மனதில் இருக்கும் பாரத்தை இறக்கவும் முடியாமல், இறக்கும் வழியும் தெரியாமல் தவித்த சங்கரன் ஒரு முடிவுக்கு வந்தவராய், “வதனி! எழுந்திரு! உன்னிடம் பேசவேண்டும்!” என்கிறார்.
கொஞ்சமே கொஞ்சம் கடுமை எட்டி பார்த்தது குரலில். அதற்கே வதனியும் கலைமகளும் அதிர்ந்தனர்.
கோபமாக இருந்தால் மட்டுமே சங்கரனிடமிருந்து வனிம்மா என்கிற அழைப்பு “வதனி” யாக வரும். வதனிக்கோ ‘என் மீது அப்பாவுக்கு என்ன கோபம்’ என்கிற அதிர்ச்சி. கலைமகளுக்கோ நொந்திருக்கும் மகளின் மேல் இவருக்கென்ன கோபம் என்கிற அதிர்ச்சி.
சட்டென்று எழுந்தமர்ந்த வதனியின் விழிகள் கேள்வியாக தந்தையை பார்த்தது.
மகளின் கண்களையே பார்த்து,”இளவழகன் என்பவனை உனக்கு தெரியுமா?” கேள்வி இறுக்கமான குரலில் வந்தது.
விழிகள் வெளியே வந்துவிடுமோ என்கிற அளவுக்கு கண்கள் விரிந்தது வதனிக்கு. முகமோ வேதனையிலும் பயத்திலும் சிவந்து கன்றியது. பதில் சொல்லாது இருந்தவளை பார்த்த கலைமகள் கணவரைப் பார்த்து, “யார் அவர்?” என்றார் கேள்வியாக.
“நான் பேசி முடிக்கும் வரை நீ எதுவும் பேசக்கூடாது கலை!” ஆணையிட்டது அவரின் குரல்.
பயந்துபோனார் கலைமகள்.ஆனாலும் கணவரின் பேச்சை தட்டி அறியாத அந்த பெண்மணியும் அமைதியானார்.
“சொல் வதனி….! உனக்கு இளவழகனை தெரியுமா?”
விரிந்த கண்களில் நீர் சூழ்ந்தது வதனிக்கு. ஆம் என்பதாக அவளின் தலை மிக மெதுவாய் ஆட, சங்கரனின் முகமோ இறுகியது.
“யார் அவன்? எப்படி பழக்கம் உனக்கு? எத்தனை நாட்கள் பழக்கம்?”
அவரின் ஒவ்வொரு கேள்விக்கும் கொஞ்சம் கொஞ்சமாக குனிந்த வதனியின் தலை “அவன் யார் உனக்கு?” என்ற கேள்வியில் முற்றிலுமாக நிலம் பார்த்தது.
“குற்றம் செய்தவர்கள் தான் தலை குனிவார்கள். நீ என்ன தவறு செய்தாய்? நான் சங்கரனின் மகள் தப்பு செய்ய மாட்டேன் என்பாயே இப்போது என்ன தப்பு செய்தாய்?”
கேட்டவரின் குரலில் இருந்த கடினத்தில் கதறி அழுதாள் வதனி.
முகத்தை கைகளால் மூடி அதே கைகளால் முகத்தில் அறைந்து, “நான் பிழை செய்துவிட்டேன். பிழைதான் செய்துவிட்டேன்…. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்…. அப்பா. அம்மா… என்னால் முடியவில்லை… என்னை மன்னியுங்கள்….” என்று கதறியவளைப் பார்த்த சங்கரனுக்கும் கண்களில் நீர் கோர்த்தது. யாரும் அறியாமல் துடைத்துக்கொண்டார்.
“அப்படி அவள் என்னதான் செய்தவள்? இப்படி அழவைத்து பார்க்கிறீர்களே…. நான் திட்டினால் கூட திட்ட வேண்டாம் என்று கெஞ்சும் உங்களால் எப்படி இப்படி நம் பிள்ளையை அழவைக்க முடிகிறது?” என்று ஆற்றாமையில் கணவரின் ஆணையைக் கூட மறந்து மகளை அணைத்தபடி கதறினார் கலைமகள்.
மனைவி மகளின் கதறலில் நெஞ்சமே புண்ணாகிப்போனது சங்கரனுக்கு. அதைவிட மனதில் சினம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. அந்த ச் னமே அவரின் கோபத்துக்கு காரணமாய் அமைந்தது.
“இருவரும் அழுகையை நிறுத்துகிறீர்களா!” என்கிற அவரின் அதட்டலில் திடுக்கிட்டுப் போயினர் இருவரும். மூச்சுவிடும் சத்தம் கூட கேட்கவில்லை அந்த வீட்டில்.
கணவரை முறைத்த கலைமகளின் கண்களோ அவரைக் குற்றம் சாட்டியது. அதை பொருட்படுத்தாத சங்கரன், “நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் வரவில்லை வதனி…” என்றார் அதட்டலாக.
என்னை விட்டு விடுங்களேன் என்று கெஞ்சலாக தந்தையை பார்த்தாள் வதனி.
ஆனாலும் விடாது அவளையே பார்த்தவரை தொடர்ந்து பார்க்கும் சக்தியை இழந்து தலையைக் குனிந்தவள், அழுகை ஆங்காங்கே தடுத்தாலும் விடாது அவனைப் பார்த்தது தொடங்கி கோவிலில் சந்தித்தது முதல் நித்தியின் வீட்டில் சந்தித்துக்கொண்டது வரை அனைத்தையுமே சொன்னாள்.
கடைசிநாள் குளக்கட்டில் சந்தித்தது வரை சொன்னவள் அவன் பேசிய பேச்சுக்களையும் செயலையும் சொல்லவில்லை.அதை மறைக்கும் எண்ணம் இல்லாதபோதும், அதனைச் சொல்லும் வலு அவளுக்கு இல்லை.
எல்லாவற்றையும் கேட்ட சங்கரனின் இரத்தம் கொதித்து என்றால் திகைத்து விழித்த கலைமகளோ மகளின் கன்னம் கன்னமாக அறைந்தார்.
“எங்கள் பெண்ணா நீ? எவ்வளவு தைரியம்? இப்படியா உன்னை வளர்த்தேன்… நம்பிய எங்களை இப்படி நாசமாக்கிவிட்டாயே. அவனை சந்திக்க சென்றுதான் ஆபத்தை விலைக்கு வாங்கினாயா?” என்று கோபமாய் கத்தியவரின் கைகளோ அறைவதை நிறுத்தவில்லை.
இதுவரை தன்னை அடித்தறியாத தாய் அடித்ததிலேயே தான் செய்தவை எவ்வளவு பிழை என்பதை இன்னுமொருமுறை உணர்ந்துகொண்டாள் வதனி. தன் கை புண்ணாகும் வரை கலைமகள் அடித்தபோதும் கன்னங்கள் வலித்தபோதும் மனம் வலிக்கவில்லை வதனிக்கு.
“கலை! இது என்ன புதுபழக்கம்…. விடு அவளை!” என்றார் சங்கரன் அதட்டலாக.
கணவரின் அதட்டலில் அடிப்பதை நிறுத்தியபோதும், “நம் பெண்ணா இப்படி…” என்று அழுதார் கலைமகள்.
“என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். தப்பென்று நினைத்து செய்யவில்லை. ஆனால்.. ஆனால்..” கதறினாள் வதனி.
“அழுவதை நிறுத்திவிட்டு எழுந்திரு வதனி!” கட்டளையாக சொல்ல நினைத்தபோதும் அந்த தந்தையின் குரலும் கரகரத்தது.
“இளவழகன் கடைக்கு வந்திருந்தான். நீ அவன் மனைவியாம் மனதளவில். கோவிலில் பொட்டு வைத்து கடவுள் சாட்சியாக திருமணம் முடித்தவர்களாம் நீங்கள்.” என்றவரின் குரலில் அத்தனை வேதனை.
பின்னே, சீராட்டிப் பாராட்டி போற்றி வளர்த்த மக்களை எவனோ ஒருவன் திடீரென்று வந்து என் மனைவி என்று சொன்னால் எப்படி இருக்கும்?
“அவன் வெளிநாடு செல்லப் போகிறானாம். அதற்கு முதல் உங்கள் திருமணம் சட்டப்படி நடக்கவேண்டுமாம்….”
“அதெப்படி… நல்லவனா என்று தெரியாமல்…” கலைமகளின் பேச்சை இடைமறித்த சங்கரன்,
“அதை எல்லாம் விசாரித்து என்ன செய்யப் போகிறாய்…? நம் மகளுக்கு நாம் விசாரிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லையே.” என்றவர் வதனியிடம்,
“இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்? உங்கள் திருமணத்தை அப்பா ஸ்தானத்தில் இருந்து நடத்திவைக்கவா?” என்றார் வெறுமையாக.
மனம் கொதித்தது வதனிக்கு. ‘பாம்பு கொத்திவிட்டது. நச்சுப்பாம்பு தன் நஞ்சை துப்பியே விட்டது. என்ன பதில் சொல்வாள் அவள். வேசிக்கு ஒப்பிட்டவனை அவள் மணப்பதா….? வெள்ளை மனதில் அவன் மீது கொள்ளை கொள்ளையாய் ஆசை கொண்டவளை கொடும் சொல்லாலும் செய்கையாலும் காயபடுத்தியவனை அவள் மணப்பதா….? அன்பு, காதல், நேசம் என்பதை அறியாது உடம்புக்காக பழகியவனை அவள் மணப்பதா…? இல்லவே இல்லை….!’
“இல்லை…வேண்டாம்!” என்றாள் தைரியத்தை கூட்டி.
“நாம் சம்மதிக்காவிட்டால் போலிசுக்கு போவானாம். நீ தன்னை ஏமாற்றி விட்டதாக….” என்றார் வெறுப்பாக சங்கரன்.
“என்னது?” இரண்டு பெண்களின் குரலும் ஒன்றாக வெளிவந்தது.
அங்கே அமைதி மட்டுமே நிலவியது. யாரும் பேசவில்லை. பேச்சு யாருக்கும் வரவில்லை.
சற்றுப் பொறுத்து, “எதையும் மாற்ற முடியாது. நடப்பதுதான் நடக்கும். நானும் எனக்குத் தெரிந்து யாருக்கும் எந்தப் பாவமும் செய்யவில்லை. அதனால் உன் வாழ்வு நன்றாக அமையும் என்று நம்புகிறேன். உன் மனதுக்கும் அவனை பிடித்தபடியால் தானே விரும்பினாய். விரும்பியவள் எங்களிடம் சொல்லி இருக்கலாம். காதலுக்கு நாங்கள் எதிரி இல்லை. அது உனக்கு தெரியும் என்றுதான் நினைத்திருந்தோம். எல்லாம் முடிந்தகதை.” என்று பெருமூச்சினை விட்டவர், “என் மனத்திருப்திக்காவது நான் அவனை.. அவரை பற்றி விசாரிக்கிறேன்….” என்றார் முடிவாக.
“இப்போது திருமணத்திற்கு என்ன அவசரம்… அவள் படிக்கவேண்டாமா….?” என்றார் ஆற்றாமையுடன் கலைமகள்.
“அவர் லண்டன் செல்கிறாராம். அதற்கு முதல் பதிவுத் திருமணம் நடந்தே ஆகவேண்டுமாம். லண்டன் போய் வந்தபிறகு பார்ப்போம் என்றதுக்கு எங்கள் மேல் நம்பிக்கை இல்லையாம்.” என்றார் வெறுப்புடன்.
கலைமகளுக்கோ மனம் முழுதும் கொதித்தது. இப்படி நம்பிக்கை இல்லாதவனை எப்படி நம்புவது. இந்தப் பெண் இப்படி செய்துவிட்டாளே.. தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுகொண்டாளே.. என்று தவித்தார்.


