“இதை நீ அங்கேயே சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்!” என்றான் சகோதரன். அவ்வளவு சொல்லியும் மடச்சி மாதிரி அனைத்தையும் அக்காவிடம் ஒப்பித்துவிட்டாளே என்பது அவனுக்கு!
மித்ராவோ தங்கையிடம் மன்னிப்புக் கேட்டவனுக்கு அவளை ஏற்றுக்கொள்ளும் மனம் இல்லாமல் போய்விட்டதே என்று மனதுக்குள் போராடினாள். அவள் கைகளோ தன் பாட்டுக்கு அந்தக் கைபேசியை இயக்கியது. உடனேயே அதில் வித்யா புன்னகைத்தாள்.
‘ஐரோப்பா பார்க்’குக்கு அவர்கள் எல்லோருமாகச் சென்றபோது, எடுத்த புகைப்படம்! எவ்வளவு இனிமையான நாட்கள் அவை! அவள் விழிகளில் கண்ணீரும் இதழ்களில் புன்னகையும் ஒருங்கே தோன்றிற்று!
அந்தப் புகைப்படம் ஆர்வத்தைத் தூண்ட, அதில் இன்னும் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தாள். பல புகைப்படங்களை ‘வாட்ஸ் அப்’ மூலம் அவனது கைபேசியிலிருந்து அனுப்பியிருந்தான். அதில் வித்யா இருந்தாள், சத்யன் இருந்தான், ஏன் அவன் கூட இருந்தான். ஆனால், மித்ரா மட்டும் இல்லவே இல்லை! துக்கப் பந்தொன்று வந்து தொண்டையை அடைத்தது.
விதம் விதமாக அவளை எத்தனை புகைப்படங்கள் எடுத்திருப்பான்! அதே பார்க்கில் வைத்து அவர்கள் நால்வருமாக எடுத்துக்கொண்ட படங்கள் எத்தனை! அதில் ஒன்று கூடவா அவனிடம் இல்லை?
அவளின் புகைப்படத்தை வித்தியின் கைபேசிக்கு அனுப்பவதில் அப்படி என்ன வந்துவிடப் போகிறது?
அல்லது அப்படித்தன்னும் அவளைப் பார்க்க அவனுக்குப் பிடிக்கவில்லை என்கிறானா? என்று எண்ணியவளுக்கு நெஞ்சுக்குள் தாங்கமாட்டாத வலியொன்று எழுந்தது. அவன் மனதிலேயே அவள் இல்லையாம்.. புகைப்படத்தில் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்று விரக்தியோடு எண்ணியவள், மேலும் ஆராய்ந்தாள்.
‘வாட்ஸ் அப்’பில் ‘கீர்த்தனன்’ என்கிற பெயரில் அவன் இலக்கங்களைப் பார்த்தவள் ‘காண்டக்ட் லிஸ்ட்’டை எடுத்துப் பார்த்தாள்.
அதிலும், வித்யா என்கிற பெயரில் அந்தக் கைபேசியின் இலக்கமும், சத்யனின் பெயரில் அவனதும், ‘ஸ்வீட் ஹோம்’ என்கிற பெயரில் அவர்களின் பெற்றவர்கள் வீட்டிலக்கமும் பதியப்பட்டிருந்தது. தீயணைப்புப்படை இலக்கம் முதல்கொண்டு போலிசின் இலக்கம் வரை இருந்த போதிலும் அவளுடையதைக் காணோம்! எவ்வளவு அடக்கியும் முடியாமல் விழிகள் கலங்கின.
போதாக்குறைக்கு, அவசரத்துக்குத் தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள் என்று கேட்டிருந்த இடத்திலும் அவனது வீடு மற்றும் கைபேசி இலக்கங்களும், சத்யனின் இலக்கமும் கொடுக்கப்பட்டு இருந்ததே ஒழிய அவளுடையதைக் காணவே இல்லை.
அந்தளவு தூரத்துக்கு அவளைத் தன் மனதிலிருந்து தூக்கி எறிந்துவிட்டானா? ஆனால், தவறென்று தெரிந்து அவள் செய்த தப்பு எதுவும் இல்லையே?
தானாகவே கையூன்றி, தானாகவே எழுந்து நடக்கும் குழந்தைக்கு விழுந்து காயம் பட்ட பிறகுதானே தெரியும், நடக்கையில் கவனமாக இருக்கவேண்டும் என்று! அல்லது அன்னை சொல்லிக்கொடுக்க வேண்டும். இங்கே எதையும் சொல்லிக்கொடுக்கவோ, புத்தி புகட்டவோ, செல்லும் வழியைக் காட்டவோ அவளுக்கு என்று யார் இருந்தார்?
எல்லோரும் இருந்தும் யாருமே இல்லா அனாதையாக அல்லவோ நிற்கிறாள்! அன்றும் இன்றும்!
என்ன முயன்றும் முடியாமல் கண்ணீர் கன்னங்களில் வழிந்துவிட, “அக்கா, நான் ஏதாவது பிழையாகச் சொல்லிவிட்டேனா?” என்று கலங்கினாள் வித்யா.
சத்யனோ கொதித்துவிட்டான்.“இதற்குத்தான் சொன்னேன் அந்தக் கண்றாவியை அங்கேயே எறிந்துவிட்டு வந்திருக்க வேண்டும் என்று! இப்போதாவது அதை எடுத்துக்கொண்டு வா. அவரின் முகத்திலேயே தூக்கி எறிந்துவிட்டு வருவோம். செய்வதை எல்லாம் செய்துவிட்டு இப்போது பரிசு தருகிறாராம் பரிசு. இங்கே யாருக்கு வேண்டுமாம் இது?” என்று சினந்தான் அவன்.
“நீ சொல்வதுதான் சரியண்ணா. அதைத் தாருங்கள் அக்கா. அவரிடமே தூக்கி எறிந்துவிட்டு வருகிறேன்.” என்றபடி வித்யாவும் எழுந்தாள்.
அவர்கள் இருவரையும் பொதுவாகப் பார்த்து சோகப் புன்னகை ஒன்றை சிந்தி, “அவர் தந்த பரிசை பத்திரமாக வைத்துக்கொள் வித்தி. என்றைக்கும் தொலைத்துவிடாதே!” என்று மென்குரலில் இயம்பியவாறே தங்கையிடம் கைபேசியை நீட்டினாள்.
ஒருகணம் திகைத்தபோதும், “இது எனக்கு வேண்டாம். நீங்கள் வாங்கித் தந்ததே போதும்!” என்றாள் வித்யா.
“அப்படிச் சொல்லாதேம்மா. அன்போடு அவர் தந்ததை மறுக்கக் கூடாது. அவருக்கு என் மீதுதான் கோபம். உங்கள் மீது இல்லையே. உங்கள் இருவரையும் அவருக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உங்களுக்கே தெரியும். அதனால் வாங்கிக்கொள். நீயும் கோபப்படாதே சத்யன்!” என்றாள் மித்ரா இருவருக்கும் பொதுவாக.
மீண்டும், அத்தான் சொன்னது போலவே அக்காவும் சொல்கிறாரே என்று திகைத்துப்போய் வித்யா நிற்க, தமக்கையின் பேச்சில் உடன்பாடு இல்லாதபோதும், மறுத்து ஏதும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டான் சத்யன்.
அவன் அருகில் சென்று மகனை வாங்கியபடி, “எதற்கு இந்த முகத் திருப்பல் சத்யன்? அவர்மேல் நீ கோபம் கொள்வதில் எந்த நியாயமும் இல்லை. தப்பு செய்தவள் உன் அக்கா. அதை என்றைக்கும் மறக்காதே!” என்றாள்.
தமக்கையின் விழிகளையே நேராகப் பார்த்து, “தப்புச் செய்தவள் நீ இல்லை அக்கா. நாங்கள் எல்லோரும்! அம்மா பிழை செய்யவில்லையா? அப்பா பெரும் தப்பே செய்யவில்லையா? இன்றுவரை அவர் திருந்தவே இல்லையே! தெரிந்தும் தெரியாமலும் உன் நிலைக்கு நானும் வித்தியும் கூடத்தானே காரணம். பிறகு எப்படி நீ தப்பு செய்தவள் ஆவாய்?” என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டான் அவன்.
தம்பியின் பேச்சில் நெஞ்சம் நெகிழ, விழிகள் கலங்க, வாயடைத்து நின்றுவிட்டாள் மித்ரா. அவளிடமே அவளுக்காக வாதாடுகிறானே.
உடனேயே தன்னைச் சமாளித்தபடி, “உனக்கு நான் அக்காடா. அந்தப் பாசம் உன் கண்ணை மறைக்கிறது. பாசத்துக்கு முன்னால் தப்புக்கள் தெரியாது. ஆனால் அவருக்கு…” என்று ஆரம்பித்தவளுக்கு அதை முடிக்கும் வகைத் தெரியவில்லை.
அப்போ அவன் உன்னில் நேசம் வைக்கவில்லையா? உன்னோடு உயிராகப் பழகவில்லையா? அந்த உயிர்நேசம் தவறுகளை மன்னிக்காதா? என்று அடுக்கடுக்காய் கேள்விகளைக் கேட்டு வாயடைக்க வைத்தது அவளது மனச்சாட்சி!
அதையே சத்யனும் கேட்டான். “அப்போ, அவர் காட்டிய அன்பும் வேஷம் தானேக்கா. அந்த அன்பு உண்மையாக இருந்திருக்க எதுவும் பெரிதாகத் தெரிந்திராது தானே.” என்றவனுக்குப் பதில் சொல்ல முடியாமல் போனபோதும், கீர்த்தனனை பற்றித் தம்பி தப்பாக நினைப்பதையும், அவன் மேல் மேலும் மேலும் கோபத்தை வளர்த்துக் கொள்வதையும் அவளால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
“அது அப்படியில்லை சத்தி..” என்று ஆரம்பித்தவளை கைநீட்டித் தடுத்தான் சத்யன்.
“நீ என்ன சொன்னாலும் உண்மை அதுதான் அக்கா. தன் சுயநலத்துக்காக உன்னைப் பயன்படுத்தியவருக்கு உன்னைக் குற்றம் சாட்டும் அருகதை கிடையாது! அப்படியானவரிடம் இருந்து எங்களுக்கு எதுவும் வேண்டாம்!” என்றான் உறுதியான குரலில்.
இப்படி ஒரேயடியாக அவரைத் தூக்கி ஏறிகிறானே என்று மனம் துடிக்க, “அவர் தந்ததைத் திருப்பிக் கொடுக்கவேண்டாம் சத்தி..” என்றாள் மன்றாடளாக.
உண்மையான நேசத்தை அலட்சியப்படுத்தி, தூக்கியெறிந்தால் எப்படி வலிக்கும் என்பதைத் தினம் தினம் அனுபவிக்கிறவள் அவள். அதே வலியை அவன் அனுபவித்துவிடக் கூடாது என்பதற்காகத் தம்பியிடம் மன்றாடினாள்.
அந்தத் தம்பியோ தமக்கையின் நிலையை நொடியில் கணித்தான்!
இதற்குமேலும் இதைப்பற்றிப் பேசினால் அவள் தாங்கமாட்டாள் என்பதை உணர்ந்துகொண்டான். அவள் மனதை மாற்ற எண்ணி, “அதை விடுக்கா. சந்துவுக்கு ஏதோ உடை வாங்கவேண்டும் என்றாயே, வாங்கிவிட்டாயா?” என்று கேட்டான்.
“இல்லைடா.. வாங்கவில்லை. பிறகு பார்க்கலாம்.” என்றாள் ஓய்ந்த குரலில்.
“என்ன பிறகு பார்க்கலாம்? எந்த வேலையையும் உடனுக்குடன் முடிக்கவேண்டும் என்று எங்களுக்குச் சொல்லித் தந்துவிட்டு இப்போது இப்படிச் சொல்கிறாயே. வா கடைக்குப் போய் வரலாம்.” என்றான் பிடிவாதமாக.
“களைப்பாக இருக்கிறது சத்தி. அதனால் நான் வரவில்லை. நீயும் வித்தியும் போய் வாங்கி வருகிறீர்களா?” என்று சொன்னவளை பார்த்தான்.
களைத்துத்தான் தெரிந்தாள். ஆனால், இப்படியே விட்டால் அழுது கரைவாள் என்றும் தெரியும் அவனுக்கு.
“அப்படி என்ன களைப்பு? காரில் தானே போகப் போகிறோம். வா எல்லோருமாகப் போகலாம். நாம் ஒன்றாகப் போயும் நிறைய நாட்களாகி விட்டதே. அப்படியே இரவு உணவையும் வெளியே எங்கேயாவது முடித்துவிட்டு வரலாம்.” என்றான்.
“பிடித்துவைத்த பிள்ளையார் மாதிரி அப்படியே இருக்காமல் முகத்தைக் கழுவிக்கொண்டு வா வித்தி.” என்று தங்கையையும் விரட்டினான்.
சோபாவில் இருந்து எழுந்தவாறே, “அப்போ இதை என்ன செய்யட்டும்?” என்று கைபேசியைக் காட்டிக் கேட்டாள் அவள்.
“அதுதான் அக்கா பத்திரமாக வைத்துக்கொள்ளச் சொன்னாளே, பிறகு என்ன?” என்றவன் விடாமல் , “ம்.. வாருங்கள் போகலாம்!” என்றான் திரும்பவும்.
இனி என்ன சொன்னாலும் கேட்கமாட்டான் என்று புரிந்த சகோதரிகளும் தயாராகி வர, நால்வருமாகச் சத்யனின் காரில் கிளம்பினர்.


