ஆதார சுதி 15 – 1

எவ்வளவுதான் வெறுப்பை உமிழ்ந்து விரட்டினாலும் விடாமல் அடுத்த நாளும் காலையிலேயே வந்தவளைக் கண்டதும் பொறுக்கவே முடியவில்லை தெய்வானை அம்மாவுக்கு.

“விடியாத மூஞ்சியோட விடியக்காலமையே வந்து நிக்கிறியே… இண்டைய நாள் விடிஞ்ச மாதிரித்தான்!” நடு முற்றத்திலேயே நிறுத்திவைத்துத் திட்டினார்.

ஒரு பக்க முற்றத்தில் மலைபோல் குவிந்து கிடந்த தேங்காய்களை நிலத்தில் குத்தியிருந்த அலவாங்கில் குத்தி மட்டை உரித்துக்கொண்டிருந்தனர் இருவர். அவர்கள் உரித்துப்போடும் தேங்காய்களைச் சாக்கில் நிரப்பிக்கொண்டிருந்தான் இன்னொருவன்.

இன்னொரு பக்கம் மாட்டுக்குத் தீவனம் வைக்க என்று பனங்கொட்டைகளை அரிந்துகொண்டிருந்தனர் சிலர். டக்டர் எடுக்க வந்தவர்கள் என்று காலையிலேயே வேலை சூடு பிடித்திருந்தது. அத்தனை பேரின் முன்பும் வைத்து அவர் பேசியதில் முகம் சுருங்கிப் போயிற்று அவளுக்கு.

“அடிச்சு விரட்டாத குறையா வராத வராத எண்டு உனக்கு எவ்வளவுதான் சொல்லுறது? என்னடி திட்டம் போட்டு வச்சிருக்கிறாய்? உன்ர கொம்மா அவனைப் பிடிச்ச மாதிரி நீ என்ன என்ர பேரன பிடிக்கப்போறியே?” அவருக்கு ஆத்திரம் அடங்கமாட்டேன் என்றது. நேற்று நொடியில் மருமகனுக்கும் பேரனுக்கும் கைகலப்பை உருவாக்கிவிடப் பார்த்தாளே!

தன் வேர்களைத் தேடி ஓடி வந்தவள் இன்னும் என்னவெல்லாம் கேட்கப் போகிறாளோ? அகன்ற விழிகளில் வலியைத் தேக்கி அவரைப் பார்த்தாள்.

“அவர் உங்களுக்குப் பேரன் எண்டால் நான் உங்கட பேத்தி தானே அப்பம்மா? என்னை ஏன் வெறுக்கிறீங்க? ஏன் என்னைப் பற்றி இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்க? உங்கட அன்பைத் தவிர வேற எதையும் நான் கேக்கேல்லையே? அது பிழையா?” கலங்கிவிட்ட கண்களோடு கேட்டாள்.

“பிழைதான்! வராத!” தயவுதாட்சண்யமின்றி மறுத்தார் அவர். “எனக்கு உன்ர முகத்தில முழிக்கவே விருப்பம் இல்ல! என்ர குடும்பத்தை விட்டுட்டு போய்த்துலை!” ஈவு இரக்கமே இல்லாமல் விரட்டினார்.

“ஏன் அப்பம்மா இவ்வளவு கோபம்? அப்பாவும் உங்கட மகன் தானே. அவர்ல கொஞ்சம் கூடப் பாசம் இல்லையா உங்களுக்கு. அவர் எப்பிடி இருக்கிறார் என்ன செய்றார் எண்டு கேக்க மாட்டீங்களா?” என்றவளுக்கு வார்த்தைகள் வெளியே வரமுதல் கண்ணீர் வந்துவிட, “காணுமடியம்மா உன்ர நடிப்பு! இத நம்புறதுக்கு வேற ஆரையும் பார்!” என்றார் தெய்வானை.

அதற்குள் தோட்டத்துக்குப் போக வந்த பிரபாவதி, “சும்மா இவளோட நிண்டு கதைச்சு நேரத்தை வீணாக்காம பாக்கிற வேலைய பாருங்கம்மா! நல்லா நடிப்பாளவே. தன்ர தங்கச்சிக்காகக் கதைக்கப்போன ஆம்பிளையை வளைச்சவள் தானே இவளின்ர தாய். அவள் பெத்த மகளுக்குக் கதைக்கச் சொல்லியா குடுக்கோணும்!” என்றுவிட்டு, அவளை அலட்சியம் செய்து அன்னையை அழைத்துக்கொண்டு மிளகாய் தோட்டத்துக்கு நடந்தார்.

போகிற போக்கில், “தாய்க்காரி புளியங்கொம்பா பிடிச்சிட்டன் எண்டு துள்ளியிருப்பாள். கடைசில ஒண்டும் இல்லாம வெறும் கையோட வந்திட்டான் எண்டதும் பிள்ளையைப் பெத்து அனுப்பி வச்சிருக்கு. உங்களுக்கு எல்லாம் கூச்ச நாச்சமே இல்லையாடி? என்ர அப்பா போட்ட பிச்சையில உடம்பு வளத்த கூட்டத்துக்கு எங்கட வீட்டுக் கட்டில் கேக்குதோ?” என்று, கணவர் இல்லாத துணிச்சலில் வரம்பு மீறி வார்த்தைகளைக் கொட்டினார் பிரபாவதி.

அந்த வார்த்தைகள் உண்டாக்கிய அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றாள் சஹானா. கண்ணீர் கூட வர மறுத்தது. என்னால் முடியும்; அவர்களைச் சமாதானப்படுத்துவேன் என்கிற முழு நம்பிக்கையோடுதான் வந்தாள். ஆனால், இந்தளவுக்குத் தரமிறங்கிப் பேசுகிறவர்களிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. முதலில் அவளையே அனுமதிக்க மறுப்பவர்களிடம் அப்பாவைப் பற்றி எப்படி எடுத்துச் சொல்லுவாள்?

எவ்வளவு நேரம் தான் கடந்ததோ, அந்த நொடியில் தாய் தந்தையின் மடி வேண்டுமே வேண்டும் என்று மனது அடம்பிடிக்க அப்பப்பாவின் அறைக்கு ஓடினாள்.

‘அப்பப்பா, உங்களுக்கும் அப்பாவில இன்னும் கோபமா அப்பப்பா? அவரும் உங்களை மாதிரியே வைத்தியசாலையில் உயிருக்காகப் போராடிக்கொண்டு இருக்கிறார். இந்த நேரம் பாத்து எல்லாரும் என்ன என்னவோ கதைக்கினம் அப்பப்பா. என்னால தாங்கேலாம இருக்கே… என்ன செய்வன்?’ சின்ன மனம் அரற்றியது.

‘எனக்கு என்ர அப்பா வேணும் அப்பப்பா…’ மனதார வேண்டியவள் அவரின் காலடியிலேயே கண்ணீர் உகுத்தபடி சரிந்துகிடந்தாள். அவரின் கரத்தை மெல்ல பற்றித் தடவிக்கொடுத்தாள். அப்பாவின் நினைவுகள் அவளைச் சூழ்ந்தன.

‘அப்பப்பா… எழும்புங்கோ. என்ர அப்பா பிழை செய்ய இல்லை எண்டு எல்லாருக்கும் சொல்லுங்கோ.’ மனத்தால் அவள் உரையாடியது அவரைச் சென்று சேர்ந்ததோ என்னவோ அவளின் கண்ணீர் துளி கரத்தில் படவும் அவர் தேகம் ஒருமுறை தூக்கிப் போட்டது.

“பிரதா… பிர… தா…” என்றுமே கதைக்காதவர் அன்று கண்விழித்ததும் அல்லாமல், தட்டுத் தடுமாறி வாயசைக்கவும் சஹானா நடுங்கியே போனாள்.

“மச்சாள்…!” கூவிக்கொண்டு ஓடிப்போய்ச் சஞ்சனாவை அழைத்துவந்து காட்டினாள். அவளுக்கும் பதட்டம் தொற்றிக்கொண்டது. “நீ ஓடு வீட்டை. நான் அம்மாவைக் கூப்பிடுறன்.” பயந்துபோய் அவள் பிரபாவதியை அழைக்க இவளோ சிட்டாக அங்கிருந்து பறந்து வந்திருந்தாள்.

இங்கே யாதவி, போட் வியாபாரி சொன்ன நேரத்துக்குச் சென்று பணத்தைக் கொடுத்தபோது இரண்டு வாரங்களாக இழுத்தடித்த கோபத்தில், “எத்தனை வருடத் தொழில் பழக்கம் என்றாலும் யாரிடமும் நேர்மையை எதிர்பார்க்கக் கூடாது என்று உன் கணவன் எனக்கு உணர்த்தி இருக்கிறான்.” என்றான் அவன் கடுமையாக.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock