வீட்டுக்கு வந்தபிறகும் சஞ்சனா கண்ணாடியில் அடிக்கொரு தடவை தன்னை ரசித்துப் பார்ப்பதைக் கவனித்துவிட்டு, “அதை நீயே வச்சிரு மச்சாள். நான் இதைக் கொண்டுபோறன். நெதர்லாந்துக்குப் போனபிறகு உன்ர நினைவா என்னட்ட இருக்கட்டும். நீ அதை என்ர நினைவா வச்சிரு.” என்றவளுக்குத் தொண்டை அடைத்துக்கொண்டது.
இன்னும் மூன்று நாட்கள் மட்டுமேதான் இருக்கிறது. சாமத்தியவீடு முடிந்து வந்ததும் அன்று மாலையே கொழும்புக்குப் புறப்படவேண்டும். அடுத்தநாள் காலை விமானம் ஏறவேண்டும். இனி இங்கே வருவதற்கு முடியுமோ இல்லையோ?
இத்தனை நாட்களாக இலங்கைப் பயணத்தை அவள் விரும்பியபோது அப்பா தள்ளிப்போட்டார். இனி நிச்சயமாக அப்பா விரும்பினாலும் அவள் மறுப்பாள். இந்த அவமரியாதைகளை அவமதிப்புகளைத் தெரிந்தே அவருக்கு எப்படி அவளால் வழங்க முடியும்? கடைசிவந்தாலும் அதற்கு விடக்கூடாது என்று எண்ணிக்கொண்டு நிமிர்ந்து சஞ்சனாவைப் பார்க்க, “போனா திரும்ப வரமாட்டியா மச்சாள்?” என்று துக்கத்தில் அடைத்த குரலில் கேட்டாள் அவள்.
சஹானாவுக்கும் நெஞ்சில் பாரம் ஏறி அமர்ந்தது. “வர என்ன காரணம் இருக்குச் சொல்லு?” கமறிவிட்ட குரலில் தன் விரல்களை ஆராய்ந்தபடி கேட்டாள்.
“ஏன் நாங்க இல்லையா?” வேகத்தோடு கேட்டவளை வெற்று விழிகளால் நோக்கினாள் சஹானா.
“திரும்பவும் வந்து அவமானப்படச் சொல்லுறியா?”
உண்மைதானே. இன்றுவரை எந்த மாற்றமும் இல்லாமல் அவளை வெறுத்து ஒதுக்கும் தன் வீட்டினரின் மீது அவளுக்கும் வெறுப்பு உண்டாயிற்று! “சொறி மச்சாள்!” வேற என்ன சொல்வது என்று தெரியாமல் திணறினாள் சஞ்சனா.
“விடு!” என்றவள், தன்னை மறந்தவளாக, “முந்தி இங்க நடந்த எதுவுமே எனக்குத் தெரியாது மச்சி! ஒவ்வொரு வருசமும் எந்த நாட்டுக்கு டூர் போறது எண்டு நான்தான் பிளான் போடுவன். எப்ப எல்லாம் இலங்கைக்குப் பிளான் போடுறேனோ அப்பயெல்லாம் வர முடியாம போயிடும். அதுக்கெல்லாம் காரணம் அப்பா எண்டு பிறகுதான் தெரிஞ்சது. அவருக்கு உங்க எல்லாரையும் வந்து பாக்க சரியான விருப்பம். நிறைய ஏக்கம். ஆனா, இந்த அவமானத்தையும் தலைகுனிவையும் தன்ர செல்ல மகள் தாங்கமாட்டாள் எண்டுற பயத்தில தன்ர ஆசையையும் ஏக்கத்தையும் மனதுக்கையே மறைச்சு வச்சிருந்திருக்கிறார் எண்டு எனக்கு இப்பதான் தெரியவந்தது.” எனும்போதே சூடான கண்ணீர் துளிகள் இரண்டு அவளின் கன்னத்தில் உருண்டு ஓடியது.
அவர் எண்ணியதில் தவறே இல்லை என்று பட்டுத்தானே புரிந்திருக்கிறாள். ஆனால், என்ன பட்டு என்ன பிரயோசனம்? எதுவும் மாறவேயில்லையே! அவளால் அவர்களை மாற்றவே முடியவில்லையே!
அவள் சொன்னதைக் கேட்டு கலங்கிவிட்ட விழிகளோடு அவளருகில் நெருங்கி அமர்ந்து, “எல்லாம் சரியாகும் மச்சி! கவலைப்படாத!” என்று கண்களைத் துடைத்துவிட்டாள் சஞ்சனா.
நம்பிக்கை இல்லாமல் சிரித்தாள் சஹானா. “எனக்காகத் தன்ர ஆசையை அடக்கிக்கொண்டு இத்தனை வருசமா வாழ்ந்த அப்பாவுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போறன்? எண்டு யோசிச்சிட்டுத்தான் இங்க வந்தனான். என்ர அப்பாவை தன்ர சொந்தத்தோட சேர்க்க வேணும். அவர் சந்தோசமா சிரிக்கிறதை நான் பாக்கவேணும் எண்டு ஆசைப்பட்டன். அதெல்லாம் நடக்கும் எண்டுற நம்பிக்கை இப்ப எனக்கும் இல்ல.” என்றவள், அதற்குமேல் முடியாமல் நடுங்கிய இதழ்களைப் பற்களால் கடித்து அடக்கினாள்.
இனியும் அங்கே நின்றாள் நிச்சயம் அப்பாவைப்பற்றிச் சொல்லிவிடுவோம் என்று தெரிந்து புறப்பட்டு அரவிந்தன் வீட்டுக்குச் சென்றாள்.
அவள் சென்ற பின்னும், அவள் இவளுக்குள் கடத்திவிட்டுச் சென்ற துக்கத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் சஞ்சனா.
ஒரு காதல் திருமணம் மூன்று தலைமுறை மனிதர்களின் வாழ்வைத் சின்னாபின்னமாக்கிவிட்டிருக்கிறதே. இந்தளவுக்கு இதையெல்லாம் தூக்கிப்பிடிக்கத்தான் வேண்டுமா? இல்லை என்றுதான் தோன்றியது.
அவளுக்குப் புரிவது ஏன் அந்த வீட்டில் மற்றவர்களுக்குப் புரியவே இல்லை.
இலக்கற்றுத் திரிந்த அவளின் சிந்தனை களைவதற்கு நெடு நேரமாயிற்று. உடையை மாற்றுவோம் என்று போனவளை, கடைசியாக சஹானா சொல்லிவிட்டுப் போன, ‘என் நினைவாக வைத்திரு’ என்கிற வார்த்தை, அவளே இந்த உடையின் மூலம் தன்னோடு இருப்பது போலிருக்க அதோடு சுற்றிக்கொண்டிருந்தாள்.
மிகுந்த எரிச்சலுடன் வீட்டுக்குள் நுழைந்த சஞ்சயன், சஹானாவின் உடையில் நின்ற தங்கையைக் கண்டதுமே பளார் என்று ஒரு அறை விட்டான். “போடி! அத கழட்டி எடுத்துக்கொண்டு வா!”
அது நாள்வரை அடிக்காத தமையன் கை நீட்டிவிட்டதில் உச்சக் கட்டமாகப் பயந்து போனவள் ஓடிப்போய் மாற்றிவந்து கொடுக்க அதோடு சஹானாவின் வீட்டுக்குப் பைக்கை விரட்டினான்.
மாலை நேரத்துச் சிற்றுண்டியும் தேநீருமாக எல்லோருமே விறாந்தையில் குழுமி இருந்து தொலைகாட்சி பார்த்துக்கொண்டு இருக்கையில் புயலென அங்கு நுழைந்தான் சஞ்சயன். ஜீன்ஸ் டாப்பை அவளின் முகத்திலேயே தூக்கி எறிந்தான்.
“அம்மா..!” ஜீன்ஸின் சிப் கன்னத்தில் அழுத்தமாகக் கீறியது. வலியும் வேதனையுமாக அந்தப் பக்கத்துக் கன்னத்தைப் பொத்தியபடி பார்த்தவளிடம், “உன்ர ஆட்டத்தை உன்னோட வச்சிரு. என்ர தங்கச்சியையும் கெடுக்க நினைச்சாய் எண்டு வை.. ஒழுங்கா ஊருக்குப் போய்ச் சேரமாட்டாய்!” என்று, விரல் நீட்டி எச்சரித்துவிட்டு வந்ததுபோலவே அங்கிருந்து வெளியேறியும் இருந்தான்.
அங்கிருந்த எல்லோருக்குமே இந்தச் சம்பவத்தைக் கிரகித்துக் கொள்வதற்கே சற்று நேரம் பிடித்தது. ஓடிவந்து அவளின் காயத்தைப் பரிசோதித்து மருந்திட்டார் ராகவி.
சஹானாவின் கண்கள் கலங்கி முகம் சிவந்து போயிற்று. அடிபட்ட குழந்தையாகச் சமைந்து போயிருந்தாள்.
“ஒண்டும் இல்ல ராசாத்தி! ஒண்டும் இல்ல!” தொண்டை அடைக்கச் சொன்ன ராகவி அவளை மார்போடு அணைத்துக் கொண்டார். என்னதான் கோபதாபம் இருந்தாலும் ஒரு வரைமுறை இல்லையா? என்ன பிள்ளை இவன்? ஆத்திரத்தில் கண்டபாட்டுக்கு வார்த்தைகள் வெடித்துக்கொண்டு வரும் போலிருக்க உதட்டை இறுக்கி மூடிக்கொண்டார் ராகவி.


