ஆரபி நல்ல அழகி. அந்த அழகுதான் அவன் கண்களில் முதலில் பட்டது. தவறாயன்று! ரசனையாக. அழகான மலரொன்று பூத்திருந்தால் கடக்கிற நேரமெல்லாம் அதை ரசித்துவிட்டுக் கடப்பது போன்று, அவளைக் கண்டால் அவன் பார்வை ஒருமுறை அவளில் தங்கி விலகும்.
ஆனால், அவளுக்கு இவனைப் பிடிக்காதாம். இவன் ஏதாவது பிரச்சனையில் மாட்டி, அது அவள் காதிற்குச் சென்றதோ அவன் சரியாம். அந்தளவில் ‘உன் அண்ணா என்ன பெரிய இவரா, ஒரு நாளைக்கு எவனாவது நடு வீதியில் வைத்துப் பொட்டென்று போடப் போகிறான் பார், பெரிய ரவுடி என்று நினைப்பு’ என்று இவனை வறுத்து எடுப்பாளாம்.
அவள் போனபிறகு இதையெல்லாம் வினோதினி இவனிடம் சொல்லிச் சிரிப்பாள். அவன் எப்படி இருந்தால் அவளுக்கு என்னவாம்? சினமும் சிரிப்பும் சேர்ந்தே உண்டாகும் இவனுக்கு.
ஆனாலும் தங்கை உண்மையைத்தான் சொல்கிறாளா என்றும் இருக்கும். அந்தளவில் இவனைக் கண்டால் பிள்ளைப் பூச்சியைப் போல் இவன் புறம் திரும்பவே மாட்டாள். இவளா அப்படி எல்லாம் சொன்னாள் என்று யோசிக்கிற அளவில் இருப்பாள்.
இப்படி இருக்கையில்தான் ஒரு நாள் இவன் மாடியேறி வருகையில், “எங்கே உங்கள் வீட்டு மங்குனி அமைச்சர்? தெருப்பொறுக்க போய்விட்டாரா?” என்று இவள் கேட்பதும், “அடியேய்! அண்ணாவை அப்பிடிச் சொல்லாத எண்டு உனக்கு எத்தின தரம் சொல்லுறது?” என்று வினோதினி அதட்டுவதும் கேட்க அப்படியே நின்றுவிட்டான்.
“பெரிய நொண்ணா! ஏழாலைச் சந்தில குத்திக்கொண்டு இருக்கிறார். இதுல அடுத்தவன் ஒரு பிழை செய்தா இவர் பொங்கிக்கொண்டு போவாராம்.” என்றவள் பேச்சில் அதிர்ச்சி என்பதை விடவும் மலைத்துப்போனான் சகாயன்.
பார்க்கிற நேரமெல்லாம் பம்மிக்கொண்டு திரிந்தவளுக்குள் இப்படி ஒரு முகம் இருக்கும் என்று அவன் யோசிக்கவேயில்லை. அடுத்து வந்த நாள்களில் அந்தக் கோபம் அவனுக்குள் கணகணத்துக்கொண்டேதான் இருந்தது.
வினோதினி தன் தோழி என்கிற உரிமையில் அவர்களுக்குள் பேசிக்கொண்ட விளையாட்டுப் பேச்சு என்று புரியாமல் இல்லை. ஆனால், விளையாட்டுக்கேனும் ஒரு பெண் அவனைப் பார்த்து அப்படியெல்லாம் சொல்வதா? மங்குனி அமைச்சர், தெருப்பொறுக்குகிறவன், மங்கி என்பதெல்லாம் என்ன?
அன்றொருநாள் இவன் வெளியில் புறப்படுகையில் சரியாக அவள் இவர்கள் வீட்டுக்குள் உள்ளிட்டாள். முறைப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டுப் பேசாமல் போகத்தான் இருந்தான். ஆனால், உலகத்திலேயே இல்லாத அப்பாவி போன்று மார்போடு அணைத்திருந்த கொப்பிகளும் குனிந்த தலையுமாக வந்தவளைக் கண்டு அவனுக்குப் பற்றிக்கொண்டு வந்துவிட்டது.
இந்த நடிப்பு நடிக்கிறவள்தானே அன்று அந்தப் பேச்செல்லாம் பேசினாள்? அதுகொடுத்த சினத்தில் அவள் தன்னைக் கடக்கும் நொடியில் அவள் புறமாகத் தன் புறங்கையை வேகமாக விசுக்கினான். அவன் என்னவோ பயம் காட்டத்தான் அப்படிச் செய்தான்.
அதை எதிர்பாராதவள் மெய்யாகவே அடித்துவிடப் போகிறான் என்று பயந்து, பாய்ந்து விலக முயன்று, தடக்குப்பட்டு விழுந்திருந்தாள். அதில் அவள் நெற்றி அவன் வீட்டுச் சோஃபாவின் கைப்பிடியில் மோதியிருந்தது.
வலியில் துடித்துப்போனாள் ஆரபி. நொடியில் கண்கள் இருட்டிக்கொண்டு வந்துவிட்டன. என்ன நடந்தது என்று விளங்கிக்கொள்ளவே சில கணங்கள் பிடித்தன. காயம் கொடுத்த வலியில் கலங்கிச் சிவந்துவிட்ட முகமும், குற்றம் சாட்டும் பார்வையுமாக அவனைப் பார்த்துவிட்டு, வந்த வழியிலேயே திரும்பி ஓடி வந்துவிட்டாள்.
செய்வதறியாது நின்றுவிட்டான் சகாயன். வேண்டுமென்று செய்யவில்லை. ஆனால், அது விபரீதத்தில் முடிந்துபோயிற்று. இரவு முழுக்க அவனால் உறங்க முடியவில்லை. அவளின் கசங்கிப்போன முகமும், குற்றம் சாட்டிய பார்வையும் மிகவுமே தொந்தரவு செய்தன.
அடுத்து வந்த நாள்களில் அவள் அவன் வீட்டுக்கு வரவில்லை. எப்படி இருக்கிறாள், நெற்றிக் காயம் என்னாயிற்று என்று பார்க்கத்தான் முதன்முதலில் அவள் கண்ணில் படுவாள் என்று நினைத்த பகுதிகளுக்குப் போக ஆரம்பித்தான்.
பாடசாலை, டியூஷன் எல்லாமே அவளுக்கும் வினோதினிக்கும் ஒன்று என்கையில் ஒரே ஊரில் என்றாலும் அவளைத் தனியாகப் பிடிப்பது என்பது அவனுக்குக் குதிரைக் கொம்பாகவே இருந்தது.
இரண்டு நாள்கள் கடந்த நிலையில் வினோதினி வேறு, “அம்மா, ஆரபின்ர நெத்தில காயம். ரெண்டு நாளைக்கு முதல் கோயிலுக்குப் போயிற்று வரேக்க மாடு முட்டிட்டுதாம்.” என்று சொன்னது இவன் காதிலும் விழுந்திருந்தது.
இவன் என்ன மாடா என்று கோபம் எழுந்த அதே நேரம் வேறு என்னதான் சொல்லிச் சமாளிப்பாள் என்றும் தோன்றிற்று. அந்தளவில் காயமா என்று அதுவேறு ஒரு மாதிரியாகிற்று.
அதற்குமேல் முடியாமல் அவர்கள் டியூஷன் சென்று வரும் நேரத்தில் அந்தப் பாதையால் பைக்கை விட்டான். இவனைக் கண்டுவிட்டு வீதியில் மட்டுமே பார்வையைப் பதித்துப் போனவள் முகத்தை, குறிப்பாக அவள் நெற்றியை கூலர் அணிந்திருந்த இவன் விழிகள் உன்னிப்பாகக் கவனித்தன.
ஆழமான காயம்தான். நன்றாகக் கன்றிச் சிவந்திருந்தது. அவள் முகமும் சரியாக இல்லை. மனநிலை கெட்டுவிட நேரே வீட்டுக்கு வந்து அவளை முட்டிய சோஃபாவில் அமர்ந்தான். ஒரு கரம் முட்டிய அந்தக் கைப்பிடியில். அவன் என்ன உணர்கிறான் என்று அவனாலேயே கணிக்க முடியவில்லை. அதே நேரத்தில் இதற்கு அவளும்தானே காரணம் என்று முரண்டியது மனது.
விளக்கம் சொல்லிவிட்டால் கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்குமோ என்றெண்ணி அவளை அணுகினான். முகம் கொடுக்க மறுத்தாள் அவள்.
அவளின் அந்தச் செய்கையும், அவன் பேச முயன்ற பொழுதுகளில் எல்லாம் நாசுக்காக ஒதுங்கிப் போன விதமும் முதலில் அவனை அவமானப்படுத்தின. ‘போடி! நீ பெரிய இவள்!’ என்றுவிட்டு வந்தாலும் மாம்பழ வண்டாக அவனுக்குள் இருந்து குடைந்துகொண்டே இருந்தாள்.
அதுவரையில் சாரணியர் இயக்கத்தில் இருந்தவளை அவன் பெரிதாகக் கண்டுகொண்டதே இல்லை. அதன் பிறகு இருக்கிற வேலைகளை எல்லாம் அவளிடமே கொடுத்தான். முகம் பார்க்க மாட்டாயா, அந்தளவில் நான் என்ன பொறுக்கியா என்று ஒரு கோபம்.
இதெல்லாம் அவர்களின் உயர்தரம் கடைசி வருடத்தில் நடந்தவை.


