நேசம் கொண்ட நெஞ்சமிது 15 – 1

மனம் முழுவதும் பாரமாய் கனத்தது வதனிக்கு. ஏனென்று அறியாமலே கண்கலங்கினாள்.

‘ஏன் அத்தான் மூன்று நாட்களாய் வரவில்லை. அப்படி என்னைப் பார்க்காமல் இருக்க மாட்டாரே. அவருக்கு உடம்புக்கு முடியவில்லையோ…’ என்று அந்த சின்ன உள்ளம் கிடந்து தவித்தது.

தமிழ்வாணியிடம் கேட்கலாமா அல்லது காந்தனிடம் கேட்கலாமா என்று தவித்த மனதை பெரும் சிரமப்பட்டு அடக்கினாள். எதற்கு விசாரிக்கிறாய் என்று கேட்டால் என்ன சொல்வாள்? வீண் பேச்சுக்களுக்கு இடம் கொடுத்துவிடக்கூடாதே!

மூன்று நாட்களாய் மகளின் முகச்சோர்வை கவனித்துக்கொண்டுதான் இருந்தார் கலைமகள். பலமுறை கேட்டும் ஒன்றுமில்லை என்று விட்டாள் வதனி.

அவளின் வாட்டத்தை பொறுக்கமாட்டாமல், “உனக்கு இன்று ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது வனி. என்னவென்று சொல் பார்ப்போம்.” என்றார் அவளை உற்சாகப்படுத்தும் முகமாக.

“என்னம்மா?” ஆர்வமே இல்லாது கேட்டாள்.

“நீயே சொல். உனக்கு பிடித்த ஒருவர் இன்று வருகிறார்..”

“மணிமாமாவும் நித்தியுமா?” என்றாள் சற்றே சுதி இறங்கிய குரலில்.

“வரவர உன் மூளை வேலை நிறுத்தம் செய்கிறது வனிம்மா. அவர்கள் இருவர். நான் சொன்னது ஒருவர் என்று. இன்று வாசு வருகிறான்..”

“உண்மையாகவா அம்மா. என்னிடம் சொல்லவில்லையே அவன். அவனை என்ன செய்கிறேன் பாருங்கள்.” மெல்லிய உட்சாகம் தொற்றிக்கொள்ளச் சொன்னாள்.

“உன்னிடம் சொல்லவேண்டாம் என்றுதான் அவன் சொன்னான். ஆச்சரிய அதிர்ச்சி கொடுக்கபோகிறேன் என்றான். நான்தான் உன் முகம் வாடி இருக்கவும் சொன்னேன். இனியாவது அவனுடன் எப்படி சண்டை போடலாம் என்று யோசித்துக்கொண்டு சந்தோசமாக இரடா குட்டி…” என்றார் பாசம் பொங்க.

மறுபடியும் கண்களை கரித்தது வனிக்கு. தப்பு செய்கிறேனோ…. என் முகம் வாடுவதைக் கூட தாங்க முடியாதவர்களின் மனதை நோகடித்துவிடுவேனோ என்று பயந்தாள். எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை வருத்திவிடக்கூடாது என்று நினைத்துக்கொண்டாள்.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் தலைக்கு குளித்து அழகிய சுடிதாரில் அழகே உருவாக வெளிக்கிட்டு வந்தவளின் முகம் மட்டும் வாடிக்கிடந்தது.

தாயாரிடம் சொல்லிக்கொண்டு வாணிக்கு புறப்பட்டவளின் மனம் இன்றாவது அத்தான் வரமாட்டாரா என்று ஏங்கியது.

அன்றும் வரவில்லை இளவழகன். ஒரு வழியாக கோவிலுக்குச் சென்று விநாயகரின் திருவுருவை பார்த்து கை கூப்பியவளின் கண்கள் கண்ணீரை சிந்தியது.

கடவுளிடம் வேண்ட எதுவுமே நினைவில் வர மறுத்தது. நடப்பவை அனைத்தும் நல்லதாவே நடக்கட்டும் என்று வேண்டிக்கொண்டாள்.

அங்கேயே அமர்ந்து மனதை சற்றே அமைதிப்படுத்தியவள், வாசன் வந்திருப்பான் வீடு செல்வோம் என்று நினைத்தபடி எழுந்தாள். வெளியே வந்து சைக்கிளின் அருகே சென்றவளின் அருகே ஒரு சைக்கிள் வரவும் திடுக்கிட்டு பார்த்தவளின் கண்கள் இரண்டும் மலர்ந்தது. கண்கள் மட்டும் அல்ல முகமும் மலர்ந்தது.

மலர்ந்த கண்களால் அவனைப் பருகியவாறே நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் இளாவின் யோசனை நிறைந்த முகமே பட்டது.

“என்ன அத்தான் உடம்புக்கு ஏதாவது முடியவில்லையா? ஏன் இத்தனை நாட்களாய் வரவில்லை? உங்களைக் காணாமல் எவ்வளவு தவித்தேன் தெரியுமா.” என்றவளின் கண்கள் மறுபடியும் கலங்கி குரல் வெளிவர மாட்டேன் என்றது.

“குளக்கட்டுக்கு வா வது. உன்னிடம் சற்றுப் பேசவேண்டும்.” என்றவன் வேறு எதுவும் பேசாது குளக்கட்டுப்பக்கம் தன்னுடைய சைக்கிளை விட்டான்.

‘கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் போகிறானே….’

எதுவும் புரியாது அப்படியே நின்றவள் தன்னை சுதாகரித்து அவனின் பின்னால் தன்னுடைய சைக்கிளையும் தள்ளிக்கொண்டு சென்றாள்.

அவனைக் கண்டதே போதுமாய் தோன்ற, மனம் தானாகவே அமைதியானது.

அவனின் அருகே சென்று, “உடம்புக்கு என்ன அத்தான்?” என்று கேட்டாள் மறுபடியும்.

உடம்புக்கு முடியாமல் போனதால் மட்டுமே அவனால் தன்னைப் பார்க்க வரமுடியவில்லை என்று நினைத்தாள் அவள். தினமும் பார்த்தே ஆகவேண்டும் என்று அவளை விடவும் தவிப்பவன் அவன் அல்லவா…

ஏதோ சிந்தனையில் இருந்தவன் அவளின் புறமாய் திரும்பி, “என் உடம்புக்கு என்ன? எதுவுமில்லை. நான் நன்றாகத்தான் இருக்கிறேன்.” என்றான்.

ஏன் அவள் அப்படிக் கேட்கிறாள் என்பதை இளவழகன் யோசிக்கமறந்தான். ஆனால் வதனிக்கோ அவனின் பதில் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றமாய் இருந்தது.

‘என்னை விடவும் வேறு ஏதோ ஒன்று அவனுக்கு முக்கியமாக பட்டுவிட்டதோ…’

தன்னுடைய ஏமாற்றத்தை அவனுக்கு காட்டாது மறைத்துவிட்டு, “பிறகு ஏன் அத்தான் நீங்கள் வாணிக்கு வரவில்லை?” என்றாள் கேள்வியாக.

“மாதவிக்கு திருமணம் சரிவந்திருக்கிறது.” என்றான் அவளின் கேள்விக்கு பதிலாக.

முகம் மலர, “ஓ…. சந்தோசமாக இருக்கிறது அத்தான். மாப்பிள்ளை யார்? என்ன செய்கிறார்? எப்படி இந்த வரன் அமைந்தது…” என்று தான் கேட்க நினைத்தவைகளை மறந்து வேறு கேள்விகளை அடுக்கினாள் வதனி.

எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு வதனியின் கேள்விகள் உதவி செய்யவும் நடந்தவைகளை கூறினான்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock