KK – 7- 2
சாரலுக்கு என்று பூங்குன்றனின் தாய் கொடுத்த நகைகளைக் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக நவீன பாணியில் வாங்கியிருந்தார்களே. இவர்கள் எப்போதும் செல்லும் நகைக்கடைதான். அதுமட்டுமில்லாது, அவர்களின் மகள் கவினியின் பள்ளிக்கூட நெருங்கிய நண்பி. பிறகென்ன? அந்த நகைகளை உரிய பணம் கொடுத்து வாங்கியிருந்தாள்,கவினி. தகப்பனிடம் சொன்னவள், வீட்டில் சொல்லவில்லை. அதை நேற்றிரவு தான் மதிவதனி அறிந்திருந்தார். அதுவும் அவற்றை பொலிஷ் போடக் கொடுத்திருந்தாள், கவினி. வந்து எடுக்கும் படி வீட்டுக்கு அழைத்துச் சொன்ன போதுதான் தெரிய வந்தது.
வீட்டில் விருந்தினர் வந்திருக்கையில் சண்டை போடவா முடியும். தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டுதான் மதிவதனி வந்திருந்தார்.
“ஆசாரி வந்திட்டார்…” என்றபடி வந்த பரமேஸ்வரி, நிகழ்வுக்கு இழுத்து வந்திருந்தார். இங்கு நடந்த கதை எதுவும் காதில் விழாத பாவனையில் அவர் நடந்து கொண்டாலும் அவர் கவனித்தார் என்பது மதிவதனிக்குத் தெரியுமே! மனத்துக்குள் நிச்சயம் குளுகுளுவென்று இருக்கும், காட்டிக்கொள்ளவே மாட்டார்.
“கவினிம்மா கெதியா வாம்மா.” என்று, உள்ளே பார்த்துக் குரல் கொடுத்துவிட்டு அவர் செல்ல, விறுவிறுவென்று கவினி நிற்கும் அறையை நோக்கி நடந்தார்,மதிவதனி.
சிவப்பு வெங்காயக் கலரில் ஃபிளையாட் கொட்டன் சல்வார், கீழே பட்டர் கலரில் லெகிங், காதோரமாக சிறு முடிக்கற்றைகளை இழுத்தெடுத்து குட்டி பட்டர்ஃபிளை கிளிப்பில் அடக்கி முதுகில் சுருள் மயிரைப் படர விட்டவள், வேகமாக மரூன்வண்ணப் பொட்டை நெற்றியில் ஓட்டினாள். கண்ணுக்கு காஜல், உதட்டு மெலிதாக ரோஸ் வண்ணத்தில் லிப்ஸ்டிக். கண்ணாடியில் பார்த்தவளுக்கு திருப்தியாக இருந்தது. அந்த நேரம் கதவு திறப்பட்டது.
“இந்தா வாறன் இயல்…” என்றபடி திரும்பியவள் தாயை எதிர்பார்க்கவில்லை.
முறுவலித்தாள். “இந்தா முடிஞ்சிட்டு, எல்லாரும் வந்திட்டினமா? கொழுக்கட்டையெல்லாம் வடிவா வந்ததா?” என்றபடி நகர்ந்தவளை, மதிவதனியின் கோபப் பார்வை நகரவிடாது செய்தது.
‘என்னவோ தொடங்கப்போறார்’ என்றெண்ணியவள் மனத்துள் எரிச்சல் சுரந்தது, எச்சரிக்கையும்தான்.
“இப்பிடியேவா வெளில வரப்போற? கழுத்து, கையில ஒண்டும் இல்ல.” என்று ஆரம்பிக்க, பரிச்சயமில்லாத கரிசனையை எதிர்கொள்ளத் தெரியாது பார்த்து நின்றாள், கவினி. கணம் தான்.
“தெரியாத சனம் பாத்தா வேலைக்காரி எண்டு நினைப்பினம். சொந்த பந்தம், அறிஞ்ச சனம் உன்னை நான் கொடும செய்யிறதா கதைக்குங்கள். அதுதான் உன்ர விருப்பமும் என்ன?” பொரிந்தார், தாய்.
காரணமின்றியே கோபம் கொள்வார்.வெறுப்பை உமிழ்வார். அதுதான் அவருக்குக் கை வந்த கலையாச்சே! அமைதியாக அடுத்த அடியெடுத்து வைத்தாள், கவினி.
பெரிதாக அலங்காரம் இன்றியே பளிச்சென்று கண்ணைக் கவர்ந்த மகளை ஆசையாகப் பார்ப்பதற்குப் பதில், அந்த உருவில் தன் மாமியைப் பார்த்த மதிவதனியை என்ன சொல்வது!
“பொன்னுருக்கல் தானே, அதோட நகைகள வீட்டில விட்டுட்டன். ஓடிப்போய் எடுத்துக்கொண்டு வரோணும்.” என்று சொல்லிவிட்டு வெளியேற எத்தனித்தாள், அவள்.
