அடுத்தடுத்த நாட்களும் வாணியில் சந்தித்துக்கொண்டார்கள். கண்களால் காதல் மொழி பேசிக்கொண்டனர். ஆனாலும் இளா அவளுடன் ஒரு வார்த்தை கூட நேரடியாக பேசவும் இல்லை. அதற்காக முயலவும் இல்லை.
மாலையானதும் ஒருவர் பின் ஒருவராய் நித்தியின் வீட்டை அடைவதும், வழமை போல சுவாமி படத்திற்கு வதனி விளக்கு ஏற்ற அவன் அவளுக்கு பொட்டு வைக்க என்று மனதளவில் ஒருமித்த நெஞ்சங்களாக புரிதலுடன் கூடிய இணைவு அவர்களிடம் இருந்தது.
இப்படியே நாட்கள் நகர, அன்றொருநாள் நித்தியின் வீட்டில் கதைத்துக்கொண்டு இருந்தார்கள் இருவரும். இல்லை…இல்லை.வதனி கதைக்க அவன் கேட்டுக்கொண்டு இருந்தான்.
அவன் தோளில் சாய்ந்திருந்தவள், “இன்றாவது தேநீர் குடிப்போமா அத்தான்? எனக்கு குடிக்கவேண்டும் போலிருக்கிறது..” என்று கேட்டாள்.
“ஓ, நான் ரெடிடா செல்லம்…” குறும்போடு அவள் முகம் நோக்கிக் குனிந்தான் அவன்.
அவனை பிடித்துத் தள்ளியவள் ஆட்காட்டி விரலை நீட்டி,
“அத்தான், அடிதான் வாங்குவீர்கள்.” என்றாள் நாணச்சிரிப்போடு.
பின்னே, அவன் அருந்தும் தேநீரே வேறல்லவா….!
“இப்படி ஒரு சின்னப்பிள்ளைக்கு ஆசையை காட்டி மோசம் செய்யலாமா கண்ணம்மா…” அவன் கொஞ்ச,
“யார்? நீங்கள் சின்னப்பிள்ளையா? இதை நான் நம்பவேண்டுமாக்கும். எனக்கு தெரியாதா உங்களைப்பற்றி..” என்று கலகலத்து சிரித்தவள் எழுந்து சமையலைறைக்கு சென்றாள்.
அவளோடு அவனும் சென்று சமையல் கட்டில் சாய்ந்தபடி, அவள் தேநீர் தயாரிக்கும் அழகை ரசித்தபடி நின்றான்.
தேநீர் கப்புக்களில் ஒன்றை அவனிடம் நீட்டி விட்டு, தானும் ஒன்றை எடுத்துக்கொண்டாள் வதனி.
ஒரு மிடறு அருந்தியவன், “என் வீட்டம்மாக்கு தேநீராவது நன்றாக போட தெரிகிறதே!” என்றான் கேலியாக.
அவனின் கேலியில் சிரித்தபோதும், “சொல்லுங்கள் அத்தான். என்ன யோசிக்கிறீர்கள்?” என்றாள் இதமாய்.
இளாவின் முகம் பிரகாசமானது. ஆனாலும் அதை மறைக்க முயன்றபடி, “என்ன சொல்ல? என்ன கேட்கிறாய்?” என்றான் எதுவும் தெரியாதவன் போல்.
“நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்களோ அதைச் சொல்லுங்கள் அத்தான்.” என்றாள் அவன் மனதில் குடியிருப்பவள்.
தேநீர் அருந்தி முடித்த கப்பினை சிங்கிள் வைத்துவிட்டு அவளருகில் வந்து அவளின் கைகளை தன் கைகளால் பிடித்தபடி, “நான் எதுவோ சொல்ல நினைக்கிறேன் என்பதை எப்படிப் புரிந்துகொண்டாய்…?” என்றான் ஆச்சரியமான குரலில்.
“அத்தான், நான் இங்கே இருக்கிறேனாக்கும்.” அவனின் நெஞ்சை தொட்டுக் காட்டியவாறே சொன்னாள் வதனி.
