ரோசி கஜனின் இயற்கை – 8(2)

   “எல்லாரும் ரெடியா?” என்றபடி வந்தான், மாறன்.

   “ம்ம்…இந்தா சாமான்களை ஏற்றுங்க.” என்ற மலர், “கவனம் தம்பிமார்; பிள்ளைகள் கவனம்; போறது வாறது தங்குறது சாப்பிடுறது எல்லாம் கவனம்.” 

  “அதெல்லாம் ஒண்ணும் யோசியாதீங்க அம்மா!” என்றபடி வந்தார், நாதன்.

  “எங்க இலக்கியா உள்ள போறீங்க? இனி வாங்க போகச் சரியாக இருக்கும்.” என்ற மாறன்  பயணப்பைகளை எடுத்துச் சென்று வைக்க உதவினான். 

  தயாராகி வந்த இலக்கியாவின் அன்னை, ” இந்தா உங்கட அண்ணா கதைக்கிறார், வெளிக்கிடுற நேரம் தானில்லாமல் வேலை இருக்கே எண்டு அவருக்குக்  கவலை.” கைபேசியை அங்கு நின்ற மைத்துனர்களில் ஒருவரிடம் கொடுத்துவிட்டு மலரிடம் விடைபெற்று ஏறிக்கொண்டார்.

   “ம்ம்…எல்லாரும் ஏறுங்க!” என்றுவிட்டு, “போயிட்டு வாறம் அம்மா; இங்க கவனமா இருங்க.” தானும் ஏறிய மாறன், “எங்க இலக்கியும் கவியும் இன்னும் வரேல்லையா?” வீட்டைப் பார்த்தான்.

   ஓட்டுநர் வண்டியை இயக்கி அவர்கள் வரும் வரை பார்த்திருக்க, “இந்தா வந்திட்டம்.” சகோதரிகள் இருவரும் ஓடிவந்தார்கள்.

   “எவ்வளவு வெள்ளனவே வெளிக்கிட்டாலும் கடைசிவரை வேலையிருக்கும் உங்களுக்கு.” என்ற மலர், இருபக்கமும் கட்டிப் பிடித்துக்கொஞ்சிய பேத்திகளுக்கு, மீண்டும் கவனம், பத்திரம் சொல்லிவிட்டு யன்னல்களால் எட்டிப் பார்த்த மற்றைய பேரப்பிள்ளைகளுக்கு பறக்கும் முத்தங்களை அள்ளி வீசினார்.

   “ஃபோன் சார்ஜ் எடுக்க மறந்திட்டன், அதான்.” என்ற இலக்கியா, “அக்காதான் சின்ன பாக்கை மறந்திட்டா!” போட்டுக் குடுத்தாள்.

   கவி அந்தப்பையோடு உள்ளே ஏறமுயல, “தா அதையும் ட்றங்கில போடலாம்.” வாங்கிக்கொண்டு அவர்கள் உள்ளே செல்ல வழிவிட்ட மாறன், இறங்கி அதை வைத்துவிட்டுத் தாயிடம் விடைபெற, ஆரவாரக்  கூச்சலோடு அந்த ‘ஃபோர்ட் டிரான்சிட் 12’   பயணிகள் வாகனம் நகர்ந்தது.

   “டேய் ஆரூரன், எனக்கு யன்னல் பக்கம் எண்டு சொன்னனான் எல்லா? தள்ளி இங்கால வாடா” தன்னைவிட நான்கு வயது சிறிய நாதன் சித்தப்பாவின் ஒரே மகனோடு மல்லுக்கு நின்றாள், இலக்கியா. அவனோ அசையவில்லை.

“அதுக்கு நேரகாலத்துக்கு வந்து ஏறியிருக்க வேணும் கா. இப்ப என்ன இடமா இல்ல? அங்க முன்னுக்குப் பார், சீட் சீந்துவார் இண்டிக் கிடக்கு. போயிரு…ப்ளீஸ்!” என்றான், விசமத்தோடு.

   “டேய்..எழும்பி இங்கால வாடா எண்டா!” தோளில் மாட்டியிருந்த கைப்பையை  மறுபுறமிருந்த தங்கை மடியில் வைத்துவிட்டு அவனைப் பிடித்திழுத்து கத்திக்குழறி கண்ணாடிப் பக்கத்தில் அமர்ந்து பெரும் வேலைசெய்த களைப்பில்  மூச்சு விட்டவளை, அவனோ கடி கடியென்று கடித்தெடுத்தான்.

    இவர்களின் செல்லச் சண்டைகளை, குபீரென்று வெடித்துக் கிளம்பிய சிரிப்பலைகளை தாமும் சந்தோச முறுவலோடு பார்த்து அநுபவித்தார்கள்,  பெரியவர்கள். அதோடு, தம்முள் ஆரவாரத்தோடு பயணம், தங்குமிடங்கள் பார்க்குமிடங்கள் சம்பந்தமாகவே உரையாடலில் ஈடுபட, கவின் மட்டும்  கேமில் ஆழ்ந்தான். 

    இப்படியே கலகலவென்று ஆரம்பித்த பயணம் கால் மணித்தியாலம் கடந்திராது,  “பசிக்குது!” பின்னாலிருந்து ஒரு குரல் ஆரம்பிக்கவும் வரிசையாக, “பசிக்குது” இராகமெழுந்தது. 

   “இது தெரியுமே எனக்கு! காலம தேத்தண்ணி கூட உள்ள போயிருக்காது எண்டது தெரியாட்டி எப்பிடி!” என்ற நாதன் மனைவி ரதி, “எல்லாருக்கும் டோ நட், பன்  எல்லாம் இருக்கு.” பெரிய பெட்டியை எடுத்து, “இலக்கி எல்லாருக்கும் குடும்மா!” அவளிடம் பொறுப்பை ஒப்படைக்க, “தாங்கோ சித்தி நான் குடுக்கிறன்.” வாங்கிக் கொண்டாள்,  கவி.

   “அதோட கேக்கும் இருக்கு எடுத்துக் குடு கவி!” அவள் அம்மாதான் சொன்னார்.

    “கொட்டிச் சிந்தாமல் சாப்பிடுங்க; பிறகு அதுக்க இருக்கப் போறதும் நீங்கதான்; ரெண்டு கிழமைகளுக்கு இதுவும் வீடு எண்டு நினைச்சுப்  பிழங்குங்க!” சொன்னார் நாதன். இவர் சுதர்சனுக்கு அடுத்தவர். இவரை நம்பியே சுதர்சன் வீட்டில் நின்றார். அந்தளவுக்கு எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துக் கனகச்சிதமாகச் செய்து விடுவார். 

   “எங்களுக்கும் கேக் இருந்தால் தாங்கோவன்.” மாறன் கேட்க, “அதுக்கென்ன? எல்லாமே  நிறையவே இருக்கு.” என்றார், இலக்கியாவின் அன்னை சுகுணா.

   அஜியிடம் இருந்து கேக் பெட்டி கைமாறியது.

   “ஒரு பேப்பர் பிளேட் தாங்கோ அந்தத் தம்பிக்கும் குடுக்கலாம்.” நாதன் கேட்க,   “இந்தாங்கோ!” கவி கொடுத்த பிளேட்டில் இரண்டு கேக் துண்டுகளை எடுத்து வைத்துக்கொடுக்க, சாரதிக்கருகில் இருக்கும் மாறன் கை நீண்டு வாங்கிக் கொண்டது. 

   “கேக்கை சாப்பிட்டுச்  சாப்பிட்டுப்  பிறகு ஓடுறதில கவனமில்லாமல் விடுறேல்ல! ஏனெண்டா, இது எங்கட சின்னக்கா இலக்கியா செய்த கேக்; ருசி மயக்கும்!” இலக்கியாவின் அருகிலமர்ந்திருந்த நாதனின் மகன் ஆரூரன்; அவனுக்கு அவளோடு வம்பிழுக்கவில்லை என்றால் பொழுது போகாது.

   “உன்ன! எரும! இதுவரைக்கும் நாலு துண்டுகள முழுங்கிப்போட்டு நக்கல்  அடிக்கிறியோ! அந்த டிரைவர் என்ன நினைப்பார் சொல்லு?”  சகோதரனின் காதை பிடித்துத் திருகியபடி முன்னால் ஓட்டுனரைப் பார்க்க முயன்றாள், இலக்கியா.

  அது எங்கே? நாதன் தலை மறைத்தது.  அவள் கவனமும் பின்னால் எழுந்த கலகலப்பில் சென்றுவிட்டது.

   “தம்பி கேக் சாப்பிடுங்க!” நாதன். அவன் ஓடிக்கொண்டே எடுத்து உண்ணக் கூடியவகையில் கேக் தட்டை வைத்துவிட்டு தானும் கேக்கைச் சுவைத்தான் மாறன். 

   “தாங்க்ஸ் அங்கிள்!” முறுவலோடு சொல்லிக்கொண்டே இலாவகமாக வாகனத்தைச் செலுத்துபவனை ஒருகணம் ஆராய்ந்தன,  நாதனின் விழிகள்.

   இனிவரும் இருகிழமைகளுக்கு தம்மோடு இருக்கப் போகிறவன் ஆச்சே! இவனை நம்பி இத்தூரமாகப் பிரயாணம் அதுவும் கிட்டத்தட்ட மொத்தக் குடும்பமும். 

  “நீங்க எவ்வளவு காலம் இங்க வந்து?” அவர் கேட்தற்கு சிறுமுறுவலோடு, “நான் இங்கதான் பிறந்தன் அங்கிள்.” பதில் சொன்னான் அவன்.

   “ஓ! சரி சரி…” நாதன் சொல்ல, “இப்பிடி அடிக்கடி தூரப்பயணம் ஓடி இருக்கிறீங்களோ?” மாறன்  கேட்டதற்குச்  சட்டென்று பதில் சொல்லவில்லை, அவன். எவ்வளவோ தூரப்பயணங்களில் வாகனமோட்டியிருந்தாலும் இப்படித் தொடர்ந்து இருகிழமைகளுக்கென்று ஓட்டவில்லைதான்.  தேவையும் வரவில்லை. ஆனால்,  அதெல்லாம் ஒரு பிரச்சனையேயில்லை.  

    “ஒண்டுக்குமே யோசியாதீங்க! உங்களுக்கு எந்தப் பயமும் தேவேல்ல; நம்பிக்கையோட என்னோட வரலாம்.”  முறுவலோடு சொன்னபடி விரைவுப்பாதையில் போக்குவரத்தில் கலந்தானவன்.

   “நம்பிக்க இல்லாம எல்லாம் இல்ல தம்பி. யாழ் டிராவல்ஸ் எவ்வளவு காலமா இயங்குது! நம்பிக்கையானதும் கூட. நாங்க இப்பிடி ரெண்டு கிழமை போறதெண்டு முடிவெடுத்ததும்  எங்களோட வரப்போற ட்ரைவரோட கதைச்சனாங்க. டேவிட் எண்டு ஒருத்தர்.  இப்பிடிச்  சிலதடவைகள்  தான் போய்வந்திருப்பதாகவும்  சொன்னவர். எங்களுக்கும் ஒரு தெம்பா இருந்தது. காலேல பார்த்தா நீங்க வந்திருக்கிறீங்க அதான் கேட்டனான்.”

  “டேவிட்க்கு கொஞ்சம் சுகமில்லை; அதனாலதான் கடைசி நேரத்தில வர ஏலாமல்  போயிட்டு.”  என்றான், அவன்.

  “சரி சரி, ஆரு எண்டாலும் இப்ப என்ன?” என்ற மாறன்,  வேறு கதைக்கத்  தொடங்கிவிட்டான்.

இரண்டரை மணித்தியாமல் ஓடிய பின்னர் காஸ் ஸ்டேஷனோடு சேர்ந்த பெரிய ரெஸ்டாரண்ட் காம்பிளெக்சில் வண்டியை நிறுத்தும் வரையில் இவர்களின் உரையாடல்கள் பல பல விசயங்களைப் பேசிக்கொண்டன.

  வாகனத்தை நிறுத்தமுதலே நான் நீயென்று இறங்க ஆயத்தமாகினர், இளையவர்கள். 

   “முதலில வோஸ் ரூம் போவம்.” கதைத்தபடி தம் கைப்பைக்களோடு திமு திமுவென்று இறங்கியவர்களின்  பின்னால் பெரியவர்களும் இணைந்துகொண்டார்கள். 

   “கவின் ஓடாத! மாறன் அவனைப் பிடிங்க!” பிடிபடானென்று தெரிந்தே அஜி மகன் பின்னால் ஓட, இடையில் வளைத்துப் பிடித்துத்  தூக்கிக்கொண்டு நடந்தாள், கவி.

   விடுமுறைக் காலமாச்சே! பலதரப்பட்ட மக்கள் அங்குமிங்குமாக  சென்ற வண்ணமிருந்தாலும் உணவங்களில் போடப்பட்டிருந்த இருக்கைகளும் நிறைந்தே காணப்பட்டன.  அவர்களைக் கடந்து வோஸ் ரூம் சென்றால் அங்கும் வரிசை நீண்டிருந்தது.  ஆண்களும் பெண்களும் தத்தம் பிரிவுகளில் இணைந்து கொண்டார்கள்.

     “பிறகு மேக்கில மில் ஷேக் வாங்குவம்.” ஆரம்பித்தாள், சிவா, ராஜியின் மகள். 

     “ம்ம் எனக்கு ஐஸ் …எனக்கு மேக் ஃபிளோரி…” இப்படி மாறி மாறிக் கதைத்தபடி ஒவ்வொருவராக உள்ளே சென்றதில் முதலில் சென்ற இலக்கியா வெளியில் வர, அப்பவும் அவள் அன்னையும் சித்திமாரும் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள், மறுபுறம் சித்தப்பாமாரும். 

  “இன்னும் ஒருவரும் வரேல்லையா? நான் வெளில போய் நிக்கிறன்.” என்றுவிட்டு வெளியே வந்தவளைக் காத்திருந்து சிறைப்பிடித்துக்கொண்டன, இரு விழிகள்!

  அருகிலேயே ‘மேக்’ இருக்கவும் அங்கு வந்து நின்றுகொண்ட இலக்கியா கைபேசியை எடுக்கவும் “ஹேய்…” மிக அருகில் கேட்ட குரல் பின்புறமாகத் திரும்பிப் பார்க்க வைத்தது. மறுநொடி,  உச்ச பட்சமாக அதிர்ந்து போனாளவள். விரிந்துவிட்ட விழிகளோடிணைந்த அவளிதழ்களோ, அவள் மனநிலையை அங்கு நின்றவனுக்குணர்த்திவிட்டிருந்தது.

  விழிகள் எக்கச்சக்கமாக நகைக்க, “வாயை மூடும்! என்னைப் பாக்க அவ்வளவு அதிர்ச்சியா இருக்கா என்ன?” தாழ்ந்த குரலில் நக்கலோடு சீண்டியவனை இப்போது முறைத்தன அவள் விழிகள். இருந்தாலும், உள்ளத்தில் எதுவோ எல்லாம் செய்தும் தொலைத்தது. எதிர்பாராத இச்சந்திப்பு அவளுள்ளத்தில் சத்தோசக் குமிழிகளை முகிழ்க்கவில்லையென்று  சாக்குப் போக்குக்கேனும் பொய் சொல்லாள்.  இத்தனைக்கும் நடுவிலும், ‘அப்ப இவர் என்னப் பின்தொடர்ந்துதான் வாறார்!’ என்ற உணர்வு ஏனோ இலேசான நடுக்கத்தையும் உருவாக்கி விட்டிருந்தது.

   அவன் பார்வை வோஸ் ரூம் பக்கம் பாய்ந்து மீண்டது.

   “இலக்கியா! எப்பிடி இருக்கிறீர்? பிறகு லேக்கில சாகசம் செய்தது போல ஒண்டும் செய்யேல்லையா? இப்ப எங்க இங்க?” கேட்டவனுக்குப் பதில் சொல்லாது, “நீங்க எங்க இங்க?” ஒரு மாதிரிக் கேட்டு வைத்தாள், இவள். 

  மனதில் சந்தேகத்தோடு வினவியதை அவள் விழிகளிலும் படிக்கமுடிந்தது. சற்றே விரிந்த முறுவலோடு பார்த்தவன் பார்வையில் எக்கச்சக்க விசமம்.

  “ஹேய்! உடனே உம்ம வால் பிடிச்சுக்கொண்டு வாறன் எண்டு எதுவும் நினைச்சிராதேயும். நான் என்ர வேல விசயமா வந்தன். அவ்வளவும் தான். சரி வாறன். லீவுக்கு ஊர் சுற்ற வெளிக்கிட்டாச்சுப் போல! என்ஜோய்!”  சொல்லிக்கொண்டே விடுவிடுவென்று நகர, ஏதேதோ கதைக்க ஆவல்கொண்ட இதயம் ஏமாற்றத்தோடு அவன் முதுகைத்தான் தொடர்ந்தது. அவனோ,  அந்த ரெஸ்டாரண்டின் மறுபக்கமாகச் சென்று மறைந்திருந்தான்.

   “இலக்கிக்கா  வா நமக்குத் தேவையானதை வாங்குவம்.” ஆரூரன் தோளில் இடித்துவிட்டு மேக் கவுண்டர் நோக்கிச் செல்ல, “என்னடி முழிசிக்கொண்டு நிக்கிற?” என்றபடி வந்தாள் கவி. 

   “பச்! ஒண்ணும் இல்ல.” சேர்ந்து நடந்தாலும் அந்தச் சனத்திரளுள் அவனுரு தென்படுகின்றதா என்பதைத் தத்தளிப்போடு தேடியலைந்தன, இலக்கியாவின் விழிகள்!

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock