பூந்தோட்டத்தின் சாலையோரம் நடந்துகொண்டிருந்த அந்தச் சிறு பெண்கள் இருவரினதும் மனம் சஞ்சலத்தால் கலங்கிக் கிடந்தது. எதற்கு இந்த மௌனம் என்று தெரியாமலே நடந்தனர்.
எப்போதும் எதையாவது வளவளக்கும் வதனியின் அமைதி பொறுக்காத நித்தி, “அநியாயத்திற்கு அமைதியாக இருக்காதே வனி..”என்றாள் தவிப்போடு.
“ச்சு போடி! எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. எல்லோரும் ஒன்றாக இனி எப்போதும் சந்திக்க மாட்டோம். இன்றுதான் அந்தக் கடைசி நாள். அதுவும் முடிந்தது.” என்றாள் வேதனையுடன்.
அதையே தானும் உணர்ந்த நித்தி அமைதியாக நடந்தாள். பிறகு நினைவு வந்தவளாக, “வனி மறந்தே போனேனடி. வருகிற சனிக்கிழமை நான் திருகோணமலையில் இருக்கும் அத்தை வீட்டுக்கு போகிறேன். எப்போது திரும்புவேன் என்று தெரியாது.”என்றாள்.
“என்னடி இப்படி திடீரென குண்டை தூக்கி போடுகிறாய்.” என்று பாய்ந்தவளின் கண்களில் நித்தியின் முகச்சிவப்பு பட்டது.
“ஓஹோ… அத்தை மகன் ரத்தினம் உன்னை அழைக்கிறானோ?”
“சும்மா இரு வனி. அப்படி எதுவும் இல்லை.”
“என்னைப் பார்த்துச்சொல்? என் கண்ணைப் பார்த்துச்சொல்? பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதாம்.” என்றாள் வதனி சிரிப்பை சிந்தும் குரலில்.
“இன்னும் எதுவும் உறுதியாக தெரியாது வனி. எனக்கே பயமாக இருக்கிறது.” கலக்கத்தோடு இருந்தது நித்தியின் குரல்.
“லூசாடி நீ. உன்னுடைய நேசன் அத்தான் உன்னை பார்க்கும் பார்வைகளை நானும் பார்த்திருக்கிறேன் தானே. நீ போன போக்கில் அவர் உன்னை தூக்கிச்சென்று குடும்பம் நடத்தாமல் இருந்தால் தான் ஆச்சரியப்படவேண்டும்.”
வதனியின் பேச்சில் முகம் முழுதும் சந்தோஷ பூக்கள் பூக்க, “உண்மையாகத்தான் சொல்கிறாயா வனி?” என்று கேட்டாள் நித்தி.
குறும்பில் கண்கள் ஒளிர, “குடும்பம் நடத்துவதுதானே? கட்டாயம் நடக்கும்!” என்றவளை முறைத்தாள் நித்தி.
“நான் எதைக் கேட்கிறேன். நீ எதைச் சொல்கிறாய்.”
“எதற்காக இந்த சலிப்பு நித்தி? நிச்சயமாக நேசன் அண்ணா உன்னுடைய வரவை மிக ஆவலாக எதிர்பார்ப்பார். அதேபோல இந்தத் தடவை அவர் தன் மனதில் உள்ளதை சொல்வார். நீ திரும்பி வந்ததும் எனக்கு பார்ட்டி தரவேண்டும். இப்போதே சொல்லிவிட்டேன்.”
அவள் சொன்னதைக் கேட்ட நித்தி வீதியில் நிற்கிறோம் என்பதையும் மறந்து, வதனியை கட்டியணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
எப்போதும் கவனமாக இருக்கும் நித்தி, இப்போது தன்னை மறந்து செய்த செயலே நேசனை அவள் எவ்வளவுக்கு விரும்புகிறாள் என்பதை காட்டியது. அவளின் காதல் எந்த விதமான தடைகளும் இன்றி நிறைவேற வேண்டும் என்று வதனியின் மனம் கடவுளை வேண்டியது.
நித்தியின் பூரித்த முகத்தை பார்க்கையில் தன்னைக் கனிவோடு பார்த்தவனின் முகம் நினைவுக்கு வந்தது அவளுக்கு.
‘நான் அழுதது அவனுக்கு எப்படி தெரிந்தது? கண்ணீரை அடக்கியபடிதானே இருந்தேன். ம்…கைக்குட்டை தரும்போது எதுவோ சொன்னான். ச்சு….காதுகொடுத்து கேட்காமல் விட்டுவிட்டேன். அவன் என்னிடம் வந்து பேசுவான் என்று நான் என்ன நினைத்தா பார்த்தேன். ஆனாலும் அன்பாக பார்த்தான். நான் அழுததை பார்த்தவுடன் அவனுக்கு பாவமாக இருந்திருக்கும். அதுதான் எதுவோ சொல்லி கைக்குட்டை தந்தான். முதலில் முறைத்தானே…. கொஞ்சம் நல்லவன்தான் போலும்…..’ என்று அவளின் பெண் மனதை கலைத்துவிட்டான் என்பதை அறியாமலே, இளவழகனை பற்றிய எண்ணங்கள் அவள் மனதில் ஓடியது.
இருவரும் ஒருவழியாக வதனியின் வீட்டை அடைந்தனர். அங்கே தன் தந்தை மணிவண்ணனை கண்ட நித்தி, “என்னப்பா, இங்கே வருவதாக நீங்கள் சொல்லவில்லையே?” என்று கேட்டாள்.
“ஏனடி உனக்கு இந்தப் பொல்லாத குணம்? மாமா என்னைப் பார்க்க வந்திருப்பார். எப்போதும் அவர் உன்னை மட்டுமே செல்லம் கொஞ்ச வேண்டுமோ? என்னைக் கொஞ்சினால் கொஞ்சுப்படாதோ? நான் சொல்வது சரிதானே மாமா. என்னை பார்க்கத்தானே வந்தீர்கள்?” நித்தியிடம் ஆரம்பித்து மணிவண்ணனிடம் சலுகையுடன் முடித்தாள் வதனி.
“உன்னை பார்க்கத்தான்டா கண்ணா வந்தேன். மாமா நாளையே நித்தியையும் கூட்டிக்கொண்டு திருகோணமலை போகிறேன். உன்னிடம் சொல்லாமல் சென்றால் முகத்தை அந்த கேட் வரை நீட்டிக்கொண்டு என்னுடன் பேச மாட்டாயே என்கிற பயத்தில் வேலைகள் இருந்தும் எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓடி வந்தேன்.” என்றார் பாசமாக அவளின் தலையை தடவியபடி.
அவர் சொன்னதைக் கேட்டதும் அவரின் கையை தட்டிவிட்டு, “என்னிடம் பாசமா இருப்பது போல் யாரும் நடிக்கத்தேவை இல்லை.” என்றாள் வதனி கோபமாக.
“இதென்ன பழக்கம் வனி? மாமாவிடம் மன்னிப்பு கேள்.” என்று அதட்டினார் கலைமகள்.
தந்தைக்கு சமமானவரிடம் மக்கள் காட்டிய கோபம் பிடிக்கவில்லை அவருக்கு!


