பிரணவனும் ஆர்கலியும் வீட்டுக்குள் வந்ததுமே, “அண்ணா! எப்ப ஆரு பிரணவன் கல்யாணத்தை வைப்பம்?” என்று கேட்டார் லலிதா.
பெரும் வியப்போடு எல்லோர் பார்வையும் அவரிடம் குவிந்தது. யாருமே அந்தப் பேச்சை அவரே ஆரம்பிப்பார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“சந்தோசம் தங்கச்சி! இதுக்குப் பதில் தம்பிதான் சொல்லோணும்.” பொறுப்பாக எல்லாம் செய்யும் மகனே முடிவை எடுக்கட்டும் என்று அவனைப் பார்த்தார் கருப்பன்.
“அவர் என்ன சொல்லுறது? நான் இனி லண்டன் போறதா இருந்தா அவரின்ர மனுசியாத்தான் போவன். அதுக்கேற்ற மாதிரி எல்லாத்தையும் செய்ங்கோ!” என்றாள் ஆர்கலி முந்திக்கொண்டு.
தமக்கையும் தங்கைகளும் கேலியாக அவனைப் பார்த்தனர். பிரணவனின் முகமெங்கும் சிரிப்பு! ‘என்ர மானத்த வாங்குறதுக்கு இவளக் கேட்டுத்தான்!’ முகம் திருப்பித் தலையைக் கோதிக்கொண்டான்!
“அண்ணா, வெக்கப்பட்டது காணும்! எப்ப எண்டு சொல்லுங்கோ!” என்றாள் துவாரகா.
“என்ன மாம்ஸ்? உங்கட மகள எனக்குத் தருவீங்களா?” அனறைய பேச்சின் நினைவில் கேட்டான் பிரணவன்.
“அவள் உனக்குத்தான் மரோ!” அவரும் சளைக்காமல் பதில் சொன்னார். அந்த வீடு முழுவதுமே சிரிப்பில் குலுங்க, அடுத்த மாதமே திருமணத்தைச் செய்ய முடிவெடுத்தனர்.
மணமக்கள் அவர்களுக்கான அறைக்குள் அனுப்பப் பட்டுவிட, ஆர்கலி பெற்றவர்களோடு புறப்பட்டாள்.
‘போகாத!’ என்று கண்ணாலேயே அதட்டினான் அவன்.
அவள் தலையைச் சரித்துக் கெஞ்சினாள். ‘இந்தச் சாரில மூச்சு முட்டுது!’
அவன் முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
“அம்மா நீங்க போங்கோ, நான் பிறகு பிரணவனோட வாறன்!” என்று அவர்களை அனுப்பிவைத்தாலும் அவனை முறைத்தாள் அவள். ‘நினைச்சது நடக்கோணும்!’
“அவளைக் கவனமா கொண்டுபோய் விடோணும் தம்பி! இல்ல மாமாக்குச் சொல்லிப்போட்டு இங்க எங்களோட படுக்கவிடு.” என்றுவிட்டுப் புவனா எல்லோரும் உறங்கப் போய்விட்டனர்.
வானத்து நிலவின் வெளிச்சத்தில் தன்னவளை அணைத்துக்கொண்டு முற்றத்து வாங்கிலில் அமர்ந்திருந்தான் பிரணவன். அவன் கேசத்தை ஆசையாகக் கோதிக்கொண்டே இருந்தாள் ஆர்கலி.
“அதைச் சும்மா விடடி!” என்றவனின் பேச்சை அவள் காதிலேயே விழுத்தவில்லை.
“நித்திர வருது பிரணவன்!” சற்று நேரத்தில் அவன் கைகளுக்குள்ளேயே சரிந்துகொண்டு சிணுங்கினாள் ஆர்கலி. அதிகாலையிலேயே எழுந்து அன்று முழுக்க ஒடித் திரிந்ததில் முற்றாகக் களைத்துப்போயிருந்தாள் அவள்.
“சரி படு!” என்று வாகாகத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான் அவன்.
ஏனோ அவளைக் கொண்டுபோய் விடவே மனமில்லை. இப்படியே கைகளுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும் போலிருந்தது!
“நீங்களும் வாறீங்களா?” என்று கண்ணடித்தாள் அவள்!
அவன் உதட்டினில் சிரிப்பு மலர்ந்தது.
“என்னத்துக்கு?”
“நீங்க ஆசைப்பட்ட மாதிரி முதலிரவு கொண்டாடத்தான்!” அவனின் காதுக்குள் ரகசியம் சொன்னாள் அவள்.
அவன் சிரிப்புப் பெரிதானது! “வரமாட்டன் எண்டு நினைக்கிறியா?”
“அதுக்கெல்லாம் நீங்க சரிவர மாட்டீங்க!” எம்பி அவன் கழுத்தை வளைத்துத் தாடையில் அழுத்தமாக முத்தம் பதித்துவிட்டுச் சொன்னாள் ஆர்கலி!
“சாரி கட்டிவிட்ட அண்டு(அன்றைக்கு) நடந்ததை மறந்திட்டியா?” கள்ளச் சிரிப்புடன் நினைவூட்டினான் அவன்.
“பிர…ணவன்!” வெட்கத்துடன் சிணுங்கி அவன் கழுத்துக்குள் முகத்தை மறைத்துக்கொண்டாள் ஆர்கலி.
வாய்விட்டுச் சிரித்தான் அவன். ஏனோ அந்தக் கணம் அவனுக்குள் மோகம் பிறக்கவில்லைதான்! ஆசையாய் அவளைத் தன் கைகளுக்குள் இப்படி வைத்திருப்பதே பெரும் சுகமாயிருந்தது!
“நீ என்ர கைக்க இருக்கிறாய் எண்டுறதையே நம்பேலாமா இருக்கு பொம்மா!” உணர்வில் குரல் கரகரக்கச் சொன்னான் அவன்.
அவளுக்கும் அதே உணர்வுதான்! எத்தனை நாட்களை அவன் அண்மைக்கு ஏங்கிக் கண்ணீரில் கழித்திருப்பாள்? கடவுளே! அவன் இடுப்பை இறுக்கி வளைத்து நெஞ்சில் அழுத்தமாக உதடுகளைப் பதித்தாள் ஆர்கலி!
அந்த முத்தம் அவனுக்குள் என்னென்னவோ செய்தது!
பிரணவன் வேகமாக எழுந்துகொண்டான்! “வா, போவம்!”
சிரிப்பு வந்தது ஆர்கலிக்கு! அசையா நெஞ்சனை அசைத்துப் பார்க்கும் வல்லமை அவளின் ஒற்றை முத்தத்துக்கு இருக்கிறது!
“இப்படித்தான் நீங்களும் அப்ப தந்தீங்களா?” கண்ணைச் சிமிட்டி அவள் கேட்க, சிரிப்புடன், “வாடி!” என்று இழுத்துக்கொண்டு போனான் அவன்.
போகாமல் முரண்டியபடி, “அந்த ஆல்பத்தைக் காட்டுங்கோவன் பிரணவன்! ப்ளீஸ் ப்ளீஸ்!” என்று அவள் கெஞ்ச, இனி மறைக்க என்ன இருக்கிறது என்று எடுத்துக் கொடுத்தான் அவன்.
பார்த்தவளுக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. நிலத்தில் விரிக்கப்பட்டிருந்த துணியில் அவள் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்க, இவன் அருகில் சரிந்திருந்து அவள் உதட்டினில் முத்தமிட்டுக்கொண்டிருந்தான்.
“அப்பவே இந்த வேலை பாத்த உங்களுக்குத்தான் இப்ப வெக்கமெல்லாம் வருதுபோல?” என்று அவள் சிரிக்க, அவனாலும் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
“வாடி வாயாடி!” என்று இழுத்துக்கொண்டு அவளின் வீட்டுக்குச் சென்றான்!
அதே அறை! அதற்குள் நுழைந்ததுமே இருவரும் அமைதியாகிப் போயினர்! இருவருக்கும் அன்றைய நாள் நினைவு தாக்கிற்று. இருவர் விழிகளும் சந்தித்துக்கொண்டன.
பிரணவனிடம் முறைப்பும் கோபமும்! அவ்வளவு கெஞ்சியும் கதவைத் திறக்கவே இல்லையே அவள். ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து அவளை நெருங்கினான்.
