கவினி எடுத்து வந்து காட்டினாள். கைப்பேசியில் படம் எடுத்துக்கொண்டாள், இயல் .
“எல்லாம் எங்கட அப்பம்மாட. அதும் அவவிட அம்மா சீதனமாக் குடுத்ததுகள்.” கவினி பெருமையாகச் சொன்னாளா என்ன? இல்லை, அப்பம்மா என்று சொல்கையில் அவரில் உள்ள அன்புதான் வெளிப்பட்டது.
“வாவ்!உண்மையாவோ? அப்ப எத்தின வருச நகைகள்! ஆனாலும் எவ்வளவு வடிவா இருக்கு. உங்கட பிள்ளைகள் பிள்ளைகளிட பிள்ளைகள் எண்டு பரம்பரை பரம்பரையா வச்சிருக்க வேண்டிய நகைகள்!”
இயல் ஆசையோடு எடுத்துப் பார்த்துச் சொல்ல, கவனமாகத் தாயைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்,கவினி. ஆனால், பூங்குன்றன் அப்படியிருக்கவில்லை. மனைவியை முறைத்தார். வேண்டாமே என்ற பின்னரும் விற்றது அவர் மனத்தில் பலமாகவே தாக்கிவிட்டிருந்தது.
“போட்டுப் பாரும் இயல்.” அவள் மறுக்க மறுக்க போட்டுவிட்டு, முகம் பார்க்கும் சிறு கண்ணாடியைக் கொண்டு வந்து காட்டினாள்.
கணவர் பார்வையை அசட்டையாகக் கடந்தார், மதிவதனி.
“சாரலுக்கும் பிடிச்சு இருந்ததுதான். கிழவிட எண்டுதான்…” ஆரம்பித்துவிட்டு வாயை மூடிக்கொண்டார்.
இயல் சிரித்துவிட்டாள். இந்த நகை நல்ல வடிவு என்று சொல்லி, தனக்கும் செய்ய வேண்டும் என்றபோது, அதன் பின்னணி பற்றி விமலா சொல்லியிருந்தார். அதுவே, மதிவதனி ‘கிழவி’ என்றதும் சிரிக்க வைத்தது.
பூங்குன்றன் விசுக்கென்று எழுந்து சென்றுவிட்டார். மனைவியோடு தர்க்கம் புரிவதை, சொந்த வீட்டையே நரகமாக்கிக்கொள்வதை அவர் வெறுத்தார். அதற்கு ஒரேவழி அப்போதைக்கு அவ்விடம் விட்டு நகர்வது மட்டும் தான்.
மதிவதனிக்கோ, இயல் சிரித்ததும் ஒரு மாதிரியாகிற்று. அதுவும் இயல், சேந்தன் தன்னோடு அவ்வளவாக ஒட்டாத உணர்வும். அதுவே, கணவர் அங்கில்லை என்று உறுதி செய்துவிட்டுக் கதைத்தார்.
“நான் வேணுமெண்டு அவாவ ஏசுறதில்ல இயல். அந்தளவுக்கு அவவிட்டப் பட்டிருக்கிறன். சாகும் வரைக்கும் என்ர கையால அவா சாப்பிடேல்ல. அந்தளவுக்கு நான் வேண்டாத ஆள். ஆனா, என்ர வயித்தில தன்ர உருவத்தில் பிறந்தது…” சொல்லிக்கொண்டே மகளை பார்த்தார். “பச்! பிள்ள ஒண்டைப் பெத்து வளக்கிறது எவ்வளவு கடினம் எண்டு பெத்தாத்தான் தெரியுமம்மா!” கண்கலங்கிப் போனார்.
இயலுக்கு அவரை அவ்வளவாகப் பிடிக்காவிட்டாலும் ஒரு மாதிரியாகிற்று. சேந்தன், முறைப்போடு வெளியில் பார்த்தான்.
“அய்யோ அன்ரி என்ன இது?” எழுந்துசென்று கட்டிப் பிடித்தாள், இயல்.
“நீங்களே சொல்லிட்டீங்க அன்ரி. நீங்க சிரமப்பட்டுப் பெத்த பிள்ள கவினி. உங்கட மகள் அன்ரி. அதை நீங்க மறக்கிற மாதிரி நடக்கிறதோட பார்க்கேக்க, உங்கட மாமி உங்கள அப்பிடி நடத்தினது பெரிய விசயமாத் தெரியேல்ல.”அவள் இயல்பின்படி மீண்டும் முகத்துக்கு நேரே சொல்லிவிட்டாள். அசைவற்றிருந்தார், மதிவதனி.
அந்நேரம், வரவேற்பறைக்குள் நுழைந்த பூங்குன்றன் அப்படியே நின்றுவிட்டார். தன்னால் முடியாத ஒன்று ஒரு சிறு பெண்ணால் கேட்கப்படுகிறது!
“இயல்!”அவள் கரத்தைப் பற்றி வெளியில் இழுத்து வந்துவிட்டாள், கவினி.
“என்ன இது? இப்பிடியெல்லாம் கதைக்காதேயும் இயல். அவவுக்கு சும்மாவே என்னைப் பிடிக்காது. இனி இதை வச்சு வீண் பிரச்…” சொல்லிக்கொண்டு வந்தவள் பின்புறம் கேட்ட அரவத்தில் திரும்பினாள். சிவந்த விழிகளும் இறுகிய முகமுமாக நின்றிருந்தார், மதிவதனி.
இவள் வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு சேந்தன் இயலுக்கு விடை கொடுத்தாள்.
“இவேயோட ரெண்டு நாள்கள் கதைச்சு இருப்பியா? அதுக்குள்ள என்னப் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி இருக்கிற! நீ எல்லாம் என்ன பிறப்பு?” சண்டையைத் தொடங்கிவிட்டிருந்தார், மதிவதனி. ஒரு வார்த்தை கதைக்காது அறைக்குள் சென்று விட்டாள், அவள்.
“நீங்க கதைக்கிறது உங்களுக்கே நியாயமா இருக்கா வதனி? நான் வாய் திறக்கக் கூடாதெண்டு பொறுமையா இருந்தா விடுறியல் இல்ல. அவள் என்ன சொல்ல வேணும்? நீங்க தானே உங்கட சினேகிதிகளிட்ட ஒண்டுக்குப் பத்தாச் சொல்லுறனீங்க?” சீறினார், பூங்குன்றன்.
பிறகென்ன? வாழ்வில் அடிபட்ட முதிர்ந்த இருவர் சண்டைகோழிகளாகச் சிலிர்த்து நின்றார்கள்.காரசாரமான வார்த்தைகளால் மாறி மாறி விளாசிக்கொண்டார்கள். காதலித்த நாட்களிலிருந்து இன்று வரையிலான கசப்பான கதைகள் ஒன்று ஒன்றாகத் தெறித்து வந்து விழுந்தன.
அறைக்குள் அங்குமிங்குமாக நடந்த கொண்டிருந்தாள், கவினி. ஆத்திரத்தில் தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது. அவமானமாகவும் இருந்தது.
ஏதோ ஒரு புள்ளியில் இருவரில் ஒருவர் சுதாகரித்துக் கொள்வார், சற்றுமே யோசியாது பதிலுக்குப் பதில் கதைப்பதை நிறுத்துவார் என்று பார்த்தால் அது எங்கே?
சொற்களுக்கு உள்ள வலிமையை பெரும்பாலும் எவருமே உணர்ந்து கொள்வதில்லை. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான் சொற்பிரயோகத்திலும். சமய சந்தர்ப்பம் பாராது, யோசியாது, நிதானமின்றி வழுக்கி விழும் தகாத வார்த்தைப் பிரயோகம் ஆறாத வடுவை ஏற்படுத்தி விட வல்லது. என்னதான் மன்னிப்பும் மறதியும் கை கொடுத்தாலும் மனத்தில் ஏதோ ஒரு மூலையில் ஓட்டிக்கொண்டே இருக்கும். எப்போதோ ஒரு தடவை முன்னெழுந்து வந்து நினைவில் ஆடி ஓடித்திருந்து வலிக்கச் செய்து விடும்.
அப்படித்தான், பூங்குன்றனும் மதிவதனியும் இனி அவர்களுள் எதுவுமே இல்லையென்றளவில் கதை வளர்த்துக் கத்திக்கொண்டு நின்றார்கள்.
விசுக்கென்று வெளியில் வந்தாள்,கவினி.


