நேசம் கொண்ட நெஞ்சமிது 2 – 1

வாணியின் கண்ணசைவில், ஆசிரியர்களின் மத்தியில் நடுநாயகமாக அமர்ந்திருந்த மூர்த்தி எழுந்துகொள்ளவும், அவரின் உரையினை கேட்க மாணவர்கள் அமைதியாகினர்.

தான் சொல்லாமலே புரிந்துகொண்டு அமைதியாகிய தன்னுடைய மாணவச் செல்வங்களைப் பெருமையோடு பார்த்தவர் அனைவருக்கும் வணக்கங்களைக் கூறி தன்னுடைய உரையினை ஆரம்பித்தார்.

“இங்கு ஆசிரியர்களாகப் பணியாற்றும் என்னுடைய தோழமைகளுக்கும், புதிதாக ஆசிரியப் பணியினை ஏற்க வந்திருக்கும் சகோதர சகோதரியருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக எங்களை உயிர்ப்புடன் நடத்தும் இந்த வாணியின் மாணவமணிகளுக்கும் என்னுடைய அன்பான மாலை வணக்கங்கள்.” என்றவர்,

வாணியை ஆரம்பித்த தினத்திலிருந்து இன்றுவரையான அதன் முன்னேற்றத்தையும், வாணியிலிருந்து இதுவரை வெளியேறிய மாணவர்களின் வெற்றிகளையும் சுருக்கமாகச் சொல்லி இந்த முறை பரீட்ச்சையினை எழுதிய மாணவர்களுக்குத் தன்னுடைய இதயபூர்வமான வாழ்த்துக்களையும் கூறினார்.

வாழ்த்தினை சொல்லும்போதே அவருடைய பார்வை வதனி தன்னுடைய தோழிகளுடன் இருந்த பக்கமாகச் சென்றது.

அவரின் பார்வையை சந்தித்த வனி உதடுகளை பிதுக்கித் தலையினை இடமும் வலமுமாக ஆட்டி, ‘எல்லாம் அவன் செயல்’ என்பதாகக் கைகளை வானத்தை நோக்கிக் காட்டவும், தவிர்க்கமுயன்றும் முடியாமல் அவரின் முகம் சிறு சிரிப்பினை பூசிக்கொண்டது.

அங்கே புது ஆசிரியர்களுள் ஒருவனாக அமர்ந்திருந்த இளவழகனின் கண்களிலும் வனியின் செய்கை பட அவன் முகத்திலும் புன்னகை.

‘குழந்தையைப் போல் இருக்கும் இவள் சில நேரங்களில் கோபம் வருவதைப்போலவும் எதையாவது பேசி வைக்கிறாளே. இவளின் பேச்சுக்களை பொருட்படுத்துவதா வேண்டாமா…’ என்று குழம்பியே போனான் அவன்.

சற்றுமுன்னர் சினம் கொள்ள வைத்த அதே பெண் இப்போது அவனைப் புன்னகைக்க வைத்திருக்கிறாள்.

ஒரு பெண்ணால் ஒரே நேரத்தில் ஒருவனை சினம் கொள்ளவும் சிரிக்க வைக்கவும் முடியுமா?

தன் குடும்பத்திலாகட்டும் நட்புக்களுக்கு மத்தியிலாகட்டும் எதையும் அந்த நொடியே சரியாகக் கணித்து செயல்படும் திறன் உள்ளவன் என்று எல்லோராலும் பாராட்டப்படும் அவனால் அவளின் இயல்பைக் கணிக்க முடியவில்லை.

அந்தத் தடுமாற்றமே அவளை இன்னும் கவனிக்க அவனை அறியாமலேயே தூண்டியது. தன்னை மறந்து அவளில் மூழ்கினான்.

“எங்கேடா பிராக்கு பாக்கிறாய்…?” என்று கோபாலன் இளாவின் கையைச் சுரண்டவும், கனவிலிருந்து விழித்தவன்போல் முழித்தான் இளவழகன்.

சில வினாடிகள் கழித்து தான் என்ன செய்துகொண்டிருந்தோம் என்று உணர்ந்தபோது முகம் கன்றிப்போனான்.

‘இனி அவளைப் பார்க்கவே கூடாது!.’ முடிவை என்னவோ மிக உறுதியாகத்தான் எடுத்தான்!

அந்தோ பரிதாபம், அதனைச் செயல் படுத்தத்தான் முடியவில்லை. விழிகள் அவளிடமே ஓடப்பார்த்தது.

இலகுவாக எடுத்துவிடும் முடிவினை நடைமுறைப்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதை தன்னுடைய வாழ் நாளிலேயே முதன்முறையாக உணர்ந்தான் இளவழகன்.

பெரும் சிரமப்பட்டு தன்னை அடக்கி, சரி.. மூர்த்தி சார் என்ன சொல்கின்றார் என்பதை இனியாவது கவனிப்போம் என்று அவர் பக்கம் தன்னுடைய பார்வையை மிகவும் கஷ்டப்பட்டு திருப்பினான்.

திருப்பியவன் கன்னத்தில் பலமாக அறைவதைப் போல இருந்தது அவரின் பேச்சு.