அவளுக்குள் பதற்றம் தொற்றிக்கொண்டது. சிறுவனாக மாறி விளையாடும் பிரணவன் அல்ல இவன். அவளைப் பெண்ணாக உணரவைக்கும் சக்தி கொண்ட அவளின் ஆண்மகன்!
பார்வை தானாகாத் தாழ, “நேரமாயிற்று! வீட்ட போங்கோ!” என்று முணுமுணுத்தாள்.
“அண்டைக்கும் இதே அறைக்குள்ள வரவிடாம கதவைச் சாத்திப்போட்டு இண்டைக்கும் துரத்தப் பாக்கிறாய் என்ன?” கேட்டபடி அவள் இடையை வளைத்தான் அவன்.
சேலையில் இருந்தவளின் வெற்றிடையில் அழுத்தமாகப் பதிந்த அவன் விரல்கள் அவளின் உயிரைச் சிலிர்க்க வைத்தது.
“பிர…ண…வன்…” வார்த்தைகள் சிக்கிக்கொண்டன ஆர்கலிக்கு!
“சொல்லு! பிரணவனுக்கு என்ன?” அவளைத் தன்னை நோக்கி இழுத்தான்.
“எவ்வளவு கெஞ்சினனான். அவ்வளவு பிடிவாதம் என்ன உனக்கு? என்ர குடும்பத்துக்க நீ அடக்கமில்லையாடி? உன்ர புருசன்ர அக்கான்ர கலியாணத்துக்கு உன்ன நான் கூப்பிடோணுமோ?” அவனுடைய கோபங்கள் அத்தனையும் வெளிவந்தன.
அவளுடைய கீழுதட்டினைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தான். “இந்த வாய்தானே அப்படியெல்லாம் கதைச்சது! உன்ன பாத்த நிமிசத்தில இருந்து நான் பைத்தியக்காரன் மாதிரி அலையிறன். நீ என்னடா எண்டால் உன்னை வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டன் எண்டு அதையே பிடிச்சுக்கொண்டு தொங்கினனி என்ன? அப்படியெல்லாம் கதைச்ச இந்த வாய என்ன செய்யோணும்?” அவளிடமே கேட்டுவிட்டு அந்த உதடுகளுக்குத் தண்டனை கொடுக்கத் தொடங்கியிருந்தான் அவன்.
உள்ளம் கரைய மயங்கி நின்றாள் அவனின் பொம்மா! தண்டனை என்று சொல்லிவிட்டு என்ன செய்கிறான் அவளை? உயிரே உருகிக்கொண்டிருந்தது!
மீண்டும் மீண்டும் தன் இதழ்களை அவள் இதழ்களில் பதித்தான் அவன். கரங்களோ அத்தனை கட்டுப்பாடுகளையும் உடைத்து எறிந்துபோட்டிருந்தது.
வேகத்துடன் கூடிய தேடல் அவனிடம்! அவள் விழிகள் கிறங்கி மூடின! காது மடலை நீவிக்கொடுத்த விரல்கள், இடையை அழுத்தமாகத் தழுவிய கரம், இதழ்களின் சுவையறிந்த அவன் உதடுகள் செய்த மாயத்தில் அவன் மார்புக் கூட்டுக்குள்ளேயே புதைந்தாள் ஆர்கலி!
அந்த அறை நினைவூட்டிய நிகழ்வுகளின் தாக்கம் அனைத்தும் அடங்குமட்டும் அவளிடம் தொலைந்திருந்தவன், மெல்ல அமைதிகொண்டான்!
கட்டிலில் கால் நீட்டி அமர்ந்துகொண்டு கைகளை விரிக்க, மிக வேகமாக அவன் கைகளுக்குள் புகுந்து, பூனைக் குட்டியைப் போல் அவன் மார்பினில் சுருண்டுகொண்டாள்.
அவளை அணைத்துக்கொண்டு முதுகை வருடிக்கொடுத்தான் பிரணவன். இது போதும்! என்றென்றும் இதுவே போதும்! அமைதிகொண்டிருந்த அவன் உள்ளம் ஆத்மார்த்தமாய்ச் சொல்லிக்கொண்டது!
முற்றும்!


