மனதில் சிந்தனைகள் பல இருந்தபோதும் அவரிடம் சம்மதம் சொன்னவன் பணம் சம்மந்தமான மிகுதி விபரங்களை அவருடன் கதைத்துவிட்டு, தாய் தங்கையிடம் விபரங்களை பகிர்ந்துகொண்டான்.
மாதவியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தாயையும் அண்ணனையும் கட்டிக்கொண்டு தன்னுடைய மகிழ்ச்சியைக் கொண்டாடினாள்.
சில திருமண விஷயங்கள் பேச கதிரவன் வீடு சென்றான் இளவழகன்.
கதிரவனுடன் கதைத்துவிட்டு வீடு வந்தவன், “அம்மா. மாதியின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி விடலாம். இனிக் கவலை வேண்டாம்…” என்றான் உற்சாகமாக.
“சந்தோசம்தான். ஆனாலும் தம்பி…. பிறகு லண்டன் செல்லவேண்டி வருமே. உனக்குத்தான் வெளிநாடு போகப் பிடிக்காதே….”
“இப்போதும்தான் பிடிக்கவில்லை.. ஆனாலும் என்னுடைய விருப்பு வெறுப்புக்களை விட மாதியின் திருமணம் முக்கியம். அதற்கு தடையாக வர எதையும் அனுமதிக்க மாட்டேன்.” என்றான் திடமாக.
இரவு உணவினை முடித்துக் கட்டிலில் சாய்ந்தவனுக்கு நிம்மதியாக இருந்தது.
தங்கையின் திருமணதிற்கு ஏற்பாடு செய்துவிட்டோம் என்கிற நிறைவு மனதை அமைதிப் படுத்த, காதல் கொண்ட மனம் விழித்துக்கொண்டது.
படுத்திருந்தவன் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான். மூன்று நாட்களாய் தங்கையின் விடயம் மனதில் இருந்ததில் வதனியை மறந்தே போனான் அவன். உண்மை அதுதான்! அவன் மறந்துதான் போனான். இல்லாவிடில் காந்தன் மூலம் எப்படியும் அவளுக்கும் தகவலை தெரிவித்து இருக்கலாம் அல்லவா!
மனம் குற்ற உணர்ச்சியில் வெந்தது.
தாய் தங்கை என்று வந்துவிட்டால் அவனுக்கு மற்ற எதுவுமே அவன் நினைவில் வருவதில்லைதான். ஒரு அண்ணாவாக ஒரு மகனாக அது சிறப்பாக இருந்த போதும் ஒரு சிறு பெண்ணின் மனதில் காதலை விதைத்த காதலனாக அவன் செய்தது தவறல்லவா!
அதோடு இன்னொன்றும் உறைத்தது. தான் மறுத்தபோது வருந்திய அம்மாவின் முகத்தில் அந்த வருத்தம் இப்போது மருந்துக்கும் இல்லை. உங்கள் மகளை மணக்கமாட்டேன் என்று சொல்லியும் மாமாவிடம் சிறு மாற்றமும் இல்லை. சொல்லப்போனால் இன்னும் உற்சாகமாகவே கதைத்தார்.
ஆக, அம்மாவும் மாமாவும் அவனுக்குத் தெரியாமல் வேறு எதுவோ திட்டம் போட்டிருக்கிறார்கள்!
தன்னை நினைத்தே அவனுக்கு பயமாகப் போயிற்று! தான் வெளிநாடு சென்ற பின்னர் மாமாவும் அம்மாவும் சேர்ந்து அவர்களின்மேல் தான் வைத்திருக்கும் பாசத்தைக் காட்டி ராகவியுடனான திருமணத்துக்கு கட்டாயப்படுத்தினால் என்ன செய்வது?
அவனால் அவர்களின் பேச்சை முற்றிலுமாக மீற முடியுமா? அப்படி மீறமுடியா நிலை வந்துவிட்டால்….. அந்த நிலையில் அவனை அவர்கள் நிறுத்திவிட்டால்?
வதனியன்றி அவனால் இன்னொருத்தியை கனவில் கூட நினைக்க முடியாது. இதில் நிஜத்தில் வாழ முடியுமா… அந்த நிமிடமே அவன் இதயம் வேலை நிறுத்தம் செய்துவிடுமே!
என்ன செய்யலாம்….? என்ன செய்யலாம்…? என்று அவன் மனம் தவியாக தவித்தது.
தாய் தங்கையின் கடமைகளை நிறைவேற்றினாலும், மது அவனுக்குக் கிடைத்தால் மட்டுமே அவன் வாழ்க்கை முழுமைபெறும்! அவளோடு மட்டுமே அவன் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள முடியும்! இல்லையேல் உயிரற்ற உடலாக அல்லவா மாறிப்போவான்.
இல்லை நிச்சயமாக இல்லை! எந்தக் காரணத்திற்காகவும் என்னவளை இழக்கவோ இன்னொருவன் கைக்கு பறிகொடுக்கவோ முடியாது! அவள் எனக்குச் சொந்தமானவள்!
அதுமட்டுமல்ல, அவன் அவளுக்கு உரிமையானவன்! அவனை அவனால் கூட இன்னொருத்தியிடம் கொடுத்துவிட முடியாது
ஊருக்கு வேண்டுமானால் அவர்கள் காதலர்கள். என்றைக்கு கோவிலில் வைத்து சித்திவிநாயகர் சாட்சியாக அவளின் நெற்றியில் திலகம் இட்டேனோ அன்றே அவள் என் பாதி.
மனைவியைக் கைவிட முடியுமா? முடியாதே! ஆனால் ஊருக்கும் அம்மா மாமாக்கும் அதைச் சொல்லி புரிய வைக்கவும் முடியாது. அப்படியே சொன்னாலும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்றும் தெரியாது.
இதற்கு வழிதான் என்ன? என்று தவித்தவனின் மூலையில் மின்னல் வெட்டியது.
அவனின் பரிதவிப்பை தீர்க்கும் வழி கிடைத்துவிட்டது என்று நினைத்து மகிழ்ந்தவனுக்கு வாழ்க்கையையே ஜெயித்துவிட்ட ஒரு உணர்வு!
மாதவிக்கு நல்ல இடத்தில் சிறப்பாக திருமணம் செய்துவைக்கப் போகிறான். வதனியும் அவனுக்கே ஊரறிய சொந்தமாகப் போகிறாள். தாயையும் வெளிநாடு சென்று நல்லநிலையில் வாழவைக்கப் போகிறான். இன்னுமென்ன வேண்டும் அவனுக்கு? அவனின் ஆசைகள் அத்தனையும் நிறைவேறப் போகிறதே
மனதில் துள்ளிக் குதித்தான் இளவழகன்.
அவனது வதுக்குட்டியைப் பிரிய வேண்டுமே என்று சோர்ந்த மனதை என்றிருந்தாலும் என் செல்லம் எனக்குதான் என்று தேற்றினான். உழைத்து மாமாவின் கடனை அடைத்துவிட்டு அம்மாவின் மிகுதி வாழ்க்கைக்கும் வழி செய்த பின்னர் என் வதுவை இந்த உலகில் யாருமே வைத்திராதபடி சந்தோசமாக வாழ வைக்க வேண்டும். என் வீட்டின் மகாராணி அவள்! என் இதயத்தின் ராணி!
அவனின் கற்பனைகள் விண்ணைத் தாண்டி சிறகு விரித்தது.
ஆனால் இளா ஒன்றை மறந்துவிட்டான். ஆணும் பெண்ணும் கொள்ளும் உண்மை நேசத்திற்குப் பெயர்தான் காதல். அங்கே இருவரும் ஒருவர் எனும்போது இருவருமே கலந்து பேசித்தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும்! அதுதான் புரிதலின் தெரிதல்!
இங்கே இளா தானே ஒரு முடிவை எடுத்துவிட்டான். அதற்கு வதனி என்ன சொல்வாள் என்று யோசிக்க மறந்துவிட்டான்.
அனைத்தும் கைகூடிவிட்டது என்று துள்ளிக் குதிப்பவனுக்கு தெரியவில்லை வாழ்க்கைப் போராட்டமே இனிமேல்தான் ஆரம்பிக்கப் போகிறதென்று!


