ரோசி கஜனின் இயற்கை – 13(2)

“தம்பி சொல்லுறதும் சரிதான், மினக்கடாமல் வெளிக்கிடுவம்.” என்றார்  நாதன். சாரதி என்றதைக் கடந்து, புறப்பட்ட நேரத்திலிருந்து ஒவ்வொரு விடயத்திலும் அக்கறையாகச் செயல்படுவதில் நாதனை மிகவும் கவர்ந்திருந்தான், வேந்தன். 

“என்ன என்ன வேணும் எண்டு சொல்லுங்க, நாங்க வாங்குறம்.” என்று, கவி, இலக்கியா, ஆரூரன் பொறுப்பைக் கையிலெடுத்துவிட்டதில் பெரியவர்களும் சிறுவர்களுமாக அங்கிருந்த இரு பெரிய மேசைகளைத் தமதாக்கி அமர்ந்திருந்தார்கள்.

“தம்பி உங்களுக்கும் என்ன வேணும் எண்டு சொல்லுங்க, ட்ரிப் முடியுமட்டும் எங்களோடதான் சாப்பாடு!” மீண்டும் அவனுக்கு நினைவுபடுத்தியதில், “சான்விச், ப்ளாக் காஃபி.” என்றுவிட்டு அமைதியாக அமர்ந்துவிட்டான், வேந்தன்.

“உங்களுக்கு வேற என்ன வேணும் எண்டாலும் வெட்கப்படாம சொல்லலாம். இவ்வளவு பெரிய ஆளுக்கு ஒரு சான்விச் காணுமா என்ன?” வேண்டுமென்றே கேட்ட இலக்கியாவை அவன் பார்க்கவில்லை. கைபேசியில் எதையோ தட்டிக்கொண்டிருக்க, அவள் அப்படிக் கேட்டதை பார்த்து நாதன் தான் முறுவல் செய்தார்.

“விளையாட்டுப்பிள்ளை…” பாசமாக அண்ணன் மகளைப் பார்த்தார். “தலையிடி எல்லாம் நல்ல சுகம்தானே? கொஞ்சம் கவனமா இருக்க வேணும் மா…இந்தநேரம் வருத்தம் ஏதும் எண்டா கரைச்சல்.” சொல்லவும் செய்தார்.

“அதெல்லாம் போயிற்றுச் சித்தப்பா!” அழகாகச் சிரித்தவள், “நீங்க வேற ஏதாவது வேணுமா எண்டு சொல்லேல்ல. பிறகு பிந்தினா அது உங்களால தான் சொல்லிட்டன்.” மீண்டும் வேந்தனிடமே வந்து நிற்க, “இலக்கி என்னம்மா? அவர்தான் என்ன வேணும் எண்டு சொல்லிட்டாரே! ” மாறன் சொன்ன அதேநேரம், “இல்ல இல்ல வேற ஒண்ணும் வேணாம்.” கைபேசியில் கவனத்தோடிருந்தவனும் சொல்லிவிட்டத்தில் அவள் முகம் சிறுத்துப் போயிற்று. இருந்தாலும் சமாளித்து, “சித்தப்பா உங்களுக்கு?” மாறனிடம் கேட்டபடி நகர்ந்துவிட்டாள்.

“இங்க இருந்து எவ்வளவு நேரம் பிடிக்கும்?” நாதன் வேந்தனிடம் கேட்க, “ஒரு ஒன்றரை மணித்தியாலம் பிடிக்கும்.” என்றபடி திரும்பி வந்த இலக்கியா, “இந்தாங்க உங்களுக்கு மூண்டு பேருக்கும் சான்விச்!” அவர்களின் முன்னால் வைத்தாள்.

“காஃபி ஆரூரன் கொண்டு வாறான்.” என்றவள் பார்வை, வேந்தனின் முகத்தில், குறிப்பாக அவன் விழிகள் உயருமா எனத்  தயங்கி நின்றது.

‘கல்லுகளி மங்கன்! பெருசா கோவிக்கிறாராமே! அவர் செய்யிறது எல்லாத்துக்கும் நாங்க ஈ எண்டு கொண்டு இருந்தா எல்லாம் நல்லாத்தான் நடக்கும். ம்க்கும்…’ மனம் சிடுசிடுக்க விசுக்கென்று நகர, “தேங்க்ஸ் செல்லம்.” தன்னதை எடுத்துக் கடித்தபடி மாறன் சொன்னதுதான் காதுகளில் விழுந்தது.

“மனேர்ஸ் தெரியாத முண்டம்!” சத்தமான முணுமுணுப்போடு தமக்கையருகில் சென்றமர, “என்னடி?  ஏன் கோவமா வாற?” வினவினாள், கவி.

“பச்! ஒண்ணுமில்லக்கா, கெதியா சாப்பிட்டுப்போட்டு நடையக் கட்டட்டாம்.”

“ஆர்?”

“நாதன் சித்தப்பா சொன்னது விளங்கேல்லையா? அவராச் சொல்லுறது வேற, இன்னொரு ஆள் சொல்லிச் சொல்லுறது?  நாம ஒரு மாசத்துக்கும் மேல எவ்வளவு எல்லாம் பார்த்துத் திட்டம் போட்டு இருக்கிறம். அப்படியிருக்க, நேற்று வந்தவே எல்லாம் கதை சொல்லீனம், ஏதோ கனக்கத் தெரிஞ்ச கணக்கில!” சான்விச்சைக்  கடித்தவள் ஒவ்வொரு கடிக்கும் வேந்தனையும் சேர்த்தரைத்து முழுங்கினாள்.

