“பூசிக்கொள் வனிம்மா..”
‘அம்மாவைப் போலவே அழைக்கிறானே…’ என்று மனதின் ஒரு மூலையில் இதமான தென்றல் வீசிய போதும் கோபம் குறையாததால் முகத்தை திருப்பாமலே இருந்தாள் அவள்.
சற்று நேரம் அவளையே பார்த்தவன், தன் கைகளில் இருந்த திருநீறினை அவளின் நெற்றியில் பூசியது மட்டுமல்லாமல் சந்தனத்தையும் குங்குமத்தையும் ஒன்றாக கலந்து பொட்டாக அவளின் நெற்றியிலே வைத்தும் விட்டான்.
நொடிப்பொழுதில் நிகழ்ந்துவிட்ட நிகழ்வில் மறுபடியும் ஸ்தம்பித்தது வதனியின் இதயம்.
‘இதற்கு என்ன பொருள் என்று தெரிந்துதான் செய்தானா இவன்…..’ என்று நினைத்த மாத்திரத்தில் அவளின் கண்கள் கலங்கிப்போனது!
அவளின் அருகில் அமர்ந்து, ஒற்றை விரலினால் அவளின் முகத்தை தன் புறமாக திருப்பி, “கலங்க வேண்டிய அவசியம் இல்லை வதனி. பொட்டு வைத்ததற்கான அர்த்தம் புரியாத சிறுபிள்ளை இல்லை நான். தெரிந்துதான் வைத்தேன். அதைவிட உயிரினும் மேலாக உன்னைப் பிடித்ததால் தான் வைத்தேன்…” என்றவனை விரிந்த விழிகளால் பார்த்தாள்.
அவளின் பார்வையை தயங்காது தாங்கிய அவன் விழிகளும் அவனின் காதலை அப்பட்டமாக வெளிப்படுத்த, அதையும் தாங்கும் சக்தியற்று அவளின் விழிகள் கண்ணீர் முத்துக்களை சரமாக தொடுத்தது.
அவனோ பதறிப்போனான். “ஏன் குட்டி, என்னைப் பிடிக்கவில்லையா? அல்லது இரண்டு நாட்கள் அதுவும் சற்று நேரம் மட்டுமே பழகிய ஒருவனை எவ்வளவு தூரத்திற்கு நம்புவது என்று யோசிக்கிறாயா?” என்று குரல் கரகரத்தபோதும், தனது கம்பீரம் குறையாமல் கேட்டவனுக்கு பதில் சொல்ல தெரியாமல் தன்னுடைய அமைதியை தொடர்ந்தாள் வதனி.
“என்னைப் பிடிக்கவில்லையா வனி?”
பதிலின்றிப் போகவே, “அப்போ அப்படித்தானா….?” இளாவின் குரல் இப்போது கம்பீரத்தை முற்றிலுமாக இழந்து தவித்தது.
அவன் மீது எவ்வளவுதான் கோபம் இருந்தபோதும், அவன் அவசரப்படுகிறான் என்பது புரிந்தாலும் அவனின் கம்பீரம் இழந்த முகத்தை பார்க்க முடியாது தவித்தாள் வதனி.
“இல்..லை. அப்ப..டி இல்லை….” வார்த்தைகளின்றித் திக்கினாள்.
என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தபோதும் அதனை நம்பாது அவளையே பார்த்தவனின்மேல், கோபம் கொஞ்சமாய் எட்டிப் பார்த்தது அவளுக்கு.
“இப்படி திடீர் என்று நீங்கள் கேட்டால் நான் என்ன சொல்ல? அங்கே என்னடா என்றால் அந்த அநியாயம் செய்தீர்கள். இங்கு என்னடா என்றால் சடாரென நெற்றியில் பொட்டை வைத்துவிட்டீர்கள். என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்னை பற்றி. ஒழுக்கம் இல்லாதவள் என்றா? அல்லது தரமற்றவள் என்றா….?”
அவளால் தாங்கவே முடியவில்லை. சடாரென்று ஒருவன் தன்னிடம் அத்துமீறுகிறான் என்றால், அதற்கு அவனைத் தூண்டும் விதமாக தான் நடந்துகொண்டோமா என்று உள்ளுக்குள் தவித்துக்கொண்டிருந்தாள்.
“என்ன பேச்சுப் பேசுகிறாய் வனி. நான் அப்படி நினைப்பேனா. என் மனதில் உனக்கான இடம் தெரியாமல் உளறாதே! அதிர்ச்சியில் இருக்கிறாய் என்பதால் இந்த முறை விடுகிறேன். இனிமேல் தயவுசெய்து இப்படி தரக்குறைவாய் பேசி எனக்கு கோபத்தை உண்டாக்காதே……” என்றான் அவன் கண்டிப்பான குரலில்.
“நன்றாக இருக்கிறது உங்கள் பேச்சு. கோபம் வரவேண்டியது எனக்கு. செய்வதை எல்லாம் செய்துவிட்டு பிடித்திருக்கிறதா என்கிற கேள்வி வேறு….”
அவளின் படபடப்பு அவனிடம் சிறு புன்னகையை தோற்றுவிக்கவும் அழகாக புன்னகைத்தபடி,
“சரிதான்! எனக்கென்னவோ நெடுநாள் பழகிய ஒரு உணர்வு. உனக்கும் அப்படி இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா…” என்றான் ஏமாற்றத்தை மறைக்கும் குரலில்.
அவளுக்கும் அவனின் நிலை புரிந்தபோதும் பதில் சொல்ல முயலவில்லை. நிறைய யோசிக்க வேண்டும் என்று தோன்றியது.
என்ன யோசித்தாலும் தன்னால் அவனிடம் மறுப்புச் சொல்ல முடியாது என்றும் புரிந்தது. அவன் எதை நினைத்து பொட்டினை இட்டானோ தெரியாது, ஆனால் வதனிக்கு எதுவோ நிச்சயமானதைப் போன்ற எண்ணம் மனதிலே உண்டானது.
“நா…ன் கிளம்புகிறேன். அம்மா தேடுவார்..” என்றவள் எழ முயன்றபோது தான் புரிந்துகொண்டாள், தன் கை அவனிடம் சிக்கிக் கிடப்பதை.
சிறு வெட்கத்துடன் கையை அவள் உருவ முயலவும், அவளின் முகத்தையே ஏக்கமாகப் பார்த்தவன் தன் கைக்குள் அடங்கியிருந்த அவளின் கையை அழுத்தினான்.
இளாவின் அழுத்தலில் கண்டியிருந்த கை வலிக்கவே, “ஸ்..ஸ்” என்றாள் வதனி தன்னை மறந்து.
அவளின் அந்தச் செய்கையில் பதறியவன், “என்ன நடந்தது வனி? எங்காவது விழுந்தாயா? கையில் நோகிறதா?” என்று கேள்விகளை தொடுத்தபடி, அவளின் கையினை மிக மிக மென்மையாக விரித்து பார்த்தான்.
கண்டியிருந்த கையை பார்த்துப் பதறி, “என்ன நடந்தது என்று கேட்கிறேனில்லையா. சொல்!?” என்றான் பதட்டமும் அதட்டலும் கலந்த குரலில்.
கன்றிய முகத்துடன் தலையைக் குனிந்துகொண்டாள் வதனி.
அவளின் செயலில் குழம்பி, “என்ன நடந்தது வனிம்மா. சொல்லுடா?” என்றான் இதமாக.
“அது…ஒன்றுமில்லை…”
“எது ஒன்றுமில்லை.. இதுவா?” என்றான் இளா அவளின் கையை அவளுக்கே காட்டி.
“சொல்லப்போகிறாயா இல்லையா வனி?” இளாவின் குரல் சற்று இரைந்தது.
அவன் விடப்போவதில்லை என்பதை உணர்ந்து, “அடித்ததில் கை கண்டிவிட்டது.” என்றாள் மொட்டையாக.
என்ன சொல்கிறாள் என்பதாக புருவங்களை சுருக்கி யோசித்தவனுக்கு அவள் சொன்னது புரிந்ததும் வாய் விட்டுச் சிரித்தான்.
மறுபடியும் திகைப்பாக இருந்தது வதனிக்கு. அவனை கை கன்றிப்போகும் அளவுக்கு அறைந்திருக்கிறாள். அவனோ அதை நினைத்து கோபம் கொள்ளாமல் சிரிக்கிறான்.


