காலையில் நேரம் செல்ல எழுந்து நேரத்தை நெட்டித் தள்ளிய வதனி மதியமானதும், “அம்மா வாணிக்கு போய்வரவா? வாணியக்கா வரச் சொன்னார்கள்.” என்று தாயிடம் கேட்டாள்.
இவ்வளவு நேரமும் தன்னுடன் மல்லுக்கட்டியவளை கொஞ்ச நேரமாவது வெளியில் விட்டால்தான் தன் வேலைகளை தான் முடிக்கலாம் என்று நினைத்த கலைமகள், “ம்.. சரி! ஆனால், ஆறு மணிக்கு முதல் வந்துவிடவேண்டும். நித்தியும் இல்லை, கவனமாக போய்வா.” என்றார்.
“சரிம்மா..” என்றபடி துள்ளியோடினாள் பெண்.
முகம் கழுவி நெற்றியிலே பொட்டிட்டு, கறுப்பில் வெள்ளைப் பூக்கள் போட்ட முழுநீள பாவாடையும், வெள்ளை நிறத்தில் சேர்ட் வடிவிலான சட்டையும் உடுத்தி, இரட்டை பின்னலிட்டு அதனை மடித்து கருப்பு ரிப்பணினால் கட்டி இருந்தாள் வதனி. மடித்து கட்டிய பின்னலே அவளின் முதுகுவரை இருந்தது.
வாணிக்குச் செல்ல தயாராகிவந்த மகளின் அழகில் மனது மட்டுமல்லாமல் முகமும் மலர, “கவனமாக போய் வா வனிம்மா..”என்றவர் மகளின் சைக்கிளை பிடித்தபடி கேட் வாசல் வரை வந்தார்.
சைக்கிள் மிதிக்க ஆயத்தம் செய்துகொண்டே, “கேட்டை மறக்காது பூட்டிவிடுங்கள். பிறகு என் பூமரங்களை மாடு வந்து தின்றுவிடும்.” என்று கூறி வாணிக்கு கிளம்பினாள் வதனி.
மகளை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்த கலைமகளுக்கு வீடே வெறிச்சோடிப்போனது. ‘அவள் இருந்தாலும் சும்மா இருக்கமாட்டாள். இல்லாவிட்டாலும் வீடு வீடாக இல்லை.” என்று தனக்குள்ளேயே நினைத்து சிரித்துகொண்டார்.
வாணிக்குள் சென்று சைக்கிளை அதன் இடத்தில் நிறுத்தியவளுக்கு நேற்றைய தினம் நினைவில் வரவும் முகம் சற்றே வாடியது. வாணிக்காவது வரமுடிகிறதே என்று தன்னையே தேற்றிக்கொண்டாள்.
வதனியை கண்ட வாணி, “எங்கே உன் உயிர்தோழி? அவள் இல்லாமல் வரமாட்டாயே?” என்று கேட்கவும்,
“அவள் திருகோணமலைக்கு போய்விட்டாள் வாணியக்கா.” என்றாள் சோகத்தோடு.
அதைக் கேட்ட மூர்த்தி அங்கிருந்த கோபாலனிடம், “அதுதானே பார்த்தேன், என்னடா சந்திரிக்கா அம்மையார் சத்தமில்லாமல் வருகிறாரே என்று யோசித்தேன். இப்போதான் புரிகிறது. பூனைப்படை இல்லாததில் புலி பதுங்கியபடி வருகிறது என்று.” என்றார் சீண்டும் குரலில்.
கோபாலனும் நேற்று நடந்ததை நினைவில் வைத்து, “நேற்று ஆடிய ஆட்டம் என்ன ? இன்று அடங்கிய கோலம் என்ன?” என்றான் கேலிச்சிரிப்புடன்.
“புதிய வாத்திக்கு என்னைப் பற்றி தெரியவில்லை. சொல்லி வையுங்கள் வாணியக்கா.”என்றாள் சிலிர்த்துக்கொண்டு.
“வாத்தியார்களைத்தானா நேற்று ‘வாத்து’ என்று சொன்னீர்கள்?” என்று கோபாலன் கேட்டான்.
இது எல்லாம் எப்போது நடந்தது என்பதாக வாணி முறைக்கவும், “அது… சும்மா வாணியக்கா.” என வாணியிடம் திக்கியவள், “கோபாலன் சார் விளையாட்டுக்கு அப்படி சொன்னேன்.” என்றாள் கோபாலனிடம்.
“என்னது சாரா?” என்று அலறினான் அவன்.
“என்னை அண்ணா என்றே கூப்பிடுங்கள். சாரும் வேண்டாம் மோரும் வேண்டாம்.” என்றான் விழுந்தடித்து.
அவன் சொன்ன வேகத்தில் கேட்டிருந்த மூவருக்குமே சிரிப்பு வர வனியும் சிரித்தபடி, “அப்படி என்றால் நீங்களும் என்னை நீ என்றே சொல்லலாம்.” என்றாள்.
“உங்கள் தங்கைதானே. இதைக் கூட விட்டுத் தரமாட்டேனா.” என்றாள் பெரியமனதாய்.
“இது உனக்கு நல்லதற்கு இல்லை கோபால். வம்பை விலை குடுத்து வாங்குகிறாய்.” என்று எச்சரித்தார் மூர்த்தி.
“அவள் அப்படியே கூப்பிடட்டும் மூர்த்தியண்ணா. எனக்கும் தங்கை இல்லாத குறை நீங்கட்டும்.” என்றான் அவன்.
“உன் தலையெழுத்தை என்னால் மாற்ற முடியாது. ” என்றபடி அவர் நகர்ந்துவிட, தமிழ்வாணியும் வதனியை கூட்டிக்கொண்டு நகரப்போனார்.
தமிழ்வாணியுடன் நடந்துகொண்டே, “கோப்பிக்கொட்டை அண்ணா, நாம் பிறகு பேசுவோம்.” என்று வதனி சொல்லவும்,
“என்னது? கோப்பிக்கொட்டையா? நானா?” என்று அதிர்ந்து போனான் கோபாலன்.
போகிற போக்கில், “என்னுடைய அண்ணா நிறத்திலாகட்டும் பெயரிலாகட்டும் கோப்பிக்கொட்டைதான்.” என்றாள் கண்களை சிமிட்டி.
அவள் சொன்ன அழகில் வாய் விட்டு சிரித்துக்கொண்டே பாடம் எடுக்கவேண்டிய வகுப்புக்குள் சென்றான் அவன்.
வாணியுடன் சென்ற வதனி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்களை செய்வதற்கு உதவியபடி உற்சாகமாக தன்னுடைய நேரத்தை ஓட்டினாள்.
நேரம் மாலை ஐந்தரை ஆகவும், அவர்களிடம் நாளைவருவதாக சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.
ஓலையினால் வேயபட்டிருந்த அந்த கொட்டகையை விட்டு வதனி வெளியே வரவும், இளவழகன் தன்னுடைய சைக்கிளை அங்கிருந்த ஆலமரத்தின் கீழ் கொண்டுவந்து நிறுத்தவும் சரியாக இருந்தது.
இளாவை முதலில் கண்ட வதனி கோபால் கூறியதை வைத்து, “ஹாய் இளவழகன் அண்ணா.” என்றாள்.
‘யார் நம்மை இவ்வளவு அன்பொழுக அண்ணா என்று கூப்பிடுவது, அதுவும் முழுப் பெயரை சொல்லி’ என்று யோசித்துக்கொண்டே சிரித்த முகமாக, “ஹாய்….” என்றவாறே திரும்பினான் அவன்.
திரும்பியவனின் முகம், அழைத்தது வதனி என்று தெரிந்தவுடன் இறுகியது.
அவனின் முகமாற்றத்தை கவனித்தவள், ‘இவனிற்கு என்னவாகிற்று. இன்று நான் ஒன்றும் சொல்லவில்லையே…’ என்று யோசித்தபடி நின்ற இடத்திலேயே நின்றுவிட்டாள்.
ஆள்காட்டி விரலை நீட்டி தன்னருகில் வருமாறு சைகை செய்தவனிடம், யோசனையுடன் அருகில் சென்றவள் கேள்வியாக அவனை நோக்கினாள்.
“நான் உனக்கு அண்ணனா?” இறுக்கமாக வந்தன வார்த்தைகள்.
‘இதுதானா விஷயம்? புகழுக்கு அலையும் புண்ணாக்கா நீ..’
“சாரி சார்” என்றாள் வதனி.
இனியாவது மகிழ்வான் என்று வதனி நினைக்க, “நான் உனக்கு மாஸ்டரா?” அவன் வள் என்று பாயவும்,
‘நாய்ப்பரம்பரையில் பிறந்திருப்பானோ’ என்று திகைத்துப்போவது இப்போது வதனியின் முறையாகிற்று.
‘அப்போ இவனை என்னவென்று அழைப்பது?’ என்று மனதில் யோசித்தவள்,
‘இது சரியாக வராது… அம்மா வேறு ஆறு மணிக்குள் வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இவனுக்கு இன்னொரு நாள் காவடி ஆடுவோம்.’ என்று நினைத்தவாறே நகரப்போனாள்.
“என்னை எப்படி அழைப்பது என்று முடிவு பண்ணிவிட்டாயா?”


