ஏதோ சாப்பிட்டேன் என்று எழுந்தவனுக்கு எப்போதும் தாயுடனும் தங்கையுடனும் கழிக்கும் அந்த நேரம் கூட பிடிக்கவில்லை.
“தலை வலிக்கிறதும்மா. இன்று கொஞ்சம் நேரத்துக்கே படுக்கப்போகிறேன்.”
இதுவரை அவனின் முகத்தை பார்த்திருந்த வைதேகியும், “ஓய்வாக போய்ப் படு தம்பி.” என்றபடி ஒரு பனடோலை எடுத்துக் கொடுத்தார்.
அதையும் வாங்கி விழுங்கிக்கொண்டான். அப்போதாவது இந்த அவஸ்தை தொலைகிறதா என்று நினைத்தபடி.
தன்னுடைய அறைக்குள் நுழைந்தவனுக்கு குற்ற உணர்வும் சேர்ந்து ஆட்டியது. இதுவரை அம்மாவிடம் பொய் சொன்னதே கிடையாது.
எல்லாம் அவளால். இன்று அவளைக் கண்டிருக்க இந்த தவிப்பு இருந்திராதே.
அவளின் வீட்டு ரோட்டில் சென்றாவது அவள் வெளியில் வந்தால் பார்த்துவிட்டு வரலாம் என்றால், எந்த வீதியில் வசிக்கிறாள் என்றும் தெரியாது.
தவியாய் தவித்தவனுக்கு அப்போதுதான் தோன்றியது, இந்த தவிப்புத்தான் காதலா? என்று!
அன்று வெள்ளிக்கிழமை, கலைமகளுக்கு ஓரளவுக்கு காலின் வீக்கம் வற்றி இருந்தது. ஆனாலும் நடப்பது சிரமமாக இருக்கவே சித்திவிநாயகர் கோவிலுக்கு வதனியை சற்று நேரத்தோடு போய்வரச் சொன்னார் அவர்.
“சரிம்மா, நான் நேரத்தோடு வாணிக்கு போய்விட்டு அப்படியே கோவிலுக்கும் போய் வருகிறேன்.” என்றவள் தாயாரின் தேவைகளை கவனித்துவிட்டு குளிக்கச் சென்றாள்.
தலைக்கு குளித்து, அழகிய சுடிதாரில் வந்தவள் கொஞ்ச முடியினை மட்டும் இழுத்து ஒரு கிளிப்பில் அடக்கி, இடை தாண்டும் கருங்கூந்தலை விரித்துவிட்டாள்.
தயாராகி வந்த மகளிடம், “கவனமாகப் போய்வா வனிம்மா, அம்மாவும் வரவில்லை. நித்தியும் இல்லை. பார்த்து போய்வாம்மா.” என்று கலைமகள் திரும்பாத திரும்ப சொல்லவும்,
“என்னம்மா, நான் என்ன குழந்தையா? எப்போது பார்த்தாலும் கவனமாகப் போய்வா என்கிற பாட்டையே படிக்கிறீர்கள்.” என்று சிணுங்கினாள் அவள்.
“இனிமேல் மாற்றி சொல்கிறேன். பார்த்து போய்வாடா.” என்று கலைமகள் மகளின் காலை வாரவும்,
“அம்ம்ம்ம்மாஆ!” என்றவளின் சிறுபிள்ளைக் கோபம் கூட அந்த தாய்க்கு அழகாய் தோன்றியது.
“எப்போதும் சொல்வது தானேடா. கோவித்துக்கொள்ளாமல். போய்வா.” என்றார் மகளின் முகத்தை ஆசையாக வருடி.
“சரிம்மா.” என்று கிளம்பினாள் அவள்.
வாணிக்கு சென்று அங்கே மாணவர்களுக்கு தன்னால் முடிந்தவைகளை சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தாள்.
ஐந்து மணியளவில் வாணிக்கு வந்த இளா தான் எடுக்க வேண்டிய வகுப்புக்கு சென்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தான். என்னதான் பாடம் எடுத்தாலும், மனமோ இன்றும் அவளை காணவில்லையே என்று அரற்றியது.
இதையறியாத வதனி நேரமானதும் ‘கோவிலுக்கு செல்லவேண்டும்…’ என்று நினைத்தபடி மாணவர்களிடம் சொல்லிக்கொண்டு வாணியிடம் சென்றாள்.
“வாணியக்கா நான் கிளம்புகின்றேன். இன்று சித்திவிநாயகரை சந்திக்கும் நாள் இல்லையா?” என்று சொல்லவும் இளா அங்கு நுழையவும் சரியாக இருந்தது.
“சரி! நீ போ! நானும் அவரை விசாரித்ததாக சொல்லு.” என்றவர் இளாவை பார்த்துவிட்டு,
“கொஞ்சம் பொறுங்கள் இளா. இந்த பேப்பர்களை கண்ணன் சாரிடம் கொடுத்துவிட்டு வருகிறேன்.” என்றபடி அந்த அறையை விட்டு வெளியேறினார்.
வாணி சொன்னது இளாவின் காதில் விழவே இல்லை. விழுவதற்கு அவன் சுயநினைவுடன் இருக்கவேண்டுமே!
தன் மனதைக் கொள்ளைகொண்டவளை எதிர்பாராமல் கண்டதே வானத்தில் பறக்க வைத்தது என்றால், தேவதைதான் நேரில் வந்துவிட்டதோ எனும்படியாக இருந்த அவளின் அழகில் சொக்கியே போனான்.
அவனை பார்த்த வதனிக்கும் ஏனோ படபடப்பாக இருந்தது. அவனின் பார்வை மாறியதை உணரவும் முடிந்தது. ஏன் இப்படி மனதை என்னவோ செய்யும் பார்வை பாக்கிறான் என்று யோசித்தவள், அவனை பார்த்து சிறிதாக சிரித்தாள்.
அவனின் பெயரை சொல்லி அண்ணா என்பதா அல்லது சார் என்பதா என்கிற குழப்பம் ஒரு பக்கம் என்றால், அவளுக்குமே அந்த இரண்டையும் சொல்லி அழைக்க பிடிக்கவும் இல்லை. எனவே சிரிப்போடு நிறுத்திக் கொண்டாள்.
இதை எதையும் கண்டுகொள்ளாத இளாவோ அவளை அப்படியே அள்ளிப் பருகுவதைப்போல பார்க்கவும், கூச்சமாக உணர்ந்த வதனி அறையை விட்டு வெளியேற நினைத்து வாசலை நோக்கி நடந்தாள்.
தன்னிலை மறந்திருந்த இளாவிற்கு அவள் தன்னை விட்டே செல்வதாக தோன்ற எட்டி அவளின் கையை பற்றி, “எங்கே என்னை விட்டு போகிறாய்…? உன்னை காணாமல் நான் இந்த மூன்று நாட்களும் தவித்தது போதாதா?” என்று கேட்டுவிட்டான்.
அவன் சொன்னதை கேட்ட வதனிக்கோ அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.
‘என்ன சொல்கின்றான் இவன்? என்னை தேடினானா? தவித்தானா? எதற்கு? அதைவிட இது என்ன கையை பிடிதிருக்கிறான்?’
தானும் கையை பறிக்காது இருக்கிறோம் என்று பதறி கையை இழுக்க பார்க்கவும், பிடித்த அவளின் கையை விடாது தன்னை நோக்கி இழுத்தான் இளா.
அவன் இழுத்த இழுப்பில் அவனுடனே மோதியவளின் இடையை தன் கைகள் இரண்டினாலும் வளைத்து தன்னுடன் இறுக்கி, “ஏன்டா இந்த மூன்று நாட்களும் வரவில்லை? என்னால் உன்னை பார்க்காமல் இருக்கவே முடியாது என்று தெரியாதா உனக்கு?”என்றான் அவளின் நெற்றியில் தன் நெற்றியினால் முட்டியபடி.
வதனிக்கோ மூச்சே நின்று போனது. இதயம் துடிப்பதை விடுத்து இடியாக இடித்தது.
தான் இருக்கும் இடமும் நிலையும் பிழை என்பதை மனம் உணர்த்த, “என்ன செய்கிறீர்கள்? இப்படித்தான் ஒரு பெண்ணிடம் நடந்து கொள்வீர்களா? என்ன மனிதர் நீங்கள்? அறிவில்லை? விடுங்கள் என்னை!” என்று அவள் சீறவும்தான் சுயநினைவுக்கு வந்தான் இளா.
சுற்றும் முற்றும் பார்த்தவன் தான் செய்து கொண்டிருக்கும் செயலை உணர்ந்து சட்டென்று அவளை விட்டான்.
“இந்த இடம் தான் பிழையானதே தவிர நான் செய்தது தவறு கிடையாது.” என்றான் அழுத்தமாக.
செய்ததே மகாதவறு. இதில் அழுத்தமான பதில் வேறு. அவனின் அந்த பதில் அவளை இன்னும் கோபம் கொள்ளச் செய்யவும், ஓங்கி அறைந்து விட்டாள் அவனின் கன்னத்தில்.
“இந்த மாதிரியான இழி செயல்களை உங்களைப் போன்ற பெண்களிடம் வைத்துக் கொள்ளுங்கள்! என்னிடம் அல்ல! புரிந்ததா?!”கோபத்தில் மூச்சிரைத்தது அவளுக்கு.
அவள் அடித்ததனால் உண்டான அதிர்ச்சியில், கையினால் தன் கன்னத்தை தாங்கியவனின் கண்களோ காதலை மட்டுமே கொட்டியது.
‘பார்வையை பார். அந்தக் கண்களில் பச்சை மிளகாயை வைத்துத் தேய்க்க வேண்டும். என்னைப் பிடித்த கைகளை மரத்தில் கட்டி வைத்து கடித்து வைக்க வேண்டும்….’
மனதினுள் திட்டிக் கொண்டே அவனை முறைத்தபடி அந்த அறையை விட்டு வெளியேறியவள் சைக்கிளை எடுத்துகொண்டு கோவிலுக்கு புறப்பட்டாள்.
அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த இளாவின் முகத்தில் அறை வாங்கியதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
மாறாக, மகிழ்ச்சியிலும் மயக்கத்திலும் மனம் பொங்கி வழிந்தது. பூப்பந்தாய் தன் மீது மோதிய அவள் மேனியின் செழுமை, இடையை அழுத்திய போது அறிந்து கொண்ட அவளின் மென்மை, நெற்றியில் முட்டிய போது நுகர்ந்து கொண்ட அவளுக்கேயான வாசனை அனைத்தும் அவனை கிறங்கடித்தது.
பட்டாம் பூச்சியாய் படபடத்த கண்கள், கோபத்தில் துடித்த இதழ்கள், இவற்றை மிக அருகில் பார்த்ததால் உண்டான கிறக்கம் எல்லாமே அவனை அவனுக்கு புதிதாக காட்டியது.
இன்று என்னுடன் பேசாமலேயே ஒடிவிட்டாளே…
‘நீ செய்த செயலுக்கு இன்று மட்டும் அல்ல என்றுமே பேசுவாள் என்று நினைக்கிறாயா?’ என்று கேட்ட மனதை தூக்கி குப்பையில் போட்டான்.
‘இனி நாளைதான் காணமுடியுமா அவளை…’ என்று நினைத்தவனுக்கு மூளையில் பளிச்சிட்டது.
‘கோவிலுக்கு போகிறேன் என்று வாணி அக்காவிடம் சொன்னாளே. அப்போ நாமும் அங்கே சென்றால் அவளை காணலாம்.’ என்று தோன்றிய அந்த நிமிடமே அவனின் முகம் பிரகாசமானது.


