ரோசி கஜனின் இயற்கை – 13(1)

“இங்க இருந்து பென்சில்வேனியா ‘ப்ரொமிஸ் லேண்ட ஸ்டேட்ஸ் பார்க்’ 280  மைல்களுக்கு மேல வரும் என்ன வேந்தன் அண்ணா?” கேட்டான், ஆரூரன். 

“ம்ம்… l-86 E ல போனா 285  வரும். எங்கயும் நிக்காமல் போனா நாலே முக்கால் மணித்தியாலத்தில போயிரலாம்.” 

“அப்ப நாங்க பிங்ஹாம்டன் (Binghamton) போறேல்லையா? அப்பிடித்தானே நாதன் சித்தப்பா பிளான்? நேரயே பார்க்குப் போகப் போறமோ?” இடையிட்டாள், கவி.

“முதல் அங்க தான் போறம்; இங்க இருந்து கிட்டத்தட்ட 200 மைல்கள், மூன்று மூன்றேகால் மணித்தியாலம் பிடிக்கும் என்ன தம்பி?” அவரும் வேந்தனிடம் தான் கேட்டார். வேந்தனோடு முன்புறம் அமர்ந்திருந்தார், நாதன்.

“ஓம் அங்கிள், இடையில் நிக்க வேணும் எண்டா சொல்லுங்க.” என்றவன், அதன் பிறகு வாகனமோட்டுவதில் கவனம் பதித்திருந்தான். இடையிடை நாதனும் அவனும் கதைத்துக்கொண்டார்கள்தான். பின்னால் இருப்பவர்களுக்குத் தெளிவாக ஒன்றும் விளங்கவில்லை. 

வாகனம் அரைமணித்தியாலம் ஓடியிருக்கும். கண்மூடிச்  சாய்ந்திருந்த இலக்கியா விழிகளைத் திறந்து வெளிப்புறம் பார்த்தாள். பெரிதாகப் பார்ப்பதற்கு இல்லையென்றாலுமே எத்தனைக்கென்று கண்களை மூடிக்கொண்டிருப்பதாம்? உள்ளே கலகலக்கும் இளையவர்களோடும் பங்குபெறாது இருக்கிறாளே! அது அவள் இயல்பில்லையே! அவதானிக்கும் பட்சத்தில் நிச்சயம் குடும்பத்தினரின் விசாரிப்புக்கு ஆளாக வேண்டிவரும். மெல்ல மெல்லத் தன்னை இயல்பாக்கிக் கொண்டாளவள். 

சிறுபொழுது தான், மனம் கொண்ட தீர்மானமும் கட்டுப்பாடும் ஊசலாடின! அவள் பார்வை தன்னிச்சைக்குச் செயற்படத் துணிந்தது. ‘உன்ர மனம் சொல்லுற  சொல்லுக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்ல’ என்ற கணக்கில் முன்னோக்கிப் பாய்ந்து, உள்க் கண்ணாடியில் தெரிந்த அவன் முகத்தில் ஒட்டி ஓட்டிப் பிரிந்ததது. அவனோ,  மறந்தும் அவளைப் பார்க்கவில்லை. அதைச் சிறுபொழுதிலேயே கவனித்துவிட்டாளவள்.

முதல் நாள், அவனை இனம் கண்டபின்னரான அவனது பார்வைகள் ஒவ்வொன்றும் நினைவிலாடி அவள் மனதைக் கலைத்துப் போட்டன. நயாகரா சென்றுவந்த பின்னர் தொடங்கி இப்போது வாகனத்துள் ஏறும் வரை தான் காட்டிய பாராமுகமும், ஏற முதல் அவனோடு எரிந்து விழுந்து கதைத்ததென்று எல்லாமே மனதைப் போட்டுப் பிசைந்தெடுத்தது. ஆசையாக நேசம் சொன்னவன் மனதை ஊசியாகக் குத்திவிட்டாளென்றது புரிந்தாலும், ‘நல்ல விசயம், இப்படியே இரும்!’ இப்படியும் எண்ணிக்கொண்டாள் தான். 

‘இல்லையோ அவன் சேட்டைகள யார் தாங்கிக் கொள்வதாம்?’ என்ற எண்ணம் இதழ்களில் மென்முறுவலை தவழ விட்ட அதேநேரம், விழிகளில் நேசம் மின்ன அவன் முகத்தையே பார்த்தாள். அக்கணம், அதுவரை மனதுள் போராட்டம் போட்ட எல்லாக் குழப்பங்களும் பின் செல்ல, ‘ஒரே ஒருதடவ பார்க்கானோ!’  என்ற ஏக்கம் எழுந்ததைத் தவிர்க்க முடியாதிருந்தது.

வேந்தன் மனதிலும் என்னதான் சிடுசிசிடுப்பும் முணுமுணுப்புமிருந்தாலும் அவளை நாடியோடத் துடித்த பார்வைக்குத் தடைபோடுவதென்பது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. அவள் அமைதியாக விழி மூடியிருந்தபோது பார்த்தும் பாராத மாதிரியே பார்த்தானே! விழிமூடியிருந்தவளின் நெற்றிச்சுழிப்பும் கூம்பிப்போன வதனமும் அவனுள் மேலும் வருத்தம் உண்டுபண்ணியது. 

