தனிமைத் துயர் தீராதோ 13 – 1

அன்று அதிகாலையிலேயே எழுந்து தயாராகிக் கொண்டிருந்தாள் மித்ரா. அவளுக்கும் சந்தோஷுக்கும் ஒரு வாரத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் முதல் நாளே எடுத்து வைத்து விட்டிருந்தாள்.

 

பிறந்தநாள் விழாவன்று அணிந்துகொள்ள அவளுக்கு ஒரு சேலையும், மகனுக்குக் கோர்ட் சூட்டும் கூட எடுத்து வைத்தாயிற்று! அதற்குப் பொருத்தமாக நகைகளைத் தெருவு செய்துகொண்டிருந்தவளின் கண்களில் அங்கிருந்த தாலிக்கொடி பட்டது.

 

நெஞ்சம் சிலிர்க்க அதை எடுத்துத் தன் கைகளால் தடவிப் பார்த்தவளுக்குக் கண்ணைக் கரிக்க, நெஞ்சுக்குள் பாரம் ஏறிற்று! அந்தத் தாலியை ஊரைக் கூட்டியோ, உறவை கூட்டியோ அவன் கட்டவில்லை. ‘சுவெற்றா’வில் இருக்கும் அம்மன் கோவிலில் சத்யனும் வித்யாவும் மலர்கள் தூவி வாழ்த்த ஐயரின் முன்னிலையில் கட்டிய தாலிதான்.

 

இனம்புரியா படபடப்புடன் அவனையே பார்த்துக்கொண்டு நின்றவளின் விழிகளோடு தன் விழிகளைக் கலந்தபடி, மயக்கும் புன்னகையோடு அவளை நெருங்கி அந்தப் பொன் தாலியை அவன் அணிவித்ததும், அதை அணிவிக்கையில் அவனுடைய வலிமையான கரங்கள் மாலையிடுவது போன்று அவள் கழுத்தைச் சுற்றி வந்து கழுத்தோரங்களை உரசிச் சென்றதும், அதில் அவள் சிலிர்த்துப்போய் நின்றதும், அதை உணர்ந்து கொண்டவனின் விழிகளில் தென்பட்ட ரசனையிலும் விழுங்கும் பார்வையிலும் விடுபட முடியாமல் மூழ்கி நின்றதும் என்று அனைத்தும் கண்முன் ஓடின!

 

அதுமட்டுமன்றி, அவளின் நிலையை உணர்ந்தவனாய், தம்பியும் தங்கையும் நிற்பதைக் கூடப் பொருட்படுத்தாது ஒரு கரத்தால் அவளைச் சுற்றிவளைத்து தன் தோளோடு அணைத்துக் கொண்டவன் மறுகரத்தால் அவளது பிறை நெற்றியில் திலகமிட்டதும், சொந்தத்தோடு பார்த்துப் புன்னகைத்ததும் பசுமையாய் நினைவில் நின்று நெஞ்சை வதைத்தது.

 

எவ்வளவு அழகான தருணங்கள்! அனைத்துக்கும் அர்த்தமில்லாமல் போய்விட்டதே! அவ்வளவு அழகாக அவன் அணிவித்த தாலியை இப்போதெல்லாம் அவள் அணிவதில்லை. அதற்கான உரிமை அவளுக்கு இல்லையே!

 

ஆனால்.. பிறந்தநாள் விழாவின்போது? அணிவதா? வேண்டாமா? என்ன செய்வதென்றே தெரியவில்லை அவளுக்கு.

 

அன்று கபேடேரியாவில் வைத்து அவன் சொன்னதைத் தாங்கமுடியாமல் அவள் வந்துவிட்டபோதும், மாலையில் மகனைவிட வந்தவன், தணிவான குரலில் தன் நிலையைச் சொல்லிவிட்டுத்தான் சென்றான்.

 

அவர்கள் பிரிந்ததை யாருக்கும் காட்டிக்கொள்ளாமல் கணவன் மனைவியாய் பிறந்தநாள் விழாவின்போது நிற்கவேண்டும் என்றான்!

 

எல்லாம் சரிதான். ஆனால், நடைமுறை சிக்கல்கள் பல இருப்பதை அவன் உணர்ந்து கொண்டதாகவோ, அதைப்பற்றி யோசித்ததாகவோ தோன்றவில்லையே!

 

இதோ.. முதல் பிரச்சனையாகத் தாலிக்கொடி வந்து நிற்கிறது. சரி.. அங்கு வைத்து அவனிடம் கேட்டுக்கொள்ளலாம் என்றெண்ணி அதையும் எடுத்து வைத்துக்கொண்டாள்.

 

ஒருவழியாக அனைத்தையும் எடுத்துவைத்து, மகனையும் தயார் செய்துவிட்டு அவன் சொன்ன நேரத்துக்கு முன்னரே ‘நாங்கள் தயார்’ என்று மெசேஜ் அனுப்பினாள்.

 

அடுத்தப் பத்தாவது நிமிடத்தில் வந்து நின்றான் கீர்த்தனன். கம்பீரம் குன்றாது காரிலிருந்து இறங்கியவனிடம் சந்தோஷ் ஓட, தன் ‘பாக்’கை வைப்பதற்காகக் காரின் டிக்கியை திறக்கப் போனாள் மித்ரா.

 

அதை உணர்ந்து, “நீ காரில் ஏறு. நான் வைக்கிறேன்.” என்றவன், மகனை பின் சீட்டில் இருத்தி பெல்ட்டை மாட்டிவிட்டான். மித்ராவும் சந்தோஷுக்கு தேவையான உணவு, பழங்கள், ஜூஸ், டைப்பர் அடங்கிய சிறிய கூடையுடன் மகனின் அருகிலேயே பின்பக்கம் ஏறி அமர்ந்துகொண்டாள்.

 

அமைதியாகவே அவர்களின் பயணம் ஆரம்பித்தது. கீதன் அறியாது அவனுடைய காரின் சீட்டை தடவிப் பார்த்தவளின் உள்ளத்திலோ பெரும் உவகை. எத்தனையோ நாட்களுக்குப் பிறகு அவனுடைய காரில் அவள்!

 

நெஞ்சம் நிறைய வெளிப்புறம் பார்வையைத் திருப்பியவளின் புருவங்கள் சுருங்கின. கார் சுவிஸ் செல்லும் பாதையில் செல்லவில்லையே?

 

முன்பக்கக் கண்ணாடி வழியாக அவனைப் பார்க்க, அவன் புருவங்களும் சுளித்திருந்தன. ஏதோ கோபமாக இருக்கிறான்! சற்று நேரம் அமைதியாக இருந்தவள், கோபத்தில் பாதையைக் கவனிக்காமல் விட்டுவிட்டானோ என்றெண்ணி, “நாம் எங்கே போகிறோம்?” என்று மெல்லக் கேட்டாள்.

 

பதில் ஏதும் சொல்லாமல் அவனும் அவளைக் கண்ணாடி வழியாகப் பார்க்க, அந்தக் கூர் விழிகளை எதிர்கொள்ள முடியாமல், “இல்..லை.. அது பாதை வேறாக இருக்கிறதே என்றுதான் கேட்டேன். மற்றும்படி ஒன்றுமில்லை..” என்றாள் மித்ரா.

 

பதில் எதுவுமே சொல்லாமல் இருந்தவனின் முகம் கல்லாகவே இருந்தது. அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை அவள்.

 

மகனோடு அவள் செல்வது அவளின் கீதனோடு! அது எங்கானாலும் சரிதான்! அவனது மூச்சுக் காற்று உலவும் அந்தக் காருக்குள், அவனது அருகாமையில் இருப்பதே போதுமாக இருந்தது. முதன் முறையாக மகன், மனம் கவர்ந்தவன், அவள் என்று மூவருமாகச் செய்யும் பயணத்தை நெஞ்சுக்குள் ரசித்துக்கொண்டிருந்தாள், சற்று நேரத்தில் அதற்கு இடி விழப் போவது தெரியாமல்!

 

கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலப் பயணத்தின் பின் ஒரு வீட்டின் முன்னால் காரை நிறுத்திவிட்டு இறங்கிய கீதன், கைபேசியில் யாருக்கோ அழைப்பது தெரிந்தது.

 

சற்று நேரத்தில் ஒரு இளம் பெண் ‘ட்ராவல் பாக்’கினை ஒருகையால் பிடித்து இழுத்துக்கொண்டு, முகம் முழுவதும் மலர்ந்த புன்னகையும் விழிகளில் ஆர்வமும் மின்ன, கீதனை ஆசையும் ஆவலுமாகப் பார்த்துக்கொண்டு வருவதைக் கண்டவளுக்கோ நெஞ்சு காரணம் இன்றிப் பதைத்தது.

 

யாரிவள்? அவளின் கீதனை இதென்ன இப்படிப் பார்க்கிறாள்?

 

குழப்பத்தோடு மித்ரா பார்த்துக்கொண்டிருக்கக் கீதனை நெருங்கிய அவள், அவனோடு ஆர்வமாகக் கதைப்பதும் அவன் புன்னகை மன்னனாகப் பதில் சொல்வதும் தெரிந்தது.

 

அவ்வளவு நேரமும் அவளிடம் காட்டிய முகம் என்ன? இந்தப் பெண்ணிடம் காட்டும் முகம் என்ன? உள்ளக் குமுறலோடு மித்ரா பாத்திருக்க, கீதன் அவளின் பாக்கை வாங்கி டிக்கியில் வைப்பது தெரிந்தது.

 

அந்தப் பெண்ணோ வெகு இயல்பாக, எந்தத் தயக்கமும் இன்றிக் காரின் முன்பக்கக் கதவைத் திறந்து ஏறி அமர்ந்தாள்.

 

அன்றைய நாளின் அடுத்த அதிர்ச்சி! உரிமையோடு இப்படி அமரும் அளவுக்கு அவள் அவனுக்கு யார்..? அந்தப் பெண்ணே சொன்னாள்!

 

error: Alert: Content selection is disabled!!