எல்லோரையும் ஏறவிட்டுக் கடைசியாகத்தான் ஏறினான், வேந்தன். மேலே வந்தவன் பின்னால் செல்லவில்லை; முதல் வரிசை இருக்கையில் மிக இயல்பாக அமர்ந்து கொண்டு தன் செலஃபீ ஸ்டிக்கைப் பொருத்தினான். அருகிலமர்ந்திருந்த இலக்கியா இதைச் சற்றுமே எதிர்பார்க்கவில்லை.
அவனுக்கு மறுபுறமாக, இடைவெளிவிட்டு இருந்த இருக்கைகளில் கவியும், சுகுணாவும் அமர்ந்திருந்தார்கள்; பின்னால் மற்றவர்கள்; அவன் அவளருகில் அமர்ந்ததை யாருமே வித்தியாசமாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் இலக்கியாவின் இருதயம் தான் பலமாகத் துடிக்கத் தொடங்கியிருந்தது.
அதே கையோடு பஸ் நகர, எழுந்து நின்று செல்ஃபீ எடுத்த ஆரூரனை இருக்கச் சொன்னபடி மேலே வந்த இளம் டூரிஸ்ட் கைட், வேந்தனுக்கு நேர் முன்னாலிருந்த சிறு இருக்கையில் அமர்ந்தவள், மைக்கை ஏந்தியவண்ணம் கணீரென்ற துள்ளலான குரலில் பேருந்து செல்லும் பாதையை, அங்கிருக்கும் முக்கிய இடங்களென்று விளக்கிக் கூறத் தொடங்கினாள்.
செவிகள் அவள் குரலை உள்வாங்கினாலும் எல்லோர் விழிகளும் சுற்றிச் சுழன்றபடியிருந்தன, இடையிடையே கேமராவுக்கும் வீடியோவுக்கும் வேலை வைத்தபடி.
எங்கு திரும்பினாலும் நெடுநெடுவென்று உயர்ந்திருந்த இராட்சச கட்டிங்கள், சூரியன் தகத்தகப்பை தாம் உடுத்தியிருந்த கண்ணாடிகளில் வாங்கி கொள்ளையழகை வாரியிறைத்துக்கொண்டிருக்க, அப்படியே ‘ப்ரையன் பப்ளிக் பார்க்’ அருகால் சென்ற பேருந்து 5 வது அவென்யூ மிட் டவுன் ஊடாக 102 மாடிகளோடு வானுயர்ந்த நிற்கும் ‘எம்பயர் ஸ்டேட்ஸ் பில்டிங்’கை அண்மித்தது.
“1931 ல் கட்டப்பட்ட இக்கட்டிடம் 1454 அடிகள் உயரமானது …” டூரிஸ்ட் கைட் சொல்வது செவிகளில் விழ எல்லோர் பார்வையும் அக்கட்டிடத்தில்!
அந்தக்கணத்தில், “டோய் இங்க பாரும்!” காதோரமாக உரசிய இரகசியக்குரலில் திடுக்கிட்டுத் திரும்பினாள், இலக்கியா. கண்ணடித்தபடி ‘எம்பயர் ஸ்டேட்ஸ் பில்டிங்கோடு சேர்த்துத் தங்களிருவரையும் காமராவுக்குள் அடக்கிக்கொண்டான், வேந்தன்.
குப்பென்று முகம் வியர்க்கப் பின்னால் பார்த்தாளவள். நேர் பின்னால் இருந்தது அஜியும் ராஜியின் மகளும் கவினும். அவர்கள் பார்வை இவர்களில் இல்லையென்று ஊர்ஜிதம் செய்த பின்னரே சீராக மூச்சு விட முடிந்தது.
‘பொல்லாத கள்ளன்!’ அலறிய மனம், “கடவுளே உங்கள…” அடிக்குரலில் முணுமுணுக்க வைத்திட்டு!
அதைச் செவிகளில் வாங்கிக் கொண்டதன் வெளிப்பாடாக முறுவலுதித்தாலும் அவளைப் பாராது செல்ஃபிகளை எடுப்பதில் மும்முரமாக இருந்தானவன்.
“அறம்பிறமா ஃபோட்டோஸ் எடுக்கிறீங்க வேந்தன், எங்களுக்கும் தந்திருங்க.” குறுக்கிட்ட கவியின் குரல் வேறு இலக்கியை நடுங்கச் செய்திட்டு! ‘பார்த்திருப்பாவோ! ச்சே ச்சே இல்ல!’ அவள் மனதுள் நடுங்கிக் கொண்டிருக்க, “அது ஏனாம்?” கவியோடு பேச்சு வளர்த்தான், வேந்தன்.
“ஆங்! எங்களையும் சேர்த்தல்லோ எடுக்கிறீங்க, பிறகென்ன?”
“ஹா..ஹா…சரி சரி அப்பிடியே அனுப்புறன் நல்லதைச் செலக்ட் செய்து எடுங்கோ!”
“வேந்தன் அண்ணா இங்க இடமிருக்கு வாங்களன்.” ஆரூரன் குரல் இடையிட, “வந்திட்டாப் போச்சு!” ஒரேதாவலாகப் பின்புறம் சென்றுவிட்டவனை விசுக்கென்று திரும்பிப் பார்த்தாளிவள்.
சென்றமர்ந்தவனும் இடபக்கப் புருவமுயர அவளைத் தான் பார்த்தான். ‘நான் சொன்னதுக்கு இன்னும் பதில் வரேல்ல. பக்கத்தில வந்திருந்தா கழுத்துச் சுளுக்கிற அளவுக்கு மற்றப்பக்கமாத் திரும்பியிருக்க வேண்டியது. அந்தளவுக்குப் பயந்தா அதில இருக்க வேணுமா எண்டு யோசிச்சன், ஆரூரன் கூப்பிட்டுட்டான்.’ குறுஞ்செய்தி பறந்தது.
‘கிளிங்’ சத்தத்தில் கைப்பேசியைப் பார்த்தவள் மீண்டும் திரும்ப, “என்ன இலக்கியாக்கா வரப் போறீங்களோ? வாங்க இடமிருக்கு.” அழைத்த ஆரூரனுக்குப் பதில் சொல்லாது திரும்பியவள், ‘நீங்க சொன்னதா? அப்பிடி ஒண்டும் எனக்கு நினைவே இல்ல. பக்கத்தில வந்திருக்கேல்ல எண்டு அழுதம் பாருங்க. நீங்க எங்க இருந்தாலும் எனக்கு என்ன?’ படபடவென்று தட்டியனுப்பினாள்.
மீண்டும் பின்புறம் பார்க்கவில்லை. இருந்தாலும், அவன் கலகலப்பாகக் கதையும் சிரிப்புமாக இருக்க இருக்க இனம்புரியா எரிச்சல் உருவாகிற்று! தன்னிலும் தான். அருகில் வந்திருந்தாலும் இயல்பாகவிருக்க முடியவில்லையே! அவனும் தான் அமைதியாக இருக்க மாட்டான்.
“நான் வாறன்.” கவி பின்னிருக்கைக்குச் சென்றதில் எரிச்சல் அதிகரித்தாலும் கட்டுப்படுத்திக்கொண்டு சுற்றத்தை இரசிக்க முயன்றவள் அதில் வெற்றியும் கண்டாள்.
அடுத்து, கொரியன் டவுன் , ஃபிளாட்டயோன் டிஸ்ட்ரிக் ஊடாகச் சென்ற பேருந்து யூனியன் ஸ்கொயார், லிட்டில் இத்தாலி, சையினா டவுன் என்று சுற்றி, தான் சுமந்து செல்வோரின் மனதுக்கும் விழிகளுக்கு விருந்தளித்தபடியே புரூக்ளின் பாலம், சிட்டி ஹால் – வோல் ஸ்ட்ரீட் வழியாக சார்ஜிங் புல் வர இறங்கிக் கொண்டார்கள்.
அங்கும் நெருக்கமான நடமாட்டமிருந்தது. அதோடு பாதையோரமாக சிறு சிறு வண்டிகளில் உணவுப் பதார்த்தங்கள், தண்ணீர் விற்பனை வேறு.
சார்ஜிங் புல்…உரமானதொரு வெண்கல உருவம். அதனருகில் நின்று புகைப்படமெடுக்க முட்டிமோதினார்கள், உல்லாசப்பயணிகள். இவர்களும் புகைப்படமெடுக்கும் நோக்கில் பாதையைக் கடந்து நெருங்கினார்கள்.
“1987 பிளெக் மண்டே பங்குச் சந்தை வீழ்ச்சியை அடுத்து சிசிலியன் ஆர்ட்டிஸ்ட் ‘அட்ரோ டி மொடிக்’ தான் இதைச் செய்தாராம்.” விக்கியிலிருந்து பார்த்துவிட்டுச் சொன்னான், ஆரூரன்.
“ம்ம் 3200 கிலோவாமே.1989 ல தான் இங்க கொண்டு வந்தவேயாம்.” அஜியும் சேர்ந்துகொண்டாள்.
“எவ்வளவு கடினமான நிலையையும் உறுதியும் துணிவோடும் எதிர்கொள்ள வேணும் எண்டதைக் குறிக்கிறதுதான் இது!” தன்பங்கிற்குச் சொன்னான், வேந்தன்.
கதைத்துக்கொண்டே, ஒரு மாதிரி நெருங்கியடித்து அதோடு ஒட்டி நின்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள்.
“சரி, இனி போட் எடுக்கிற இடத்துக்குப் போவம்.” நாதன் நகர முனைய, “கொஞ்சம் நில்லுங்கப்பா, இதில ஏதாவது வாங்கிக்கொண்டு போவம். பிறகு நேரம் வராது.” பாதையோரமாக இருந்த நினைவுப் பொருட்கள் விற்போரை அணுகினான், ஆரூரன். பின்னால் சென்றார்கள் இளையவர்கள்.
“அம்மா கவினும்…” அஜியை இழுத்துச் சென்றான், கவின்.
“சரி கெதிப் பண்ணுங்க…” மாறன் சொல்லிக்கொண்டிருக்கையில் இவர்களை அணுகிய ஒருவனோடு கதைத்துவிட்டு, “இவரோட போனா போட்டுக்கு டிக்கெட் எடுக்கலாம் அங்கிள். அந்தா அங்க…” சற்றே தள்ளி கை காட்டியபடி சொன்னான் வேந்தன்.
“பக்கத்தில தானே…நாம போய் எடுப்பம் இவையள் வாங்கிக்கொண்டு வரட்டும்.” என்றார் நாதன்.
அவனோடு மீண்டும் கதைத்த வேந்தன், “போட்டடிக்குக் கொஞ்சத் தூரம் தான், எண்டாலும் பஸ்ஸில தான் போகோணும்; இன்னும் இருபது நிமிசம் இருக்காம் பஸ் வர.” என்றுகொண்டே நாதனோடு நடந்தான்.


