இணையத்தில் இருந்தது மாதிரியே அறைக்குள்ளிருந்த தளபாடங்கள் இருந்தாலும் ‘நொன் ஸ்மோக்கிங் ரூம்’ என்ற அட்டையோடுள்ள அறைக்குள்ளிருந்து கப்பென்று சிகிரெட் வாடை, புளிச்ச சத்தி வாடை, தாராளமாக அடித்திருந்த நறுமணம் எல்லாம் கலந்து அவருக்கே குமட்டியது. அப்போ பெண்களும் குழந்தைகளும்?
“காசும் குடுத்து இப்பிடி இடத்தில தங்குறதா? என்ன செய்யிறது தம்பி?” வேந்தனிடம் தான் கேட்டார். அவன்தானே எல்லாம் தெரியுமென்ற கணக்கில் ஒவ்வொன்றையும் செய்கிறான்; இந்த விடுதியின் பெயர் பார்த்ததும் இதன் தரம் பற்றியும் சொல்லியிருந்தானே!
“நீங்க உங்களுக்கு இங்க அறை போடேல்லையோ?”
“இல்ல அங்கிள், பக்கத்தில அரை மணித்தியாலம் வரும்…யாழ் ட்ராவல்ஸ் ஹோட்டல் இருக்கே! நான் அங்க தங்கலாம்.” என்றவன், “கொஞ்சம் பொறுங்க, அங்க ரூம் இருக்கா எண்டு கேட்பம்.” கைபேசியை எடுத்தான்.
“அப்ப இவங்கள் காசு திருப்பித் தருவாங்களோ?” யோசனையோடு கேட்டான் மாறன்.
“அதெல்லாம் வாங்கலாம், கவலைப்படாதீங்க!” என்றவன் ரிஷப்சன் நோக்கி நடந்தபடியே யாழ் ட்ராவல்சுக்கு அழைக்க, நாதனும் அறைகளைப் பூட்டிக்கொண்டு நடந்தார்.
“அங்கிள், ரெண்டு குயின்ஸ் பெட் உள்ள ரூம்ஸ் இருக்காம்; இன்னொரு சிங்கிள் பெட் போட்டுத் தரச் சொல்லிக் கேட்கலாம், உங்களுக்கு ஓகேவா?” முன்னால் சென்ற வேந்தன் திரும்பி நாதனிடம் கேட்டான்.
நாதன் மாறனையும் இலக்கியாவையும் பார்த்தவர், “பதினோரு பேர், பாத் ரூமுக்குத் தான் பிரச்சினையாக இருக்கும்; எண்டாலும் சமாளிக்க வேண்டியதுதான்.” என்றவர், “என்ன சொல்லுறீங்க? இப்ப நமக்கு வேற வழியே இல்ல. தம்பி இல்லையோ இதுக்க தான் இருந்திருப்பம். இந்தக் கொட்டுற மழைக்குள்ள எங்க எண்டு போயிருக்க முடியும். அதுவும் உடனே ரூம் தேடி, இத்தனை பேருக்கு!” தொடர்ந்தார்.
“சமாளிக்கலாம் சித்தப்பா.” பட்டென்று சொல்லியிருந்தாள், இலக்கியா.
“ஆம்பளைகள் வேணுமெண்டா நான் தங்குற பாத்ரூம் பாவிக்கலாம் அங்கிள்.” வேந்தன்.
அதன் பிறகு அங்கு நின்று நேரம் செலவளிக்காது புறப்பட்டார்கள்.
“ரூமுக்கு எவ்வளவு எண்டு சொல்லுங்க வேந்தன்.” என்ற நாதனிடம், “இவே காசு தந்தபிறகு தரலாம் அங்கிள், ஒண்ணும் பிரச்சனை இல்ல.” என்றான் அவன்.
“இல்ல இல்ல, அதெல்லாம் எப்பிடி? முதல் இவங்கள் திருப்பித் தருவாங்கள் எண்ட நம்பிக்கை எனக்கு இல்ல; போனது போகட்டும்.” என்றுவிட்டார் அவர்.
