இலண்டனில் இருந்து இங்கு வரமுதல், “நான்கு கிழமைகள் ஊர்ல நிண்டு என்ன செய்கிறது?”என்ற முனகல் சேந்தன், இயல் இருவரிடமும் இருந்தது.
“ஆதவன் கல்யாணம் முடியவிட்டு நாங்க வெளிக்கிடுறம், நீங்க நிண்டுபோட்டு ஆறுதலா வாங்கோ அம்மா.” என்று கூடச் சொல்லியிருக்கிறார்கள். அது பார்த்தால், வந்ததும் வராததுமாக நாட்கள் இவ்வளவு ரசனையாக நகரும் என்று அவனுக்குத் தெரியாதே! தன்னைத்தானே புதிதாக உணர்ந்தான், சேந்தன்.
“இருபத்தியைந்து எண்டால் எனக்குக் கலியாணம் செய்து வைச்சிருங்க!” என்று அவன் சொல்லும் போது வயது பத்தொன்பது.
“இவன் அதுக்குள்ள இங்க செட்டில் ஆகிருவான் அம்மா!” என்று, இயல் நக்கல் அடிப்பாள்.
ஆனால், அவன் மனத்தை ஒரு பெண்ணும் தட்டவில்லையே! இதோ, இக்கணம் உணரும் இதத்தின் சுரண்டல் உணர்வு வந்ததுமில்லை. இவ்வளவுக்கும் நேரில் சந்தித்து ஒரு நாள்தான் கடந்திருக்கு! மீண்டும் முறுவலித்துக்கொண்டான்.
“என்ன சேந்தன் உங்களுக்குள்ளயே சிரிப்பு? சொன்னா நாங்களும் சேர்ந்து சிரிப்பமே!” திடுமென்று இனிதனி குரல் இடையிட்டது. சேந்தன் திடுக்கிட்டுவிட்டான். இருந்தும் தாமதிக்கவில்லை.
“இல்ல ஒண்ணுமில்ல, அம்மாட்டத் தேங்காய்த் திருவிப் பழகினது இப்பிடி உதவும் எண்டு நான் கனவிலும் நினைக்கேல்ல.” வலு இலாவகமாகச் சுதாகரித்தும் இருந்தான்.
“வெளிநாட்டுக்காரர் எண்டா இப்பிடித்தான் எண்டு ஒரு ஃபிரேம் இருக்கு. நீங்களும் இயலும் அதை உடைச்சிட்டிங்க அண்ணா!” என்றான் வாணன்.
“அதென்ன ஃபிரேம்? இடுப்பில இருந்து நழுவிற ஜீன்ஸும் கையில பியருமா திரிவினம் எண்டோ?” நக்கலாகக் கேட்டான், சேந்தன்.
சட்டென்று திரும்பிப் பார்த்தாள் கவினி. அந்தக் கோலத்தில் சேந்தனைக் கற்பனை செய்தும் விட்டாள். சிரிப்புத்தான் வந்தது. ‘ பிராண்ட்டட் உடுப்பும் தோள்வரை வளர்த்த தலைமயிரும் காதில் தோடும்’ நாக்கில் வந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டாள்.
அவள் சிரிப்பைப் பார்த்துச் சேர்ந்து முறுவலித்த இனிதன் “அப்படியும்….” என்றான்.
“அதுகள எல்லாம் இங்கதான் கூடப் பாக்கிறன் இனிதன். அப்பிடிப் பாத்தா எல்லா இடமும் எல்லாம் இருக்கு. நல்லா வாற மனுசர் எங்க இருந்தாலும் நல்லா வருவினம். சீரழிஞ்சு போறவேக்கு எங்க இருந்தாலும் சீரழிவுதான். தோற்றம், நடத்தை, பழக்க வழக்கம், கதை பேச்சு எண்டு எல்லாமே நாகரிகம் எண்ட பெயரில அரியண்டமா மாறிக்கொண்டிருக்கு!” முகச் சுளிப்போடு சொன்னவனை மீண்டும் பார்த்தாள், கவினி.
முதல் நாள், இல்லாதவர்களுக்கு உதவுவது பற்றிக் கதைத்திருந்தான். மேம்போக்காக, நானும் உதவுகிறேன் என்ற பகட்டோடும் பெருமையோடும் ஒரு வார்த்தை கதைக்கவில்லை. ஆழ்ந்து அக்குவேறு ஆணிவேறாகச் சூழ்நிலையை விளங்கிக் கொள்ள முயல்வதாகவே அவன் அணுகுமுறை இருந்தது.
இப்போது, சமூகம் சார்ந்து ஆத்மார்த்த கோபத்தை வெளிப்படுத்துகிறான். தான், தன்னைச் சார்ந்தவர்கள் என்றது கடந்த அவன் சிந்தனை, செய்கைகள் அவன்பால் அவளுக்கு மரியாதையை உருவாக்கியிருந்தது. நட்போடு பழகும் மனநிலைக்குத் தள்ளியும் இருந்தது. அவர்களும் வெகு இயல்பாக இவர்களோடு சேர்ந்திருந்தார்கள்.
எண்ணெய் சூடாகியிருக்க, கத்தரிக்காயைப் போட்டு கலகலவென்று பொரித்தெடுத்தாள், கவினி. பச்சை மிளகாய்களின் நடுவில் கீறிவிட்டு அதையும் போட்டு ஒரு நிமிடம் வரை எண்ணையில் விளாவி எடுத்தாள் . அதுபோலவே, சின்ன வெங்காயமும் ஒரு நிமிடம் சூட்டு எண்ணெய்க் குளியல் எடுத்துவிட்டு வந்தமர்ந்துகொண்டது.
தாளிதம் செய்தவள், அதற்குள் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், உப்பு இட்டு, அரைத்த இஞ்சி உள்ளி கலந்த வினிகர் கலவையைச் சேர்த்தாள். அதோடு அளவாகச் சீனி, தேவையான அளவில் புளி கலந்து கொதிக்க விட்டாள்.
“நீங்க ஹோட்டல் திறக்கலாம் கவினி!” சேந்தனின் பாராட்டில் மலர்ந்த முறுவலோடு, பொரித்த கத்தரிக்காய், மிளகாய், வெங்காயம் கலந்து பிரட்டிவிட்டாள். கமகமக்கும் சுவையான ‘கத்தரிக்காய் மோஜி’ தயார்!
“பாக்கவே வாயுறுதே! நான் டேஸ்ட் செய்து பாக்கலாமோ!”அருகிலிருந்த சிறு கரண்டியோடு தயாராக நின்று கேட்டான், சேந்தன்.
“அதுக்கென்ன, தாராளமா!” என்று சொல்லி முடிக்க முதல் கரண்டி நிறைய கிள்ளியெடுத்து நிதானமாக வாய்க்குள் போட்டுக் கொண்டான். மறுநொடி, கண்கள் மூடி நிதானமாக மென்று ருசித்து விழுங்கினான்.
கவினி, கை வேலையை விட்டுவிட்டு அவனையே பார்த்து நின்றாள். மனத்திலோ, அவன் சொல்லப் போகும் வார்த்தைகளுக்கான பரபரப்பு!
“ப்பா! அவ்வளவு ருசியா இருக்கு. உறைப்பு, இனிப்பு, புளிப்பு எண்டு எல்லா ருசியும் கலந்து கட்டி உண்மையாவே அருமையா இருக்குக் கவினி. இந்த விடிய வெள்ளனவே நாக்கு இன்னொரு கரண்டி எண்டு கேக்குது.” கண்ணடித்துச் சொன்னவன், “பகலைக்குப் பசியோட சாப்பிடேக்க சும்மா அந்த மாதிரி இருக்கும். நேற்றுச் சொல்லக் கிடைக்கேல்ல, லன்ச் அவ்வளவு ருசியா இருந்தது.” மனதாரப் பாராட்டி, கவினியையே தடுமாற வைத்தான்.
“தாங்க்ஸ்!” என்றவள், பட்டென்று வேலைகளைக் கவனிக்கத் திரும்பிவிட்டாள் .
“என்ர மச்சாள் நூறு பேருக்கும் அனாயாசமாச் சமைச்சிருவாள். என்ன ஒண்டு, குறைஞ்சது பத்து எடுபிடி இருந்தால் சரி!” அவள் சொன்ன வேலைகளை செய்தபடி நக்கலாகச் சொல்லி, அவளில் இருந்த சேந்தனின் பார்வையை அப்பால் நகர்த்தியிருந்தான், இனிதன்.
“கதை இருக்கட்டும், உருளைக்கிழங்கைத் தோல் சீவும் மச்சான்!” முறைத்தாள் அவள்.
“நான் பால் பிழிஞ்சு குடுக்கிறன் சேந்தன், நீங்க கிழங்கைச் சீவி, இந்தத் தண்ணிக்க போடுங்க, செஃப் வந்து மிச்சம் பாப்பா.” என்றபடி, முதற்பாலை பிழிந்து வேறாக எடுத்து வைத்துவிட்டு, இரண்டாம் மூன்றாம் பால் என்று பிழிந்தெடுத்தான், இனிதன்.
“பரவாயில்லயே, எங்கட ஆணினம் நல்லா வேல செய்யினம்.” வாணன் கடிக்க, “நீங்க தனியாச் செய்யேல்லையே நாங்களும் சேர்ந்து தானே செய்யிறம்.” இயல்தான்.


