அன்றிரவு மிகிந்தலையில் தங்குவதாகத் திட்டம். முன்பதிவு செய்திருந்த ரிசார்ட் வந்து சேர்கையில் இருளவன் ஆட்சி தொடங்கிவிட்டிருந்தது. மரங்கள் அடர்ந்த சோலைக்குள் இருந்த அந்த ரிசார்ட், மின்சாரக் குளியலில் தேவலோகமாகக் காட்சி தந்தது. கூட வந்தவர்கள் அச்சுற்றத்தை சிலாகித்துக் கதைத்தபடி நடந்தார்கள். இது எதுவுமே சேந்தன் கருத்தில் பதியவில்லை. பயணப்பையை இழுத்துக்கொண்டு கடனே என்று நடந்தான்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை, குறிப்பிட்ட இடைவெளியில் சிறு சிறு வீடுகள் அமைத்திருந்தார்கள். அதில், இவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் மேலும் கீழுமாக இரு விசாலமான அறைகள் இருந்தன.
தனித்தனியாகக் குளியலறை, கழிவறை உட்பட அனைத்து வசதிகளோடுமிருந்த அறைகளில், ஆறு பேர்கள் வரை தங்கிக்கொள்ளலாம்.
ஆண்கள் ஐவரும் கீழேயிருந்த அறையை எடுத்துக்கொள்ள, பெண்கள் ஐவரும் மாடியறைக்குள் நுழைந்தார்கள்.
வலு சுத்தமாக இருந்தது. திறந்திருந்த யன்னல்களால் சிலுசிலு காற்று கசிந்து வந்த வண்ணமிருந்தது. தெறித்த பால்வண்ண நிலவொளி, அந்தச் சூழலுக்கு, நேரத்துக்குக் கூடுதல் ரம்மியம் சேர்த்தது. அச்சூழல் வேறெதையும் சிந்திக்க விடவில்லை; உறக்கத்துக்கு உந்தித் தள்ளியது.
பயணக் களைப்பென்று இல்லையென்றாலும் கல்யாண அலுவல்களில் ஓடித்திரிந்த களைப்பு இல்லாதிருக்குமா? அதுவே அடுத்த ஒரு மணித்தியாலத்தில் எல்லோரையும் உறங்க வைத்திருந்தது. ஒருவன் மட்டும், மனத்தில் அறிமுகமில்லாத தவிப்போடு முழித்திருந்தான்.
படுக்கையில் யன்னலோரமாகச் சரிந்திருந்தவன் விழிகள், தெளிந்து கிடந்த கருவானில் குத்திட்டு நின்றன.
பளிச்சென்று ஒளிர்ந்து, குளுமையை வாரியிறைத்தான், வண்ண மதி. சேந்தனின் பார்வையைக் கவ்விப்பிடித்து வைத்துமிருந்தான். அதுபார்த்தால், நிலவில் தெரிந்த மேடு பள்ளங்களினூடு ஒருத்தியின் முகமல்லவா தெரிகிறது!
கரமிரண்டாலும் விழிகளோடு முகத்தையும் சேர்த்து அழுத்தித் துடைத்தான், சேந்தன். அப்படியே தலையையும் கோதிக்கொண்டான்.
அருகில், சீரான மூச்சு விட்டுத் துயில் கொண்டிருந்தான், சூரியன். அவனருகில் மெல்லிய குறட்டை ஒலியோடு உறங்கிக் கொண்டிருந்தான், இனிதன். அவர்களுக்கு இடைஞ்சல் செய்யாத வண்ணம் எழுந்தமர்ந்தான், இவன்.
அருகிலிருந்த கைப்பேசியை எடுத்து நேரம் பார்த்தான். பதினொன்றா?
எழுந்துவிட்டான். கைப்பேசி வெளிச்சத்தில் ஹூடி ஒன்றை எடுத்தணிந்துகொண்டு சத்தம் செய்யாது பால்கனி கதவைத் திறந்தவன், அங்கு போட்டிருந்த மூங்கில் நாற்காலியை நிறைத்தான். சுள்ளென்று குளிர்ந்தது. ஹூடியின் தொப்பியை நன்றாகவே இழுத்து விட்டுக்கொண்டான். இதமாக இருந்தது. அந்த இதம் மனத்துள் இல்லையே! என்ன செய்தால் மனம் ஒருநிலைப்படும்?
கருத்தின்றியே வான் வீதியைப் பார்த்திருந்தான், சேந்தன். சில நிமிடங்கள் கடந்திருக்கும், கைப்பேசியை உயிர்ப்பித்திருந்தான். விரல்கள் அதுபாட்டுக்கு வட்ஸ்அப்பை இயக்கின. அதில் நுழைந்த வேகத்தில், கவினியில் சென்று நின்றான்.
முதல் வேலையாக டிபியில்(Display Picture) இருந்த புகைப்படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தான். மனத்துள் லேசாகக் கதகதப்பின் சாயலடித்தது. உதடுகளில் முறுவல் நெளிந்தது.
“இப்பிடியெல்லாம் அவ்வளவு கெதியா என்னைவிட்டு நீர் தள்ளிபோகேலா கவினி…கவி…ம்ம்ம் கனி….பச் கவினி!” முணுமுணுத்தபடியே அவளுக்கு அழைத்திருந்தான்.
அழைப்பு ஏற்கப்படவில்லை. அவள் உறங்கியிருப்பாள். மனம் உணர்ந்தாலும் விடாது அழைத்தான். மெல்ல மெல்ல ஒருவிதமான எரிச்சல் கூட உருவானது.
‘ அழைத்ததும் எடுத்தால் குறைந்து போவாளா என்ன?’ மனத்துள் சிடுசிடுத்தான். இந்தளவுக்கு உரிமை எடுத்து எரிச்சல் படுமளவுக்குத் தம்மிடையே பழக்கம் இருந்ததா என்ன? அதைப் பற்றிய எண்ணமே அவனுள் இல்லை. என்னவோ, தம்மிருவருள்ளும் நெடுங்காலமாய் நெருங்கிய தொடர்புள்ளது போன்றதொரு உணர்வு அவனுள்!