“வெளிச்சம், 150 வது விசேச ஒளிபரப்புக்கு உங்களை அன்போடு வரவேற்கும் நான், உங்கள் கவனி பூங்குன்றன்!” குதூகலக் குரலோடு கை தட்டியபடி நிகழ்வை ஆரம்பித்திருந்தாள், அவள்.
சரியாக அந்த நேரம், கதவைத் திறந்து உள்ளிட்டிருந்தான், சேந்தன். எதிரே, சுவரை நிறைத்திருந்த ‘எல் இ டி’ திரையில் பளிச்சென்று தெரிந்த கவினியின் உருவம், சில கணங்களேனும் அவன் கவனத்தை வசப்படுத்தியிருந்தது என்றால், துள்ளல் நிறைந்த குரலில் ஒலித்த அவள் பெயர், நெற்றியைச் சுருங்க வைத்திட்டு.
‘எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே!’ யோசனையோடியது.
“வாங்க சேந்தன், எப்பிடி இருக்கிறீங்க? ” எழுந்து வந்து கைலாகு கொடுத்து அன்போடு வரவேற்றார், ‘தமிழ் முரசு’ தொலைக்காட்சி நிறுவனர், ஆர் ஜெ ஐயா. இந்த நிறுவனம் செய்து வரும் பல தானதர்ம முயற்சிகளுக்கு உதவும் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவன், இவன்.
அடுத்துக் கழிந்த நிமிடங்கள் சில, சுகநல விசாரிப்பு, வேலை பற்றிய அளவளாவல் என்று சென்றாலும் சேந்தன் பார்வை அடிக்கடி’ எல் இ டி’ யை தொட்டு வந்தது.
சுழல் கதிரையைச் சற்றுப் பக்கவாட்டில் நகர்த்தினார், ஆர் ஜே ஐயா. திரையைப் பார்க்கும் வண்ணம் இருந்துகொண்டவர் முகத்தில் கனிவு!
“கவினி… இந்தப் பிள்ள நல்ல கெட்டிக்காரி. அது மட்டும் இல்ல, கடுமையான உழைப்பாளியும்! அவா எங்கட தமிழ் முரசுக் குடும்பத்துக்கு வந்து இண்டோட ஐஞ்சு வருசங்கள் ஆகிற்று. ஏல் எல் எடுத்த கையோடு வந்தவா. செய்தி வாசிப்பாளரா இருந்தாலும் ‘வெளிச்சம்’ எண்ட இந்த நிகழ்ச்சி அவவுக்கு மிகப்பெரிய அடையாளம்.” என்றவர் குரலில் அவ்வளவு பெருமிதம்.
“ஈடுபாடும் முயற்சியும் இருந்தா முன்னேற்றம் கட்டாயம் இருக்கும் எண்டுறதுக்கு, இளம் தலைமுறைக்கு கவினி நல்லதொரு உதாரணம்!” என்றவர் பார்வை சேந்தனிடம் திரும்பியது.
“நீங்க கேட்டபடி ஊர்ல உதவி தேவைப்படுற மூண்டு குடும்பங்கள் தெரிவு செய்து வச்சிருக்கிறன், சேந்தன். இருந்தாலும் அங்க இப்பிடியான உதவிகள் ஆருக்குக் கட்டாயம் போய்ச் சேரோணும் எண்டு பாத்து முடிவு செய்யிறது கவினி தான்.” சொல்லிக்கொண்டிருந்தவர் பார்வை திரைக்குத் திரும்பியது.
“எங்களுடைய வெளிச்சம் நிகழ்ச்சி, இந்த ஐந்து வருடங்களில் பல நூறு குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த, மேம்படுத்த உதவியிருக்கிறது. அதிலும் குறிப்பாகச் சொல்வதென்றால் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நலிந்து, செய்வதறியாது அந்தரித்து, அநாதரவாக நிற்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறது. இன்று, நாங்கள் இட்ட உதவிகள் ஒன்றொன்றும் எந்த வகையில் அவர்களை மேம்படுத்தியுள்ளது என்பதை, அவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காது சென்று பார்வை இடலாமா மக்களே?” பொருத்தமான ஏற்ற இறக்கங்களோடு சொல்லிக்கொண்டே விறுவிறுவென்று மண் பாதையில் நடந்தாள், கவினி.
ஓரிடத்தில் கணுக்காலுக்கு மேல் மழைநீர் தேங்கி நின்ற பாதையைக் கடக்க வேண்டியிருந்தது.
“மக்களே, இப்போது நான் விசுவமடுவில் நிற்கிறேன். ஒரு கிழமைக்கு முதல் பெய்த கடும் மழை காரணமாக இந்தச் சுற்றத்தில் கணிசமான பகுதிகள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தன. நல்ல வேளையாக, மழை தொடராத காரணத்தால் இரு நாட்களில் வடிந்து இப்போது இப்படி இருக்கிறது.” கணீர்க் குரலில் தொடர்ந்தாள், அவள்.
சுற்றிலும் தேங்கி நின்ற மழைநீரைத் தன்னுள் அடக்கிப்பிடித்து ஒளிபரப்பியது, ஒளிப்படக்கருவி. அணிந்திருந்த சாண்டில்களை கழற்றி இடக்கையில் பிடித்துக்கொண்டு வெள்ளத்துள் கால் வைத்தாள், கவினி.
“இப்போது நாம் சந்திக்கப் போகிற குடும்பத்துக்கு உதவியவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு தாய். மூன்று பிள்ளைகளோடு தனித்து வாழ்பவர், குடும்பப் பொறுப்பு முழுதும் அவரில்தான். இருந்தாலும், தன் தாய் மண்ணில், யுத்தத்தின் வடுக்களாக வருந்துபவர்களுக்கு என்று, ஒவ்வொரு மாதமும் முப்பது யூரோக்கள் தவறாது அனுப்பிவிடுவார். அப்படிச் சேர்ந்த பணத்தில்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறவர்கள் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய மாற்றம் நடந்துள்ளது. வாங்கோ பார்ப்போம்!” என்றபடி, பனங்கருக்கு மட்டைப் படலையைத் திறந்து உள்ளிட்டாள்.