நித்தி வீட்டில் தினமும் பார்த்துகொண்ட போதும் எல்லை மீற இளாவும் நினைத்ததில்லை வதனி இடம் கொடுத்ததும் இல்லை.
இப்படியே நாட்கள் நகர, அன்று வேலை முடிந்து வீடு வந்தவனை தாயின் ஆத்திரம்மிகு முகம் வரவேற்றது.
தங்கையின் அழுது சிவந்த முகமும் பதட்டத்தை கொடுக்க,
“என்னம்மா?என்ன நடந்தது. உங்கள் இருவர் முகமும் சரியில்லையே?” என்று கேட்டான்.
“உன் தங்கைக்கு காதல் வந்துவிட்டதாம் இளா. அது மட்டுமல்ல. அவளுக்கு திருமணம் செய்துகொள்ளும் ஆசையும் வந்துவிட்டதாம்….” என்றார் கோபமாக
அவரளவு பதட்டம் அவனுக்கு வரவில்லை. காரணம் காதலில் முத்துகுளிப்பவனுக்கு தங்கையின் காதலை எதிர்க்கும் எண்ணமில்லை.
ஆனாலும் நல்லவனைத்தான் தங்கை தேர்ந்து எடுத்தாளா என்று அறிந்துகொள்ள, “யாரவன்?” என்றான் அதட்டலாக.
தமையனின் கோபத்தில் மாதவியின் மேனி நடுங்கியது. தலையைக் குனிந்துகொண்டு நின்றவளின் கண்களில் கண்ணீர்.
“சொல்லேன். இப்போது எதற்கு ஊமையாக நிற்கிறாய்…” என்றார் வைதேகி ஆத்திரம் பொங்க.
தாயின் முன்னால் எதையும் முழுதாக அறிந்துகொள்ள முடியாது என்று நினைத்தவனாக,
“அம்மா. நான் என்னவென்று விசாரிக்கிறேன். வேலை எதுவும் இருந்தால் நீங்கள் அதைப் பாருங்கள்.” என்று தாயாரை உள்ளே அனுப்பியவன் அழுதுகொண்டு நின்ற தங்கையை ஒரு பார்வை பார்த்துவிட்டு, எதுவும் பேசாது முகம் கழுவ கிணற்றடிக்கு சென்றான்.
எதைச் செய்ய கிணற்றடிக்கு வந்தானோ அதை மறந்து கிணற்றுக் குந்திலேயே அமர்ந்தவனுக்கு யோசனை பலமாக இருந்தது.
தங்கை காதலிப்பவன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கும் அவர்களின் காதலில் ஆட்சேபனை கிடையாதுதான். அனாலும் திருமணமும் உடனே நடக்க வேண்டும் என்பது மாதிரி அல்லவா அம்மா சொல்கிறார் என்று யோசித்தவனை, “அண்ணா….!” என்று மாதவியின் குரல் கலைத்தது.
என்ன என்பதாய் பார்த்தவனிடம், “நா….ன்… அண்……ணா…. அது….”
“சொல்ல நினைப்பதை தடுமாற்றம் இல்லாமல் சொல்!” என்ற இளாவின் அதட்டலில் அவள் மேனி நடுங்கியது.
“என்னை மன்னியுங்கள் அண்ணா. எனக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது. அவருக்கும் என்னை மிகவும் பிடிக்கும். இப்போது அவருக்கு அவர் வீட்டில் திருமணம் பேசுகிறார்களாம். அவர் உங்களிடம் இதுபற்றி பேசுவதாகச் சொன்னார். நான்தான் என்னுடைய அண்ணாவிடம் நானே சொல்லவேண்டும் என்று சொன்னேன்.” என்றாள் திக்கித்திக்கி.
அவனே இளாவிடம் பேசுவதாக சொன்னதிலிருந்து அவனும் நல்லவனாக இருக்கவேண்டும் என்று நினைத்த இளாவுக்கு, தங்கை தானே தன்னிடம் சொல்ல நினைத்ததை நினைத்து பெருமையாக இருந்தது.
காதல் சொல்லிக்கொண்டா வருகிறது. அவள் தன்னிடம் சொல்லிவிட்டு காதல் கொள்ள என்று அவனின் காதல் கொண்ட மனம், தங்கைக்காக பரிந்து வந்தது.
அவளை ஒரு கையால் அணைத்து தன்னருகில் அமர்த்தி அவளின் கண்ணீரை துடைத்துவிட்டான்.
“அழாதே மாதவி. அழுவதால் எந்தப் பிரச்சினையும் தீரப்போவது இல்லை. அவனின் பெயரைக் கூட நீ இன்னும் சொல்லவில்லையே?”
கோபத்திலோ அவசரத்திலோ பேசும் விஷயம் அல்ல இது என்பது புரிந்ததில் நிதானமாக அவளிடம் பேசினான்.
“சாரி அண்ணா. அவர் பெயர்… நித்திலன்” என்றாள் சற்றே வெட்கம் எட்டிய குரலில்.
அவனின் பெயரைச் சொல்லும்போதே அவளில் தோன்றும் பாவங்களை பார்த்தவனுக்கு, தங்கைக்கு அவனை எவ்வளவு பிடித்திருக்கிறது என்பது புரிந்தது.
ஆனாலும் அதைக் காட்டாது, “சரிம்மா. அவனை என்னை வந்து பார்க்கச் சொல். இல்லை வேண்டாம்… எங்கு அவனைப் பார்க்கலாம் என்று சொல்….” என்று அவளிடம் விவரங்களை சேகரித்தான்.
“திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம்…” என்று கேட்டவனிடம்,
“அவரை வெளிநாட்டுக்கு அவரின் வீட்டில் அனுப்பப் போகிறார்களாம். அதற்க்கு முன் திருமணத்தை நடத்திவிட நினைத்து பெண் பார்க்கிறார்களாம்.” என்றாள் மெல்லிய குரலில்.
“ஒ….” என்று அவள் சொன்னவற்றை உள்வாங்கிக் கொண்டவனுக்கோ மலைப்பாய் இருந்தது.
அவளிற்கு பெண்ணிற்கு எதைச் சொல்லி புரிய வைப்பான்? அல்லது என்ன செய்து திருமணத்தை நடத்துவான்?
மாதவியோ கண்களில் ஏக்கத்தோடு அவனையே பாத்திருந்தாள்.
அவள் தன் பதிலுக்காக காத்திருப்பது புரிய, “சரிம்மா.. முதலில் நான் அவனை சந்தித்து பேசுகிறேன். பிறகு என்ன செய்வது என்று முடிவு செய்யலாம்.” என்றான் பட்டும் படாமல்.
எழுந்தவள் நகராமல் நிற்கவே “என்ன?” என்று கேட்டான்.
“அண்ணா, சம்மதிப்பீர்கள் தானே?” என்றாள் எதிர்பார்ப்பே உருவான முகத்துடன்.
“நல்லதே நடக்கும் மாதி. நீ எந்த விதமான யோசனையும் இல்லாமல் சந்தோசமாக இரு. உன்னுடைய மகிழ்ச்சிக்காக அண்ணா எதுவும் செய்வேன். புரிந்ததா?” என்று அவன் சொன்னபோது, தமையனின் நெஞ்சில் சாய்ந்து கதறியே விட்டாள் மாதவி.
“எனக்கு தெரியும் அண்ணா. அந்த நம்பிக்கையில் தான் உங்களிடம் எல்லாவற்றையும் சொன்னேன். நானும் என் ஆசைகளை யாரிடம் சொல்வது. என்னுடைய அண்ணா இதை நிறைவேற்றித் தருவார் என்கிற நம்பிக்கையில் தான் அவர் காதலைச் சொன்னபோது நானும் சம்மதம் சொன்னேன். ஆனாலும் உங்கள் மனதை வருத்தி இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணா. அம்மா இன்று முழுக்க என்னைத் திட்டிக்கொண்டே இருக்கிறார்…”என்றாள் அழுகையின் ஊடே.
மனம் பிசைந்தபோதும் அவளின் கண்ணீரை துடைத்து அழுகையை நிறுத்தும்படி அதட்டினான்.
தாயின் மனநிலையும் புரிந்தவனாக, “அம்மாவையும் நீ புரிந்துகொள்ள வேண்டும் மாதி. அவர்கள் மிகவும் பாவம். நம்மை விட்டால் அவருக்கு யார் இருக்கிறார்கள், சொல்…?” என்றவனிடம் புரிகிறது என்பதாக தலையை அசைத்தாள் மாதவி.
