ரோசி கஜனின் இயற்கை – 13(3)

 தொடர்ந்து மற்றவர்கள் நடக்க, கடைசியாக, கவின் அஜியோடு சென்று கொண்டிருந்த இலக்கியாவுக்கு வேந்தனில் பயங்கரக் கோபம். இருந்தாலும் மிக இயல்பாக இருப்பதுபோல் நடிக்க வேண்டியிருந்தது. எல்லோரோடும்  கலகலப்பாகக் கதைக்கிறான், அவளோடு மட்டும் இல்லையே! நாசூக்கான தவிர்ப்பு! மற்றவர்களுக்கு எப்படியோ, அவர்களின் கருத்தை எட்டியதோ என்னவோ இலக்கியாவுக்கு ஊசியாகக் குத்துகின்றதே!

இதையெல்லாம் சற்றே ஒதுக்கி வைத்துவிடு பிள்ளாய் என்றது அவ்விடத்தின் எழில்! மனதையும் பார்வையையும் வசப்படுத்தத்  தொடங்கியிருந்தது. நல்ல சனநடமாட்டமும் இருந்தது. குடும்பம் குடும்பமாக வயோதிபர் சிறுவர் என்றெல்லா வயதினரும் உற்சாகமாகச் சென்று கொண்டிருக்கக் காண்பதே நம்முள்ளும் புத்துணர்வைத் தந்திடுமே!

புகைப்படங்களை எடுத்தபடி பொறுமையாக நடந்தார்கள். 

ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள் எக்கச்சக்கமாகவே ஆச்சரியப்படுத்தின. தம்மை இரசிப்போரைத் தாமும் உணர்ந்து இரசிப்பதாக மென்தென்றலின் தாலாட்டில் ஆடி, சரசரப்பூட்டி, தம்மிருப்பை உணர்த்தி நின்றன அம்மரங்கள். 

“எல்லாரும் இதில நிண்டு ஒரு ஃபோட்டோ எடுத்திட்டு நடப்பமா? இந்த மரங்களிண்ட பின்னணில ஃபோட்டோ வந்தா கலண்டர் போல பே வடிவா இருக்கும்.” கவி சொல்ல, எல்லோரும் கூடி நின்றார்கள்.

“வேந்தன் நீங்க எடுத்து விடுறிங்களோ?” காலா காலமாகப் பழகிய கணக்கில் கேட்டாள், கவி. “தாங்க.” எடுக்க ஆயத்தமானான். அப்புகைப்படத்தில் நிற்க முடியவில்லை, இலக்கியாவால். அவர்களுக்கெல்லாம் அவன் வெறுமனே சாரதி…அவளுக்கு?

அவனையே பார்த்தபடி நின்றவள் விழிகள் கலங்கிற்று!

புத்தம் புது கனோன் காமராவினூடாக  ஜூம் பண்ணினான் வேந்தன்; அடுத்துக்கடந்த  சிலகணங்கள் அவன் விழிகளில் அவளொருத்தியே!

‘இப்ப எதுக்குக் கண் கலங்கிறாள்?’ புரிந்தாலும் கேட்டுக்கொண்டவன் உதடுகளில்  முறுவலின் உரசல்.

மனசுக்க வலிக்குதாடி? நான் பார்க்கேல்ல எண்டதும் கோவம் கூட வருது என்ன? அப்பிடித்தானே எனக்கும் இருக்கும். உனக்குத்தான் நான் கதைச்சா சந்தோசமா நடமாட முடியாதே! பிறகென்ன?’ அவளை அருகேயிழுத்துச் செவிகளில் உதடுகள் உரச முணுமுணுக்கும் பிரேமையில் மனதுள் சொல்லி நின்றவன், “கவின் குட்டி ஓடாமல் நிக்க வேணும்.” என்று, கவியின் குரல் மட்டும் இடையிடவில்லையோ, அப்படியே நின்றிருப்பானோ! பட்டென்று சுதாகரித்துப்  புகைப்படங்களை எடுத்திருந்தான்.

“ம்ம் எடுத்தாச்சு!” கமராவை கவியிடம் கொடுக்க முனைய, “நீங்க நில்லுங்க, நான் எடுக்கிறன்.” முன்னால்  வந்து வாங்கிக்கொண்டது, இலக்கியா.

“டி  என்ர கமரா பத்திரம்!” அவசரமாக இடையிட்டாள், கவி.

“அக்கா!” தமக்கையை முறைத்தவள், “அதென்ன இவர் எடுக்கலாம் நான் எடுக்கப் போனா மட்டும் பத்திரம்? ம்ம்…” முகம் சிணுங்கியது.

