வார இறுதிகளில் வேலைக்குப் போகும் அவன் அதைச் சொன்னபோது, அவளுக்குக் கண்களில் நீர் திரண்டது. அவனுடைய மாத வருமானமே முன்னூறு யூரோக்கள் தொடங்கி நானூறுக்குள் தான் இருக்கும். அதில் நூற்றியம்பதை அவளுக்குத் தந்துவிட்டு? அப்படியிருந்தும் எந்தத் தயக்கமும் இன்றித் தர முன்வருகிறான்.
யாரோ ஒருவன். அவளுக்கு அடைக்கலம் தந்த வீட்டின் பிள்ளை. அவளோடு நட்பாகப் பழகிய ஒரே காரணத்துக்காகப் பணம் தருகிறேன், நீ படி என்கிறான். இந்த மனம் அவளைப் பெற்றவர்களுக்கு இல்லாமல் போயிற்றே!
அவன் பணத்தை நேரடியாக மறுக்க முடியாமல், “எனக்கு வேலைதான் வேண்டும்!” என்றாள் மித்ரா.
“அதாவது உன் பணம் எனக்குத் தேவையில்லை என்கிறாய்.”
“ப்ளீஸ் நீக்கோ. இப்படியெல்லாம் பேசாதே. எனக்குக் கவலையாக இருக்கிறது. உன் பணம் வேண்டாம் என்று நினைத்திருந்தால் நீ தந்த கைபேசியையும் வாங்கியிருக்க மாட்டேன். நீதானே சொன்னாய், நாம் உழைத்து நம் பணத்தில் வாழவேண்டும். அடுத்தவரை எதிர்பார்க்கக் கூடாது என்று.”
அவன் தானே அவளின் போதகன், வழிகாட்டி எல்லாமே! முதன் முதலில் வேலைக்குப் போகையில் அவன் சொன்னதை நினைவில் வைத்து சொன்னாள் மித்ரா.
“அதற்கு உனக்கு இன்னும் வயதிருக்கிறது.”
சற்றும் இறங்கிவர மறுத்தான் அவன். இந்தக் கோபம் கூட அவளுக்காகத்தான்!
அவனின் அன்பிலும் நட்பிலும் கண்ணைக் கரித்தாலும், “எந்த வயதாக இருந்தால் என்ன? உழைக்க ஆசைப்படுவதில் தப்பில்லையே.” என்று அவளும் தன் பிடியிலேயே நின்றாள்.
“ஆக, என்ன சொன்னாலும் உன் முடிவிலிருந்து நீ மாறமாட்டாய்?”
பதில் சொல்லாமல் அவள் அமைதியாக நிற்க, “உன் மாநிலத்துக்கான பேப்பரில் கடைசிப் பக்கத்தில் பார். அவர்களின் தொலைபேசி இலக்கம் இருக்கும். அதற்கு அழைத்து உன் விபரத்தை கொடு. யாராவது வேலையை விடும்போது அந்த இடத்தை உனக்குத் தருவார்கள்.” என்று அறிவித்தான்.
தனக்குத் தேவையான தகவல் கிடைத்துவிட்ட போதும், அவனது கோபம் அவளைப் பாதித்தது.
“உனக்கும் என்மேல் கோபமா நீக்கோ?” தழுதழுத்த குரலில் கேட்டாள்.
அந்த ‘உனக்கும்’ என்ற வார்த்தை அவனைப் பாதித்தது. அப்போ வேறு யாருக்கோவும் அவள் மீது கோபம் இருக்கிறது என்றுதானே பொருள். வேறு யாருக்கோ என்ன யாருக்கோ? அவளின் தாய்த் தந்தையருக்குத்தான்!
அதுதான் போனமுறை விடுமுறையை அவர்களின் வீட்டில் கழித்துவிட்டு வந்தவள், நடந்ததைச் சொல்லி, “அம்மா கூட என்னைத் தூக்கி எறிந்துவிட்டார் நீக்கோ.” என்று அவன் தோளில் சாய்ந்து அழுதாளே.
அவளை அவனும் அழ வைப்பதா? சட்டெனத் தன் கோபத்தைக் கைவிட்டுவிட்டு, “ஹேய் ஏஞ்சல்! உன்மீது எனக்குக் கோபம் வருமா என்ன? அதனால் முட்டைக் கண்ணீர் வடிக்காதே.” என்றான் இலகுவான குரலில் கேலி இழையோட.
“ஹப்பாடி! இப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது. நீக்கோவின் கோபம் போய்விட்டதே..” என்று துள்ளிக்குதித்தாள் அவள்.
“இல்லாவிட்டால் மட்டும் என் கோபத்துக்குப் பயந்தவள் பார் நீ.” என்று சொல்லிச் சிரித்தான் அவன்.
“ஆனால் ஒன்று! உன் படிப்பில் எந்தக் குறையும் வரக்கூடாது. அதேபோல வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வேலை செய்யவேண்டும். அதையும் தாண்டி என்ன உதவி வேண்டுமானாலும் நீ என்னைக் கேட்கவேண்டும். புரிந்ததா?” என்றான் அழுத்தமாக.
“கட்டாயம் நீக்கோ. நீ சொன்னதை நிச்சயம் மீறமாட்டேன். என் படிப்பு எனக்கும் மிக முக்கியம்.” என்றவள், மேலும் சற்றுநேரம் அவனோடு உரையாடிவிட்டு கைபேசியை வைத்தாள்.
அடுத்தக் கணமே அவர்கள் வீட்டுப் போஸ்ட் பெட்டியில் போடப்பட்டிருந்த பேப்பரை எடுத்துவந்து, அதிலிருந்த இலக்கத்துக்கு அழைத்து, தான் அந்த வேலை செய்ய ஆவலாக இருப்பதாகத் தெரிவித்தாள்.
அவளின் வீட்டு தொலைபேசி இலக்கத்தையும், பிறந்த திகதி முதல் படிக்கும் பள்ளியின் பெயர், வீட்டு விலாசம் என்று அனைத்தையும் வாங்கிக் கொண்டவர்கள், நீக்கோ சொன்னது போலவே ஏதாவது வெற்றிடம் கிடைத்தால் அதை அவளுக்குத் தருவதாகச் சொல்லி வைத்தார்கள்.
ஏற்கனவே சிரத்தை எடுத்து படித்தவள், அதன் பிறகான நாட்களில் நீக்கோ சொன்னதற்காகவும் இன்னுமே கவனமெடுத்து படித்தாள். தம்பி தங்கைகளையும் மிக நன்றாகக் கவனித்துக்கொண்டாள்.
கையில் பணமே இல்லை என்கிற தறுவாயில், அவர்களின் வீட்டை சுற்றி இருக்கிற இருநூறு வீடுகளுக்குப் பேப்பர் போடும் வேலையும் கிடைத்தது.
சத்யனையும் வித்தியையும் பார்த்துக் கொள்வதிலும், அவளின் படிப்புக்கும் எந்த இடைஞ்சலும் வரக்கூடாது என்று எண்ணி, மாலை நேரத்தை அதற்காக ஒதுக்கியவள் காலையில் ஐந்து மணிக்கே எழுந்து வீடு வீடாகச் சென்று பேப்பர் போட்டுவிட்டு வந்தாள்.
அவளே அவளின் செலவுக்கு வழி செய்து கொண்டதிலும், சண்முகலிங்கத்தின் வழிக்கே அவள் வராமல் இருந்ததிலும், சத்யன் வித்தியை பார்த்துக் கொண்டதிலும் எந்தப் பிரச்சனையும் எழாமல் நாட்கள் மிக வேகமாக நகர்ந்தன. இல்லையில்லை வருடங்கள் மிக வேகமாக ஓடின!
மித்ராவுக்குப் பதினெட்டு வயதாகியிருந்தது. இப்போது வருமானம் போதாது என்று பேப்பர் போடும் வேலையை விட்டுவிட்டு, ஒரு ரெஸ்டாரன்ட்டில் திங்கள் முதல் வெள்ளிவரை மாலையில் இரண்டு மணித்தியாலங்களும், சனி ஞாயிறுகளில் முழு நாளும் என்று ஒரு வேலையைத் தேடிக் கொண்டிருந்தாள்.
டிரைவிங் லைசென்ஸ் படித்துக் கொண்டிருந்தாள். அன்று கார் ஓடிவிட்டு வீட்டுக்கு அவள் வந்தபோது, காலில் கட்டுடனும் முகத்தில் பெரும் வலியுடனும் சோபாவில் சாய்ந்திருந்தார் ஈஸ்வரி.
அதில் பதறி, “என்னம்மா? என்ன நடந்தது? ஏன் காலில் கட்டுப் போட்டிருக்கிறது?” என்று அவரருகில் ஓடிவந்து கேட்டாள் மித்ரா.
“ஹாஸ்பிட்டலில் வழுக்கி விழுந்துவிட்டேன். அது என்னவோ எலும்பு பிசகிவிட்டதாம். வலி தாங்கவில்லை.” என்றார் அவர் வேதனையோடு.
சற்றே எடை அதிகரித்துவிட்ட அன்னை நெடுங்காலமாக வேலை செய்வதால், இதற்கு முதலும் அவர் முகத்தில் தெரிந்த அதீத களைப்பையும் கவனித்து வைத்திருந்தவள், “இனி நீங்கள் வேலைக்குப் போகவேண்டாம் அம்மா. வீட்டிலேயே ஓய்வாக இருங்கள்.” என்றாள் அன்போடு.
“எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் இந்த மனுஷன் என்ன சொல்கிறாரோ தெரியவில்லை.” என்று முனகினார் அவர்.
அம்மாவின் சம்பளம் நிற்பதை அப்பா விரும்பமாட்டார். விரும்பமாட்டார் என்ன, பெரிய ஆட்டாமே ஆடிவிடுவார் என்று யோசித்தவள், “அப்பாவுக்கு உங்கள் சம்பளம் நிற்கக் கூடாது என்பதுதானே பிரச்சனை. வேண்டுமானால் நான் என் சம்பளத்தைத் தருகிறேன். நீங்கள் நில்லுங்கள்.” என்றாள் எந்தத் தயக்கமும் இன்றி.
மகளுக்கு என்று எதையுமே செய்யாதவருக்கு அவளின் பேச்சுக் குத்தியது போலும், ஒன்றுமே சொல்லாமல் அப்படியே அமைதியாகிவிட்டார். அதை அறியாதவளோ, தாய் தன் பணத்தை வாங்கத் தயங்குகிறார் போலும் என்றெண்ணி, “நான் வேண்டுமானால் அப்பாவிடம் கதைக்கட்டுமா?” என்று கேட்டாள்.
“இல்லையில்லை. வேண்டாம். நானே கேட்டுவிட்டுச் சொல்கிறேன்.”
அவள் சண்முகலிங்கத்தின் முன்னால் வந்தாலே அவருக்குப் பிடிக்காது. இதில் பேசினால்? ஏதாவது சண்டை வந்துவிடும் என்று பயந்து அவசரமாகச் சொன்னார் ஈஸ்வரி.
“சரிம்மா.” என்றவள், அவரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டாள்.
அடுத்தநாள், “அப்பாவிடம் பேசினீர்களா?” என்று அவள் கேட்டதற்கு, “ம்.. அவருக்குச் சம்மதமாம்.” என்றார் ஈஸ்வரி.
முகம் மலர, “அப்போ நீங்கள் சத்யனையும் வித்யாவையும் வீட்டில் இருந்து பார்த்துக் கொள்ளுங்கள். நான் இனி தினமும் ஐந்து மணித்தியாலங்கள் வேலைக்குப் போகிறேன்.” என்று மகிழ்ச்சியோடு சொன்னாள் மித்ரா. சொன்னதோடு மட்டுமல்லாமல் அப்படியே செய்யவும் செய்தாள்.
அந்த மாதம் அவளுக்கு வந்த சம்பளத்தில் டிரைவிங் ஸ்கூலுக்குக் கட்டவேண்டியத்தைக் கட்டிவிட்டு, மாதச் செலவுக்கு என்று கொஞ்சத்தையும் வைத்துகொண்டு கார் வாங்குவதற்கு என்று பாங்கில் போடும் மீதிப் பணம் முழுவதையும் அன்னையின் கையில் கொடுத்தாள் மித்ரா.
அடுத்தநாள் காலை பள்ளிக்கூடம் செல்வதற்குத் தயாராகி வெளியே வந்தவள், அன்னையும் வேலைக்குச் செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பதைக் கண்டு திகைத்துப் போனாள்.
“எங்கேம்மா வெளிக்கிட்டீர்கள்?” எதையும் காட்டிக்கொள்ளாமல் அவள் விசாரிக்க,
“வேலைக்கு” என்றார் அவர் சுருக்கமாக.
“நான் என் சம்பளத்தைத் தந்தேனே அம்மா. பிறகும் ஏன் வேலைக்குப் போ..” என்று அவள் கேட்டு முடிக்க முதலே,
“அது எந்த மூலைக்குக் காணும் ஈஸ்வரி. நீயும் வேலைக்குப் போ!” என்று மனைவியிடம் கர்ஜித்தார் சண்முகலிங்கம்