“சரிம்மா. நீ உள்ளே போ. நான் முகம் கழுவிவிட்டு வருகிறேன்.” என்றவனின் மனதில் எப்படி இதை முடிக்கப் போகிறோம் என்கிற யோசனையே முழுதாக நின்றது.
ஆனாலும் நித்திலன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கே தங்கையைக் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று உறுதி கொண்டான்.
உறுதி கொண்டால் மட்டும் போதுமா..? இருப்பதோ ஒரே ஒரு தங்கை. அவளின் திருமணத்தை சீரும் சிறப்புமாக செய்து வைக்காவிட்டால் அண்ணன் என்று நான் இருந்து என்ன பிரயோசனம். அதற்கு சேமித்திருக்கும் பணம் போதுமா? என்ன செய்வது??? இப்படியே தங்கையின் திருமணத்தைப் பற்றி யோசித்தபடி இருந்தவனின் தோளில் கரம் ஒன்று பதியவே சுய நினைவுக்கு வந்தான் இளவழகன்.
“என்னய்யா யோசிக்கிறாய்….” என்று கேட்ட தாயாரிடம்,
“வேறு எதை நான் யோசிக்க அம்மா. எல்லாம் மாதியின் திருமணத்தைப் பற்றித்தான்…” என்றவன் தாய் எதுவோ சொல்ல வரவும் சொல்லவிடாது தானே முந்திக்கொண்டு,
“எதுவும் சொல்லாதீர்கள் அம்மா. காதலிப்பது தவறில்லை. அவன் நல்லவானாக இருந்தால் மாதியை அவனுக்கே கட்டி கொடுத்துவிடலாம்.”
“எனக்கு புரிகிறது தம்பி. ஆனாலும் நம் மாதியா என்று மனம் கிடந்து அடிக்கிறது. குழந்தை போல ஒவ்வொரு நாளும் உன் மடியில் தூங்குவாளே. அவள் இவ்வளவு பெரிய மனுஷியானதை நான் கவனிக்கவேயில்லையே.” என்கிறார் ஆற்றாமையுடன்.
“அம்மா….” என்று அவரின் கையை ஆதரவாக பற்றியவன்,
“நம் குழந்தைகள் எப்போதும் நமக்கு குழந்தைகள் தானேம்மா. அதனால்தான் அவர்கள் வளர்ந்தாலும் நமக்கு மட்டும் சிறு பிள்ளைகளாகவே தெரிகின்றனர்.” என்றான் இதமாக.
“என்னவோ போப்பா. எனக்கு மனது பாரமாகவே இருக்கிறது.” என்றார் கண்கள் கலங்க.
“அம்மா. தயவு செய்து நீங்கள் கலங்க கூடாது. அவள் எந்தத் தவறும் செய்யவில்லை. எனக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறது என்று நம்மிடம் சொல்லி இருக்கிறாள். அது தவறு இல்லையேம்மா. வாழப்போகிறவள் அவள்தானே. அவளுக்கு பிடித்தவனோடு தானே மகிழ்ச்சியாக அவளால் வாழ முடியும்”
அரை குறையாக சமாதானம் ஆனவர், “சரி தம்பி. மேற்கொண்டு என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார்.
நித்திலனை சந்தித்து பேபேசப்போவதாகச் சொன்னான் அவன்.
விடயத்தை ஆறப்போட விரும்பாத இளா, காந்தனிடம் இன்று வாணிநிலையத்துக்கு வரமுடியாது என்று சொல்லும்படி சொல்லிவிட்டு நித்திலனை சந்திக்கச் சென்றான்.
இருக்கும் அத்தனை கடவுள்களை எல்லாம் வேண்டியபடி மாதவியும், மனம் போல நல்ல வாழ்க்கை என் மகளுக்கு அமைய வேண்டும் என்கிற வேண்டுதளுடன் வைதேகியும் இருக்க, இருட்டிய பிறகு வந்த இளாவின் முகத்தில் எதையுமே இருவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.
தன் முகத்தையே ஆவலுடன் பார்க்கும் தங்கையின் முகம் மனதில் பட்ட போதும் எதுவும் கூறாத இளா, மாதவியை அக்கா மாதங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.


