மனதுள் மூண்டுவிட்ட எரிச்சலோடு வெடுக்கென்று பதில் சொல்லமுனைய, “உம்மட அக்கா வாறா!” என்றபடி மெல்ல நகர்ந்து நீர் வீழ்ச்சியைப் பார்க்கும் வண்ணம் திரும்பி நின்றுகொண்டானவன்.
அதிர்ந்து நின்றாள், இலக்கியா. கவி மட்டும் சற்றே நெருங்கிவந்து இவள் விழிகளைப் பார்த்தாலே போச்சு! நிச்சயம் மாட்டுப்படுவாள். அப்படியே வேந்தன் கால்களிரண்டையும் மேலே தூக்கி டமாலென்று நீர்வீழ்ச்சியில் தள்ளிவிடும் ஆவேசம் இவளுக்கு!
“இலக்கி அங்க நிண்டு என்னடி செய்யிற? கெதியா வாவன்.” தள்ளி நின்றபடியே அழைத்தாள், கவி. அதற்கு மேலும் நிற்க முடியாது விடுவிடுவென்று நடந்தாள், இவள்.
“கெதியா வாம்மா, அங்க மட்டும் நடந்திட்டுத் திருப்பிப் போகவேணுமல்லா.” ரதியும் இவளுக்காக நின்றார்.
“ஃபோட்டோஸ் எடுத்துக்கொண்டு நிண்டன் சித்தி…நடவுங்க.” கைபேசியில் எடுத்த புகைப்படங்களைத் தட்டும் பாவனையில் அவர்களின் முகத்தைப் பார்க்காது தவிர்த்து விட்டாள்.
‘ராஸ்கல்! இடியட்!’ கோபத்தோடு முணுமுணுத்தபடி நடந்தவள் சட்டென்று திரும்பினாள். அவனைக் காணவில்லை.
‘போய்ட்டான்.’ நிம்மதியாக உணர்ந்தாள். கவி வாறாள் என்று அவன் சொன்ன கணம் மனதுள் அவள் அதிர்ந்த அதிர்வு அவளுக்குத் தானே தெரியும். மிகப்புதியதான கள்ளத்தனம். அவளால், அவள் செய்கையை ஏற்கவும் முடியவில்லை. அதேநேரம், அவனை அப்படியே ஒரேயடியாக வெட்டும் வகையும் தெரியவில்லை; வெட்டுமளவுக்கு போவேனா என்று வீம்புக்கு நிற்கும் உள்ளத்தை என்ன செய்வது?
‘இல்ல இனிமேல்பட்டு அவன் பக்கம் பாக்கிறது இல்ல; இது சரிவராது.’ அவள் நினைத்து முடிக்கவில்லை, ‘டோய்! நான் இங்கதான் நிக்கிறன், தேடாதேயும்! போயிட்டு வரேக்க உமக்கு விருப்பமான வைட் சொக்லேட் ஐஸ் வாங்கித் தாறன் சரியா? கெதியா போயிட்டு வாங்க.” வாட்சப்பில் குறுஞ்செய்தி.
‘காருக்க நாங்க கதைச்சது எல்லாம் கேட்டுட்டே வந்திருக்கிறான்’ மனம் சீற பின்னால் திரும்ப எத்தனித்தவள், “ஆரடி ஃபோனில? அம்மா ஆக்கள் ஆருமா?” மெசேஜ் வந்துவிழுந்த சத்தத்தில் கவி கேள்வி கேட்டதும் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டாள்.
“இல்லக்கா. அது…ஃபிரெண்ட்…சுலக்ஷி…நயாகரா ஃபோட்டோஸ் அனுப்பினன், அதுக்குப் பதில்.” பட்டென்று சொல்லிவிட்டவள், மீண்டும் திருப்பிப் பார்த்தாள்.
‘விறுவிறுவென்று போய் அவன்ர கன்னத்தில ரெண்டு இழுத்தால் என்ன?’ வெகுண்டது மனம்.
அந்தக்கோபத்தோடு, சேர்ந்துவிட்ட பதற்றமுமாகத் திரும்பி வருகையில் அப்போதுதான் பார்க்கும் பாவனையில் எதிர்கொண்டவன் இவள் புறமும் பார்க்கவில்லை.
“என்ன எல்லாம் வடிவாப் பார்த்தீங்களா?” ரதியிடம் தான் கேட்டான்.
“ஓம். நீங்க என்ன இதில நிக்கிறீங்க அங்க வரைக்கும் போகேல்லையா?”
“இல்ல, நிறையத் தடவைகள் பாத்த இடம் தானே? இதில நிண்டே பார்த்தாச்சு!” சேர்ந்து நடந்தவன், “ஐஸ்கிரீம் குடிக்கப் போறிங்களா?” ரதியிடமே தொடர்ந்தான்.
“குடிக்கலாமே! வாங்க வாங்குவம்.” சற்றே முன்னால் அந்த நடைபாதையோரமாக வண்டியில் வைத்து விற்றுக்கொண்டிருந்தவனை நோக்கி நடந்தார், ரதி.
“சித்தி எனக்கு ஒண்ணும் வேணாம்; ட்ரிங் வச்சிருக்கிறன், போதும். நீங்க வாங்கீட்டு வாங்க, நான் அந்த மரத்துக்குக் கீழ நிக்கிறன்.” சொன்னவள், பதிலுக்குக் காத்திராது பாதையைக் கடக்க, “ஏன்டி? நீ தானே சாமத்திலும் ஐஸ்கிரீம் குடிக்கிற ஆளாச்சே!” கவி சொல்ல, “நீ இண்டைக்கு ஆளே சரியில்ல. பஸ்ஸில நித்திர இப்பவும் உசாரக் காணேல்ல. தொடங்கின அண்டைக்கே இப்படி எண்டா இனி ரெண்டு கிழமையும் எப்பிடி?” கேலி செய்தார், ரதி.
“பச்! அப்படியெல்லாம் ஒண்டுமில்ல சித்தி, கொஞ்ச முதல் தான் ட்ரிங் குடிச்சன்.” சொல்லிக்கொண்டே, பரந்து கிடந்த புல்வெளியில் நிழல் குடையாக நின்ற மரமொன்றின் கீழ் அமர்ந்துவிட்டாள்.
“அவள் சொல்லுவாள் கேளுங்க சித்தி, நீங்க வாங்குங்க குடிப்பாள்.” என்றபடி வந்தாள் கவி.
“அவளுக்கு வைட் சொக்லேட்.” ரதியின் கை முதலில் வாங்கியது இலக்கியாவுக்கு.
“எனக்கு மங்னம் சித்தி.” கவி சொல்ல, “எனக்கும் மங்னமே வாங்குங்க அக்கா.” என்றாள் அஜி.
“எனக்கு எப்பவும் டார்க் சொக்லேட்.” அதை வாங்கிக் கொண்டே, “உங்களுக்கு?” வேந்தனிடம் திரும்ப, “எனக்கும் வைட் சொக்லேட்!” மென்னகையோடு சொன்னவன், அந்தக் கையோடு காசையும் கொடுத்திருந்தான்.
“இதென்னது நீங்க? இல்ல…நீங்க அதை அவரிட்ட குடுங்க, இதைப் பிடியுங்க!” ஐஸ் வண்டிக்காரரிடம் காசை நீட்டினார், ரதி. அவன் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.
“இதெல்லாம் என்னது? உங்களோடதானே ரெண்டு கிழமைக்கு வரப்போறன் இப்பிடியெல்லாம் கணக்குப் பாப்பீங்களா என்ன?” ரதியிடம் தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டு, “நீங்க எடுங்க!” என்றதும் மிகுதியை எண்ணி அவனிடம் கொடுத்தார் அந்த வண்டில்காரப் பெரியவர்.
அவர்களையேதான் பார்த்துக்கொண்டிருந்தாள். இலக்கியா. ‘சொன்னதுபோலவே தானே வாங்கிட்டான்; மெண்டல்!’ பற்களை நறும்பினாள். அதைத்தவிர வேறெதையும் செய்ய முடியவில்லை.
“இந்தா” அவளிடம் நீட்டிய ஐஸை வேண்டாமென்று சொல்ல எவ்வளவு நேரமாகும். ஆனால், அவள் சித்தி நிச்சயம் முகம் சுருங்கிப் போவார். வாங்கிக்கொண்டவள் அவன் புறம் பார்க்கவில்லை. எல்லாரும் அமர்ந்துகொண்டார்கள்.
வெகு இயல்பாக நகர்ந்து வந்து மரத்தில் சாய்ந்து நின்றுகொண்டான், வேந்தன். அருகில் கீழே இலக்கியா.
கீழ் கண்ணால அவன் பாதங்களை பார்த்தவளுக்கு என்னவோ மனதுள் செய்தது. ‘எப்பிடி இவனால எனக்குள்ள இப்பிடி மற்றம் செய்ய முடியுது? வயசுக் கோளாறோ!’ என்றெண்ணியதும் அந்த எண்ணமே சுத்தமாகப் பிடிக்கவில்லை, அவளுக்கு.
‘சே சே! ஏன் இலக்கி உன்ன நீயே இப்பிடி நினைக்கிறியே? அதெல்லாம் இல்ல.’ உடனடி மறுப்பும் கூறிக்கொண்டாள். அப்போ? விடை தெரியாத கேள்வியே இல்லை இது. ஆனாலும், மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்துத் தத்தளித்ததுள்ளம். அவன் மீதான அவளின் சாயல் உறுதியானதென்று புரிந்தாலும், இத்தனை விரைவில் நிகழ்ந்துவிட்ட நிகழ்வில், அதை ஏற்கத் திணறி நின்றாள் என்பதேயுண்மை.
தயக்கமும் பயமும் ‘விலகி ஓடிடு’ என்று வலியுறுத்துகின்றதுதான். கண்முன்னால் நடமாடி, விழிகளாலும் செய்கைகளாலும் மனதை உணர்த்தி நிற்பவன் விடாது பிடித்திழுக்கிறானே!
அன்று, ‘காய்மந்த் ஏரி’யில் சந்தித்த பின்னர் அவனைச் சந்தித்திராவிட்டால், யார் எவரென்று தெரியாத ஒருவனை நிச்சயம் தேடிச் செல்ல முனைந்திராள்; தொலைபேசியில் கூட தானாகவே தொடர்புகொண்டும் இராள்; சில நாட்களின் பின்னால் அவன் நினைவுகளைக் கடந்தும் வந்திருப்பாள், அதுதானே இயற்கை! இப்போதோ, இனி அவன் கண்களிலிருந்து மறைந்தாலும் அவள் மனதிலிருந்து மறைந்திடான் என்றளவில், அவன், அவளுள் பதியத் தொடங்கியிருந்தான்.
‘பதியத் தொடங்கியிருந்தானா? பதிந்தேவிட்டானா?’
மெல்ல நிமிர்ந்த வதனம் அவன் முகத்தில் பார்வையை நிறுத்தியது. சிலவினாடிகள்தான், பார்வைகள் ஒன்றையொன்று பற்றி நின்றன. தான் பார்ப்பேன் என்று அவன் எதிர்பார்த்திருந்திருக்கிறான் என்பதை அவன் பார்வையில் தெறித்த பளிச்சிடலில் உணர்ந்துகொண்டாள், இலக்கியா. சட்டென்று அவள் கண்கள் கலங்கிவிட்டன. அதேநொடி எழுந்துவிட்டாள்.
“சித்தி போவமே…நேரத்துக்கு போடர் கடக்கக் கிடைச்சாலும் நல்லது எண்டு நாதன் சித்தப்பா சொல்லேலையா.” நடக்கத் தொடங்கியிருந்தாள்.
“அதுவும் சரிதான் போகலாம்.” முதல் ஆளாக அவளருகில் வந்தது அவனேதான். கொஞ்சம் கூட சந்தேகம் வராத மாதிரியே இயல்பாகச் சேர்ந்து நடந்தான்.
‘டேய் டேய்! சத்தியமா நீ என்னட்ட வாங்கப் போற! ஐயோ!’ சட்டென்று திரும்பி முறைத்துவிட்டாள். கண்ணடித்தான். பக்கென்று மறுபுறம் திரும்பிவிட்டாள்.
“கார் ரேஸிங் எண்டு போனவை இலேசில விட்டுட்டு வாராயினம்…போய்ப் பாப்பம்.” என்றபடி அவளருகில் வந்துவிட்ட அஜி இதைக் கண்டிருந்தால்? மனதுள் எக்கச்சக்கமாகப் பதற்றமோட, நடந்தவள், அதன்பின்னர் அவன் புறமாகத் திரும்பவேயில்லை. அவனும் சீண்டியது போதுமென்று நினைத்தான் போல! பின்தங்கி கவி, ரதியோடு கதைப்படி வந்தான்.
மத்திய உணவுக்கு அங்கிருந்த இந்திய உணவகம் ஒன்றினுள் நுழைந்தார்கள். நல்ல தரமான ருசியான உணவென்று பரிந்துரைத்திருந்தான், வேந்தன்.
அவரவருக்கு விருப்பமானதை வாங்கி, கலகலவென்று உணவருந்தும் போது நாதனருகில் சென்றமர்ந்தவனைத் தன்னையுமீறித் திரும்பிப் பார்த்தாள், இலக்கியா. அதேநேரம் அவன் பார்வையும் இவளில் தானிருந்தது. எந்த சேட்டையுமின்றி ஆழ்ந்து பார்த்தவன், இவள் பார்வை சற்றே தங்கவும் விழியசைவால் என்னவென்பதாக வினவினான். பக்கென்று திரும்பிவிட்ட இலக்கியாவுக்கோ குப்பென்று வியர்த்துப் போனது; பயத்தில் தொண்டை அடைத்திட்டு!
‘பாவி! இவனுக்கு எவ்வளவு துணிவிருக்க வேணும்? ஒரு பக்கம் நாதன் சித்தப்பா, மற்றப்பக்கம் மாறன் சித்தப்பா…நடுவில இருந்து உரிமையாச் சைட் அடிக்கிறான்’ என்று நினைக்கையில், யாராவது பார்த்திருப்பார்களோ என்ற ஐயம் வேறு தவிக்க வைத்தாலும், இதுவெல்லாம் மீறி, அவளிதழில் அழகிய முறுவலின் பூச்சு! அதுவே மீண்டும் அவள் தலையைத் திருப்பிவிட்டிருந்தது.
அவள் ‘பரோட்டா’ சொல்ல, தனக்கும் அதையே சொல்லியிருந்தவன் அதைப் பிய்த்து வாய்க்குள் வைத்தபடி அவளைத்தான் பார்த்திருந்தான். இப்போது அவன் விழிகளில் விசமம் மின்னியது. கணம் தாமதித்தாலும் என்னவாவது இழுத்து வைப்பான் என்ற மனம் அடிபோட்டத்தில் பட்டென்று திரும்பியவளுக்கு, “என்னக்கா சாப்பிடாமல் பின்னுக்குப் பின்னுக்குப் பார்வை?” என்று, முன்னால் அமர்ந்திருந்த ஆரூரன் கேட்டுவிட, புரையேறிவிட்டது.
‘பிடிபட்டுப்போனனோ!’ மனம் வீரிட, தட் தட்டென்று தலையில் தட்டிக்கொண்டாள். தொடர்ந்து இருமி கண்களில் நீருடன் அவளிருந்த நிலைபார்த்துப் பதறிவிட்டான், ஆரூரன்.
“சாப்பிடேக்க என்ன பகிடி சேட்டை!” கண்டிப்போடு வந்தது பின்னாலிருந்த நாதனின் குரல்.
“பகிடி சேட்டையா? ஐயோப்பா நான் ஒண்ணுமே சொல்லேல்ல!” தகப்பனுக்குச் சொல்லிவிட்டு, “பார் கவிக்கா இவள! இப்ப என்ன கேட்டன்? எதுக்கு இந்தளவுக்கு சீன்?” முறைத்தானவன்.
“பச்! திடீரென்று விக்கல் அதுதான்…புரையேறிட்டு! லூசுபோல கதைக்காமல் சாப்பிடு!” ஆரூரனுக்குச் சொன்ன வேகத்தில் முன்னாலிருந்த தண்ணியை மடமடவென்று உள்ளே தள்ளினாள், இலக்கியா.
‘எனக்கு நல்லா வேணும்! இதோட எத்தின தரம் அவனைப் பார்க்கிறேல்ல எண்டு சொல்லிப் போட்டு திரும்பவும் பார்த்தால்? இனிமேல்பட்டு பாக்கிறேல்ல!’ சபதம் எடுத்துவிட்டே பரோட்டாவை உள்ளே அனுப்பினாள்.