கவி பதில் சொல்லவில்லை, சிரிப்போடு நெளிந்தாள். 

“கவிக்காக கையில இருந்து கமராவை வாங்கிய முதல் ஆள் நீங்கதான் வேந்தன் அண்ணா.” கடித்தான் ஆரூரன்.

“சரி அலட்டாமல் நில்லு!” என்றபடி புகைப்படமெடுக்க நகர்ந்த இலக்கியா, “இல்ல இல்ல…அதெல்லாம் தேவையில்லை, வாங்க நடப்பம்.” என்று வேந்தன் நகர, கோபத்தோடு முறைத்தாள். அவன், அவளைப் பார்த்தானா என்ன?

“பரவாயில்ல வந்து நில்லும்.” நகர்ந்தவனைப் பிடித்துத் தன்னருகில் நிறுத்திக்கொண்டான், மாறன்.

‘பெரிசா பிகு பண்ணுறான்…இவன..’ சிடுசிடுப்போடு நான்கைந்து கோணங்களில் தட்டிவிட்டு, “அப்படியே நில்லுங்கோ! ஒருத்தரும் அசையக் கூடாது!” மின்னலாக நகர்ந்து, “இந்தாக்கா உன்ர பெரிய கமரா!” தமக்கை கையில் திணித்துவிட்டு, தன் செலஃபீ ஸ்டிக்கோடு முன்னால் நகர்ந்தவள், வெகு இயல்பாக வேந்தனருகில் சென்று நின்று கொண்டு படபடவென்று சிலதுகளைத் தட்டினாள். அவனோ, விழிகளில் வந்து தெறித்த சுவாரசியத்தோடு, செலஃபீ ஸ்டிக்கில் ஒட்டிநின்ற பேசித் திரையில் தெரிந்த அவளுருவைப் பார்த்து நின்றான்.

அவன் விழிகளில் ஒட்டிக்கிடந்த நகைப்பை, அதையும் கடந்து கசியத் துடித்த நேசத்தை அப்படியே உள்வாங்கிக்கொண்டாள், இலக்கியா. கலங்கிவிட்ட விழிகளை  மற்றவர் பார்வையிலிருந்து மறைக்க வேண்டுமே! எடுத்த புகைப்படங்களைத் தட்டியபடி நடந்தாள். அவனும் முன்னால் சென்றிருந்தான்.

அவர்கள் சென்ற பாதை, கிட்டத்தட்ட ஒருமைல் நீளத்துக்குச்  சலசலத்தோடிய சிற்றோடைக்கரை  வழியாகச் சென்றது. அதுவும்  பல இடங்களில் ஆர்ப்பாட்டமே இல்லாது கொட்டிய சிறு சிறு நீர்விழ்ச்சிகள், அழகை அள்ளித் தெறிப்பதில் சிறிதும் வஞ்சனை செய்யவில்லை!

அருவிகளுக்கே அரசிபோன்ற நயாகராவை உள்ளத்தில் நிறைத்துக்கொண்டு  வந்தவர்களுக்கு, இவ்வழகும் அச்சூழல் தந்த இதமும் அப்படியொன்றும் குறைவாகவிருக்கவில்லை; ஒவ்வொருகணமும் இரசிக்கக் கூடியதாகவிருந்தது.

“பிள்ளைகள் ஃபோட்டோ எடுக்கிறன் எண்டு கீழ பார்க்காமல் நடந்து விழுந்தெழும்பிறது இல்ல! பாருங்க, மரங்கள்ட வேர்களப் பாத்தாப் பெரிய பாம்புகள் நெளிஞ்சு வளைஞ்சு போறது போலக் கிடக்கு!” இலக்கியாவின் அன்னை சொல்லி வாய்மூடவில்லை, “ஆஆஆ…” கவியின் குரலில் எல்லார் கவனமும் முன்னால்  சென்றுகொண்டிருந்தவள் புறம் பாய்ந்திருந்தது.

“என்னம்மா நீ!  பாத்து நடக்கிறதில்லையா? மர வேர்களும் பாறைகளுமா இருக்கு, சறுக்கி கால் பிரண்டு ஏதாவது நடந்தா!” கண்டித்தபடி, நெருங்கினார் நாதன்.

“தாங்க்ஸ்!” சிறு பாறையில் சறுக்கி விழ இருந்தவளை பின்னால் வந்துகொண்டிருந்த வேந்தன் மட்டும் பிடிக்கவில்லையோ விழுந்துதான் இருப்பாள். அவன் பிடியிலிருந்து விலகி நிமிர்ந்து நிற்க முயன்று “ஆஆ …” ஒற்றைக்காலைத் தூக்கியபடி அவன் மேல்கையையே பற்றி நின்றாள், கவி.

“என்னக்கா காலுக்க நொந்திட்டோ? இப்படி வந்திரு.” ஆரூரன், மறுபுறம் சற்றே உயரமாகவிருந்த பாறையில் அமரச் செய்ய, “பச் லேசான நோ டா…ஒண்டுமில்ல …எண்டு நினைக்கிறன்.” காலை உதறினாள்.

அவள் பாதத்தை அப்படி இப்படி அசைத்துப் பார்த்தான் மாறன். வலியில் முகம் சுருக்கினாள், கவி. “ஷூவைக் கழட்டு பார்ப்பம்.” என்று கவனிக்கத் தொடங்க, ஒதுங்கி நின்ற இலக்கியா என்ன ஏதென்று முன்னணியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கும் வேந்தனை முறைப்போடு பார்த்தாள். தற்செயலாக அவள் புறம் பார்த்தவன் ‘என்ன?’ விழிகளால் கேட்க, பட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு பின்னால் நகர்ந்துவிட்டாள்.

“இவ்வளவு பேர் நாங்க வாறம், ஏதோ அக்காவை அவர்தான் கூட்டிக்கொண்டு வந்தது போல விழுந்து விழுந்து கவனிக்கிறார்!” அவள்  முணுமுணுக்க, “உன்னக்  கவனிக்க வேணுமெண்டா நீ எனக்குப் பக்கத்தில வந்திருக்க வேணும், விழுந்தும் இருக்க வேணும்; அப்பத்  தெரிஞ்சிருக்கும் எங்கட உண்மையான கவனிப்பு எப்படியிருக்கும் எண்டு!” நின்று, அவளைப் பார்த்தெல்லாம் சொல்லவில்லை, அப்படியே அவளைக் கடந்து போகும் சாக்கில் சொல்லிவிட்டுச் சென்று தள்ளி நின்று கொண்டான், வேந்தன்.

‘நான் சொன்னதக் கேட்டுட்டானா?’ இலக்கியாவுக்கு ஒரு மாதிரிப் போயிற்று!

‘பக்கத்தில வாறவர் தவறி விழுந்தால் பிடிக்கிறது இல்லையா? அதுவும் விட்டிருந்தா அக்கா விழுந்திருப்பாள்! ச்சே! எனக்கு ஏன் இப்பிடியெல்லாம் மனம் போகுது?’ தன்னைத்தான் குட்டிக்கொண்டாலும் பிறகும், கவி, ஆரூரன் அவனோடு  வெகு நட்பாகக் கலகலத்துச் செல்வதை மட்டும் சகித்துக்கொள்ள முடியவில்லை; தானும் சென்று சேர்ந்துகொள்ளவும் முடியவில்லை.

அப்படியே நடந்தவர்கள், இடைவழியில், இளைப்பாறும் பொருட்டுப் போடப்பட்டிருந்த இருக்கைகளை நிரப்பிக் கொண்ட போதும், நீர்விழ்ச்சிகளுக்கு உள்ளே இறங்கி நீரில் அலைந்து விளையாடியபடி விதம் விதமான கோணங்களில் புகைப்படங்கள் எடுத்த போதும், மீன் பிடித்துக்கொண்டிருந்த சிறுவர்களோடு கதைத்து அளவளாவி, தானும் ஒருதரம் மீன் பிடிக்கவேண்டுமென்று கவின் அடம் பிடிக்க, சிறுபொழுது தூண்டிலை வாங்கிக்கொடுத்து அதில் நின்று கலகலத்த போதும் இலக்கியா விலகியே நின்றிருந்தாள். பார்வை மட்டும் அவனில் படிந்து படிந்து விலகும் வேலையைச் செவ்வனே செய்துகொண்டிருந்தது. 

 இரண்டாம் நாள் பொழுது வெகு இரம்மியமாகக் கழிந்து களைப்போடு வாகனத்தில் ஏறியவர்கள்,  நியூயோர்க் செல்லும் வழியில் சைனீஸ் ரெஸ்டாரண்டில் உணவையும் முடித்துக்கொண்டு தாம் தங்கவிருக்கும் விடுதி நோக்கி  l – 84E பாதையில் செல்கையில் அடைமழை பிடித்திருந்தது.

error: Alert: Content selection is disabled!!