“ஆரச் சொல்லுற? வேந்தன் அண்ணாவையோ?” ஆரூரன் சத்தமாகவே கேட்டத்தில் வேந்தன் பார்வை திரும்ப, வெட்டும் பார்வையோடு மறுபுறமாகப் பார்த்தாள், இலக்கியா.

“மெல்லக் கத மாடு! கேட்டுட்டுப் போல! அவர் இங்க எல்லாம் வந்திருப்பாராக்கும். நாதன் சித்தப்பாவே விசயம் தெரிஞ்ச கெட்டிக்காரப்பெடியன் எண்டு சொன்னவர், உனக்கு விசர்!” அடிக்குரலில் அதட்டினாள், கவி. 

“என்ன இலக்கியா?” அங்கிருந்தே கேட்டு வைத்தான், மாறன்.

“ஒண்ணுமில்ல.” முணுமுணுப்போடு ஃபான்டாவை உறிஞ்சியவளுக்கு இப்போது சிரிப்பு வந்தது. காரணம், கவியும் ஆரூரனும் சங்கடத்தோடு நெளிந்தார்கள்; வேந்தனுக்குக்  கேட்டுவிட்டதோ என்ற எண்ணமே நெளிய வைத்தது.

“அதொண்டுமில்ல  மாறன் சித்தப்பா…அவள் பகிடிக்கு!” சமாளிப்பாகச் சொன்ன கவி, தங்கையினருகில் குனிந்த வேகத்துக்குக் கடிந்துகொண்டாள்.

“அந்தாள் தன்ர பாட்டில தன்ர வேலையச் செய்யிறார்! நீயேன் அவரப் பார்க்கிற? ம்ம்.” கோபமாகச் சொல்லவும் செய்தாள்.

“அக்கோய்…அந்த ஆள நேற்றுக் காலேல தான் தெரியும்; நான் அப்பிடி இல்ல.”  முறைப்போடு ஆரம்பிக்க, “சரி சரி ரெண்டு பேரும் சண்டை பிடிச்சது போதும் எழும்புங்க, ரெஸ்ட் ரூம் போயிட்டு வெளிக்கிடுவம்.” எழுந்தான் ஆரூரன்.

“அதானே! ஆரோ ஒருத்தனுக்காக என்னையே பேசுற அக்கா நீ!” முறைப்போடு எழுந்த இலக்கியின் கடைக்கண் வேந்தனைத் தொட்டு விலகியது. அவனோ,  நாதனோடு செல்லத் தயாராக நின்றான். இவளைப் பார்க்கவில்லை.

‘சரிதான் போடா தடியா!’  எண்ணம் சிடுசிடுப்பை சுமந்து செல்ல, “நான் இப்பத்தானே போயிட்டு வந்தனான், நீங்கள் போங்க.” அவர்களிடம் சொல்லிவிட்டு நகர்ந்தவளை, வேந்தன் ஆட்கள் இருந்த இடம் நோக்கி இழுத்துச் சென்றது, மனம்.

“டி…என்ன நீ ஒரே முணுமுணுக்கிற?” மாறன் இவள் தலையைப் பிடித்து ஆட்டினான்.

“பச்! நாமளும் இருக்கிறம் எண்டு காட்டத்தான்!” முறுவலோடு சொல்லிக்கொண்டே மின்னலாக அவனைப் பார்க்க, அவனோ, நகரவே தொடங்கியிருந்தான்.

‘லூசு! இவருக்கு பின்னால நான் வழிஞ்சு கொண்டு போக வேணுமோ! அதுக்கு இலக்கியா ஆளில்லை பாரும்!’

அதன் பின்னர், ‘ப்ரொமிஸ்ட் லேண்ட் ஸ்டேட் பார்க்’ (Promised Land State Park) வந்து சேரும் வரை, பழையபடி, பின்புறம் இளையவர்களால் கலகலத்தது; தலைமை தாங்கி நின்றாள் இலக்கியா.

“பார்க் மற்றும் அதச் சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளில கிட்டத்தட்ட 50 மைல்கள் வரை நடைப்பயணம் செய்யலாம்.” நாதன், தாம் போகும் இடத்தை கைபேசியில் ஆராய்வதைப் பார்த்த வேந்தன் தான் சொன்னான்.

“ஓமெண்டுதான் கிடக்குத் தம்பி.” என்ற நாதன் விழிகள் அவ்விடம் பற்றிய புகைப்படங்களில்…

பீச், ஓக், மேப்பிள் மற்றும் ஹெம்லாக் மரங்களை முதன்மையாகக் கொண்ட காடுகள்,  இரு ஏரிகள், பல சிறிய நீரோடைகளென, அப்பிராந்தியமே இயற்கை எழிலைப் பரப்பி, பார்ப்போரைத் தம்முள் இழுத்துக் கொள்வதாய் அமைந்திருந்தது.  

“அப்பத் தம்பி, பிள்ளைகள் ஏற்கனவே முடிவு செய்தபடி கிரீன் டவுனுக்குப் (Greentown) பக்கத்தில இருக்கிற லிட்டில் ஃபோல்ஸ் பகுதியால நடப்பம் என்ன?” நாதன் சொல்ல, அதற்கேதுவாக வந்து வாகனத்தை நிறுத்தினான்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில், ஒவ்வொருவரும் தண்ணீர், குடிபானங்கள் எல்லாம் எடுத்துத் தத்தம் முதுகுப் பையினுள் போட்டுக்கொண்டு பூங்காவினுள் உள்ளிட்டார்கள்.

“மழை நாட்கள் எண்டா ஒரே சேறா இருக்கும்; இந்தக்கிழம நல்ல வெயில் போல, நல்லா இருக்கு.” மாறனோடு கதைத்தபடி முன்னே சென்றான், வேந்தன். அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள் கவியும் ஆரூரனும். 

error: Alert: Content selection is disabled!!