அச்சுற்றமெங்கும் நயாகரா நீரவீழ்ச்சிகள் தம் இருப்பை உணர்த்தி நின்றன, தம்மை நாடி வந்தோரை ஆர்ப்பரிப்போடு வரவேற்கும் முகமாக!
வட அமெரிக்க ‘லேக் இயரி’லிருந்து (Lake Erie) பாய்ந்தோடி வந்த நயாகரா ஆறு, ‘கனடா ஃபோல்ஸ்’ எனப்படும் ‘ஹோர்ஸ் ஷு ஃபோல்ஸ்’ மூலம் வஞ்சகமின்றிப் பொங்கிப் பாய்ந்ததென்றால், ஒன்றுசேர விடேனென்று அருகில் சட்டமாக அமைந்துவிட்ட ‘கோட் ஐலன்ட்’ (Goat Island) இனால் பிரிந்திருந்தாலும், நீரை வாரிக் கொட்டுவதிலோ அள்ளித் தெறிக்கவிட்ட இரம்மியத்திலோ துளியும் குறை வைக்காது பாய்ந்தது, ‘பிரைடல் வேல் ஃபோல்ஸ்’. இதனோடு ஒட்டி உறவாட விடேனென்று தம்மைப் பிரித்து நிற்கும் ‘லூனா ஐலண்டை’ (Luna Island) பலம் கொண்ட மட்டும் மோதினாலும் சரிவில் ஹோவென்று பாய்ந்து கண்ணுக்கு விருந்து வைத்தது, ‘அமெரிக்கன் ஃபோல்ஸ்’.
இம்மூன்றும் போட்டிபோட்டுக்கொண்டெழுப்பிய இரைச்சலை செமிமடுத்துணர்ந்தபடி, அந்நீரின் குளிர்ச்சி மெல்ல வீசிய காற்றில் கலந்து உடலில் ஏற்படுத்திய சிலிர்ப்போடு முன்னேறினார்கள், நால்வரும்.
“ஃபோல்ஸ்க்கு நிறையத் தூரமா நடக்கோணும்?” விழிகளைச் சுழற்றியபடி வந்த அஜி கேட்க, “இல்ல…ஒரு பத்து நிமிச நடைதான் சித்தி.” என்றாள் இலக்கியா.
“சின்னப்பிள்ளைகளைளோட இங்க வந்தா ஒரு நாலைஞ்சு நாட்களுக்கு நிண்டால் போதும், பொழுது நல்லாப் போகும். ஃபோல்ஸ அடிப்படையா வச்சு எல்லாப் பொழுதுபோக்குக்களும் சாப்பாடுகளும் தங்குமிட வசதிகளுமாக இருக்குது இந்த டவுன்.” சொல்லிக்கொண்டே, ஆவலோடு பார்த்து நடந்தாள், அஜி.
“ஓம்! நாலைஞ்சு முறை வந்திட்டம், பாக்க பாக்க அலுக்கிற இடமில்ல. சின்னாக்களுக்கு எண்டே நிறைய இடங்களும் இருக்கு.” ஆமோதித்தாள், இலக்கியா.
இப்படிக் கதைத்தபடி, முன்னால் செல்லும் கவி, ரதியைத் தொடர்ந்து அஜியோடு நடந்தாலும் இலக்கியாவின் பார்வையோ, பின்னால் திரும்பித் துழாவிட முனைப்போடு நின்று அடம்பிடித்தது.
‘கட்டாயம் வருவான்’ மனம் அடித்துச் சொன்னது. அவன் மட்டில் முன்னுக்குப் பின்னாக நடக்க நினைக்கும் உள்ளத்தை என்ன சொல்வதாம்? அடிக்கடி ஏற்பட்டுவிடும் மனதுக்கும் மூளைக்குமான இழுபறியில் இரண்டும் ஒன்றையொன்று தாக்கி விழுத்த முயன்றாலும், இதுவரை, வெற்றி வாய்ப்புகள் சமமாகத் தான் தொங்கி நிற்கின்றன. இப்படியே போனால்? இச்சிலநாட்களிலேயே, அதுவும் இன்று சிலமணித்துளிகளில் இவள் களைத்தும் போனாள்.
‘திரும்பக் கூடாது; அவனுக்கு வீணாக இசைவு கொடுப்பது போலாகாதா?’ என்ன இப்பிடி முட்டாள் போல நடக்க நினைக்கிறன்’ கடிந்து கொண்டாள்.
‘என்னவோ கெட்டவன் எண்ட மாதிரியே நினைக்கிற இலக்கி! அவன் அப்பிடியானவன் இல்ல!’ வரிந்துகட்டிக்கொண்டு நின்றதும் அவளுள்ளம் தான். அதேவேகத்தில் திரும்பியவள் விழிகள் அவசரத்தோடு சுற்றத்தைத் துலாவின. அவனுரு எங்குமே தென்படவில்லை.
‘டிரைவ் பண்ணிக்கொண்டு வந்தவனுக்குக் களைப்பு இராதா என்ன? எந்தநேரமும் சந்தேகமும் முறைப்புமாகப் பார்க்கிற உனக்குப் பின்னால வாறதுதான் வேலையா என்ன?’ முணுமுணுத்த உள்ளம் முகத்தைக் கூம்பிப் போகச் செய்திட்டு. இருந்தபோதும் அஜி கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னபடி முன்னேறினாள்.
“OMG!” விழிவிரித்துப் பார்த்தபடி நின்றுவிட்டாள், அஜி. முன்னே தெரியத் தொடங்கிய குதிரை லாட வடிவிலான கனேடிய நீர்விழ்ச்சியின் அழகில் சொக்கி நின்றவளிடம், “இதிலயே இப்பிடி நின்றாச் சரியா அஜி சித்தி? அங்க கிட்டப் போனீங்களோ அப்படியே நின்றிருவீங்க, இழுத்தெடுக்க வேண்டி வரும்.” என்றாள் கவி.
“அதான் சித்தி, எத்தின தரம் வந்தாலும் அலுக்காது. ஆங் பார்த்து.” சந்தோசப்பரபரப்பில் அங்கு இங்கு பாராது நடந்த அஜியின் கையைப் பற்றியபடி நடந்தாள், இலக்கியா.
பாதையைக் கடந்து சென்று ஃபோல்ஸை பார்த்தபடி சிறிதுநேரம் நின்றுவிட்டு, இடப்புறமாக நடந்து சென்று அமெரிக்கன் ஃபோல்ஸ் மற்றும் பிரைடல் வேல் ஃபோல்ஸ் இரண்டையும் பார்த்துவிட்டு, “வாங்க இப்பிடியே நடந்தால் அங்க ‘ஹோர்ஸ் ஷு ஃபோல்ஸ்’ கிட்ட நிண்டு பார்க்கலாம்.” என்ற ரதி வலப்புறமாக நகர, கும்பல் கும்பலாகப் போவதும் வருவதுமாக இருந்த சனத்திரளில் கலந்து அங்கிருந்த நடைபாதையில் நடக்கத் தொடங்கினர்.
இதோடு மூன்றாவது தடவையாக இங்கு வருகிறாள், இலக்கியா. என்றாலும் சளைக்கவில்லை; அலுக்கவுமில்லை. தமக்கையோடும் சித்திமாருடனும் புகைப்படங்களுக்கு நின்றவள் தானும் சிலதுகளை எடுத்துக்கொண்டாள். அதுவரை மனதுள் ஆட்சி செய்த மந்தநிலை அகன்றிருந்ததில் தளர்ந்திருந்த உடலில் புத்துணர்ச்சி பூத்திருந்தது.
‘இவ்விடத்தில் என்னையன்றி வேறெதிலும் சிந்தயைச் செலுத்த விடேன்’ பிடிவாதமாக நின்றாள், இயற்கை அன்னை. அவளின் வித்தையை இரசிக்கவே ஆயிரம் கண்கள் வேண்டுமென்றிருக்கையில் வேறெதையும் யோசிப்பதெப்படி?
சற்றே முன்னால் அவர்கள் செல்வதைப் பார்த்தபடி அப்படியே சாய்ந்திருந்து, அமெரிக்கா பக்கமிருந்து வந்துகொண்டிருந்த படகையும் சேர்த்து செல்ஃபி எடுக்க முனைகையில், சற்றும் எதிர்பாராத விதத்தில் அவள் தோளோடு கைபோட்டு அவள் தலையோடு தலையுரச கிளிக் என்று புகைப்படமெடுத்தது வேந்தனேதான்.
கண்ணிமைப்பொழுதுதான், திடுமென்று அவன் செய்துவிட்ட செயலில் அதிர்ந்து நின்றாளவள்; அவன் செய்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் எண்ணம் கூட வரவில்லை; சலனம் தொலைத்து நின்றவளை அவனோ சீண்டலாகப் பார்த்தான். இன்னமும் நெருங்கித் தான் நின்றிருந்தான்.
“நீ எப்பிடிடா என்னோட இப்பிடி நிண்டு ஃபோட்டோ எடுக்கலாம் எண்டெல்லாம் நீர் கேட்கவே கூடாது இலக்கியா.” நீட்டி முழங்கினான்.
“ஏனெண்டா…நீர் தான் முதல் முதல் என்னையும் கேட்காம ஃபோட்டோ எடுத்து அதையும் அக்காக்கு அனுப்புறன் எண்டிட்டு உம்மட நம்பருக்கே அனுப்பிட்டு…” முடிக்காது கண்களால் நகைத்தவனை, இப்போது முறைத்தாளவள்.
விசுக்கென்று தள்ளி நின்றவள் பார்வை முன்னே செல்லும் உறவுகளில். அவர்கள் தம் சுவாரசியத்தில் இவன் கூத்தைக் காணவில்லை. இல்லையோ!
“உங்களுக்கு என்ன விசரே! இங்க பாருங்க இதெல்லாம் என்னட்ட வேணாம்.” விரல் நீட்டி எச்சரிக்க, அந்த விரலைப் பொத்திப் பிடித்துக் கையை கீழே இறக்கி விட்டவன், “விசர் தான்…கொஞ்ச நாளா!” கண்ணடித்தான். மறுகணமே, முகத்தில் பதற்றத்தை பூசிக்கொண்டு நின்றவளை ஆதரவோடு பார்த்தான்.
“அவே உம்மப் பார்க்கேல்ல. பார்த்தாலும் தான் என்ன சொல்லும்?” மீண்டும் கண்களால் நகைப்பு.
“அவையள் நல்லா முன்னுக்குப் போய்ட்டினம், வாரும் நடந்து கொண்டே கதைப்பம்.” அவள் கரத்தைப் பற்றிக்கொண்டு நடக்கத் தொடங்க, பட்டென்று உதறிக்கொண்டவளுக்கு நடுக்கமெடுத்தது.
அந்தக் கோடையிலும் அச்சுற்றமெங்கும் உடலை ஊடுருவிக் குத்தும் சிலிர்ப்போடியதென்றாலும், மனதுள் மின்னலாகப் பரவிய பயமே அதிகம் நடுங்கச் செய்தது.
‘அப்பாவும் இல்லாமல் வெளிக்கிட்ட பயணம்! எத்தனை நாள் கனவிது? இதில என்னால பிரச்சனை வரப்போகுது. எங்க இருந்து வந்தவன் இவன்? ஐயோ கடவுளே!’ அசுர கதியில் மனம் குழற, கண்கள் கலங்க, “இங்க பாருங்க… நீங்க ஆர் எவரெண்டு தெரியாது. ஏன் உங்கட பெயர் கூடத் தெரியாது எனக்கு. தயவு செஞ்சு என்ன விட்டிருங்க. உண்மையாவே உங்கட வேலையா எங்களோட வந்திருந்தா அத மட்டும் பாருங்க சரியா? அதோட அந்த ஃபோட்டோவ டெலிட் செய்யேல்லையோ … நான்… கட்டாயம் நாதன் சித்தப்பாட்டச் சொல்லுவன்.” குரல் நடுங்க நடுங்க படபடவென்று கொட்டினாள்.
அவன் புருவம் உயர்ந்திறங்கியது. விழிகள் நகைப்பில் சுருங்கி அவளுள் கொதிப்பை அதிகரித்தது.
“இப்ப உமக்கு என்ர பெயரும் பிறப்பு வளர்ப்பு சொந்தபந்தம் எண்டு தெரியாததுதான் பிரச்சனையா? அதைத் தெரிஞ்சிட்டா எல்லாம் ஓகே தானே?” சீண்டலாக ஆரம்பித்து, அவள் முகத்தில் கோபத்தைக் கொண்டு வந்தான். பட்டென்று எதையோ சொல்லமுயன்றவளுக்கு இடம் கொடுக்கவும் இல்லை.
“அத நேரடியாக் கேட்க வேண்டியதுதானே? அதைவிட்டுட்டு சித்தப்பாட்டச் சொல்லுறன் எண்ட மிரட்டல் எல்லாம் வேணாம் ஓகேவா! என்னை ஆர் எண்டு கண்டதும் அண்டைக்கு போட்டில வந்தவர் இவர்தான் எண்டு சொல்லி இருக்கலாமே ஏன் சொல்லேல்ல? பிறகு, இப்ப சொல்லுறது எண்டா…சொல்லும், அந்த நேரம் பார்ப்பம்.” உனக்கு நான் ஒன்றும் சளைத்தவனல்ல என்ற மாதிரி படபடவென்று சொன்னவன், “நானும் நீரும் சேர்ந்தெடுத்த முதல் ஃபோட்டோ இது. அழிக்க மாட்டன். நீர் மட்டும் என்ர ஃபோட்டோவ வச்சிருக்கலாம் நான் வச்சிருக்க கூடாதா?”
நீட்டி முழங்கியவனை என்ன செய்தாலும் தகும்!


