ஆதார சுதி 18 – 2

“இன்னும் கொஞ்சம் உள்ளுக்குப் போவமா!”

“ஜீன்ஸ் முழுக்க நனைஞ்சிடும் சஹி. இங்கேயே நில்!” என்றவனின் பேச்சை அவள் கேட்கவேயில்லை. இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று உள்நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தாள்.

“சொன்னா கேக்கமாட்டியா! வா இங்கால!” என்று பல்லைக் கடித்தவனின் பேச்சை தூசுபோல் தட்டிவிட்டாள்.

“பயமா மச்சான்?” அவன் மீது கையால் கடல் நீரை வாரி இரைத்துவிட்டு கலகலத்துச் சிரித்தவளை முறைக்க மட்டுமே முடிந்தது அவனால்.

கருப்பு ஃபிட் ஜீன்சும் கையில்லாத குட்டி மஞ்சள் டொப்பும் அணிந்து மான்குட்டியாகத் துள்ளியவளின் நிறமும் உடல் மொழியுமே அவள் இந்தத் தேசத்தவள் அல்ல என்று காட்டிவிடச் சுற்றி இருந்தவர்களின் கண்கள் கண்டும் காணாததுபோல் அவளை ரசிக்கத் தொடங்கின.

அதைக் கவனித்துவிட்டு, “வா, சும்மா கொஞ்சத் தூரம் நடப்பம்!” என்று இழுத்துக்கொண்டு போனான்.

அவளுக்கோ கால்கள் தரையில் பாவ மறுத்தது. சோர்ந்து போயிருந்த மனதுக்குப் பார்க்குமிடமெங்கும் உற்சாகம் துள்ளும் சூழ்நிலை பெரும் மாற்றத்தை உண்டாக்கிற்று. “என்னைப் பிடிங்க மச்சான்!” என்றுவிட்டு சிட்டுக்குருவியைப் போன்று கடலோரமாய்ப் பறந்திருந்தாள்.

அன்று சனிக்கிழமையும் என்பதில் நிறைந்திருந்த ஆட்களின் மத்தியில் நொடியில் காணாமல் போனாள் சஹானா. சற்றுநேரம் தேடி முடியாமல் போக, “இவளைப்பற்றித் தெரிஞ்சும் கூட்டிக்கொண்டு வந்த என்னச் சொல்லோணும்!” தன்னையே நொந்தபடி அவளுக்குக் கைபேசியில் அழைத்தான்.

அவனுக்குப் போக்குக் காட்ட ஆட்களுக்குள் மறைந்து ஓடிய சஹானா, எதிர்பாராத விதமாக அங்கே நின்றிருந்த சஞ்சயனைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டாள்.

நேற்று அவன் நடந்துகொண்ட விதம் நெஞ்சில் மோதிச் செல்ல, சீண்டும் ஆவல் எழுந்தது.

“சஞ்சு மச்சான்!” வேண்டுமென்றே சத்தமாக அழைத்தாள்.

‘தூய்மையான யாழ்ப்பாணம்’ இதுதான் சஞ்சயனின் தற்போதைய இலக்கு. அதன் முதற்கட்டமாகக் கசூரினா பீச் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளைத் தெரிவு செய்து, பிளாஸ்டிக்கை அகற்றும் பதினைந்து நாட்களுக்கான வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கி இருந்தான். அது பற்றிய அறிவிப்பைத் தன் முகநூலில் பகிர்ந்து சுயமாகக் கைகோர்க்க விரும்பும் இளைய சமுதாயத்துக்கு அழைப்பும் விடுத்திருந்தான். கூடவே, அந்தப் பகுதிப் பிரதேச சபை, விளையாட்டுக் கழகம், மாதர் சங்கம் என்பவற்றுக்கு அறிவித்து உதவியும் கோரியிருந்தான். பிரதேசபை வாகன உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தது. விளையாட்டுக் கழகமும் மாதர் சங்கமும் தங்கள் உறுப்பினர்களோடு சேர்ந்துகொண்டது.

சொன்னது போல இன்றைய தினம் துப்பரவாக்கற் பணிகள் நடைபெற்றது. எதிர்பாத்த அளவுக்கு இளைஞர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என்றபோதும் வந்தவர்கள் முனைப்புடனேயே செயலாற்றியதில் அவனுக்கு மிகுந்த திருப்தி. ஆங்காங்கே கழிவுகளைக் கொட்டும் கூடைகள் அமைத்து, ஒவ்வொரு குடில்களின் அருகிலும் கூடைகளை அமைத்து அதன் அருகே, குப்பைகளின் படம் வரைந்து, ‘நான் இங்கே மட்டும் தான் இருப்பேன்’ என்கிற வாசகம் அமைத்து என்று, முதல் நாளின் பெறுபேறு மிகச் சிறப்பாகவே இருந்தது என்றுதான் சஞ்சயன் சொல்வான்.

நாளைக்கு நெகிழிகளை(பிளாஸ்டிக்) அகற்றவும் அதனைத் தனியாக எடுத்துச் செல்வதற்கான ஏற்பாட்டையும் செய்வதாகவும் முடிவானது.

அன்றைய இலக்கை முடித்துக்கொண்டதும், “எம்மைப் பொறுத்தவரை இது ஒரு சிறப்பான நிறைவான ஆரம்பம். எமது சூழலை நாம் தான் பாதுகாக்க வேண்டும். அந்த உயர்ந்த சிந்தனை எல்லோரிடமும் பரவ முன்னுதாரணமான தொடக்கம்தான் இது! தொடர்ந்து செயற்படுவோம்! நிச்சயம் மற்றவர்களும் மாறுவார்கள்! அழைப்பு விடுத்ததும் எந்தப் பிரதியுபகாரமும் எதிர்பாராமல் வந்து கைகோர்த்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளும் பாராட்டுக்களும்.” என்று அவன் உரையை முடித்தபோதுதான் அவளின் குரல் செவிகளை எட்டியது.

வேகமாக அவன் திரும்ப, “மச்சான்! சஞ்சு மச்சான்!” என்று மீண்டும் கொஞ்சலாய் அழைத்துக்கொண்டிருந்தாள் அவள். அவனைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட இளவட்டங்கள். அவர்களின் பார்வையில் சுவாரசியம் ஏறிற்று. சுர் என்று ஏறியது அவனுக்கு! அவளைக் கண்டிப்புடன் நோக்கி, ‘போ!’ என்று கண்களால் விரட்டினான்.

அதைக் கவனிக்கும் நிலையில் சஹானா இல்லை. நேற்றைய அவனுடைய செய்கை உண்டாக்கியிருந்த காயம் உருவாக்கிவிட்ட கோபத்தில் அவனைச் சீண்டுவதில் மாத்திரமே குறியாக இருந்தாள். “மச்சான்? இங்க என்ன செய்றீங்க மச்சான்?” அப்பாவியாக விழிகளை விரித்துக் கேள்வி எழுப்பியவளின் உதட்டோரம் அடக்கமுடியாத குறுஞ்சிரிப்பு ஒன்று குமிழியிட்டுக்கொண்டிருந்தது.

அந்தக் குறும்பில் இளையவர்களின் பார்வை இன்னும் ரசனையுடன் அவள் மீது படிய, ‘சும்மா இருக்கிறவங்களையும் ஏத்தி விடுவாள் போல!’ என்று பல்லைக் கடித்தான்.

அவனின் மனநிலையை அறியாமல், “என்ன மச்சான்? சஞ்சு எண்டு கொஞ்சுது பஞ்சவர்ணக்கிளி.” என்று, அடுக்கு மொழி மட்டுமே தமிழின் அழகு என்பதில் அசையாத நம்பிக்கை கொண்ட நண்பன் கார்மேகன் கேட்க, சஹானாவின் மீதிருந்த சீற்றம் பளார் என்று அவன் மீது இறங்கியது.

சஹானாவே ஆடித்தான் போனாள். “சரி சஞ்சு மச்சான். நீங்க முக்கியமான அலுவலா நிக்கிறீங்க போல. நான் பிறகு வாறன்!” என்றுவிட்டு வேகமாக நழுவினாள். ‘அடிப்பாவி! எனக்கு அடி வாங்கித்தரத்தான் வந்தியா?’ என்று கொலைவெறியோடு நோக்கினான் கார்மேகன்.

இது எதுவும் அறியாத அகிலன், திரும்பி வந்துகொண்டிருந்தவளைக் கண்டு, “உன்னை எங்க எல்லாம் தேடுறது? பயந்தே போனன்.” என்று அவளின் மண்டையில் எப்போதும்போல் குட்டினான்.

“ஹாஹா.. அதுவா மச்சான்..” என்று கதை சொல்லத் தொடங்கியவளின் செவியோரம், “அறிவில்லை உனக்கு? சுத்திவர ஆம்பிளைகள் நிக்கிறாங்கள். வந்து நிண்டு மச்சான் கச்சான் எண்டு கொஞ்சிக்கொண்டு நிக்கிறாய். எங்க எப்பிடி நடக்கோணும் எண்டு தெரியாது? அதுசரி, ஓடின கூட்டம் பெத்து வளத்த ஜென்மம் தானே நீ. உன்னட்ட ஒழுங்கான பழக்கவழக்கத்தை எதிர்பார்க்கிறது பிழைதான்.” என்று, அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் சீறிவிட்டுப் போனான் சஞ்சயன்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock