்டதோ என்கிற பயத்தையும் பதட்டத்தையும் நீக்கி, இந்தப் பணப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு என்ன செய்யலாம் என்று நிதானமாகச் சிந்திக்கும் நிலைக்கு யாதவியைக் கொண்டுவந்தார்.
“அடுத்த மாதமும் பிறக்கப் போகிறது!” என்பதையும் நினைவூட்டி அனுப்பிவைத்தார் வங்கி மேலாளர். அதாவது, அடுத்த மாதத்துக்கான மின்சார பில்லில் இருந்து மாதாந்த தவணையாகக் கட்டவேண்டிய செலவுகளும் சேர்ந்துகொள்ளப் போகிறது என்கிறார்.
தன் லொக்கரை பார்ப்பதற்கு அனுமதி பெற்றுச் சென்று பார்த்தார். அப்படியே இருந்த நகைகளைக் கண்டதும் கணவரின் மீது கோபம் கூட உண்டாயிற்று. தனக்கும் மகளுக்கும் மிக அவசியமானவை என்று பட்டவற்றை வைத்துவிட்டு மிகுதி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டார். சமாளிக்கவே முடியாது என்றால் அவற்றையும் விற்பதைப் பற்றி யோசிக்கவே மாட்டார் தான். என்றாலும் இப்போதைக்கு இருக்கட்டும் என்று வைத்துவிட்டு சஹானாவின் சேமிப்பைப் பார்க்க அதிலும் ஒரு ரூபாயும் எடுக்கப்படவில்லை. 8000 யூரோக்கள் இருந்தது.
உடனேயே அதை அப்படியே வீட்டு லோனுக்கு அனுப்பிவைத்துவிட்டு மிகுதியை மைனஸை நிரப்புவதற்குப் போட்டுவிட்டு நேராக நகைக் கடைக்குச் சென்றார்.
வந்த நாட்களில் இருந்து வாங்கிய நகைகள் என்பதில் 30000 யூரோக்களைத் தாண்டியது. என்ன, அத்தனை பவுன்களையும் விற்று முடிப்பதற்குள் முற்றிலுமாக ஓய்ந்து போயிருந்தார். ஹொலண்டில் இருந்த நகைக் கடைகள் போதாது என்று ஜெர்மனியில் அமைந்திருந்த கடைகளிலும் பிரித்துப் பிரித்து விற்று முடித்தபோது அன்றைய நாளே ஓடிப்போயிருந்தது.
என்னதான் சொன்னாலும் வந்த நாளில் இருந்து பார்த்துப் பார்த்துச் சேமித்த நகைகளைப் பேரம்பேசி விற்றுவிட்டு அதைப் பணமாகப் பெறும்போது கையும் மனமும் கனத்துப்போவதைத் தவிர்க்கவே முடியவில்லை. அவருக்கே இப்படி என்றால், நிச்சயமாக இதைப் பிரதாபனால் தாங்கிக்கொண்டிருக்கவே முடியாது! அதனால்தான் தொடவில்லை என்று இப்போது பிரதாபனைப் புரிந்துகொள்ள முடிந்தது.
நேரே வீட்டுக்குக் காரை விட்டவர் இலங்கையில் நடுச்சாமம் ஆகியிருக்கும் என்பதில் அவர்களுக்கு அழைக்காமல் ஃபோனை சார்ஜுக்குப் போடப்போனபோது மகளின் நினைவு வந்தது.
எப்போதுமே தன்னதைச் சார்ஜில் போடும்போது அவளுடையதையும் எடுத்துப் போடுவதுதான் அவரின் பழக்கமாக இதுவரை இருந்திருக்கிறது.
அந்த நினைவில் மகள் மீது பெருகிய பாசத்தோடு தன்னோடு அவள் நிற்கும் ஃபோட்டோக்களைப் போனிலேயே எடுத்துப் பார்த்தார்.
மிகுந்த செல்லம் என்று சொல்வதைக்காட்டிலும் ஒற்றையாக இருப்பதாலோ என்னவோ அனைத்துச் சலுகைகளையும் அளவுக்கு அதிகமாகவே எடுத்துக்கொள்வாள். அதற்கு வலுச் சேர்ப்பதுபோல்தான் ரட்ணம் குடும்பமும் இன்னொரு வீடாக அவளுக்கு அமைந்து போயிற்று. கூடவே நித்திலனும். அப்படிச் செல்லம் கொஞ்சிக்கொண்டு திரிந்தவள் இன்றைக்கு எத்தனை பெரிய காரியத்தைச் சாதிக்கச் சென்றிருக்கிறாள். பெருமை பொங்க அவளுக்கு ஒற்றை முத்தத்தைப் பரிசளித்துவிட்டு, களைப்புத் தீர குளித்து உடைமாற்றி, வீட்டு வேலைகளைக் கவனித்து வயிற்றுக்கு உணவிட்டுவிட்டுக் கட்டிலில் சரிந்தார்.
போட் காரனுக்குப் பணம் கொடுக்காவிட்டால் கணவரை இன்னுமே மதிப்பின்றிப் பேசக்கூடும். இந்தத் தொழிலில் நாணயம் முக்கியம். பிரதாபன் காப்பாற்றி வைத்திருக்கும் பெயரைக் கெட்டுப்போக விட்டுவிடக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டார். அவனும் விடாமல் கடுமையான வார்த்தைகளால் பிரதாபனைச் சாடிக்கொண்டிருந்தான். அப்போதே, “நாளை உன்னைச் சந்திக்க வருகிறேன். எத்தனை மணிக்கு என்பதைத் தெரிவி!” என்று பிரதாபனின் கைபேசியில் இருந்தே அவனுக்குச் செய்தி அனுப்பிவிட்டுச் சரிந்துகொண்டார்.


