இப்படி, கலகலப்பும் கடியும் ஒருபுறம் என்றால், பயற்றங்காய் பிரட்டல், பருப்புப் பால்கறி, பூசணிப் பிரட்டல், உருளைக்கிழங்கில் குழம்பு, கருணைக்கிழங்குப் பிரட்டல், வாழைக்காய்ப் பால்கறி என்று, ஒன்று ஒன்றாகத் தயாரானது.
நாரி வலியில் அவதிப்பட்ட பரமேஸ்வரி ஆறு மணி போல் எழுந்து வந்தவர், வியப்போடு நின்றுவிட்டார். அதுவும் சேந்தனையும் இயலையும் அவர் எதிர்பார்க்கவில்லை.
“பிள்ளைகள் எல்லாரும் சேர்ந்து சமையல் முடிவுக்கு வந்திட்டுதே. உண்மையாவே பெருமையா இருக்கு!” என்றவர், “எல்லாருக்கும் காலச் சாப்பாடு ரெடி பண்ணுறன். மாமா தேத்தண்ணி குடிச்சிட்டாரே குஞ்சு?” கவினியிடம் கேட்டபடி நகர்ந்தார்.
“ஓமோம் …முன்னுக்குக் கூட்டிக் கொண்டு நிக்கிறார்.” அவள் பதில் சொல்ல நகர்ந்தவர், காலையுணவுக்காகத் தோசை, பிட்டு, இடியப்பம் என்று ஒரு வீட்டில் சொல்லி வைத்திருந்தார். வாங்கி வரும்படி கணவரிடம் சொல்லிவிட்டு, கவினி ஊற்றிக்கொடுத்த கோப்பியைக் குடித்த வேகத்தில், முன் முற்றத்தில் கும்பம் வைப்பது, ஆசாரிக்குத் தேவையானவற்றை எடுத்து வைப்பது என்ற வேலைகளைப் பார்த்தார்.
காலையுணவு வந்திருந்தது.
“கரட்ட துருவி வச்சா சாப்பாடு குடுக்க முதல் சம்பல் போடலாம் என்ன கவினி?” இயல் கேட்க, “ஓமோம்.” என்றவள், “இனிதன் மச்சான், இவையள சாப்பிடக் கூட்டிக்கொண்டு போங்கோ, பிறகு ஆறிடும்!” கலைத்து விட்டாள்.
“அதும் சரிதான். வாங்க வாங்க” என்று அழைக்க, “கவினி நீங்களும் வாங்க.” என்றது, சேந்தன். “அதான், நேற்றுப் பகலும் எங்களோட சேர்ந்து சாப்பிடேல்ல.” என்றாள், இயல்.
“இரவு உங்களோட தானே சாப்பிட்டனான். இதை இறக்கிட்டு வாறன் போங்க.” அனுப்பி வைத்தாள். அதுபார்த்தால், தோசையோடு வந்து அவளுக்கும் தீத்தி தீத்தி உண்டான்,இனிதன்.
சேந்தன்தான் வாய்க்குள் இடியப்பம் நுழையதாம் என்று தவித்துப் போனான். என்ன அவனுள் நடக்கிறது? அவனுள்ளம், ஆழ்ந்து ஆராய ஆர்வமும் ஆசையும் கொண்டது. அச்சுற்றத்தில் இருந்த அவசரம் அதற்கு விடவில்லை.
காலையுணவை முடித்துவிட்டுப் பரபரவென்று வேலையைத் தொடர்ந்தார்கள்.
காரட் தோல் சீவி கழுவி வைத்தாள், இயல். வாணன் துருவி வைத்தான். இயல் என்றுமில்லா மகிழ்வோடு இருந்தாள். “வாணன் ப்ளீஸ், நெஞ்சமே நெஞ்சமே பாடுறிங்களா?”அவள் மீண்டும் மீண்டும் கேட்க, சமையல் வாசத்தோடு இணைந்து மனத்தை வருடியது, அவன் குரல்.
நீ அஞ்சிலெ பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லயே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்றபோதும்
அன்பு தான் வெல்லுமே எந்த நாளும்
ஒளி எங்கு போகும்?
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நஞ்சும் இல்லயே
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராரிரோ
உண்மையாகவே விஜய் ஜேசுதாக்கும் இவன் குரலுக்கும் வேறுபாடு தெரியவில்லை என்று அவர்கள் எண்ணிக்கொண்டு இலயித்திருக்க, இடையில் இணைந்தது சக்திஸ்ரீ கோபாலன் குரல்.
கண்ணோரம்
கொட்டும் மின்னல்
அசைந்தாடும் பூவில் உயிர் தேனை
ஊற வைக்கும், அங்கும் இங்கும்
றெக்கை கட்டுதே
உன் வாசம் தாயாய் தலை கோத
மனம் பூக்குதே
நெற்றி முத்தம் வைக்குதே
தீ பற்றிக்கொண்ட காட்டுக்குள்ளே
பாடல் நீயே… ஓ
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராரிரோ
வேலை செய்துகொண்டே அனாயசமாகப் பாடினாள், கவினி. சேந்தனோ, கண்களை மூடிக்கொண்டு அந்தக் குரலோடு கலந்து கரைந்து போனான்.
பரமேஸ்வரி வந்துதான் அவர்களை நடப்புக்கு இழுத்து வந்திருந்தார். அவர் வடைக்கு அரைத்தெடுக்க, தேவையானவற்றைக் கலந்து குழைத்துக் குளிரூட்டிக்குள் வைத்த கவினி, “இன்னும் பாயாசம் காச்சுறதும் சோறு சமைக்கிறதும்தான்.” என்றவள், “ வடைய நான் வந்து சுடுறன்.” என்று பரமேஸ்வரி சொல்ல, “அதெல்லாம் நான் செய்வன் நீங்க போய்க் குளிச்சு வெளிக்கிடுங்க.” என்று, அவரை வெளியே அனுப்பிவிட்டாள்.
“நீங்க ரெண்டு பேரும் உடுப்புகள் எல்லாம் கொண்டு வந்தீங்களா, இல்ல போயிட்டு வரோணுமா?” இயலிடம் கேட்க, “இங்க வெளிக்கிடலாம் தானே? கொண்டு வந்தனாங்க. நேரம் இருந்தா ஹோட்டல் போயிட்டே வெளிக்கிட்டு வரலாம்.” என்றவளை முறைத்தாள், கவினி.
“இங்க வடிவா வெளிக்கிடலாம். ஒரு பிரச்சனையும் இல்ல.” என்ற இனிதன், “நேரம் இருக்குத்தானே இப்பதான் எட்டு மணி. நாங்க பாத்திரங்கள் கழுவி, இந்த இடத்தை ஒதுக்கி கிளீன் பண்ணுவம்.” என்றுகொண்டே,பின்புறம் பாத்திரங்களை எடுத்துச்சென்று வைத்துக் கழுவத் தொடங்கியிருந்தான்.
வாணன், சமையலறையையும் அதோடு சேர்ந்திருந்த சாப்பாட்டு அறையையும் கூட்டிச் சுத்தம் செய்தான்.
ஒரு கணம் இருபுறமும் பார்த்துவிட்டு, கவினியின் அருகில் சென்று ‘என்ன செய்து தர?’ என்று கேட்கத் தூண்டிய மனத்தை அதட்டிவிட்டு, “நானும் கழுவ வாறன்.” என்று வெளியே சென்றான், சேந்தன்.
“பாயாசம் ரெடி!” என்ற வேகத்தில், வரிசையாக நான்கு பெரிய ரைஸ் குக்கர்களில் அரிசியை வேகவிட்டுவிட்டு, வடை பொரிக்கத் தாச்சியை வைத்தாள், கவினி. நானும் நானும் என்றபடி வந்து நின்றாள், இயல்.
“வடை பொரிச்சிட்டு மரவள்ளி, பப்படம், மிளகாய் பொரிக்கச் சரியா இருக்கும்.” என்றபடி, கவினி வடையைத் தட்டி தட்டி போட, இயல் பார்த்து இறக்கினாள்.
சரியாக ஒன்பது கடந்து பத்து நிமிடங்கள் ஆகியிருக்க, சமையல் முடிவுக்கு வந்திருந்தது. இனிதனின் தகப்பன் ஐவரையும் வெகுவாகப் பாராட்டிவிட்டு அவ்விடத்தை மொப் செய்துவிட்டார்.
இனிக் குளிச்சு வெளிக்கிடுறதுதான் என்று நகர்ந்த ஐவருள்ளும் அழகிய நட்பு மலர்ந்திருந்தது.