எப்படியும் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையிருந்ததில் தொடர்ந்து அதுபற்றிக் கதைக்கவில்லை வேந்தன்; கொட்டும் மழையில் வாகனத்தை ஓட்டுவதில் கவனம் பதித்திருந்தான்.
நியூ ஜெர்ஸி செல்லும் பாதையில் விரைந்த வாகனம், அடுத்த முப்பத்தைந்தாவது நிமிடம் ‘யாழ் ட்ராவல்ஸ் ஹோட்டல்’ வந்து சேர்ந்திருந்தது.
‘ப’ வடிவில் அமைந்திருந்த மூன்று மாடிக்கட்டிடமது. வெள்ளையும் நீலமுமாக நிமிர்ந்து நின்றிருந்தது. பளீரென்று எரிந்த மின்குமிழ்கள் கொட்டும் மழையிலும் அக்கட்டிடத்தினை தெளிவாய்க் காட்டின. முன் வாயிலில் கொண்டுபோய் வாகனத்தை நிறுத்திய வேந்தனில் அதுவரையும் இல்லாதவாறு சங்கடம் கலந்த முறுவல்! தலையை அழுந்தக் கோதியவாறே, தம்மை வரவேற்க நின்றவனைப் பார்த்தான்.
அவனோ, போர்ட்டிக்கோவை விட்டு வெளியில் வந்தவன், வலது கையில் வைத்திருந்த குடையோடு சேர்த்துக் கவனம் காட்டினான். ‘நண்பர்களாக இருக்குமோ’ பார்ப்போருக்கு அப்படித்தான் தோன்றும்.
அவன் செய்கையைப் பார்த்த இவன் முகத்தில் முறுவல் விரிந்தது. தன்புறக் கதவைத் திறந்திறங்கும் போதே மின்னலாகக் கண்ணடித்தான், வேந்தன். ஒட்டிநின்ற முறுவலோடு சேர்ந்துகொண்ட கண்களிரண்டும் முன்னால் நின்றவனைச் சமாதானம் செய்யும் வகையில் கதை பேசின. அதைப் புரிந்து கொண்டாலும் மதி, அதுதான் இவர்களை வந்து வரவேற்றவன், நன்றாகவே முறைத்தான்.
“என்னடா நடக்குது இங்க?” ஓரெட்டில் தன் குடைக்குள் வந்து நின்றவன் வயிற்றில் மறுகையிலிருந்த குடையால் குத்து விட்டவன் முறைப்போடு வினவினான்.
“பச்…எல்லாரும் நல்லாவே களைச்சுப்போய் இருக்கீனம் மதி. அவையளிட ரூமைக் காட்டிப்போட்டு ஆறுதலாக் கதைப்பமே! ரெண்டு இரவுக்கு இங்கதான் இருக்கப் போறன்.” என்ற வேந்தனோ, “இதெல்லாம் அவ்வளவு நல்லா இல்ல சொல்லிப்போட்டன். உனக்கு…” என்று ஆரம்பித்தவனைப் பார்வையால் அடக்கிவிட்டான்.
“முதல் இந்தக் குடையைத் தா!” வாங்கிக்கொண்டு, “நீ இதில நில்லு, ரெண்டு குடைகளையும் குடுத்திட்டு வாறன்.” நகர்ந்தவன், அவர்களையே பார்த்திருக்கும் நாதனிடம் ஒன்றையும், பின்புறக் கதவைத் திறந்த மாறனிடம் அடுத்ததையும் கொடுத்துவிட்டு, சட்டென்று போட்டிகோவுக்குப் பாய்ந்துவிட்டான்.
“அங்கிள் இவன் மதி, யாழ் ட்ராவல்ஸ் இவேண்ட குடும்பத்திட தான்; இந்த ஹோட்டல் இவன் பொறுப்பிலதான் இருக்கு.” நாதனுக்கு அறிமுகம் செய்து வைத்தான், வேந்தன். அவன் சொல்ல சொல்ல வேந்தனை முறைத்தான் மதி. முதுகில் ஒரு அடியும் போட்டான். இருந்தபோதும், “ஹாய் அங்கிள், வெல்கம் டு யாழ் ட்ராவல்ஸ் ஹோட்டல்!” மலர்வோடு வரவேற்கவும் தவறவில்லை. நாதனைத் தாண்டி பின்னால் நிற்போரில் அவசரம் அவசரமாகப் பாய்ந்து வந்தன, அவன் விழிகள்.
“ரெண்டு பேரும் ஃபிரெண்ட்ஸ் போல!” வாய்விட்டே கேட்டுவிட்டார் நாதன்.
“ஓம் அங்கிள், சின்னப்பிள்ளையில இருந்து.” மதியைப் பார்த்த படி சொன்னது வேந்தன். மதி எதுவோ சொல்ல முனைகையில், “வேந்தன் இல்லையோ இண்டைக்கு நாங்க அந்த குப்பைக்க கிடந்திருப்பம்.” மாறன் குறுக்கிட்டிருந்தான்.
“இதில என்ன இருக்கு.” முறுவலோடு சொன்னான் வேந்தன்.
அதன் பிறகு, பொதுவாகப் பயணம் பற்றிக்கதைத்துக்கொண்டே அவர்களுக்கென்று ஒதுங்கியிருந்த இரு அறைகளுக்கான கீ கார்டுகளையும் கொடுக்கையில், “ரெண்டு அறையிலும் எஸ்க்ரா பெட் போட்டிருக்கு. எல்லா ரூம்களும் புக்ட் அங்கிள்; குறை நினையாதீங்க, உங்களுக்கு மூன்று ரூம்ஸ் தர ஏலாமல் போயிட்டு!” என்றான் மதி.
“அதெல்லாம் பிரச்சனையே இல்ல, இதுவே போதும்.” என்ற நாதன், “கனடாவில யாழ் ட்ராவல்ஸில இருக்கிறவர் உங்கட …” இழுத்தார்.
“அவர் என்ர அத்தான் அங்கிள்; யாழ் ட்ராவல்ஸ் என்ர அம்மாட அப்பா தொடங்கினது; இப்பப் பெரியம்மாட மகனும், மருமகன்கள் ரெண்டு பேரும், நானும் அத்தானும் சேர்ந்துதான் பார்க்கிறம்.” சின்னதா விளக்கமே கொடுத்துவிட்டான், மதி.
“சரி சரி தம்பி…ஒவ்வொரு துறையிலும் நம்மட ஆக்களிட முன்னேற்றம் பார்த்தா நல்ல சந்தோசமா இருக்கு!” உள்ளத்து மகிழ்வோடு சொன்னார், நாதன்.
“தாங்க்ஸ் அங்கிள்! உங்களுக்கு ரூம்ஸ் முதல் மாடியில, இதால போய் இடப்பக்கம் திருப்பினால் எதிர் எதிரா இருக்கு.” அருகால் செல்லும் படிக்கட்டைக் காட்டிச் சொன்னான்.
“இந்த கார்ட்ஸுக்குப் பின்பக்கத்தில் வைஃபை பாஸ் வர்ட் இருக்கு. என்ன தேவையெண்டாலும் எங்களிட்டக் கேட்கலாம், வேந்தனிட்டக் கேட்டாலும் சரி.” விசமமான சிரிப்போடு அவனைப் பார்த்துச் சொன்னதையெல்லாம் நாதனோ மற்றவர்களோ கவனிக்கவில்லை என்றாலும், வந்ததிலிருந்து வேந்தனையும் மதியையுமே கவனித்துக்கொண்டிருந்த இலக்கியாவின் பார்வை மதியின் பார்வையைக் குறித்துக் கொண்டது.