 முதல் நாள், கலகலப்போடு ஓடிவந்தேறியவள் சாரதியாசனத்தில் இருந்தவனைக் கூடக் கவனியாது எப்படியெல்லாம் கலகலத்திருந்தாள்!? இரண்டாம் நாளே இப்படியிருந்தால்? தன் நேசமறிந்தவளின் மலர்வைக் கண்டுகளிக்க இருந்தவனுக்கு அவளின் இந்த சோர்வும் சிடுசிடுப்பும் தாங்கொணாமல் இருந்ததில் வியப்பேதுமில்லை தான். 

‘உண்மையாவே  என்னால தான் அவள்ட சந்தோசம் கெட்டுட்டிதா?’ மீண்டும் மீண்டும் இதே கேள்வி வாட்டியெடுத்துக்கொண்டேயிருந்தது. அதுவே, அவன் வாயை இறுக்கப் பற்றியிருந்தாலும் அருகிலமர்ந்திருந்த நாதன் அப்பப்போ கதைத்தபடி வந்தாரே! முயன்று பதில் சொல்லிக்கொண்டு வந்தவன், அவள் சுதாகரித்துக் கலகலப்பாக மாறவும் தன்  மனதுக்கும் விழிகளுக்கும் நிரந்தரமான  தடா போட்டே விட்டான்.

‘இனிமேல் அவள்ட பக்கம் பார்க்கிறதே இல்ல!’ இந்த முடிவெடுக்கையில் அவளில் பெரும் மனக்குறை! அது கசப்புணர்வைத் தந்தாலும் தன்னால், இனி அவள் பயண அனுபவத்தில் எக்குறையும் வந்துவிடக் கூடாதென்பதில் மிக்க உறுதியாகவே இருந்தானவன். 

‘இனி அவளாவே வந்து கதைச்சா ஒழிய நானாப் போய்க்  கதைக்கிறேல்ல!’ முறுக்கிக்கொண்டு, அவன் கட்டளையைச்  சிரமேற்கொண்டது, மனம்.

இடையில் ஒரு காஸ் ஸ்டேஷனில் நின்றுவிட்டுப் பயணத்தைக் தொடர்ந்தவர்கள், பதினொன்றரை மணிக்கெல்லாம் பிங்ஹாம்டன் (Binghamton) வந்துவிட்டார்கள்.

“முதல், சிட்டிய காரிலேயே சுற்றிப்பார்த்திட்டுச் சாப்பிட்டுட்டு வெளிக்கிடுவம் என்ன?” பின்னால திரும்பிக் கேட்டார், நாதன்.

“ஓம், அப்பிடியே செய்யலாம்.” எல்லாருமே சம்மதிக்க, “அப்பா ‘பாப்ஐஸ்’ ல  (Popeyes) சாப்பிடுவம். பிறகு பின்னேரம் பார்க்குக்குப் போயிட்டு எங்கயாவது ரெஸ்டாரெண்டில வடிவாச்  சாப்பிடலாம்.” ஆரூரன் சொல்ல, “ம்ம்…அதுவும் நல்ல ஐடியா!” ஆமோதித்தாள், கவி.

“அப்ப அப்பிடியே செய்யலாம் தம்பி.” என்ற நாதன், “இலக்கிம்மா தலையிடி எல்லாம் சரியாகீட்டா? முகம் இன்னும் தெளியேல்ல!” விசாரித்தார்.

“எல்லாம் ஓகே சித்தப்பா.” என்றவள், சிலகணங்கள் உள்க்கண்ணாடியையே பார்த்திருந்தாள். அவன் அசையவேயில்லை. 

“மூண்டு வருசங்களுக்கு முதல் சொந்தத்தில ஒரு கலியாணத்துக்கு வந்திருக்கிறன்.” என்றபடி வாகனத்தை ஓட்டுவதில் கவனமாகவிருந்தான்.

“ஏன், நாங்களும் ஒரு டான்ஸ் போட்டிக்கு வந்திருக்கிறம் பிள்ளைகள், ஆறேழு வருசங்களுக்கு முதல்…நினைவிருக்குதா?” வினவினார் இலக்கியாவின்  அம்மா.

“நினைவிருக்கம்மா.” பதில் சொன்னவர்கள் பார்வை வெளியில்.

இருபுறமும் கைபேசியில் புகைப்படங்கள் வீடியோ என எடுத்தபடி இருக்க, வாகனம் நகரைச் சுற்றி வந்தது. அவசரமின்றியே!

“இங்க நிறைய நேரம் மினக்கடாமல் போனால் பார்க்கில கொஞ்ச நேரம் நிண்டு சுற்றலாம்  அங்கிள் – நான் போனதில்ல எண்டாலும் ‘லிட்டில் ஃபோல்ஸ்’ (Little Falls) பகுதியால நடக்கலாம்; நிறைய சின்ன சின்ன போல்ஸ் இருக்கிற பாதை நல்ல வடிவா இருக்கும் எண்டு போய் வந்த ஃபிரெண்ட்ஸ் சொல்லி இருக்கீனம். கவின் கூட சந்தோசமா வருவார், ஒரு… இரண்டரை மைல் தான் வரும், ஆறுதலாச் சுற்றலாம்.” 

நாதனிடமும் மாறனிடமும் வேந்தன் சொல்கையில் அவர்கள் பாப்ஐசில் இருந்தார்கள்.

error: Alert: Content selection is disabled!!