வீட்டிற்குள் நுழைந்த வதனிக்கோ மந்திரித்துவிட்டது போலிருந்தது. இன்று என்னவெல்லாம் நடந்துவிட்டது என்று யோசித்தவளுக்கு, இல்லையே மதியம் வரை எப்போதும் போல சந்தோசமாகத்தானே இருந்தேன். மூன்று மணிக்கு பிறகுதானே வாணிக்கு போனோம். இந்த நான்கு மணித்தியாலங்களில் தன்னுடைய மனதில் எத்தனை வகையான உணர்வுகள் வந்து போய்விட்டது என்று நினைத்தவளுக்கு அத்தனையுமே அந்நியமாகத் தோன்றியது.
மகிழ்ச்சி, சங்கடம், திகைப்பு, கோபம், ஆச்சரியம், அழுகை இவை போதாது என்று ஏதோ ஒருவிதமான மயக்கம் இப்படி எத்தனை உணர்வுகளை இந்த கொஞ்ச நேரத்திற்குள் அனுபவித்துவிட்டோம்!
ஆனாலும் அவனின் பார்வைகள், அவை சொல்லிய சேதிகள் அவனின் தொடுகைகளின்போது உண்டான வேதியல் மாற்றங்கள் எல்லாம் பிடித்துதான் இருந்தது.
பிடித்திருந்தபோதும் மனதில் எதோ ஒருவிதமான பதட்டமும் இருந்தது. அவளின் மென்மையான பெண் மனதிற்குள் திடீர் என்று எதுவோ நுழைந்ததைப் போன்ற ஒரு உணர்வு. அந்த உணர்வு பிடித்தும் இருந்தது. இது வேண்டுமா என்கிற பயமும் இருந்தது.
“வனிம்மா. வந்துவிட்டாயா. இன்னும் காணவில்லையே என்று யோசித்தபடி இருந்தேன்….” என்ற தாயாரின் குரலே அவளை இந்த உலகுக்கு இழுத்து வந்தது.
“கோவிலில் ஒரு ப்ரெண்டை பார்தேன்மா. கதைத்துக்கொண்டிருந்ததில் நேரத்தைக் கவனிக்கவில்லை. பயந்து விட்டீர்களாம்மா..” என்றாள் வருத்தம் தோய்ந்த குரலில்.
“இல்லை கண்ணம்மா. வழமையான நேரம் தாண்டிவிட்டதே என்று கொஞ்சம் யோசித்தேன். நீ உடையை மாற்றிவிட்டு வா.” என்றவருக்கு பொய் சொல்கிறோமோ என்று மனதில் தைத்த போதும், எனக்குத் தெரிந்தவர் என்பது பொய் இல்லையே என்று மனதை தேற்றிக்கொண்டாள்.
உடையை மாற்றிவிட்டு வந்து, தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு இருந்த தாயின் அருகில் அமர்ந்துகொண்டாள்.
தொலைக்காட்சியை பார்க்க அமர்ந்தவளுக்கு அதிலும் அவன் முகமே வந்து அது தொல்லைக்காட்சியாக மாறிப்போனது.
‘கண்களால் காதலை சொல்லும் கலையை எங்கு கற்றான். பல பெண்களிடம் இப்படி கண்களினால் பேசிப்பேசியே வந்த அனுபவமோ…’
‘சே சே,அவன் அப்படி கிடையாது. அன்று பிரியாவிடை தினத்தின்போதும் அவன் எந்தப் பெண்களையும் பார்க்கவில்லையே….’
அவன் யாரையும் பார்க்கவில்லை என்பது எப்படி எனக்கு தெரிந்தது… அப்படி என்றால் நான் அவனையே பார்த்திருந்தேனா என்று தோன்றியவுடனே பதறியடித்து, “இல்லை…இல்லை…” என்றாள்.
“என்னடா கண்ணா இல்லை?” என்று தாயார் கேட்கவும்தான் தான் உளறியது புரிந்தது.
