“நான் என்ன பிழை செய்தேன் என்று மாமாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்? அவர் தானே என்னிடம் சொல்லாமல் திருகோணமலை போக முடிவு செய்தார்…”
கலைமகள் எதுவோ சொல்லத் தொடங்கவும், “பொறும்மா கலை.” என்று அவரை தடுத்துவிட்டு,
“எனக்கே இப்போதான் கண்ணா தெரியும். பிறகு எப்படி உன்னிடம் முதலே சொல்ல முடியும்?” என்று பதில் கேள்வி எழுப்பினார் மணிவண்ணன்.
“அப்படி என்ன அவசரமோ?” அப்போதும் கோபம் தீரவில்லை அவளுக்கு.
“நித்தியின் அத்தைக்கு உடம்பு முடியவில்லையாம் வனிக்கண்ணா. நேசன் இப்போதுதான் அழைத்துச் சொன்னான். ராசமலருக்கு ஒரு பெண்ணின் உதவி கட்டாயம் தேவையாக இருக்கிறதாம். அதுதான் நித்தியை அழைத்து போகிறேனடா.”
அதைக் கேட்டதும் பதறிப்போனாள் வாதனை.
“என்ன மாமா நீங்கள்? நேசன் அண்ணா சொன்னவுடனேயே நீங்கள் கிளம்பியிருக்க வேண்டாமா? வாணிக்கு வந்து நித்தியை அழைத்துப்போகாமல் இங்கு என்ன அப்பாவுடன் கதை அளந்துகொண்டு இருக்கிறீர்கள்?முதலில் நீங்கள் டவுனுக்குச் சென்று திருகோணமலைக்கு எத்தனை மணிக்கு பஸ் என்று தெரிந்துகொண்டு வாருங்கள். புறப்படுங்கள்.” என்று படபடவென்று பயணத்துக்கான திட்டங்களை போட்டாள்.
எப்போதும் விளையாட்டுப்பிள்ளை போலவே இருந்தாலும், தேவை என்று வரும் இடங்களில் தானாகவே பொறுப்பை எடுப்பது மட்டுமல்லாமல் அதை சிறப்பாகவே முடிப்பவள்தான் வதனி.
அவரிடம் படபடத்தது போதாது என்று நித்தியின் பக்கம் திரும்பி, “என்னடி மரம் மாதிரி நிற்கிறாய்? புறப்படு.” என்று அவளையும் அதட்டினாள்.
“மாமா, பயணத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து வைக்க நானும் அப்பாவும் நித்தியுடன் உங்கள் வீட்டுக்குப் போகிறோம்.நீங்கள் டவுனுக்குப் போய் பஸ் விவரம் அறிந்துவாருங்கள்.” என்றாள் தொடர்ந்து.
“இல்லை கண்ணம்மா. நேசன் எதோ மருந்தும் வாங்கி வரச் சொன்னான். இப்போதே ஆறு மணியாகிறது. இனி எங்கே அதை வாங்குவது? கடைகள் எல்லாம் மூடிவிடுவார்களே… அதனால்தான் உடனே செல்லவேண்டும் என்று தவிப்பாக இருந்தாலும் நாளை காலையில் அதையும் வாங்கிகொண்டு அப்படியே புறப்படலாம் என்று இருக்கிறேன். நீ பதட்டபடாதே செல்லம்.” என்றவருக்கு அவளை நினைத்து பெருமையாக இருந்தது.
சங்கரனினதும் மணிவண்ணனினதும் இருபத்திஐந்து வருட காலத்து நட்புக்கு கிடைத்த பரிசல்லவா அவள் அவர் மீது காட்டும் அதிரடியான பாசம்.
மனைவியை நோய்க்கு பறிகொடுத்துவிட்டு துடியாகத் துடித்தவரை சங்கரனினால் கூட தேற்ற முடியாமல் போனது.
அப்போது ஐந்து வயதில் இருந்த சிறுமி வதனிதான், “மாமா அழாதே. மாமி சுவாமியிடம் போய்விட்டார்களாம். நாம் இனிமேல் மாமியை சுவாமி அறையில் வைத்து தினமும் கும்பிடுவோம். சரியா? நீ அழாதே.” என்றாள் பிதுங்கிய உதடுகளுடன்.
தன்னுடைய தவிப்பை பார்த்து அழும் அந்தக் குழந்தையின் மழலையில் தான் அன்று மனைவியின் ஆறாப் பிரிவில் இருந்து வெளிவந்தார் அவர். அன்றிலிருந்து இன்றுவரை, அவருக்கு அவரின் தாயின் மறு உருவே வதனி.
“என்ன மாமா, இதை முதலே சொல்ல வேண்டாமா? எங்களோடு படிக்கும் சாந்தினியின் அண்ணா மருந்துக்கடை தான் வைத்திருக்கிறார். அவரின் கடை ஏழு மணிவரை திறப்பு என்று சாந்தி சொல்லியிருக்கிறாள். நீங்கள் அங்கேபோய் வாங்கி வாருங்கள்.” என்றவள் நித்தியின் தோளில் தன் தோளினாள் இடித்து,
“உனக்கும் தெரியும்தானே? சொல்லேன்.” எனவும்,
“ஆமாம் அப்பா, வனி சொல்வது சரிதான். நீங்கள் பஸ்சுக்கு முன்பதிவு செய்துவிட்டு அங்கே போய் மருந்தையும் வாங்கி வாருங்கள். நாம் இப்போதே புறப்படலாம். அங்கே அத்தான் தனியாக எப்படி அத்தையை சமாளிக்கிறாரோ தெரியவில்லை.”என்றாள் தவிப்புடன்.
‘இப்போதும் உன் அத்தானின் நினைப்புதானா…?’ யாரும் அறியாமல் கண்களால் தோழியை சீண்டினாள் வதனி.
“வனி சொல்வதுதான் சரி. நீ கிளம்பு மிகுதியை நாங்கள் செய்கிறோம்.” என்று மணிவண்ணனை கிளப்பிய சங்கரன் இரு பெண்களையும் அழைத்துக்கொண்டு நித்தியின் வீட்டுக்கு கிளம்பினார்.
ஒரு வழியாக வதனியின் திட்டப்படி கிளம்பிய மணிவண்ணனும் நித்தியும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர்.
அதற்குமுன், “கவனாமாக இரடா. யாரிடமும் வம்புகளுக்கு போகாதே என்ன…” என்றவர் தொடர்ந்து,
“எப்போது வருவேன் என்று சொல்ல முடியாது கண்ணா. நித்திக்கும் விடுமுறை தானே. அங்கும் கொஞ்ச நாள் தங்கி வரலாம் என்று நினைக்கிறேன்… தங்கி வரவா?” என்று கேள்வியாக இழுத்தார்.
“நடக்க முடியாத அத்தைக்கு உடல் நலம் சரியில்லை என்பதால் அனுமதிக்கிறேன். முடிந்தவரை விரைவாக வந்துவிட வேண்டும். சரிதானா?” என்றவளிடம்,
“சரி கண்ணா. ராசமலருக்கு உடல் சரியானவுடன் ஓடி வந்துவிடுகிறேன்…” என்றார் பெறாமகளின் சம்மதம் கிடைத்துவிட்ட மகிழ்வோடு.
“அடி நித்தி, அத்தையிடமும் உன் நேசன் அத்தானிடமும் நாங்கள் எல்லோரும் சுகம் கேட்டதாக சொல்லிவிடு. உன்னவர்களை கண்டவுடன் எங்களை மறந்துவிட மாட்டாயே.” என்றாள் கண்களில் கேலி மின்ன.
அப்பாவையும் மாமாவையும் அருகில் வைத்துக்கொண்டு பேசும் பேச்சைப் பார் என்று பல்லைக் கடித்த நித்தி கண்களால் தீப்பொறியினை வதனிக்கு பாசல் அனுப்பினாள்.
தீப்பொறி எல்லாம் நமக்கு பூ உருண்டையப்பா என்பதுபோல் பதில் பார்வை பார்த்தவள், சிரித்தபடி அவர்களை இனிதே பயணம் அனுப்பி வைத்தாள்.


