“ என்ன வச்சு இங்க ஆரும் சண்டை பிடிக்க வேணாம் சொல்லிட்டன்!” அவர்கள் குரலுக்கும் மேலாக இடையிட்டிருந்தது, அவள் குரல்.
“நீ ஆசைப்பட்டது இதானே? இந்த மனிசன நம்பிக் கட்டி நான் என்னத்த அனுபவிச்சன்? தாய்க்காரி இருக்கிற வரை வதைப்பட்டன். எனக்காக ஒருநாள் நிண்டிருக்குமா இந்தாள்? உம்மாண்டியா இருந்திட்டா எங்களுக்கு விளங்காதா? எல்லாத்தையும் விட என்ர வாழ்க்கையில உன்னைப் பெத்து நான் அனுபவிச்சது எல்லாம் கொடுமை தான்.” அழுதார் மதிவதனி.
“இவ்வளவும் தான் உனக்கு மரியாதை! உம்மாண்டி வாய் திறந்தா எப்பிடி இருக்கும் எண்டு காட்ட வச்சிராத! இனியும் சும்மா சும்மா அவளையே நொட்டிக் கொண்டிருந்தியோ…” தகப்பன் ஒருமையில் அழைத்தபடி தாயை நெருங்க அதிர்ந்து போனாள், கவினி.
“அப்பா என்னப்பா நீங்க, இப்ப என்னத்துக்கு வீணாச் சண்டை போடுறீங்க? அயலட்டை என்ன நினைக்கும் சொல்லுங்க. பரிசிகேடு!” என்றுவிட்டுத் தாயிடம் திரும்பினாள்.
இவர்களிடையே நின்று இப்படிக் கதைப்பதே அவளுக்குப் புது விசயம். தாயோடு சரிக்குச் சரியாக, ஏன் அவருக்கும் மேலாகவே குரல் உயர்த்தி மல்லுக்கட்டுவாள்தான். கோபத்தோடு சுர்ரென்று வலிக்கும்படி பதிலடி கொடுக்கவும் தயங்க மாட்டாள். அதுவெல்லாம், நன்றாக விபரம் தெரிந்த பின்னர்,கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகக் குறைந்து போயிற்று. இல்லை என்றும் சொல்லலாம். படிப்பு, பிறகு வேலை வேலை என்று அலைபவள் வீட்டில் நிற்கையில் அவர் என்ன சொன்னாலும் அமைதியாக அல்லது சிறு முணுமுணுப்போடு விலகிப் போய் விடுவாள்.
ஒருபோதும் சமரசமான தொனியில் அன்போடு நெருங்க முயன்றதில்லை. இப்போதும் அதற்கு மனம் நினைக்கவில்லை. தாய் தகப்பன் என்ற பந்தத்திற்கோ பிணைப்பிற்கோ அவள் ஏங்கவில்லை. தீவிர முகபாவனையோடு தாயைப் பார்த்தாள்.
“சத்தியமா ஒரு வார்த்தை…ஒரு வார்த்தை உங்களப் பற்றி ஆரிட்டையும் நான் கதைக்கிறது இல்ல. அப்பிடிக் கதைக்கிறது எல்லாம் நீங்கதான். என்ர நல்ல ஃபிரெண்ட் வாணனுக்கு இந்த வீட்டில என்ர இடம் எது, நீங்க என்ன எப்பிடி நடத்த்திறனீங்க எண்டு தெரியுது எண்டா அதையும் நீங்கதான் சொல்லி இருக்கிறீங்க. அவன் இங்க வந்து போற நேரத்தில என்ன எப்பிடி நடத்திறீங்க எண்டு வைச்சு அவனே அதையெல்லாம் தெரிஞ்சு இருக்கிறான்.” என்றவள் மூச்சு விடாது தொடர்ந்தாள்.
“ உங்கட சினேகிதிமாரிட பிள்ளைகளோட கதைக்க நான் நினைக்கவே இல்ல. ஒதுங்கிப் போனாலும் வந்து வந்து கதைக்கிறது அவேதான். என்ர வேலை விசயமா, சேந்தனை, அச்சுவேலிக்கும் கிளிநொச்சிக்கும் கூட்டிக்கொண்டு போக இருந்த நான் அதைக் கூடச் செய்யேல்ல. அதிலயே உங்களுக்கு விளாங்கோணும். ஏலுமெண்டா சொல்லி என்னோட கதைக்கிறத நிப்பாட்டுங்கவன், புண்ணியமாப் போகும்!”என்ற வேகத்தில் தகப்பனைப் பார்த்தாள்.
“அப்பா, நான் அக்காட ரிசப்சனுக்கு கொழும்புக்கு வருவன் , இண்டைக்கு நான் மட்டக்களப்புக்குப் போறன். வெளிச்சம் ஷூட்டிங் இருக்கு. அடுத்த ரெண்டு கிழமை அங்கதான்.”
“நீயுமாம்மா? இவா கதைக்கிறது எல்லாம் புதுசா? விட்டுத் தள்ளு பிள்ள. அந்தளவுதான் அறிவு!” தான் கதைப்பதைக் கேட்க நிற்காது நடந்தவளைத் தொடர்ந்து வந்தார், தகப்பன்.
“இண்டைக்கு வாற மாதிரிச் சொன்னனீ எல்லாம்மா? வேற ஆரிட்டையோ கேட்டிருக்கு எண்டும் சொன்னாய். இப்ப என்ன இப்பிடிச் சொல்லுற? இவா கதைச்சதுக்கா?”
“அது சரி வரேல்லப்பா, லீவு எடுக்கேலாது! ” அவர் முகம் பாராது சொன்னாள்.
“அப்ப ட்ரிப்பில கடைசி மூண்டு நாள்களுக்கு ரிசோட்டுக்கு சரி வர ஏலாதோ?”
“இல்லப்பா, அதும் வசதிப்படாது!” விருட்டென்று உள்ளே சென்றுவிட்டாள்.
“இப்ப உனக்குச் சந்தோசமா? உங்கட மனுசரோட நீங்களே போங்க. நானும் என்ர மகள்ட ரிசப்சனுக்கு நேர வந்து கொள்ளுறன்.” மனைவியிடம் கோபத்தோடு இரைந்தார், பூங்குன்றன்.
“தகப்பனும் மகளுமா மானத்தை வாங்கிறது எண்ட முடிவோட இருக்கிறீங்களா?” என்ற மனைவிக்குக் கையோங்கிவிட்டார், பூங்குன்றன். மறுகணமே, “சே! உங்கள அடிச்சாலும் பாவம் தான் கிடைக்கும்.” என்றபடி விசுக்கென்று விலகிவிட்டார். வெளியே சென்றும் விட்டார்.
சொன்னால் சொன்னதுதான் என்று நடப்பவள் கவினி. அதன்படி, அடுத்த ஒரு மணித்தியாலத்தில் புறப்பட்டுவிட்டாள்.
வெளியே சென்றிருந்த பூங்குன்றன் வீடு திரும்பி வந்தபோது அவள் அங்கில்லை. மகளுக்கு அழைத்துக் கதைத்தார். பிரயாணத்தில் இருப்பதாகவும் மட்டக்களப்புக்குச் சென்றுவிட்டு எடுப்பதாகவும் சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.
விடுமுறை கிடைப்பது சிரமம் என்றிருந்தாலும் வாணனோடு கதைத்திருந்தாளே! தேவையான உடைகள் எடுத்து வைத்ததையும் கண்டிருந்தாரே! நெஞ்சம் கசந்தது. குற்றவுணர்வு குத்திக் குடைந்தது. பெற்ற மகளுக்கு நல்ல தந்தையாக இருக்க முடியவில்லையே!
கனகாம்பிகை இருக்கும் வரையில் பேத்தியைக் கண்ணாகப் பார்த்துக்கு கொண்டார். அதில் இவர் மனத்துள் குற்றவுணர்வு என்று எல்லாம் எழுந்ததில்லை. இன்றும் தமக்கை பரமேஸ்வரி அப்படித்தான். என்றாலும், தனக்கென்று ஒரு கடமை இல்லவே இல்லையா?
பூங்குன்றன் தளர்ந்து அமர்ந்துவிட்டார். முளையிலே கிள்ளி எறிந்திருக்க வேண்டிய ஒன்றை வளர்ந்து தளைக்க விட்டுவிட்டார். மிகவுமே களைப்பாக இருந்தது. மனைவியுடனான இத்தனை வருட வாழ்வில் அப்பப்போ ஏற்பட்ட மனச் சுணக்கங்கள் எல்லாம் ஒன்றாகித் திரண்டு கருங்கல்லாக இறுகி ‘வெறுப்பு’ உருவாகிவிட்டிருந்தது.
பூங்குன்றன் சுற்றுலாவுக்கு வரவில்லை என்றது அப்படியே இனிதன் கவனத்துக்குப் போயிருந்தது. “என்ன மாமா இது சின்னப் பிள்ளையாட்டம்?” என்றபடி வந்தான், அவன்.
“இதெல்லாம் சேர்ந்து கவினிக்குத்தான் இன்னும் பிரச்சினை ஆகும் மாமா.” சமாதானப்படுத்தியிருந்தான். அதன்படி, மாலையில் எல்லாருமாக வெளிக்கிட்டிருந்தார்கள்.
“என்ன நீங்க மூண்டு பேரும் வாறீங்க? கவினி வரேல்லையா?” என்று கேட்டது நிவேதாதான். கைப்பேசியில் கவனமாக அமர்ந்திருந்த சேந்தன் விசுக்கென்று நிமிர்ந்தான்.
“இது நல்ல கதையா இருக்கே . எங்க ஆள்?” என்றபடி வாகனத்திலிருந்து இறங்கியிருந்தாள், இயல்.
“சிலவேளைதான் லீவு கிடைக்கும் எண்டு சொன்னவா தானே. அவா மட்டக்களப்புக்கு வெளிக்கிட்டுட்டா.”என்றபடி ஏறியிருந்தான், இனிதன்.
“இல்லையே, நேற்றிரவு வாறன் எண்டுதான் சொன்னவா.” விடாது புறுபுறுத்தபடி அவளுக்கு அழைத்திருந்தாள், இயல்.
அவளோ, நீட்டுக்கும் சமாதானம் சொல்லிவிட்டுச் சகோதரியின் வரவேற்பில் சந்திப்போமே என்றிருந்தாள்.
சேந்தனுக்கு இந்தப் பயணத்தில் இருந்த ஆர்வமெல்லாம் சுத்தமாக வடிந்துவிட்ட உணர்வு. இயலின் முணுமுணுப்பையோ இவன் சலிப்பையோ கவனியாது வாகனம் நகர்ந்தது.
பின்புறம் அமர்ந்திருந்த வீட்டினர்ரோடு சேர்ந்து, இவன் வாழ்க்கைத் துணையென்று கை காட்டிய பெண்ணின் நகைப்பும் சேந்தன் காதுகளைத் தீண்டியது. அவனோ, மனத்துள் கவினியோடு முறைத்துக்கொண்டு நின்றான். மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த கவினியின் வட்ஸ்அப்பில் கடகடவென்று குறுஞ்செய்திகள் வந்து விழுந்தன.
இயல் வேறு கோபமாகச் செய்திகளை அனுப்பினாள்.
உள்ளங்கைக்குள் இருந்த கைப்பேசியில் விழிகளை பதித்தபடியிருந்தாள் ,கவினி. பதிலுக்குக் காத்திருந்தான், சேந்தன். நிமிடங்கள் மணியாகியதுதான் மிச்சம்.
‘அதெப்பிடி நீர் வராமல் போவீர்? நாளைக்கு ஒன்பதுக்கு நாங்க மிகிந்தலைக்கு (Mihintale) வருவம் . நீரும் அங்க வாறீர்!’ சற்றும் சளைக்காது தட்டியனுப்பினான்.
கட்டளையாக வந்திருந்த செய்தியைப் பார்த்தவள், ‘ப்ளீஸ் கவினி’ என்று வந்து விழுந்த இரு சொற்களில் மனத்துள் எதுவோ போலுணர்ந்தாள்.
தொண்டை அடைத்துக் கண்கள் கலங்கின. சேந்தனும் இயலும் மிகச் சொற்ப நாட்கள், அப்படியும் இல்லை, விரல்விட்டு எண்ணக்கூடிய மணிநேர அறிமுகம்தான். அப்பிடியிருக்க, அவர்களிடையே எப்போதிருந்து இந்தளவு நெருக்கம் உருவானது. மிகவுமே தவிப்பாக உணர்ந்தாள்.
அதுபோலவேதான், செய்தி அனுப்பிவிட்டு அந்தச் செய்தியில் பார்வையிருக்க அசையாது அமர்ந்திருந்தான், சேந்தன். அவன் தோளில் தட்டி எதுவோ கேட்ட இனிதனுக்குப் பதிலிறுக்க முடியாது தடுமாறி நின்றான், அவன்.