பிடித்த அவளின் இரண்டு கைகளையும் தூக்கி அதிலே இதமாய் உதடு பதித்து, “என் மனதுக்கு பிடித்தவள் என் மனமறிந்து நடப்பது மிகவும் பெருமையாக இருக்குடா!” என்றான் பெருமை பொங்க.
“சரி அத்தான். ஆறுதலாக என்னை நினைத்து பெருமை பட்டுக்கொள்ளுங்கள். இப்போது விசயத்துக்கு வருகிறீர்களா. சும்மா வள வளக்காதீர்கள்!”
கேலியாக சொன்னபோதும் தன்னுடைய மனதை மாற்றவே என்பதை அறிந்தவன்,
“உன்னுடைய இந்த வாயை என்ன செய்யலாம்?” என்றான் அவளின் உதடுகளை கண்களால் விழுங்கியபடி.
அவனின் எண்ணம் புரிய சிவந்த முகத்தை அவனுக்கு காட்டாது திருப்பியபடி அவனை விட்டு விலகி, “சொல்ல நினைப்பதை சொல்லுங்கள் அத்தான்!” என்றாள் சற்றே அழுத்தமாக.
விலகியவளை தடுத்து அவளின் தோளைச் சுற்றித் தன் கைகளைப்போட்டு அவளை வாகாக அணைத்தவன், விறாந்தைக்கு வந்து இருவர் அமரும் சோபாவில் அவளுடன் அமர்ந்துகொண்டான்.
அமர்ந்துதான் தாமதம் அவனின் நெஞ்சத்தை தனக்கு மஞ்சமாக்கிகொண்டாள் அவனின் மனதுக்கு இனியவள்.
“நீ தூங்கினால் நான் யாரிடம் சொல்ல?”
“நான் எங்கே தூங்கினேன். சாய்ந்து இருக்கிறேன்.” அவனின் மார்பில் சாய்ந்திருந்தவள் சற்றே தலையை உயர்த்தி அவனை பார்த்து சொன்னாள்.
உயர்ந்த அவளின் பிறை நெற்றியில் உதடுகளை ஒற்றி, “கண்ணம்மா, உனக்கு சொல்லி இருக்கிறேன். எனக்கு அப்பா கிடையாது..” என்று ஆரம்பித்தவன் தன்னுடைய குடும்ப நிலை, தங்கைக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பது முதல் தாயாருக்கு அவன் என்னென்ன செய்ய நினைக்கிறான் என்பது வரை அனைத்தையும் சொன்னான்.
கேட்டிருந்தவளுக்கோ மனம் பெருமிதத்தில் விம்மியது. ‘என்னுடையவன் பொறுப்பு மிக்கவன்’ என்கிற கர்வம் பார்வையில் மின்ன தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தவள், அவனின் தாடையில் முதன் முதலாய் இதழ் பதித்தாள்.
நிகழ்ந்த அதிசயத்தில் மெய் மறந்துபோனான் இளா. அவன் செய்யவேண்டிய கடமைக்கு கிடைத்த பரிசல்லவா அது!
தன் கனவுகளை அவளிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்த நொடி முதல் அவனின் மனதில் பாரமொன்று ஏறி இருந்தது. தன்னை சுயநலக்காரன் என்று நினைத்துவிடுவாளோ என்று கலங்கித்தான் இருந்தான்.
‘உன்னுடையவள் அப்படியானவள் அல்லடா!’ என்று அவனின் மண்டையில் ஓங்கிக் குட்டியது அவள் கொடுத்த இதழ் ஒற்றுதல்.
தன்னுடைய மகிழ்ச்சியை இறுகிய அணைப்பில் வெளிப்படுத்தினான் இளா.
“உனக்கும் இப்போதுதான் பதினெட்டு வயது. எனக்கும் என் கடமைகள் முடிக்க சிறிது காலம் எடுக்கும். எனவே நம் திருமணம் நடக்க எப்படியும் மூன்று அல்லது நான்கு வருடங்கள் செல்லலாம் வது. உனக்கு சம்மதம் தானே!” என்று கேட்டவனுக்கு பதில் சொல்லாது அவனின் மார்புக்குள் மண்டியிட்டாள் வதனி.
“என்னடா.. பதில் சொல்லேன்.” என்றபடி அவளின் முகத்தை நிமிர்த்தியவனுக்கு வெட்கத்தில் விகசித்த அவளின் முகம் அப்படியே மனதை அள்ளியது.
“என்றாவது ஒரு நாள் நடக்கப்போகும் நம் திருமணத்திற்கு இன்றே வெட்கப்பட ஆரம்பித்துவிட்டாயா..” என்றான் ரகசிய குரலில்.
கண்களில் திருமணக் கனவு மின்ன அவனை விழி விரித்து பார்த்தவள், “எத்தனை வருடமானாலும் சரிதான், நான் காத்திருப்பேன் உங்களுக்காக.” என்றாள் உறுதியான குரலில்.
மனது நிறைந்தவன் அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.
“அத்தான், உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்.” அவள் தயக்கத்தோடு சொல்ல,
“என்னிடம் எதைச் சொல்வதற்கும் உனக்கு எதற்கு தயக்கம்? எதுவாக இருந்தாலும் சொல்லு” என்றான் அவன்.
“இல்லை.. நாம்… அது… நீங்க…. கொஞ்சம்… ச்சு….. அத்தான் உங்களுக்கு புரியவில்லையா?”
வாய்விட்டுச் சிரித்தான் இளா.
“இப்போது நீ என்ன சொன்னாய் என்று நான் புரிந்துகொள்வது.. ம்?” என்றவன் அவளின் முகசிவப்பை வைத்தே அவள் சொல்ல வருவதை ஊகித்தான்.
“கண்ணம்மா….. இங்கே பார். நான் உன்னவன். என்னால் உன்னை புரிந்துகொள்ள முடியும் செல்லம். உன் மீது கொண்ட காதல் செய்த மாயம் தான் உன்னை முத்தமிடுவதும் இப்படி அணைத்துக்கொள்வதும். அதற்காக எல்லை மீற மாட்டேன்.” என்றான் மிக மிக மென்மையான குரலில்.
அவளின் மலர்ந்த விழிகள் நன்றியைச் சொல்லவே, “ஆனால் நானும் பாவம். என்னையும் நீ கொஞ்சம் அப்பப்போ கவனிக்க வேண்டும்.” குறும்புடன் வந்தது அவன் குரல்.
“கவனிக்கிறேன். நன்றாக கவனிக்கிறேன். உங்கள் சைக்கிளை கவனித்ததைப் போல் மிக நன்றாக கவனிக்கிறேன்.” என்றாள் அவளும் அவன் பாணியிலேயே.
இப்படியே அவனின் கதகதப்பான கைவளையத்துக்குள் புகுந்தபடி, மயிர்கற்றைகள் நிறைந்த அவனின் மார்பினில் தலை சாய்த்தபடி, எதை எதையோ பேசிச் சிரித்தபடி தன்னை மறந்திருந்தாள் வதனி.
காதடியில் சுருண்டிருக்கும் முடி முதல், அவளின் அழகிய இதழ்கள் பிரியும்போதெல்லாம் எட்டிப் பார்க்கும் வெண்ணிற முத்தாய் மின்னும் பற்கள் வரை அவளின் அழகை மிச்சம் விடாது பருகியபடி, அவள் சொல்வதை எல்லாம் தலையசைத்து கேட்டிருந்தான் இளா.
இருவருக்குமே இப்படியே இருந்துவிட மாட்டோமா என்கிற ஏக்கம் மனதில் நிறைந்திருந்தது.
வெள்ளிகிழமையில் சித்தி விநாயகர் கோவிலிலும் மற்றைய நாட்கள் நித்தி வீட்டிலும் என்று அவர்களின் சந்திப்புக்கள் எந்தவிதமான தடைகளும் இன்றி நன்றாகவே நடந்தேறியது.


