இது நீயிருக்கும் நெஞ்சமடி 24 – 1

தேவையில்லாத ஆடம்பரங்கள் எதுவும் இல்லாத போதும், கோவிலில் வைத்து விமர்சையாகவே தமயந்தியின் திருமணம் நடந்தேறியது!

தமயந்தியின் பெயரில் ஒரு காணி வாங்கிவிட்டிருந்தான். குறையே இல்லாமல் நகைகளும் செய்துபோட்டு, சரணுக்கும் திருமணப் பரிசாக நகைகள் அணிவித்து எந்தக் குறையும் இல்லாமல், தமயந்தி தம்பியை நம்பிக் காத்திருந்ததற்கு ஏற்றது போலவே அனைத்தையும் மிகச் சிறப்பாகச் செய்து, அவளைக் கணவன் வீட்டுக்கு அனுப்பிவைத்தான்!

கருப்பனுக்கும் புவனாவுக்கும் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலன் கிடைத்துவிட்டது போன்ற உணர்வு! உள்ளம் நிறைந்து தளும்பியது! தலைமகனாகப் பொறுப்பெடுத்துத் தமக்கையின் திருமணத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தி முடித்தவனைக் கண்கள் நிறையப் பார்த்து மகிழ்ந்தார்கள்!

அடுத்தநாளே புறப்பட்டுவிட்டாள் ஆர்கலி. இதைப் பிரணவனே எதிர்பார்க்கவில்லை. சுந்தரேசனோடுதான் போவாள் என்று எண்ணியிருந்தான்.

திருமண வேலைகள் முடிந்துவிட்டதால் இனியாவது அவளிடம் எப்படியாவது தன் மனத்தைச் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணியிருந்தவன் மீண்டும் தனக்குள் இறுகிப்போனான்.

வரும்போது இருந்த பேச்சுகள் கூட இல்லாமல் அவர்களின் பயணம் கொழும்பை நோக்கி மௌனமாகவே ஆரம்பித்தது.
விமான நிலையத்தை நெருங்க நெருங்க இருவருமே இயல்பாய் இல்லை. மனத்துக்குள் பெரும் பரிதவிப்பு.

இன்னும் கொஞ்ச நேரம். பிறகு அவள் ஒரு தொலைவில், அவன் ஒரு தொலைவில். மனத்துக்குள் ஓராயிரம் எண்ணங்கள் பொங்கிப் பொங்கி எழுந்தன. ஆர்கலி கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் துடைக்க முயன்று தோற்றாள். தனக்குள் இறுகிப்போயிருந்தான் பிரணவன். வாயைத் திறந்தால் வரும்போது மாதிரி எதையாவது சொல்லிவிடுவோமோ, அவளை நோகடித்து விடுவோமோ என்று பயம்.

கடைசியில் அவனைப் பிரிந்து அவள் புறப்படும் நேரமும் வந்தது. “போயிட்டு வாறன்!” கலங்கிய விழிகளைக் காட்டாது முணுமுணுத்துவிட்டு அவள் திரும்ப, எட்டி அவளின் கையைப் பற்றினான் அவன்.

அவளின் கை நடுங்கியது! உடைந்துவிடப்போகிறோம் என்று அறிந்து உதட்டைக் கடித்து அடக்கினாள். மெல்ல அவளைத் தன் புறமாகத் திருப்பி, அவள் முகம் பார்த்தான் பிரணவன்.

“நானா விளக்கம் சொல்லவந்த ஒவ்வொரு முறையும் நீ விடவே இல்ல. இனி நீயா கேக்காம எந்த விளக்கமும் சொல்லக் கூடாது எண்டு நினைச்சனான். ஆனா…” என்றவன் இயலாமையுடன் ஒருகணம் பேச்சை நிறுத்தினான்.

அவளின் முன்னிலையில் அவனது தீர்மானங்கள் எல்லாமே பொடிப்பொடியாக வலுவிழந்து உதிர்ந்துபோவதுதானே வழமை! இப்போதும் அதுவே நடந்தது.

“அம்மா அப்பா கேட்டா நான் கட்டித்தான் இருப்பன். ஆனா உன்னைத்தான் கட்டியிருப்பன். ஏன் எண்டால், அம்மா அப்பாவே கேட்டாலும் கூட என்ர பொம்பிளைச் சகோதரங்களக் கரைசேர்க்காம என்ர வாழ்க்கையை தேடியிருக்கமாட்டன்.”

அரும்பிய கண்ணீரை அடக்கிக்கொண்டு எங்கோ பார்த்து நின்றாள் ஆர்கலி.

