சாரல், ஆதவன் கலியாணம் வெகு வெகு விமர்சையாக நடந்தேறியது. அதிகாலையில் இருந்து இரவு வரை நேரம் போனதே தெரியாது உற்சாகத்தில் அலைந்தார்கள், இளையவர்கள். அந்தக் கையோடு, மணமக்கள் ஒரு கிழமைக்கு கண்டிக்குப் புறப்பட்டிருந்தார்கள்.
மறுநாள் மாலை மதிவதனி, விமலா,நிவேதா குடும்பங்கள் ஊர் சுற்றத் திட்டம் போட்டிருந்தார்கள். மகனுக்குப் பார்த்திருக்கும் பெண் வீட்டையும் கூப்பிட்டிருக்கலாமே, கூப்பிட்டிருக்க வேண்டும், சேந்தனும் அந்தப் பிள்ளை ஆதினியும் கதைத்துப் பழக நிறைய சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் என்று, கவலைப்பட்டபடி இருந்தார், நிவேதா.
திருமண வீட்டில் அவர்கள் அருகில் அமர்ந்திருந்தாலும் ஒரு சில வார்த்தைகள், நேருக்கு நேராகப் பார்க்கையில் சிறு முறுவலோடு சேந்தன் இருந்துவிட்டதில் அவருள் பெருங்குறை.
ஆதினியின் அம்மாவிடம் நிவேதா இதைச் சொல்லியிருந்தார்.
“எங்களால வரேலாது நிவி, வேணும் எண்டா ஆதினி உங்களோட வரட்டும். இயல், கவினி ஆக்கள் வருகினம் தானே!” என்றிருந்தார் அவர்.
மறுப்பாரா நிவேதா. இளையவர்களுக்குச் சொல்லவில்லை. சர்ப்ரைஸ்!
இப்படியிருக்கையில், கல்யாணத்துக்கு முதலே இந்தக் கதை எடுத்ததும் மறுத்திருந்தாள், கவினி. அதெல்லாம் வரலாம் லீவு போடம்மா என்றபடியிருந்தார், பூங்குன்றன். இரு மனமாக இருந்தவள், தாயும் அவளும் கதைத்துக்கொள்வதில்லையென்ற நிலை வந்தபின், போவதில்லை என்று உறுதியாகவே முடிவெடுத்துவிட்டாள். வெளியிடங்களில் வைத்து நாடகம் போடுவான் ஏன், பேசுபொருள் அவானேன்?
அதைக் கேட்டதிலிருந்து இயல் நச்சரித்தபடி இருந்தாள். கவினி அசைந்து கொடுக்கவே இல்லை. இனிதனின் தமையன் குடும்பமும் வந்து நிற்கிறார்களே! அவர்களைச் சாட்டினாள். கொழும்பில் கல்யாண வரவேற்பு வேறு இருக்கு. கல்யாணத்துக்கென்று ஐந்து நாள்கள் விடுமுறை எடுத்துவிட்டு மேலதிகமாக இரு கிழமைகள் எடுப்பதென்றால் சரி வரவே வராது என்று சாதித்துவிட்டாள். உண்மையும் தான்.
இரவிரவாக ஃபோனில் அலுப்படித்தது போதாதென்று அடுத்த நாள் விடிந்தும் விடியாத பொழுதில் தமையனையும் இழுத்துக்கொண்டு வந்து விட்டாள், இயல்.
“ இப்ப உங்களுக்கு லீவு தான் பிரச்சினையா? லண்டனுக்கு எடுத்துக் கதைச்சு ரெண்டு கிழமைகள் லீவு வாங்கித் தாறன் ரெடியாகுங்க!” பொன்னுருக்கலுக்குப் பின், கவினியின் ஒதுக்கம் உணர்ந்து, கதை பேச்சின்றி பார்வையால் துளைத்தபடியிருந்த சேந்தன், நேரடியாகவே சொன்னான். இவன் உதவி புரிய நினைத்த குடும்பங்களைச் சந்திக்கவென, அச்சுவேலிக்கும் கிளிநொச்சிக்கும் வருவதாகச் சொல்லிவிட்டு எவ்வளவு சாதுர்யமாக திருமணவேலைகளைச் சாட்டி ஒதுங்கியிருந்தாள். அந்தளவுக்கு, தாய் சொன்ன சொல்லுக்கு மதிப்பளிக்கிறாள் என்றது அவன் மனத்தை மிகவுமே கோண வைத்திருந்தது.
“சும்மா சாட்டுச் சொல்லாம வெளிக்கிடுங்க கவினி!” அவள் விழிகளை ஊடுருவும் பார்வையோடு அவன் சொன்னபோது, கவினியின் மனம் திடுக்கிட்டது. காரணம், அவன் பார்வையும் சொன்ன விதமும் நிச்சயம் வேறுபாடாக உணர வைத்தது. நெஞ்சாழம் வரை இறங்கிய பார்வை! முதல் முதல் மிகவுமே தடுமாறிவிட்டாள். தன் பார்வையைப் பட்டென்று விலக்கியும் இருந்தாள்.
“உண்மையாவே வேலைகள் இருக்கு இயல். இல்லாட்டி வாறதுக்கு என்ன? எனக்கும் விருப்பம் தான்.” என்றவள், “ஒண்டு செய்யிறன், கடைசியா நீங்க உனவட்டுன ரிசோர்ட்ல (Unawatuna) மூண்டு நாள்களுக்கு நிப்பீங்க எல்லா? அங்க நான் வாறன். இங்க சின்னாக்கள் இருக்கிறதால அத்தை , மயூரன் மச்சான் ஆட்களும் அப்பிடித்தான் வர இருக்கினம்.” என்ற முடிவில் உறுதியாக நின்றவளோடு, சேந்தன் அதன் பிறகு கதைக்கவில்லை.
“இயல் விடு, பெரிசா லெவல் அடிக்கிற ஆக்களோட கதை வேணாம், வா போவம்.” சிடுசிடுப்போடு சொல்லிவிட்டு அவன் எழுந்த வேகத்தை, பூங்குன்றன் கூட ஒரு மாதிரித்தான் பார்த்தார்.
“அண்ணா கொஞ்சம் நில்லுங்க, இன்னொண்டு கேக்க மறந்திட்டன்.” என்ற இயல், கலியாணத்தில் கவினி போட்டிருந்த நகைகளைக் காட்டும் படி கேட்டாள். தான் அதுபோலவே செய்யப் போவதாகவும் சொன்னாள். அது, சாரலுக்கு என்று பூங்குன்றனின் தாய் கொடுத்து, அவர்கள் விற்ற நகைகள்.