தனிமைத் துயர் தீராதோ 8 – 3

அங்கே, உணவை ஆர்டர் கொடுத்துவிட்டு அது வருவதற்காகக் காத்து நின்றவளின் விழிகள் ஆசையோடும், ஏக்கத்தோடும் தகப்பனையும் மகனையும் நோக்கியே பாய்ந்தது.

 

அவள் அமர்ந்திருந்த நாற்காலிக்கு நேரெதிரே இருந்த நாற்காலியில் கீர்த்தனன் அமர்ந்திருக்க, அவன் மடியில் சந்தோஷ் அமர்ந்திருந்தான். தட்டில் இருந்த உருளைக்கிழங்கு பொரியலை எடுத்து மகனுக்கு அவன் ஊட்டிவிட, சந்துவும் இன்னொரு பொரியலை எடுத்து தந்தைக்கு ஊட்டிக்கொண்டிருந்தான்.

 

“கள்ளன்டா நீ! அப்பாவின் வாய்க்குள் அடைந்துவிட்டு நீ சாப்பிடாமல் தப்பித்துக்கொள்ளும் திட்டமா?” என்று அவன் சிரிப்பதும், அதைப்பார்த்து மகன் குறும்போடு நகைப்பதும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவளுக்கு.

 

“நீ சாப்பிடு கண்ணா. அப்பா பிறகு சாப்பிடுகிறேன்.” என்றபடி மகனுக்கு உணவை கொடுத்துக்கொண்டிருந்தான் கீர்த்தனன்.

 

இதே அக்கறையையும் பாசத்தையும் கனிவையும் கூடுதலாகக் காதலையும் அவளும் ஒருகாலத்தில் அனுபவித்து இருக்கிறாள். சொர்க்கலோகத்தில் மிதந்திருக்கிறாள்.

 

அப்படித் தன்னை மறந்து, தனக்கு விதிக்கப்பட்டிருந்த சாபங்களை மறந்து சொர்க்கலோகத்தில் பறந்து திரிந்தவளையும் ஒருநாள் விதி சடாரென்று நிலத்தில் தள்ளி விழுத்திவிட்டதே!

 

எழும்பவே முடியாத அளவுக்கு அல்லவோ அடி விழுந்தது. அந்த அடியின் வலி இன்னும் குறையாமல் அவள் உயிரையும் உள்ளத்தையும் தாக்கிக்கொண்டு அல்லவா இருக்கிறது.

 

கீர்த்தனனின் உணவு வந்துவிட அதை வாங்கிக்கொண்டு வந்து அவனிடம் கொடுத்து, “சாப்பிடுங்கள்..” என்றாள் மெல்லிய குரலில்.

 

புருவங்கள் சுருங்க தட்டை பார்த்தான் கீர்த்தனன். அதில் இருந்த அத்தனையும் அவனுக்குப் பிடித்த, அவன் விரும்பி உண்ணும் உணவுவகைகள்! அதுவரை நேரமும் இருந்த புன்னகையைத் தொலைத்தது அவன் முகம்.

 

காரணம் புரியாமல் விழித்தாள் மித்ரா.

 

இருக்கையில் இருந்து எழுந்தவன் மகனை ஒரு கையால் பற்றிக்கொண்டு, மறு கையால் பின் பாக்கெட்டுக்குள் வைத்திருந்த பர்சை எடுத்து ஒரு இருபது யூரோ பணத்தை அவளுக்கு முன்பாக வைத்தான்.

 

இதனைச் சற்றும் எதிர்பாராதவளோ, அறை வாங்கிய குழந்தையாக விலுக்கென்று நிமிர்ந்து வேதனையோடு அவனைப் பார்க்க, அவனோ பர்சை திரும்பவும் வைத்துவிட்டு உணவுத்தட்டை கையில் எடுத்துக்கொண்டு மகனோடு வெளியே நடந்தான். அங்கே இருந்த சறுக்கியில் சந்துவை விளையாட விட்டுவிட்டு, அங்கேயே போடப்பட்டிருந்த ஒரு மேசையின் முன்னால் அமர்ந்து, மகனைக் கவனித்தவாறே உண்ணத் தொடங்கினான்.

 

நெஞ்சுக்குள் எதுவோ அடைக்க, பேச்சற்று மூச்சற்று நின்றுவிட்டாள் மித்ரா. ஆனாலும், அவன்கொடுத்த பணத்தை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. அவளை நோகடிக்கவேண்டும் என்பதற்காகவே கொடுக்கப்பட்டது என்றாலும், அது அவன் கொடுத்தது ஆயிற்றே!

 

உணவை முடித்த கீர்த்தனன், வளைந்து வளைந்து வரும் சறுக்கியில் இருந்து வரமாட்டேன் என்று நின்ற மகனுக்குச் சற்று நேரம் விளையாட்டு காட்டிவிட்டு புறப்படவும், தானும் எழுந்து வெளியே வந்தாள்.

 

அவனை நிமிர்ந்து பார்த்தால் எங்கே அழுது விடுவோமோ என்று பயந்து அவனைப் பாராமல் மகனை வாங்கக் கைகளை நீட்டினாள்.

 

அவனும் மகனைக் கொடுக்க முயல, அவர்கள் இருவருமாகச் சேர்ந்து பெற்றெடுத்தவனோ, தந்தையிடம் இருந்து வரமாட்டேன் என்று அவன் கழுத்தை கட்டிக்கொண்டு சிணுங்கத் தொடங்கினான்.

 

சந்துவுக்குமா அவளைப் பிடிக்கவில்லை? விழிகள் கலங்க, தன் கலக்கத்தைக் கீர்த்தனனுக்குக் காட்டக்கூடாது என்று நினைத்தது எல்லாம் மறக்க மகனைப் பார்த்துப் பரிதாபமாக விழித்தாள் மித்ரா.

 

அவளை ஒருநொடி பார்த்த கீர்த்தனன், “சாப்பிட்டுவிட்டு விளையாடியது அவனுக்குக் களைப்பாக இருக்கிறது போல. நித்திரைக்குச் சிணுங்குகிறான் என்று நினைக்கிறேன். நீ முன்னால் போ. நான் அவனை வைத்துக் கொஞ்சத்தூரம் காரில் ஓடிவிட்டு பிறகு கூட்டிக்கொண்டு வருகிறேன்.” என்றான் தணிந்த குரலில்.

 

சரி என்று தலையாட்டிவிட்டு அவள் வீட்டுக்கு செல்ல, சற்று நேரத்தில் மகனை தோளில் தாங்கியபடி வந்தான் கீர்த்தனன்.

 

அவனை வாங்க மித்ரா கையை நீட்ட, அவளிடம் கொடுக்காமல், “உறங்கிவிட்டான். நித்திரை குழம்பினால் திரும்பவும் சிணுங்குவான். எங்கே என்று சொல், நானே கிடத்துகிறேன்..” என்றான்.

 

வியப்போடு அவனைப் பார்த்தாள் மித்ரா. அன்று உள்ளே வாருங்கள் என்று அவள் கெஞ்சியும் வராதவன் இன்று மகனுக்காக, அவன் நித்திரை குழம்பிவிடக் கூடாது என்பதற்காக வருகிறேன் என்கிறானே.

 

எப்படி என்றாலும், அதுவரை அவளும் மகனும் மட்டுமே வாழ்ந்த அந்த வீட்டில் அவன் பாதமும் படப்போகிறது என்கிற எண்ணம் தந்த தித்திப்போடு, “உள்ளே வாருங்கள்..” என்று அவனை அழைத்துச் சென்றாள்.

 

வேகமாக அறைக்குள் சென்று தலைக்கு ஒரு தலையணையும் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாகத் தலையணைகளையும் அண்டு கொடுத்துவிட்டு விலகி நின்றாள்.

 

கீர்த்தனன் மகனோடு கட்டிலின் கரையில் அமர்ந்து, மெதுவாகச் சந்துவை கிடத்திவிட்டு, போர்வையையும் போர்த்தியவன், அவன் நெற்றியில் குனிந்து முத்தமிட்டான்.

 

அதை ஏக்கத்தோடு பார்த்திருந்தாள் மித்ரா. நடப்பவை அனைத்தும் நிஜம்தானா என்கிற திகைப்பு வேறு. தினமும் அவள் கற்பனையில் கண்ட காட்சியொன்று நிஜத்தில் நடந்து கொண்டிருந்ததில் அவள் உள்ளம் உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவித்தது. தன்னை அதிலிருந்து மீட்கமுடியாமல் திணறினாள்.

 

சத்தம் காட்டாமல் மெதுவாகக் கட்டிலில் இருந்து எழுந்த கீர்த்தனன், வெளியே வர திரும்பியபோது அவன் விழிகளில் பட்டது அங்கே சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு போட்டோ!

 

ஒருகணம் செயலற்று நின்றவனின் விழிகள் அந்தப் போட்டோவை வெறித்தன.

 

அதில், இப்போது அவன் இருக்கும் வீட்டின் சோபாவில் மித்ரா அமர்ந்திருக்க அவளின் தோளை சுற்றிக் கையைப் போட்டிருந்த கீர்த்தனன் சிரித்துக்கொண்டிருந்தான். அவன் விழிகளில் காதலும் கனிவும் போட்டிபோட்டு மின்னிக் கொண்டிருந்தன. மித்ராவின் மடியிலோ குழந்தை சந்தோஷ் அமர்ந்திருந்தான்.

 

நிஜத்தில் நடக்காத ஒன்று நிழல்படமாகத் தொங்கிக்கொண்டிருந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அவன் இழந்துவிட்ட சொர்க்கத்தின் அளவு புரிந்தது. ஒரு பக்கம் வேதனை எழுந்த அதே வேளை, இவளால் தானே இதையெல்லாம் நான் இழந்து நிற்கிறேன் என்கிற ஆத்திரம் கிளம்பியது.

 

அடுத்தக் கணமே விழிகளில் சினம் தெறிக்க மித்ராவை நோக்கினான்.

 

“எதற்கு இந்த வேஷம்? நீ மிக நல்லவள் என்று காட்டவா? அல்லது இப்படியான ஒரு வாழ்க்கைக்கு ஏங்குகிறேன் என்று மறைமுகமாக என்னிடம் சொல்கிறாயா? அப்படி ஆசைப் படுவதற்கும் ஒரு தகுதி வேண்டாம்?!” என்று வார்த்தைகளால் அவளை வதைத்தவன், கோபத்தோடு அங்கிருந்து வெளியேறினான்.

 

அவன் கோபத்தின் கரணம் புரியாது துடித்துப்போய் நின்றாள் மித்ரா.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock