அவளையேதான் அவனின் மனம் சதா நினைக்கிறது. ஆனால் அந்த நினைப்பை அவனுக்குப் பிடிக்கவில்லை. என்ன மாதிரியான உணர்வித்து?
பேச்சை மாற்றும் விதமாக, “உன் வேலை விஷயம் என்ன ஆச்சுடா?”என்று காந்தனை கேட்டான்.
“என்ன சொல்ல, பொறுத்திருக்க சொல்கிறார்கள். எவ்வளவு காலத்துக்குப் பொறுப்பது என்று தெரியவில்லை. பேசாமல் அப்பா சொல்வது போல வெளிநாடு எங்காவது போகலாமா என்று யோசிக்கிறேன், பார்ப்போம்.” என்றான் காந்தன்.
என்றும் இல்லாமல் மீண்டும் மௌனம் அவர்களுக்குள். இளாவின் மனதில் வதனியும் காந்தனின் மனதில் வேலை விஷயமும் நின்றதில் அமைதியாகவே மீதி தூரத்தைக் கடந்தனர்.
சாந்தசோலை கிராமத்தில் சற்று உள்புறமாக அமைந்திருந்தது அந்த வீடு.
மூன்று அறைகள், பெரிய விறாந்தை, சமையலறை என்று கச்சிதமாக இருந்தது. வெளிப்புற சுவர்களில் பெயிண்ட் ஆங்காங்கே உரிந்தபடி, நான் வாழ்ந்துகெட்ட குடும்பத்துக்குச் சொந்தமானவன் என்று பார்ப்பவருக்குச் சொல்லியது.
வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, முகம் கழுவி இரட்டை பின்னலிட்டு, சுவாமி கும்பிட்டதற்கு சான்றாக நெற்றியிலே திருநீறினை கீற்றாகத் தீட்டி இருந்தாள் மாதவி.
மாலை மங்கிய பின்னர் வெளியே சுற்றுவதற்கு வைதேகி அனுமதிப்பதில்லை. ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள் வீட்டினை வேலியாக மறைப்பதால், ஆலமரத்தில் கட்டியிருந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தாள்.
இளாவின் சைக்கிள் சத்தம் கேட்டதும், “அம்மா, சின்னண்ணா வந்துவிட்டார்.” என்று குரல் கொடுத்தாள்.
“இருட்டிய பிறகு வெளியில் என்ன வேலை உனக்கு? உள்ளே போ மாதவி.” என்றபடி கேட்டை திறந்துகொண்டு வந்தான் இளா.
“போங்கண்ணா, வீட்டுக்குள் இருந்து நான் என்ன செய்ய?” என்று சிணுங்கினாள் மாதவி.
“எதைச் செய்தாலும் உள்ளிருந்து செய்” என்றவன் சைக்கிளை மரத்தடியில் நிறுத்திவிட்டு, “அம்மா” என்று அழைத்தவாறே வீட்டினுள் சென்றான்.
தங்கை மீது அளவுக்கு அதிகமாச பாசம் இருந்த போதும் அவள் செய்வது தவறு என்று தெரிந்தால் அந்த நிமிடமே அதட்டிவிடுவான் இளா.
அவனின் குரல் கேட்ட வைதேகி, “இதோ வருகிறேன் தம்பி.” என்றபடி வந்தார்.
ஆங்கங்கே நரைத்திருந்தாலும் இன்றுவரை அடர்ந்து நீண்டிருக்கும் முடியினை நடு உச்சி பிரித்து ஒன்றாகச் சேர்த்து கொண்டையாகப் போட்டிருந்தார்.
கழுவிய சாந்தமான முகத்தின் நெற்றியில், திருநீறும் சந்தனமும் அழகாய் வீற்றிருந்தது. நைட்டி போன்ற முழு நீளச் சட்டை ஒன்று அணிந்திருந்தார்.
அவரைப் பார்த்தவனின் மனம், இதுவரை இருந்த குழப்பங்கள் அனைத்தும் விலகி அமைதியானது.
தன்னையே பார்த்த மகனிடம், “என்னடா,இன்றுதான் அம்மாவை பார்ப்பதுபோலப் பாக்கிறாய். என்ன விஷயம்???” என்று கேட்டார்.
சிறிதே மனம் தடுமாறினாலும் அதனைக் காட்டிக்கொள்ளாது, “இது என்ன கொடுமையடா சாமி. என் அம்மாவை நான் பார்ப்பது ஒரு குற்றமா?” என்றான் சிரிப்புடன்.
அதைக் கேட்டுச் சிரித்த வைதேகி, “உன் மனதில் என்னவோ இருக்கு. மலிந்தால் சந்தைக்கு வரும்தானே. அப்போது தெரிந்து கொள்கிறேன்.” என்றார்.
அவன் கண்களில் சிறிது ஆச்சரியம் எட்டிப்பார்த்தபோதும் உடனே அதை மறைத்துக்கொண்டான். அம்மா அதையும் கவனித்துவிட்டால் அதுக்குமல்லவா விளக்கம் சொல்ல வேண்டும். ஆனாலும் இதைத்தான் தாய் அறியா சூழ் ஏது என்பார்களோ என்று மனதில் நினைக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.
இங்கேயே நின்றால் தாயாரின் கூரிய பார்வையில் மனதின் சலனத்தைக் கொட்டிவிடுவோம் என்று பயந்து, “முகம் கைகால் கழுவிவிட்டு வருகிறேன்.” என்றபடி வீட்டின் பின்பக்கம் இருந்த கிணற்றடிக்கு சென்றான்.
முகம் கழுவிவிட்டு வந்தவனை, “சாப்பிட வா தம்பி. நீங்கள் சாப்பிட்டு முடித்தால் நான் பாத்திரங்களைக் கழுவி வைத்துவிடுவேன்.” என்றார் அவர்.
வீட்டு வேலைகளை முடித்துவிட்டால் அப்பாடா என்று சரியலாமே
“சரிம்மா…” என்றவன்
“மாதவி, சாப்பிட வா” என்று தங்கையையும் அழைத்துக்கொண்டு உணவருந்த நிலத்தில் அமர்ந்தான்.
பரிமாற வந்த வைதேகியை, “அம்மா, எத்தனை தடவை சொல்வது? இருப்பதே மூவர். எதற்குத் தனித் தனியாகச் சாப்பிட வேண்டும்? வாருங்கள் எல்லோரும் ஒன்றாகவே சாப்பிடுவோம்.” என்று அவரையும் இருத்திக்கொண்டான்.
தாயின் கை மணத்தில், என்றும்போல இன்றும் இருந்த சுவையான இரவு உணவை நல்ல வெட்டு வெட்டினான் இளா.
மூவரும் உண்டு முடித்தவுடன், மாதவி சாப்பிட்ட இடத்தை ஒதுக்க வைதேகி பாத்திரங்களைக் கழுவ, கழுவிய பாத்திரங்களைத் துடைத்தான் இளா.
பிறகு கேட், வீட்டின் முகப்புக்கதவு, பின் கதவு அனைத்தும் சாத்தியிருக்கிறதா என்று ஒரு முறை உறுதிப்படுத்திக்கொண்டவன் விறாந்தைக்கு சென்று சிவரில் சாய்ந்தார் போல் கால்களை நீட்டி அமர்ந்துகொண்டான்.
தன்னுடைய வேலையை முடித்துக்கொண்ட மாதவி, உள் அறைக்குச் சென்று ஒரு தலையணையை எடுத்துவந்து அதை இளாவின் மடியில் போட்டு அதிலே தலை வைத்துப் படுத்துக்கொண்டாள்.
“சாப்பிட்டவுடன் படுக்காதே என்று எத்தனை தடவை சொன்னாலும் கேட்டுவிடாதே.” என்று அவன் வாய் கடிந்து கொண்டாலும், கைகள் தாமாக அவளின் தலையை வருடியது.
“ஆனாலும் அண்ணா உங்களுடைய விடாமுயற்சிக்கு நான் தலை வணகுகிறேன்.” என்றாள் அவள் புதிராக.
“எதைச் சொன்னாலும் அதற்குக் குதர்க்கமாக ஒன்றை சொல்லிவிடு.”
“என்ன செய்வது அண்ணா, நான் உங்கள் தங்கைதானே… அதுதான் அப்படி இருக்கிறேன்.” என்று மாதவி சொன்னதை கேட்டபடி வந்த வைதேகி,
“இவளுக்குப் புத்தி சொல்வதற்கு நீ பேசாமலே இருக்கலாம் இளா.” என்றார்.
“விடுங்கம்மா, என்னிடம்தானே அவளும் வம்பு வளர்க்க முடியும். திருமணம் முடிந்தால் இப்படி சிறு பிள்ளை போல இருக்க முடியாதுதானே. நம்மோடு இருக்கும்வரை அவளுக்குப் பிடித்தமாதிரியே இருக்கட்டும்.”
அதைக் கேட்ட வைதேகியின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது மட்டுமில்லாமல் கவலையையும் பூசிக்கொண்டது.திருமணமானால் மகள் வேறு வீடு சென்றுவிடுவாளே என்று நினைத்தவர், மாதவியின் கால் பக்கம் அமர்ந்து அவளின் கால்களை எடுத்துத் தன் மடியிலே போட்டு வருடிக்கொடுத்தார்.
திருமணப்பேச்சை எடுத்தவுடனே மாதவியின் இதழ்கள் ரகசிய புன்னகையை ஏந்திக்கொண்டது. அவளின் உள்ளம் கவர் கள்வனின் நினைவில் மனமும் உடலும் சிலிர்க்க அவனை சந்திக்கும்போதெல்லாம் நடந்த நிகழ்வுகளை நினைத்து ரசித்தாள்.


