திடீரென்று யாரோ கதவைத் திறக்கும் ஓசையில் திரும்பிப் பார்த்த சஹானா, வேகமாக அறைக்குள் புகுந்தவனைக் கண்டு திகைத்தாள்.
வந்ததும் வராததுமாக அவளின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு வெளியே வந்து அறையின் கதவைப் பூட்டிய கையோடு அவளை எதிப்புறச் சுவரோடு சுவராகத் தள்ளினான் சஞ்சயன்.
“உன்ர முகத்தை பாக்கக்கூட விருப்பம் இல்ல எங்களுக்கு! பிறகும் எதுக்கு திரும்பத் திரும்ப வந்து நிக்கிறாய்!” மிகுந்த வெறுப்புடன் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் அவன்.
அவளின் இளமனது காயப்பட்டுப் போயிற்று. விழிகள் கலங்கிவிட, “ஏன் மச்சான் இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்க. ‘என்ர பெரிய மச்சான்’ எண்டு உங்களை பாக்க எவ்வளவு ஆசையா ஓடிவந்தனான் தெரியுமா? ஆனா நீங்க.. அந்தளவுக்கு நான் என்ன செய்தனான்?” ன்று குரலடைக்கக் கேட்டாள்.
“காணும் உன்ர நடிப்பு! நட!” என்றான் வெளி வாசலைக் காட்டி.
முகம் கருத்துப் போயிற்று அவளுக்கு. இருந்தாலும் விடாமல், “அப்பாவில பிழை இல்லை மச்சான். இங்க இருந்தா அப்பாவில இருக்கிற கோவத்துல அத்தை கலியாணம் கட்டமாட்டா எண்டுதான் அங்க போனவர். அதுவும் சரியான கவலையோடதான் போனவர். இப்ப வரைக்கும் அதை நினைச்சு துடிக்கிறார்.” என்று, தன் தந்தையை அவனுக்குப் புரிய வைத்துவிட முயன்றாள்.
“அப்பிடி துடிச்சபடியாத்தான் முப்பது வருசமாகியும் எட்டிப் பாக்காம இருக்கிறார் போல!” என்றான் அவன் வெறுப்புடன்.
“அது.. நான் என்னாலதான் மச்சான். நான் கவலைப்படுவன், உங்கட கோபத்தை தாங்க மாட்டன் எண்டு..” என்றவளின் பேச்சில் நக்கலாகச் சிரித்தான் அவன்.
“பிறகு எப்பிடி இப்ப மட்டும் விட்டவர்?”
அவர் விட இல்லையே. பேசக்கூட முடியாமல் கிடக்கிறாரே. அவளின் மனது ஊமையாக அழுதது. பதிலற்ற அவளின் நிலையை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “உன்ர பொய்ய நம்புறதுக்கு இங்க யாரும் இல்ல. மரியாதையா போ! போய் வேற யாராவது ஏமாந்தவன் இருக்கிறானா எண்டு பார்!” என்று துரத்தினான் அவன்.
இப்படி போ போ என்று இரக்கமே இல்லாமல் துரத்துகிறவனிடம் என்ன பேசுவது? “நடந்ததுகள மன்னிச்சு மறக்க மாட்டீங்களா? எனக்கு உங்க எல்லோரோடையும் இருக்கோணும் மாதிரி இருக்கே. கொஞ்சம் கூட பாசம் காட்ட மாட்டீங்களா?” இனியும் எப்படிக் கேட்பது என்று தெரியாமல் இறைஞ்சினாள் அவள்.
“பாசம் காட்டிப்போட்டு? உள்ளுக்க படுத்துக் கிடக்கிறாரே ஒருத்தர். அவரை மாதிரி என்னையும் என்ன சுயநினைவு இல்லாம கிடக்கச் சொல்லுறியா?” என்று கேட்டான் அவன். “மன்னிக்கிறதுக்கு உன்ன பெத்த மனுசன் என்ன சின்னக் காரியமா செய்தவர்? இளம் வயசில அடங்கி இருக்கேலாம எவளையாவது கூட்டிக்கொண்டு ஓடுறது. பிள்ளை குட்டி எண்டு பெத்தும் போடுறது. பிறகு சொத்துப் பத்துக்கு வெக்கமே இல்லாம வந்து நிக்கிறது. அதுக்கு பெயர் பாசம்! இத நான் நம்போணும்! ஏன் உன்ன பெத்த அவருக்கு இந்தப் பாசம் வரேல்லையாமோ? பெத்த தாய் தகப்பனை வந்து பாக்கவே இல்லையே. தைரியம் இருந்தா அந்த ஆளை இங்க வரச்சொல்லு! வந்து நிண்டு காட்டச் சொல்லு!” என்று சீறினான் அவன்.
“இப்பிடியெல்லாம் கதைக்காதீங்கோ பிளீஸ்! எங்களுக்கு உங்கட காசு ஒரு ரூபா கூட வேண்டாம். அங்க இருக்கிறதே எங்களுக்குத் தாராளமா காணும். அப்பாவை ஏற்றுக்கொள்ளுங்கோ. அந்தளவும் போதும் மச்சான்.” அவனின் வார்த்தைகள் உண்டாக்கும் வலியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கெஞ்சினாள் அவள்.
“ஏற்றுக்கொள்ள ஏலாது! வெளில போ! இப்ப நீ வருவாய். பிறகு அந்த ஆள் மனுசியோட வரும். அதுக்குப் பிறகு இருக்கிறதை சுருட்டிக்கொண்டு திரும்பவும் ஓடவோ?”
எப்படியெல்லாம் பேசுகிறான்? அவர்களிடம் போய் பேசவா என்று அரவிந்தன் மாமா கேட்டதற்குக் கூட மறுத்த அம்மா நினைவில் வந்தார். அவரை இவனுக்கு எப்படிப் புரிய வைப்பது?
“இதையே நானும் உங்களுக்கும் சொல்லலாம் தானே.”
அவன் விழிகளில் கூர்மையுடன் அவளை ஒருமாதிரியாகப் பார்த்தான்.
“சொத்துக்காகத்தான் கூடவே இருக்கிறீங்க. அதாலதான் என்னை வீட்டுக்கையே விடுறீங்க இல்ல எண்டு.” சொல்லி முடிக்க முதலே அவளின் கழுத்தைப் பற்றியிருந்தான் அவன்.
“என்னை என்னடி உன்ன மாதிரி ஓடிப்போன கூட்டத்துக்குப் பிறந்தவன் எண்டு நினைச்சியா? இல்ல நேர்ல வர தைரியம் இல்லாம மனுசிக்கு பின்னால ஒளிஞ்சு நிக்கிற பெட்டை எண்டு நினைச்சியா? பெத்த தாய் தகப்பன பாக்கத் துப்பில்லை. கூடப்பிறந்த தங்கச்சிக்கு சந்தோசமான வாழ்க்கை அமைச்சுக் குடுக்க வக்கில்லை. தன்ர சந்தோசம் மட்டும் முக்கியம் எண்டு வாழ்ந்த அந்த ஆளுக்குப் பிறந்த நீ, என்னைப்பற்றி கதைப்பியா?” சினமிகுதியில் சீறியவன் நேற்றைய இடத்திலேயே இன்றும் பற்றியதில் துடித்துப்போனாள்.
“மச்சான்! வி..டுங்கோ பிளீஸ்…”
சத்தம் கேட்டு ஓடிவந்த சஞ்சனா இந்தக் காட்சியைக் கண்டு அதிர்ந்துபோனாள். “ஐயோ அண்ணா! என்ன செய்றீங்க? விடுங்கோ! அவவுக்கு ஏற்கனவே காய்ச்சல். விடுங்கோ அண்ணா!” என்று அவன் கையை அவளின் கழுத்திலிருந்து பறித்தெடுத்தாள்.
வலியிலும் பயத்திலும் சுவரோடு சுவராகப் புதைந்து நின்றவளின் முகம் அவனது பிடியால் தக்காளிப்பழம் போன்று சிவந்துவிட்டிருந்தது.
“என்ன அண்ணா நீங்க? என்ன செய்றீங்க? இதுல ப்ச்! வரவர உங்களுக்கு பொறுமை இல்லாம போகுது!”


