‘உங்களை விட்டு உங்கள் செல்ல மகள் எப்போது இரவு உணவை உண்டிருக்கிறாள்…’ என்கிற கேள்வியை மனையாளின் மை விழிகளில் கண்டவரின் கண்கள் இப்போது பெருமையை பூசிக்கொண்டது.
உடை மாற்றி வருகிறேன் என்று சைகையில் கூறிச்சென்ற கணவர் வரும்வரை மகளின் தலையை கோதும் பணியை தொடர்ந்தார் கலைமகள். கணவர் வந்தவுடன், மகள் தூங்கும் மடியாக கணவரின் மடியை மாற்றிவிட்டு மிக மெதுவாக எழுந்து இரவு உணவினை கணவரின் முன் கொண்டுவந்து வைத்தார்.
உணவு வந்ததும், “வனிம்மா.. எழுந்திரடா. சாப்பிட்டுவிட்டு தூங்குவாயாம்.” என்று மகளை மென்மையாகத் தட்டி எழுப்பினார் சங்கரன்.
“போங்கப்பா. எனக்கு நித்திரை வருகிறது…” என்று சிணுங்கியவளை,
“எழுந்திரு வனி. சாப்பிட்ட பிறகு உறங்கலாம்…” என்று சிறிதே கண்டிப்பை கலந்த குரலில் அதட்டினார் கலைமகள்.
தாயாரின் அதட்டலில் எழுந்து அமர்ந்தவள் தகப்பனுடன் ஒட்டிக்கொண்டாள்.
“இந்தா கண்ணா…” என்றபடி தந்தை ஊட்டவும் வாங்கி உண்டவள்,
“அப்பா நீங்கள் தீத்துவதால் அம்மா சமைத்த உணவுகூட ருசியாக இருக்கிறது.” என்றாள் தாயார் அதட்டியதால் உண்டான கோபத்தைக் காட்டும் முகமாக.
“ஆமாடா செல்லம். உன் அம்மாவுக்கு சமைக்கத் தெரியாது என்று நமக்கு தெரியும்தானே…” என்றவர் மனைவியிடம் அவசர மன்னிப்பு ஒன்றை கண்கள் வழியாக அஞ்சல் அனுப்பினார்.
“சாப்பிடும் போது கதைக்ககூடாது என்று எத்தனை தடவை சொல்வது உங்கள் இருவருக்கும்.” என்கிற அடுத்த அதட்டல் அவர்கள் இருவரையும் சத்தமின்றி இரவு உணவை முடிக்க வைத்தது.
உணவுக்குப் பின்னான இரவு வேலைகள் அனைத்தும் முடியவும், பிறக்க முதலே மனதில் தாங்கிய மகளை நெஞ்சிலும் தாலியைக் கட்டிய தினத்திலிருந்து சகலதுமாகிப்போனவளை தோளிலும் தாங்கியபடி அந்த வீட்டின் தலைவர் தலை சாய்த்தார் கட்டிலில்.
வதனிக்கு வார இறுதி மின்னலாக பறந்தது என்றால் இளாவிற்கு கொடுமை நிறைந்த இரு நெடிய நாட்களாக நகர்ந்தது.
ஒரு வழியாக திங்கள் அன்று, காலை நேரத்தை வேலைத்தளத்தில் நெட்டி தள்ளினான். ஆர்வத்தில் பரபரக்க எதிர்பார்ப்பில் மனம் கிடந்து தவிக்க தன்னவளை இன்னும் சிறிது நேரத்தில் பார்த்துவிடுவோம் என்கிற ஆசை மனதில் முட்டி மோத வாணிக்கு விரைந்து வந்தவனை, வதனி வந்துவிட்டு சென்றுவிட்டாள் என்கிற பதில் பேரிடியாய் தாக்கியது.
ஆற்றாமை, கோபம், இயலாமை, தவிப்பு, கசப்பு இப்படி எதிர்மறையான அத்தனை உணர்வுகளும் சேர்ந்து வந்து அவனை தாக்கியதில் நிலை குலைந்தே போனான் இளவழகன்.
‘ஏன்? ஏன்? ஏன் இப்படி செய்கிறாள்? நான் என் காதலின் தவிப்பைச் சொன்னது போதாதா… அல்லது அதன் ஆழத்தை அவள் புரிந்துகொள்ளவில்லையா? அல்லது விளையாட்டுப்பிள்ளையாக மாறி என் காதல் கொண்ட மனதுடன் விளையாடிப் பார்க்கிறாளா?’
மூளை பனிக்கட்டிக்குள் அகப்பட்டு உறைந்துவிட்டதுபோல் செயல்பட மறுத்தது. இதயமோ ஏமாற்றத்தில் பலமடங்காக துடித்தது.
உணர்வுகளின் தாக்கத்தால் தவித்தவன் தன்னால் வகுப்பெடுக்க முடியாது என்று தோன்றவே, வாணியிடம் சொல்லி மன்னிப்பையும் கேட்டுவிட்டு வெளியே வந்தான். வதனியின் வீட்டுக்கே சென்று கேட்டுவிட்டு வந்தால் என்ன என்கிற எண்ணம் எழுந்தது.
அடங்க மறுத்த மனதிடம் நாளை வருவாள் தானே, அப்போது கேட்போம் என்று சொல்லிய போதும் எதோ ஒரு வேதனை அப்படியே ஒட்டிக்கொண்டது அவனின் இதயத்தில்.
‘ஏன் இப்படி செய்தால்.. நான் எதிர்பார்ப்பேன் என்று சொல்லி இருந்தேனே. காதல் சொன்ன மனதை உதாசீனப்படுத்தும் அளவுக்கு கொடியவளின் மீதா என் காதல் நிலைகொண்டது. இல்லையே அப்படியானவள் இல்லையே… பின் ஏன் இப்படி நடந்துகொண்டாள்…’
வீட்டுக்கு போகவும் பிடிக்கவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தவன், அவளின் வீடு இருக்கும் வீதியை நோக்கி தன் சைக்கிளை திருப்பினான்.
அங்கும் அவனின் கண்களுக்கு எட்டிய வரையில் அவளை மட்டுமல்ல யாரையுமே காணாது மனம் சோர்ந்தது.
அந்த வீதியிலேயே அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெதுவாக சைக்கிளை ஓட்டினான்.
நேரம் மாலை ஆறை தொடவும், அவளை காணவில்லையே என்கிற ஏமாற்றத்துடனும், ஆற்றாமையுடனும் வீட்டுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்து, பூந்தோட்ட சந்தியை நோக்கி சைக்கிளை மிதித்தவனின் கண்களில் வதனி தென்பட்டாள்.
முகமும் மனமும் சட்டென ஒளிர, அங்கேயே நின்றான். தன்னை மறந்து அவள்தானா என்று அவளையே பார்த்திருந்தான்.