அவனுடைய நிலை என்ன? அவனின் குடும்ப நிலை என்ன? அவனுக்கான கடமை என்ன? இவை அனைத்தையும் நினைவு படுத்தியது அவரின் பேச்சு. அவற்றைக் கேட்டவுடன், அவனுடைய இயலாமை வனியின் மீது கோபமாக உருவெடுத்தது.

இளவழகனின் பன்னிரண்டாவது வயதிலேயே தந்தை தவறிவிட, அப்போது பதினெட்டு வயதான அவனின் அண்ணா கதிரவனிடம் குடும்பப்பொறுப்பு முழுவதும் வந்தது. உயர்தரம் மட்டுமே படித்த கதிரவன், கூலி வேலை முதல் கிடைத்த வேலையெல்லாம் செய்துதான் குடும்பத்தைக் காத்துவந்தார். அவரைத் தவிர அவனுக்கு ஒரு அக்கா மாதங்கி மற்றும் ஒரு தங்கை மாதவி என இரு பெண் சகோதரிகள்.

மாதங்கியின் பத்தொன்பதாவது வயதிலேயே அவளைச் சந்திரன் குடும்பத்தார் பெண் கேட்டுவர, தானாகத் தேடிவந்த வரனை உதறிவிடாது முடிந்தவரை சிறப்பாகத் திருமணத்தைச் செய்துமுடித்தார் கதிரவன்.

இளா தன்னுடைய இருபத்தி இரண்டு வயதிலேயே வேலை செய்ய ஆரம்பித்துவிடவும், இதுவரை குடும்பத்துக்காக உழைத்தது போதும் என்று கூறி கதிரவனுக்கு மல்லிகாவை திருமணம் முடித்து வைத்துவிட்டார் அவர்களின் தாய் வைதேகி.

அதுமட்டுமல்லாமல், என்றும் குடும்பத்தில் மனப்பிளவுகள் வந்துவிடக் கூடாது என்று கூறி அவர்களைத் தனியே குடியும் இருத்திவிட்டார்.

இப்போது இவனது தாயார் வைதேகி மற்றும் தங்கை மாதவியின் பொறுப்புக்கள் இவனது கடமையாகிப்போனது. அது அவனது விருப்பமான கனவும் கூட. தன்னை சுமந்தவளையும், கூடப் பிறந்தவளையும் மிகச் சிறப்பாக வாழவைக்க வேண்டும் என்பது அவன் வாழ்வின் மிகப்பெரிய லட்சியம்.

அந்த லட்சியம் மனதில் எப்போதும் இருந்ததில் தாய் சகோதரிகளைத் தவிர்த்து வேறு பெண்களிடம் அவன் பார்வை சென்றது இல்லை. எதற்காகவும் எந்தச் சந்தர்ப்பத்திலும் தன் மனம் சலனப்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பவன்.

அப்படிப்பட்டவனை தன் சுயத்தை இழக்கவைத்து, அவளை ஆர்வத்துடன் பார்க்க வைத்தது வதனிதான் என்று அவள் மேல் அர்த்தமற்ற கோபம் உண்டானது அவனுக்கு.

வவுனியாவில் இயங்கும் இலங்கை தொலைத்தொடர்பு நிலையத்தில் பொறுப்பான பதவியில் வேலை செய்கிறான் இளவழகன். நல்ல சம்பளம் வருகிறதுதான். ஆனால் அவன் தன்னுடைய தாய் தங்கையை எப்படியெல்லாம் வைத்திருக்க வேண்டும் என்று கனவு காண்கிறானோ அதற்குப் பத்தாமல் இருந்தது.

வீட்டுச் செலவுகளை மிகவும் சிக்கனமாக வைதேகி பார்ப்பதில் அவனின் சம்பளத்தில் ஒரு பங்கு தங்கையின் திருமணத்திற்கு என சேமிப்பாகச் சேர்கிறதுதான். என்னதான் சேமித்தாலும் போதுமான தொகையை எப்போது சேர்த்து எப்போது அவளுக்கு நல்ல இடத்தில் மணம் செய்துகொடுக்கப் போகிறான்?

ஒரு வழியாகத் தங்கையைக் கரை ஏற்றினாலும் தாயை எப்போது சீமாட்டியாக வாழ வைப்பது?

அதனால்தான் மூர்த்தி வந்து வேலைக்குக் கேட்டவுடன் சம்மதித்து விட்டான். மாலை வேளைகளை வீணாக ஓட்டுவதைவிட இது எவ்வளவோ மேல் என்கிற எண்ணத்தில்தான் அவனும் சம்மதித்து இன்று இங்கு வந்திருந்தான். அதையே மூர்த்தியும் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த நல்ல மனிதர் செய்யும் நல்லவற்றில் இதுவும் ஒன்று.

ஒவ்வொரு வருடமும் இவர்களைப் போல வேலை இல்லாத அல்லது நல்ல வேலை தேடும் திறமைசாலிகளை தேடிப்பிடித்து, தன்னுடைய வாணிக்கு அவர்களின் சேவை தேவை என்று வேலை கொடுப்பார். தங்கள் எதிர்காலத்தை அவர்கள் தேடிக்கொண்டால் அவர்களை வாணியிலிருந்து நீக்கிவிட்டு அந்த இடத்துக்கு இன்னொரு படித்தவனை நியமிப்பார்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock