“எப்படி அண்ணா இருக்கிறாய்?” பாசம் கரைபுரண்டு ஓடியது கவியின் குரலில்.
“எனக்கென்ன? நன்றாக இருக்கிறேன். அங்கே மாமா மாமி, சேகரன், திவ்யா குட்டி எல்லோரும் நலமா?” என்று விசாரித்தான்.
“எல்லோரும் நலம் அண்ணா. இவர் இன்றைக்குச் சுவிஸ்-இலங்கை தூதரகத்துக்குப் போய்விட்டு வந்தார். திவியின் பிறந்தநாள் விழா அழைப்பிதழைக் காட்டிக் கேட்டதால் இன்னும் ஒரு மாதத்துக்கு அம்மா நிற்பதற்கு அனுமதி வழங்கி இருக்கிறார்கள். திவியின் பிறந்தநாளுக்கு எல்லாவற்றையும் எப்படிச் செய்து முடிக்கப் போகிறேன் என்று பயந்துகொண்டு இருந்தேன். இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது.” என்றாள் கவிதா.
“இல்லையென்றாலும் சங்கரி மாமியும் இருக்கிறார் தானே கவி.”
“அவர் இருந்து? நான் செய்யும் எல்லாவற்றிலும் குறை மட்டும்தான் பிடிப்பார். பலநேரம் எரிச்சல்தான் வரும். என்ன செய்வது என்று பொறுத்துக்கொண்டு இருக்கிறேன். எல்லாம் என் தலைவிதி. எனக்கு இப்படியொரு மாமியார் வந்து வாய்த்திருக்கிறார். அவரால்தான் இதையும் உன்னிடம் கேட்கவேண்டி இருக்கிறது.” என்றவளின் பேச்சை முழுமையாக அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சேகரனின் தாயார் சங்கரி சற்றே பழமை விரும்பி. அதோடு எதிலும் சுத்தமும் ஒழுங்கும் பார்ப்பவர். அதனாலேயே சற்றுக் கண்டிப்பானவராகவும் இருப்பார். மற்றும்படி நல்ல மனது. இதை அவனே பலதடவை கவிதாவின் வீட்டுக்குச் சென்ற பொழுதுகளில் அவதானித்து இருக்கிறான். அதையெல்லாம் இப்போது சொன்னால் சண்டைக்கே வந்துவிடுவாள் அவன் தங்கை. எனவே அதை விடுத்து, “என்னவாம் மாமி?” என்று கேட்டான்.
“தீவியின் பிறந்தநாளையும் பல்லுக்கொளுக்கட்டை கொட்டுவதையும் ஒன்றாகச் செய்யலாம் என்று சொன்னார். தாய்மாமன் நீதானே வந்துநின்று எல்லாவற்றையும் செய்யவேண்டு. அதனால் உன்னை முறையாக அழைக்கச் சொன்னார். கட்டாயம் வந்துவிடு அண்ணா.” என்று அழைப்பு விடுத்தாள்.
“இதென்ன கவி. திவிக்குட்டியின் பிறந்தநாளுக்கு வராமல் இருப்பேனா? எப்போது செய்கிறீர்கள் என்று சொல், இரண்டு நாட்களுக்கு முதலே வந்துவிடுகிறேன்.”
தாயின் பேச்சினால் எதைச் சொல்லப் போகிறாளோ என்று சற்றே யோசனையில் ஆழ்ந்திருந்தவனின் மனம் இதுதான் விசயமா என்று எண்ணி ஆசுவாசமாகியது. அதில் உற்சாகமாகவே சொன்னான்.
ஆனால், அன்னையையும் தங்கையையும் இன்னும் அவன் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்பதை அடுத்தக் கணமே நிரூபித்தாள் கவிதா. அடுத்த மதத்தில் அவர்கள் குறித்திருந்த நாளை சொன்னவள், “நீ மட்டும் வந்தால் போதாது அண்ணா. உன் குடும்பத்தோடு வரவேண்டும்.” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள்.
என் குடும்பமா? அதுதான் தொலைந்தே போனதே! தனிமரமாய் அல்லவோ நிற்கிறேன். ஆறாக்காயத்தின் மீது ஆணி அறைந்தது போலிருந்தது அவளின் பேச்சு.
மித்ராவின் வீட்டில் கண்ட போட்டோ வேறு கண்ணுக்குள் வந்துநின்று அவன் உயிரை வதைக்க, “என்ன சொல்கிறாய் கவி? எனக்கேது குடும்பம்?” என்றான் கீதன் வறண்ட குரலில்.
“ப்ச்! என்ன அண்ணா நீ? இந்தக் கருமத்தை என் வாயால் சொல்லவே எனக்குப் பிடிக்கவில்லை. எல்லாம் என் மாமியாரால் வந்தது! அந்தம்மா தான் நீ இதுவரை உன் குடும்பத்தோடு இங்கே வந்ததே இல்லையாம். எப்போது பார்த்தாலும் தனியாக வருகிறாயாம். அதனால் இந்த விசேசத்துக்கு உன் மனைவி மகனோடுதான் நீ வரவேண்டும் என்று கட்டாயமாகச் சொல்லச் சொன்னார்.” என்றாள் வெறுப்போடு.
அவன் மித்ராவை சட்டப்படி பிரிந்துவிட்டது சங்கரி மாமிக்குத் தெரியாதுதான். கவிதாவும் அவன் அம்மாவும் சேர்ந்துதான் அதைச் சொல்லவேண்டாம் என்று அன்று அவனைத் தடுத்தார்கள். அதை அறிந்தால் கவியின் வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை வரலாம் என்று அன்னை சொல்லவும், அப்போது அவன் இருந்த மனநிலையில் சரிதான் என்று விட்டுவிட்டான்.
அதோடு மனைவியைப் பிரிந்துவிட்டேன் என்று எல்லோரிடமும் சொல்ல அது ஒன்றும் பெருமைக்கு உரிய விசயமும் அல்லவே! இன்றுவந்து இப்படிச் சொன்னால் அவன் என்ன செய்வான்?
“அது எப்படிக் கவி? முடியாதே..”
“முடியாதா? ஏன் முடியாது? அவள்.. அதுதான் அந்த மித்ராவிடம் சொல்லிக் கூட்டிக்கொண்டு வா. அதை விட்டுவிட்டு எப்படி என்று என்னிடமே கேட்கிறாயே?” என்று ஆத்திரப்பட்டாள் அவன் தங்கை.
சுயநலமாகத் தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துப் பேசும் கவியின் பேச்சில் கோபம் எழுந்தபோதிலும், “அவளிடம் எப்படி நான் கேட்க முடியும்? அதற்கு எந்த உரிமையும் எனக்கு இல்லை. அதனால் சந்துவை வேண்டுமானால் கூட்டிக்கொண்டு வருகிறேன். வந்து மாமியிடம் அனைத்தையும் நானே சொல்கிறேன்.” என்றான் நிதானமாக.
“விட்டால் என் பிள்ளையின் பிறந்தநாளிலேயே என் வாழ்க்கையை நாசமாக்கி விடுவாய் போலவே. ஏன் அண்ணா, நான் கணவன் குடும்பம் என்று வாழ்வது உனக்குப் பிடிக்கவில்லையா? உன்னைப்போல நானும் புருஷனை பிரிந்து வாழவேண்டும் என்று ஆசைப் படுகிறாயா நீ?” என்று குதித்தாள் கவிதா.
“உளறாதே கவி!” என்று அதட்டினான் கீதன்.
“நான் ஏன் உளற? என் மாமிக்கு நீ யமுனாவை விரும்பிவிட்டு, அவளைக் கைவிட்ட கதை தெரியும். பிறகு மித்ராவைக் கட்டிக்கொண்டதும் தெரியும். இப்போ நீ அவளையும் விவாகரத்து செய்துவிட்டாய் என்று தெரியவந்தால் உன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? கொஞ்சக் கொஞ்ச நாட்களுக்கு ஒருத்தியை பிடிக்கிறாய் என்று தானே. நீயும் அப்படித்தானே இருக்கிறாய். இதெல்லாம் தெரியவந்தால் உன் தங்கையாகப் பிறந்த பாவத்துக்கு என் புருஷனை என்னிடமிருந்து பிரித்துவிடுவார். அதன்பிறகு என் கதி என்ன என்று யோசி. ஒழுக்கம், நேர்மை என்று உளறிக்கொண்டு திரியும் அந்த மனுசி அதைக் கட்டாயம் செய்வார்.” என்றவளின் பேச்சில், வாயடைத்துப் போனான் கீதன்.
அவனா ஒழுக்கம் கெட்டவன்? ஒழுக்க மீறலை சகிக்க முடியாமல் தானே அவன் உயிரில் அணுவணுவாய் கலந்துவிட்டவளையே பிரிந்தான். அவனைப்போய்…. என்னவெல்லாம் சொல்கிறாள் அதுவும் அவன் தங்கை?!