“நிவேதாட மகளிட்ட என்னப்பற்றி என்ன சொன்னனீ? உன்னப் பெத்ததுக்குப் பரிசா சின்னன் பொன்னனிட்ட எல்லாம் கண்டபடி கதை கேட்க வேண்டிக் கிடக்கு. நீ ஒண்ணுமே தெரியாதவள் போல முகத்த வச்சுக்கொண்டு திரி! அடுத்தது, சமையல் செய்யச் சொல்லி எல்லாம் ஆர் உன்னட்டக் கேட்டது? அந்தக் கிழடு போலவே உனக்குச் சமைக்கத் தெரியும் அது தெரியும் இது தெரியும் எண்டு வாறவே போறவேக்குத் தம்பட்டம் அடிக்க நீயா ஒண்டு ஒண்டையும் செய்யிற, அவ்வளவும் தான்.”
கோபமும் அசட்டையுமாகத் தொடர்ந்தவரை, பெரிய மூச்சோடு களைப்பாகப் பார்த்தாள், கவினி.
“உங்களுக்கு இப்ப என்ன பிரச்சின அம்மா. அதோட இயலிட்ட நான் ஒண்ணுமே கதைக்கேல்ல!” இயலாமைக் குரலில் ஆரம்பித்தவள், “அப்பம்மாவக் கிழடு எண்டு சொல்ல வேணாம் சரியோ! உங்கள அப்பா மனிசி எண்டு சொன்னாலே பிடிக்காது எல்லா? அப்பிடித்தான் எல்லாருக்கும். அதோட, உயிரோட இல்லாத அப்பம்மாவ இழுத்துக் கதைக்கவும் வேணாம், அதுவும் எனக்கு முன்னால!” காரமாகவேதான் வார்த்தைகள் வெளிவந்தன.
“இங்க பார், முதல் அம்மா எண்டு என்னைச் சொல்லாத! நீ ஒண்ணுமே சொல்லாமல் தான் அந்தப்பிள்ளை, ஆட்களுக்கு முன்னால வச்சி என்னட்ட அப்பிடிக் கதைச்சவாவோ!” அடிக்குரலில் உறுமினார், மதிவதனி. கவினியோ அதிர்ந்து நின்றாள்.
“ஒண்ணுமே தெரியாத மாதிரி நிண்டு ஆரை ஏமாத்தப் பாக்கிற? உன்னப் பெத்ததுக்கு இதெல்லாம் கேட்க வேண்டிய தலைவிதி எனக்கு! கிழவியை கிழவி எண்டு சொல்லாமல் குமரி எண்டா சொல்லுறது? அதும் செத்தும் என்னப்போட்டு வதைக்கிற கிழவிய!” என்றபடி மகளை நெருங்கினார், மதிவதனி.
பின்னால் இரண்டு எட்டு எடுத்து வைத்தாள், கவினி.
“நாங்க கொண்டுபோய் வித்த நகைகள நீ திருப்பி வாங்கியிருக்கிற. வீட்டில மூச்சும் விடேல்ல. சாரல் ஒரு நாளாவது வீட்டுக்குத் தெரியாமல் எதையாவது செய்திருக்கிறாளோ? உன்ர அப்பாவும் அத்தையும் தலையில தூக்கி வச்சி ஆடினம். நீ இன்னும் என்ன என்ன எல்லாம் உன்ர மூப்புக்குச் செய்து பரிசு கெடுக்கப் போறியோ!” என்றபோது, தாயின் கோபம் எதனாலென்று கவினிக்குப் புரிந்தது.
“அந்த நகைகள் பரம்பரை…” என்று வாய் திறக்கவும் கையமர்த்திவிட்டார்.
“பெரிய கிளிஞ்ச பரம்பரை! நீ ஒரு சாட்டும் சொல்லத் தேவேல்ல. உன்னப்பற்றி எனக்குத்தான் தெரியுமே! வெளி ஆட்களுக்கு முன்னால நல்லா நடிச்சு அப்பாவி வேசம் போடு! உடம்பு முழுதும் விசம் எண்டுறது பழகினாத்தானே அவேக்குத் தெரியவரும்.” வெறுப்பை உமிழ்ந்தார்.
“இங்க பார், இப்பச் சொல்லுறன் நல்லாக் கேட்டுக்கொள்ளு, என்ர சினேகிதிகள் குடும்பத்தோட உனக்குக் கதை பேச்சுத் தேவேல்ல! அவையளக் கூப்பிட்டுச் சமையல் வேலை செய்திருக்கிறீங்க. அவே, தாய்க்குக் கூடச் சொல்லேல்ல. என்ன நினைப்பினம் என்னைப் பற்றி. உன்னப் பெத்ததுக்கு எல்லாத்தையும் அனுபவிச்சிட்டுப் போறன். என்ர மகள் கலியாணம் எண்டு ஒரு சொட்டுச் சந்தோசத்த அனுபவிக்கிறதுக்கும் எனக்குக் குடுப்பின இல்ல.” மூச்சுவிடாது சொன்னவர் அழுதுவிடுவார் போல் இருந்தது. விறைத்துப் போய் நின்றாள், கவினி.
“என்னடி முறைக்கற?”
“நான் உங்களுக்கு ஒண்டு சொல்லட்டா? தயவு செய்து என்னோட கதைக்க வர வேணாம். நான் என்ர மூப்புக்கு நடக்கிற நாதாரி எண்டு தெரியுது எல்லா? பிறகேன் கதைக்க வாறீங்க? என்னப் பற்றி உங்கட வாயில ஏன் வருது? உங்கட சினேகிதிகளிட்ட என்னப் பற்றி ஏன் கதைப்பான்? எனக்கு ஒண்டும் தெரியாது எண்டு நினைக்காதீங்க. கேக்கிற சனத்துக்குக் கொஞ்சமாப் புத்தி இருந்தாலும் திருப்பிக் கேட்கத்தான் செய்வினம். பிறகு இங்க என்னட்ட வந்து கத்தி?” எவ்வளவுக்குப் பொறுப்பது, சீறியிருந்தாள்!
மதிவதனியின் முகம் கன்றிச் சிறித்திட்டு.
“அதோட ஆர் என்னப் பெறச் சொன்னது? நானே கேட்டனான்? உங்கட ஆசைக்குப் பெத்திட்டு பிறகு நினைவு தெரிஞ்ச நாளில இருந்து போட்டு வதைக்கிறீங்க. இதுக்க நான் ஏதோ உங்கள வதைக்கிறது போல சீன்! போங்க, போய் உங்கட மகளிட கலியாண அலுவல்களப் பாருங்க!” விசுக்கென்று வெளியில் வந்தவள் தட்டென்று மோதியது, சேந்தனில்.
என்னதான் தாயோடு ஏட்டிக்குப் போட்டியாகக் கதைத்துவிட்டாலும் மனத்துள் வெகுவாகவே வலித்தது. கட்டுப்பாட்டை மீறிக் கண்கள் கலங்கத்தான் விருட்டென்று வெளியேறியிருந்தாள்.
“சொறி!” கணம்தான் சேந்தன் விழிகளைச் சந்தித்திருப்பாள். உள்ளே கதைத்தவற்றைக் கேட்டிருப்பானோ! பெரும் அவமானமாக இருந்தது. விறுவிறுவென்று நடந்தாள்.
அவளையே பார்த்து நின்றான், அவன். மனத்துள் அவ்வளவு அதிர்வு! ஒரு தாயும் மகளும் இப்படியும் கதைத்துக் கொள்வார்களா?
“என்ன தம்பி இங்க நிக்கிறீங்க?” மிகவும் சாதாரணமாக அவனை எதிர்கொண்டார், மதிவதனி. குரலில் சினேகிதியின் மகன் என்ற அன்பு.
அவனுக்குத்தான் அவர் முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை. முறுவலோடு நின்றவரிடம், “ரிஸ்ட் வோச் …அறையில வச்சிட்டுப் போய்ட்டன்.” அருகிலிருந்த அறையை நோக்கி நகர்ந்து விட்டான்.
அவளைத் தம்மோடு கதைக்க வேண்டாம் என்று சொல்ல இவர் யார்? மதிவதனியிடம் கேட்க வேண்டும் போலிருந்தது. கோபத்தையும் எரிச்சலையும் அடக்கிக்கொண்டு வெளியில் வந்தால், “ஓடிப்போய் போட்டுக்கொண்டு வா குஞ்சு. இல்லையோ, அத்தையிட நகைகளில விருப்பமானத எடுத்துப் போடு!” சொல்லிக்கொண்டு நின்றார், பரமேஸ்வரி.
“இல்ல அத்த, இந்தக் கழுத்து வேலைப்பாட்டுக்கு நகை போடாமல் இருந்தாத்தான் வடிவா இருக்கும்.” உறுதியாகச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள், கவினி. தாய் சொன்னதற்காகவே அன்று நகைகள் இல்லாமல் நிற்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டாள்.
அழைத்தவர்கள் வந்திருக்க, பொன்னுருக்கும் நிகழ்வு ஆரம்பமானது.
ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, பழத்துடன் சுவாமியறையில் இருந்த தங்க நாணயத்தை வைத்துக்கொடுத்தார், பரமேஸ்வரி. அதை, யோகனும் விமலாவுமாக மகன் ஆதவனிடம் கொடுக்க, அவன் ஆசாரியிடம் கொடுத்தான். அவரும் பூசை செய்துவிட்டு, பொன்னை உருக்கத் தொடங்கினார்.
வெற்றிலை மேல் இருந்த உருக்கிய தங்கம் ஆதவனால் வந்துள்ள உறவுகளுக்குக் காட்டடப்பட்டது. ஆசாரிக்குத் தட்சணையளித்து, உருக்கிய தங்கம் தாலி செய்யக் கையளிக்கப்பட்டது.


