அடுத்த நாள் காலை பத்து மணிவாக்கில் நகைக்கடைக்குச் சென்றாள், கவினி. பொலிஷ் பண்ணிய நகையை எடுத்துக்கொண்டு அப்படியே தைக்கக் கொடுத்திருந்த சாரி பிளவுஸ் எடுக்கும் வேலையும் இருந்தது.
நகைக்கடைக்குள்ளிருந்து வெளிவருகையில், “ஹேய் கவினி!”என்ற கூவலான விழிப்பு எதிர்ப்புறம் பார்க்க வைத்திட்டு. அங்கிருந்த நகைக்கடைக்குள்ளிருந்து வந்து கொண்டிருந்தனர் விமலா, நிவேதா குடும்பத்தினர்.
இவள், முறுவலோடு கை காட்டினாள். இயலோ, பாதையின் இருமருங்கும் பார்த்தபடி இவளை நோக்கி வந்தாள்.
“என்ன இங்க? தனியவா வந்தீங்க?” என்றவளுக்கு விசயத்தைச் சொன்னவள், “சாரி பிளவுஸ் எடுக்கோணும் இயல். போயிட்டு வாறன்!” நழுவிட நினைத்தாள்.
அவள், அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. கவினியின் கையைப் பிடித்தபடி மறுபுறம் அழைத்துச் சென்றிருந்தாள்.
முகமனுக்கு இரண்டு வார்த்தைகள் கதைத்த விமலாவும் நிவேதாவும், “போகோணும் பிள்ளைகள் கெதியா வாங்க!” என்றபடி, தமக்குள் கதைத்தபடி சற்றே தள்ளி நின்று கொண்டார்கள்.
“அப்பச் சந்திப்பமே!” என்று, தன் வழியில் செல்ல முனைந்தாள், கவினி.
“என்ன நீங்க போறதிலயே குறியா நிக்கிறீங்க? நாங்க லிங்கம் கூல் பாருக்கு போகப் போறம், நீங்களும் வாங்கோ!” இயல், பிடித்த கரத்தை விடாது சொன்னாள்.
“வாரும் கவினி” தன் பங்குக்கு அழைத்தான், ஆதவன்.
“இல்ல…அத்தார் , தையல் அக்காட்ட இப்ப வருவன் எண்டு சொல்லிட்டன். போயிட்டு வாறனே!”என்ற கவினி, சேந்தன் ஒரு வார்த்தையும் கதைக்காது பார்த்து நிற்கும் விதத்தில் ஒரு மாதிரிச் சங்கடமாக உணர்ந்தாள்.
பொன்னுருக்கலில் தாயோடு கதைவழிப்பட்டபின், இயல் சேந்தனை இயல்பு போலவே தவிர்த்தாள்தான். இருந்தாலும் இப்போ, அவன், சற்றே தள்ளி ஆராய்ச்சிப் பார்வையோடு நிற்பதில் அவதியாக இருந்தது. இவள் முறுவலோடு சொன்ன ‘ஹாய்’ க்கும் பதில் கிடைக்கவில்லை. தாயும் தானும் கதைவழிபட்டதைக் கேட்டிருப்பானோ என்ற எண்ணம் இவளுள் இருக்கிறதே. அதே, பெரும் தர்மசங்கடத்தைக் கொடுத்திருந்தது.
‘இந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையா என்ன? உன்ர பாட்டுக்குப் போயிறு!’ மனம் அதட்டியது.
“நீங்க போங்கோ இயல், கலியாணம் எல்லாம் முடியவிட்டு நாங்க ஒருக்கா லிங்கம் கூல் பாருக்கு வருவம்.” கையை விடுவித்துக்கொண்டு விலக நினைத்தாள்.
“விருப்பம் இல்லாத ஆக்கள ஏன் இப்ப வலுக்கட்டாயமா இழுக்கிற இயல்? விடு விடு எண்டா சும்மா விடன்!” சிடுசிடுத்த முகத்தோடு அடிக்குரலில் சொன்னபடி இவளைக் கடந்து நடந்தான், சேந்தன். இதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்ற பாவனையில் சேர்ந்து நடந்தான், சூரியன்.
“அப்பா லிங்கம் கூல் பாரில நிக்கிறாராம், கெதியா வாங்கோ பிள்ளைகள்!” திரும்பிச் சொன்னார், விமலா.
“சும்மா வாங்கோ எண்டுறன்.” என்றபடி, இழுத்துக்கொண்டே நடந்தாள், இயல். எத்தனைக்கு என்று தவிர்க்க நினைப்பது? நேரத்தைப் பார்த்துக்கொண்டே இழுபட்டாள், கவனி.
“உம்மட அண்ணா ஏன் இப்ப முறைச்சவர்?”அவளையுமறியாதே கேட்டுவிட்டாள். சேந்தன், காதுகளை இங்கே கொடுத்துக்கொண்டு நடந்திருப்பான் போலும். கடந்து சென்ற ஒரு குழுவிற்கு இடம் தரும் விதமாக, மிகவும் இயல்பாகப் பின்தங்கி, அவள் விழிகளைக் கூர்ந்து பார்த்தான். பலகால நட்பின் பிணக்குப் போன்றதொரு உணர்வு கவினியினுள்.
“வாட்?” அவள் கேட்ட விதத்தில் இயல் சிரித்துவிட்டாள்.
“என்ன… வாவாட்? நேற்று உம்மட அம்மா சொன்னா எண்டோன்ன எங்களோட கதைக்காமல் விட்டீர் தானே? பிறகு, நாங்க கதைச்சா என்ன முறைச்சா என்ன?” மீண்டும் சிடுசிடுப்புத்தான், விறுவிறுவென்று முன்னால் சென்றுவிட்டான்.
கவினியின் முகம் கறுத்திட்டு. எல்லாம் கேட்டிருக்கிறார். மிகவுமே அவமானமாக இருந்தது. தாயில் உள்ள கோபம் அதிகரித்திட்டு.
“அண்ணா பகிடிக்குக் கவினி. உங்கட அம்மா எங்களோட கதைக்க வேணாம் எண்டு எல்லாம் சொன்னாவாமே! அதைச் சொல்லி, நேற்றிரவு அம்மாவோடயும் மாமியோடையையும் சரியாச் சண்டை போட்டவர் அண்ணா. உங்களுக்காக, உங்கட அம்மாக்கு நல்ல ஏச்சும் குடுத்தவர்.”அவளைச் சமாதானம் செய்வதாக, ஆதரவாகக் கதைப்பதாக எண்ணி நடந்ததைக் கூற, இவளுக்கு முகம் கன்றிப்போயிற்று. சுறுசுறுவென்று எரிச்சல் சுரந்தது.
“அதெல்லாம் எனக்கும் அம்மாக்கும் உள்ள பிரச்சினை இயல். வேற ஆரும் கதைக்கிறது எனக்கு விருப்பம் இல்ல. இதுபற்றி ஆரிட்டையும் நான் கதைக்கிறதும் இல்ல.”குரல் கன்றச் சொன்னாள்.
“என்ன எண்டாலும் அவா என்ர அம்மா!” கலங்கிவிட்ட கண்களை மறைக்க முயலாது இயலைப் பார்த்தவள், “அதோட, நானும் லேசுப்பட்ட ஆள் இல்ல இயல். அவா நாலு சொன்னா திருப்பிப் பத்துச் சொல்லுற ஆள் நான். யோசிச்சுப் பாத்தா அவாவும் பாவம்தான்!” என்று, தாயை விட்டுக் கொடாது கதைத்தவளை வியப்பாகப் பார்த்தாள், இயல். குறுகிய காலத்தில் மனத்துக்கு நெருக்கமான அவளை, இன்னும் இன்னும் பிடித்தது.
கரத்தை இறுக்கப் பற்றியபடி மௌனமாக நடந்தார்கள்.
லிங்கம் கூல் பார் வாசலில் நின்ற யோகனோடு கதைத்தபடி, நிவேதா , விமலாவின் இன்னொரு சினேகிதி குடும்பம் நின்றிருந்தார்கள். இவர்களைச் சந்திக்கவென்றே சாவகச்சேரியில் இருந்து கணவர் இரு மகள்களோடு வந்திருந்தார்கள்.
அவர்களை, இங்கு எதிர்பார்க்கவில்லை என்றதைக் கடந்து, அவர்கள் பற்றி இலண்டனில் வைத்துக் கதைத்ததையே மறந்திருந்தான், சேந்தன். எல்லாம் மனத்துள் புதுவாசமடிக்க ஆரம்பித்துவிட்டதால் வந்ததுதான். இப்போதோ, தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது. இன்று, தாயோடு கதைத்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.