சற்றே முழித்து, “அது அம்..மா ஒரு கேள்விக்கு…. பிழையாக…. பதில்…” என்று இழுத்தவளை பாசமாக நோக்கிய கலைமகள்,
“அதற்கு என்னடா? திங்கள் போய் மறுபடியும் அவர்களுக்கு சரியானதை சொல்லிக்கொடு. இப்போது அதை மறந்துவிட்டு இந்த நிகழ்ச்சியை பார். உனக்கு பிடித்து நீ பார்க்க ஆரம்பித்துதானே எனக்கும் பிடித்தது…” என்றவரின் இடையை பாசத்துடன் தன் கைகளினால் வளைத்தவள் தன் தாயின் மடியில் தலை சாய்த்தாள்.
தன் பெற்றவர்களை நினைத்து அவளின் மனம் பேரானந்தம் கொண்டது.
இருக்காதா பின்னே, அவளுக்குப் பிடித்த நிகழ்ச்சியை தனக்குப் பிடித்ததாக மாற்றிக்கொள்ளும் அம்மா. அவளுக்கு பிடித்த உணவுகளையே தனக்கு பிடித்ததாக மாற்றி மனைவியிடம் சமைக்கச் சொல்லும் அப்பா. இப்படி அவர்களின் அன்றாட தேவைகள் கூட அவளை மையமாக வைத்தே இருக்கும் பெற்றவர்களை நினைத்தால் பெருமைதானே தோன்றும்.
அந்த வீட்டில் இருக்கும் பொருட்கள் முதல் பெற்றவர்கள் அணியும் ஆடைகள் வரை அவளுக்கு பிடித்ததுதான்.
தாய்மடி கொடுத்த சுகமா அல்லது தாயவளின் கைகள் தலையை தடவிக்கொடுத்ததில் கிடைத்த இதமா.. அல்லது இரண்டும் சேர்ந்தோ மனதால் களைத்திருந்த வதனியை விழிசாய வைத்தது.
பதினெட்டு வயதான போதும்கூட இன்னும் சிறு பிள்ளையாக தன் மடி தேடும் மகளை கண்வெட்டாது பார்த்து ரசித்தார் கலைமகள்.
மோட்டார் சைக்கிளின் ஓசை வீட்டு வாசலில் கேட்கவும், கணவர் வருவதை உணர்ந்து வாசலை நோக்கி பார்வையை திருப்பிய கலைமகள், அவர் பூனை நடை நடந்து வருவதை பார்த்தவுடன் சிரிப்பை அடக்க முடியாமல் வாயை கைகளினால் பொத்தியபடி ஓசையின்றிச் சிரித்தார்.
அவரின் வருகையை அவரின் வாகனத்தின் சத்தம் உணர்த்திவிடுவதால், கலைமகள் எப்போதும் வாசலுக்கு வந்து கணவரை மலர்ந்த முகமாய் வரவேற்பார். காலுக்கு முடியாத போதுகூட வாசலில் கதிரையை போட்டு கணவருக்காக காத்திருப்பார்.
இன்று மனைவியை வாசலில் காணவில்லை என்றதுமே சங்கரனுக்கு புரிந்துவிட்டது, தங்களின் செல்லக்கண்ணம்மா தாய்மடி சாய்ந்துவிட்டாள் என்று.
மகளின் துயில் கலைந்துவிடக்கூடாது என்று மெதுவாக வந்தவருக்கு, மனைவியின் அந்த அழகிய கோலம் மனதை அள்ளவும், நேசத்தோடு மனைவியை பார்த்த சங்கரனின் கண்கள் பொய்யாக முறைத்தது. மனைவியின் மடியில் அழகிய பூங்காவாய் உறங்கும் மகளை கண்டவரின் பார்வை இப்போது பாசத்தை பறைசாற்றியது.
அந்த அழகிய தம்பதியினரின் பார்வைகள் ஒருங்கே மகளை தடவிக்கொடுத்து பின் தங்களுக்குள் இணைந்தபோது, தங்கள் மகள் அவள் என்கிற பெருமிதம் மட்டுமே உறவாடியது அவர்களின் கண்களில்.
விடை தெரிந்தபோதும் சாப்பிட்டு விட்டாளா என்று சைகையில் கேட்ட கணவரைப் பொய்யாக முறைப்பது இப்போது கலைமகளின் முறையாகிப்போனது.


