பதில் எதுவும் சொல்லாமல், முதலில் பணத்தைக் கொடுத்து, அதற்கான ரசீதினைப் பெற்றுக் கவனமாகக் கைப்பையினுள் பத்திரப்படுத்திக்கொண்டு நிமிர்ந்தார் யாதவி.
“இத்தனை வருடகாலத்தில் என் கணவர் என்றாவது ஒருநாள் உன்னிடம் சொன்ன சொல் தவறியிருக்கிறாரா? அப்படியிருந்தும், ஒரேயொரு முறை உன்னால் இரண்டு வாரம் பொறுக்க முடியாமல் போயிற்று! நாங்கள் வாக்குத் தவறும் மனிதர்கள் இல்லை. எல்லாவற்றையும் விட நம்பிக்கை முக்கியம். என் கணவர் மாரடைப்பால் வைத்தியசாலையில் இருக்கிறார். அதனாலதான் உனக்குப் பணம் தருவதற்குப் பிந்தியிருக்கிறது. ஆனால், இனிமேல் உன்னோடு எந்த வியாபாரமும் இல்லை. இதுதான் கடைசிமுறை!” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டு அவர் திரும்பிவிட, அதிர்ந்துபோனான் அவன்.
மாதத்துக்குக் குறைந்தது இரண்டு போட்டுகளாவது கைமாறும். அவனுக்குப் பிரதாபன் நம்பிக்கைக்குரிய நாணயம் மிகுந்த வாடிக்கையாளர். அதை இழப்பது என்றால் எப்படி?
“திருமதி பிரதாபன்! எனக்கு விசயம் தெரியாது, என்னை மன்னித்துவிடு.” அவரின் காரடிக்கு ஓடிவந்து சொன்னான் அவன்.
“தெரியாவிட்டால் நீ விசாரித்திருக்கலாம். நல்ல முறையில் கூட அணுகியிருக்கலாம். அதை விட்டுவிட்டு நீ விட்ட வார்த்தைகள் எப்படியானவை என்று நீயே ஒருமுறை வாசித்துப்பார்!” என்றுவிட்டுக் காரிலேறி வந்துவிட்டார் யாதவி.
இனி கவனிக்க வேண்டியது வங்கியின் மைனஸையும் கட்டுப்படாமல் திரும்பிக்கொண்டிருந்த பில்லுகளையும் தான். கூடவே போட்டுக்கான தவணைப்பணம்.
அவனிடம் வாங்கிய அந்தப் போட்டில் 30000 யூரோக்கள் முடங்கிக் கிடக்கிறது. அதை விற்றால் அந்தப்பணம் வந்துவிடும்.
பயன்படுத்திய இரண்டாம் தர போட்களை வாங்கி அதனைச் சற்றே நவீனமயப்படுத்தி இலாபம் வைத்து விற்பதுதான் பிரதாபன். எங்கே கொடுத்து நவீனமயப்படுத்துவார் என்பதெல்லாம் தெரிந்திருந்தாலும் அதன் உதிரிப்பாகங்களின் தராதரங்களைப் பரிசோதித்துக் கண்டுபிடிக்கிற அளவுக்கான அனுபவங்கள் யாதவியிடம் இல்லை.
இருப்பதையேதான் விற்கப் போட வேண்டும். அதைப் பற்றிச் சிந்தித்தபடி நேராகக் கணவரைப் பார்க்கச் சென்றார்.
உறக்கத்திலேயே இருந்தார் பிரதாபன். அப்படி அவரைப் பார்க்க முடியவில்லை. பாசமும் பற்றும் வேண்டும் தான். அதற்காக இவ்வளவா? அவராலேயே இந்தளவில் சமாளித்துவிட முடிந்தபோது இத்தனை வருடங்களாக அந்தத் தொழிலைச் செய்த மனிதருக்கு இதெல்லாம் ஒரு விடயமா என்ன?
வைத்தியரிடம் விசாரித்தபோது வந்ததுக்கு இப்போது மிக நல்ல முன்னேற்றம் என்றார். தலைமை மருத்துவரிடமும் கலந்தாலோசித்துவிட்டுச் சத்திரசிகிச்சை செய்யும் நாள் எப்போது என்று சொல்வதாகச் சொல்லவும் கேட்டுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.
உடம்பு கழுவி உடை மாற்றிக்கொண்டு வந்து இலங்கைக்கு அழைத்து, அன்றைய நிலவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
நடந்த அவமானங்களையோ அவர்கள் விட்ட வார்த்தைகளையோ சொல்லித் தனியே இருக்கும் அன்னையைத் துன்பத்தில் ஆழ்த்த விரும்பாமல் இன்னுமே ஏற்றுக்கொள்ளாமல் முறுக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று மட்டுமே சொன்னாள் சஹானா.
எல்லாம் சரியாகும் என்கிற நம்பிக்கையோடு அன்றைய இரவை நகர்த்தினார் யாதவி.
அன்று, ஆண்கள் பாடசாலை ஒன்றுக்கு விழிப்புணர்வுப் பேச்சுக்காக அழைத்திருந்தார்கள். அங்கே பேசிவிட்டு வந்த சஞ்சயன் வீட்டில் நின்ற சஹானாவைக் கண்டதும் மிகுந்த சினம் கொண்டான். இருந்தும் தங்கையின் வார்த்தைகளுக்காகப் பொறுமை காத்தான்.
“உண்மையாவே கேக்கிறன், இங்க வரும்போது உனக்குக் கொஞ்சம் கூடவா மனசு கூச இல்ல?”
கூசுகிற அளவுக்கு என்ன கேவலமான காரியத்தைச் செய்தாளாம்?
“நீங்க எல்லாரும் எனக்கு யாரோ இல்ல. என்ர சொந்தம். உங்களிட்ட என்ர அப்பாவில பிழை இல்லை எண்டு சொல்ல வந்திருக்கிறன். அதுக்கு எதுக்கு மனசு கூச வேணும்? அவரும் ஒரு சூழ்நிலை கைதியாத்தான் அந்தநேரம் நிண்டிருக்கிறார். வேற வழி இல்லாமத்தான் போயிருக்கிறார். இப்ப வரைக்கும் அதை நினைச்சு கவலைப்படுறார் மச்சான்.” கிடைக்கிற சந்தர்ப்பத்தில் எப்படியாவது தந்தையைப் புரியவைத்துவிட முயன்றாள் அவள்.
“சொந்தபந்தம் தேவையில்லை எண்டு போயிட்டு பிறகு எதுக்கு கவலைப்படவேணும்? இங்க நாங்க அவரைத் தேடவும் இல்ல நினைக்கவும் இல்ல!” அவளின் எந்த விளக்கத்தையும் அவன் ஏற்றுக்கொள்வதாக இல்லை.
“ஒரே ஒருக்கா அப்பான்ர பக்கம் நியாயம் இருக்காதா எண்டு யோசிச்சுப் பாக்க மாட்டீங்களா மச்சான்?அம்மா, அப்பா, தங்கச்சி எண்டு பாசமா வாழ்ந்த ஒரு மனுசனுக்கு அவ்வளவு ஈஸியா நாட்டை விட்டுப் போக மனம் வருமா சொல்லுங்க?”
“வந்திருக்கே!” என்றான் அவன். “அந்தளவுக்கு கல்லு நெஞ்சு! சுயநலம்! இல்லாட்டி அந்த ஆள் வந்திருக்க வேணும். வந்து நேரா கதைச்சிருக்க வேணும். அதுக்குத் தைரியம் இல்லாத ஒரு கோழையைப் பற்றி நான் ஏன் யோசிக்க?”
“அவர் ஒண்டும் கோழை இல்ல!” அதற்குமேல் முடியாமல் வெடுக்கென்று பதிலிறுத்தாள் சஹானா. எவ்வளவுக்குத்தான் தளைந்து போவது?
“அப்ப வரச்சொல்லு! வந்து தன்னில பிழை இல்லை எண்டு நிரூபிக்கச் சொல்லு!” அவன் பேச்சிலும் சூடேறிற்று!
“நீங்க ஏன் வெளிநாட்டுக்குப் போகேல்ல?” சம்மந்தமே இல்லாமல் கேட்டாள் அவள். “இங்க எந்த வீட்டுல பாத்தாலும் யாரோ ஒருத்தர் வெளிநாட்டுலதான் இருக்கினம். நீங்க மட்டும் ஏன் இங்கேயே இருக்கிறீங்க?”
“நான் ஏன் போகோணும்?” என்று திருப்பிக் கேட்டான் அவன். “இங்க என்ன இல்லை எண்டு அங்க வந்து உங்களைப் போல அகதியா வாழ? என்ர நாட்டுல என்ர ஊருல நான் நானா வாழ்ந்துகொண்டு இருக்கிறன். எனக்கு வெளிநாடு தேவையில்லை!” அலட்சியமாகச் சொன்னான் அவன்.