“நீ செல்லமா வளந்தவள், உனக்கு என்ர சூழ்நிலை விளங்குமா தெரியேல்ல. என்ர குடும்பத்துக்கு நான்தான் ஆணிவேர். அப்பா வயசான மனுசன். என்னால முடியும் எண்டு அவர் சொன்னாலும், அவருக்கு எவ்வளவு ஏலாது எண்டு எனக்குத்தான் தெரியும். அது தெரிஞ்சும், என்ர வாழ்க்கை பெருசு எண்டு எப்படி நான் வருவன் சொல்லு? அது சுயநலம் இல்லையா? கடைசிவந்தாலும் ஏலாது ஆர்கலி. நான் இல்லாட்டியும் உன்னப் பொத்திவச்சுப் பாக்க உனக்கு அம்மா, அப்பா, அண்ணா எண்டு எல்லாரும் இருக்கினம். என்ர குடும்பத்துக்கு என்னைவிட்டா வேற ஆருமில்ல. உன்ர வீட்ட நீ கடைசிப்பிள்ளை. செல்லப் பிள்ளை. நினைச்சது கிடைக்கும். என்ர வீட்ட நான்தான் ஒரே ஆம்பிளை பிள்ள. நெஞ்சு நிறைய ஆசையும் காதலும் இருந்தாலும் குடும்பத்தையும் பாக்கோணும் எண்டு நினைச்சனான். அது பிழை எண்டு இப்பவும் எனக்குப் படேல்ல.” மனத்தாங்கலோடு சொன்னான் அவன்.

அவள் கண்ணீருடன் சிரித்தாள். “இட்ஸ் ஓகே பிரணவன்! நீங்க உங்கட குடும்பத்தைப் பாருங்கோ. உங்கட கடமைகளை முடியுங்கோ. எப்பிடியும் நானும் நீங்களும்தானே கல்யாணம் கட்டப்போறோம். அதைவிட, உங்கட கண்டிஷன் எல்லாத்துக்கும் அப்பா ஓம் எண்டுதானே சொன்னவர். எனக்கும் ஓகேதான். பிறகும் ஏன் மனதைப் போட்டுக் குழப்பிக்கொள்ளுறீங்கள். எல்லாம் சரியா வரும்! பாய்!” என்றவள், அவனிடமிருந்து விடைபெற்றுச் சென்றே விட்டிருந்தாள்.

உறைந்துபோய் அப்படியே நின்றிருந்தான் பிரணவன். எப்படிச் சொல்லிவிட்டுப் போகிறாள்? ஆறுதல் சொல்வதுபோல அவன் நெஞ்சைக் கூர்மையான கத்திக்கொண்டு கீறிவிட்டுப் போகிறாளே!

அவனுடைய குடும்பத்தைப் பார்க்கட்டுமாம். அவனுக்கும் அவளுக்கும்தான் கல்யாணம் நடக்குமாம். அவனுடைய டிமாண்ட் எல்லாவற்றுக்கும் அவர்கள் ஆம் என்று சொல்லியிருக்கிறார்களாம். ஆக, அவனைக் குற்றவாளியாகத் தீர்ப்புச் சொன்னது மட்டுமல்ல, தண்டனையும் தந்துவிட்டுப் போகிறாள் அவனுடைய காதலி!

அவனால் நம்பவே முடியவில்லை. மென்மையே உருவான அவனின் பொம்மாவா இப்படியெல்லாம் சொல்லிவிட்டுப் போவது? அப்படியே தொய்ந்து அமர்ந்தவன் அவள் போன திசையையே நெடுநேரமாகப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

*****

ஒரு வாரம் அவர்களோடு மகிழ்வாகக் கழித்துவிட்டு மனம் நிறையப் புறப்பட்டார் சுந்தரேசன். பிரணவன் மட்டும் வெளியே சொல்லமுடியாத பாரத்தைச் சுமந்தபடி திரிந்துகொண்டிருந்தான். அவள் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகளை அவனால் மறக்கவே முடியவில்லை.

தமயந்தியின் திருமண ஆரவாரம் அடங்கியதும், யாழ்ப்பாணத்திலும் ‘கருப்பன் எலக்ட்ரோனிக்ஸ்’ ஐ பிரசவித்தான் பிரணவன். அதன் பிறகான நாட்கள் அவனுக்கு வேகம் கொண்டு ஓடத்துவங்கின.

எண்ணிப் பத்தாவது மாதம் தமயந்திக்குப் பெண் குழந்தை பிறந்தது. எல்லோர் மனமும் பூரித்துப் போயிற்று! பூவைப் போலவே மலர்ந்து சிரித்தவளுக்குச் சாமந்தி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

யாழ்ப்பாணக் கடையும் மக்களுக்குப் பழக்கமாகி ஓடத்தொடங்கியது. அடுத்ததாகத் துவாரகாவுக்கு மாப்பிள்ளை பார்த்தான் பிரணவன்.

ஒரு கோபம், ஒரு ஆத்திரம், ஒரு நெருப்பு அவனுக்குள் எரிந்துகொண்டே இருந்தது. அவளைத் தன் கைகளுக்குள் கொண்டுவந்து சேர்க்கும்வரை அது அடங்கவே அடங்காது! அப்படி அவளைக் கைக்குள் வைத்துக்கொண்டு கேட்டு கேட்டுத் தண்டனை கொடுக்க வேண்டும்.

திருமணப் பத்திரிக்கை அச்சானதுமே, சுந்தரேசனுக்கு அனுப்பிவிட்டு அழைத்தான்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock