மித்ராவை திரும்பிப் பார்த்துப் புன்னகைத்து, “ஹாய்..! நான் யமுனா..” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
அதிர்ச்சியில் நெஞ்சே அடைப்பது போலிருந்தது மித்ராவுக்கு. எதுவுமே சொல்ல முடியாமல்.. ஏன் தன்னுடைய அதிர்ச்சியை மறைக்கக் கூடத் தோன்றாமல் அவளையே வெறித்தவளின் விழிகளில், கீதன் வந்து காரில் அமர்வது பட்டது.
அவனாவது யமுனா முன்னுக்கு அமர்ந்திருப்பதைப் பார்த்து தன்னுடைய அதிர்ச்சியை அல்லது தயக்கத்தைக் குறைந்த பட்சமாக முகத்திலாவது காட்டியிருக்க அவள் மனம் கொஞ்சமேனும் ஆறியிருக்கும்!
ஆனால், அவள் அப்படி அமர்வதுதான் இயல்புபோல், வழமைபோல், வெகு சாதாரணம் போல் அவன் காட்டிக்கொண்டது ஊமையடியாய் அவள் நெஞ்சில் ஆழப் பதிந்தது.
அவனது மனைவியாக அவள் ஆட்சி செய்த இடம்! அந்த ஆட்சியை அவள் கேட்டதில்லை! கேட்கத் தெரிந்ததில்லை! அவனாக அவளுக்குக் கொடுத்தது!
சத்யன், வித்யா கேட்டால் கூட அது உன் அக்காவுக்கு மட்டுமே சொந்தமான இடம் என்று சொல்லித் தடுத்து விடுகிறவன், இன்று அவனே இன்னொரு பெண்ணை அதில் அமர்த்துகிறான், வெகு இயல்பாக!
அகன்ற விழிகளில் வேதனை துலங்க கீதனை வெறித்தாள் மித்ரா.
இன்று அவனுக்கு அவள் யாரோ தான்! அது என் இடம் என்று சொல்ல உரிமை இல்லைதான். இந்த யமுனாவை அவன் மணந்துகொள்ளப் போகிறான் என்பதும் தெரிந்ததுதான். ஆனாலும்.. ஆனாலும்.. தாங்க முடியாமல் காந்தியது நெஞ்சு.
என் இடத்தைப் பிடித்த இவள் யார்.. எப்படி நீ அதை அவளுக்குக் கொடுக்கலாம்.. உரிமையில்லை என்று தெரிந்தாலும் விழிகள் அவனிடம் கேள்வி கேட்கத் தவறவில்லை!
காரை இயக்கிக்கொண்டே எதேர்ச்சையாகக் கண்ணாடி வழியாக மித்ரவைப் பார்த்தவனும் ஒருகணம் அசைவற்றுத்தான் போனான்! அடுத்தக் கணமே வீதியில் பார்வையைப் பதித்துக் காரை இயக்கினான்.
“எத்தனை மணிக்கு அங்கிருந்து வெளிக்கிட்டீர்கள் தனா?”
“ஒரு.. ஒன்பது மணியிருக்கும்..”
தன் கையில் கட்டியிருந்த மணிக்கூட்டில் நளினமாக நேரத்தை பார்த்துவிட்டு, “ஓ.. விரைவாக வந்துவிட்டீர்களே..” என்றவள், “கவி வீட்டுக்கு போக எவ்வளவு நேரம் பிடிக்கும்?” என்று கேட்டாள்.
“ட்ராபிக் இல்லாவிட்டால் ஏழரை தொடக்கம் எட்டு மணித்தியாலம்.”
மித்ராவின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த சந்தோஷை திரும்பிப் பார்த்துவிட்டு, “உங்கள் மகன் வெகு அழகு தனா. இவனுக்கு எத்தனை வயது?” என்று கேட்டாள் யமுனா.
மகனின் நினைவில் அவன் இதழ்களில் புன்னகை அரும்பியது.
“மூன்றாகப் போகிறது..”
பின்னுக்கு ஒருத்தி இருப்பதே தெரியாமல் நடந்தது அவர்களின் பேச்சுக்கள். அதில் கலந்துகொள்ளவும் முடியாமல் கேட்டுக்கொண்டும் இருக்கவும் முடியாமல் நெஞ்சு குமுறியது.
தொடர்ந்த பேச்சிலா அல்லது தொண்டை வறண்டதாலா கீதன் சற்றே தொண்டையைச் செருமினான். காலடியில் கிடந்த தண்ணீர் போத்தலை எடுத்து மூடியை திறந்து அவனிடம் நீட்டினாள் யமுனா.
நன்றி சொல்வதற்கு அடையாளமாய் அவளைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு ஒரு கையால் அதை வாங்கிப் பருகிவிட்டு திரும்பவும் அவளிடம் நீட்டினான் அவன். அதை வாங்கி மூடிவிட்டுக் காலடியில் திரும்ப வைத்துக்கொண்டாள் யமுனா.
சாதாரணச் செயல்தான்! ஓட்டுனரின் அருகில் யார் இருந்தாலும் செய்யும் ஒரு உதவிதான்!
ஆனால், இவளுக்குக் காந்தியது!
மனைவியாய் அருகிலிருந்து அவள் செய்யவேண்டிய ஒன்றை இன்னொருத்தி செய்வதைப் பார்க்க முடியவில்லை! அதைச் சாதரணமாக எடுக்க முடியவில்லை!
அதுவரை தூக்கத்தில் இருந்த சந்தோஷ் மெல்ல விழித்துக்கொண்டு சிணுங்கினான். எப்போதும் மகன் சிணுங்கினால் துடிப்பவளுக்கு இன்று அது பெரும் ஆறுதலாய் இருந்தது. அப்போதாவது முன்னே இருப்பவர்கள் பேச்சை நிறுத்துவார்களே!
“சந்தோஷ் குட்டி தூங்கி எழுந்துவிட்டானா? அம்மா ஜூஸ் தரட்டுமா..” என்று பாசத்தோடு பேச்சுக் கொடுத்தபடி அவன் தலையைத் தடவிக்கொடுத்தாள் மித்ரா.
தூக்கம் கலைந்த சினத்தில் மறுப்பாகத் தலையை அசைத்து இன்னும் சிணுங்கினான் அவன்.
மகனின் பசியை அறிந்து, “சாப்பாடு தரவா செல்லம்..” என்று அவள் கேட்க, அதையும் மறுத்தவனின் சிணுங்கல் அழுகையாக மாறத் தொடங்கியிருந்தது.
அதைக் கவனித்துவிட்டு, “சந்துக்குட்டி ஏன் அழுகிறான்? அவனுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான் கீதன்.
தகப்பனின் குரல் கேட்டதும் கைகள் இரண்டையும் தூக்கியபடி அவனிடம் போகவேண்டும் என்று அடம்பிடித்தான் குழந்தை.
“இல்லை கண்ணா. அப்பா கார் ஓடுகிறார் இல்லையா. நீ பிறகு அப்பாவிடம் போகலாம். இப்போது சாப்பிடுவாயாம்..” என்று அவனைத் தேற்றி உணவைக் கொடுக்க முயன்றால், அவனோ அப்பாதான் வேண்டும் என்று நின்றான்.
அடுத்து வந்த பெட்ரோல் செட்டுடன் கூடிய பார்க்கிங்கில் காரை பார்க் பண்ணிவிட்டு, இறங்கிவந்து மகனைத் தூக்கிக்கொண்டான் கீதன்.
அப்போதுதான் அவன் அழுகையும் கொஞ்சம் அடங்கியது.
மகனுக்குப் பசிக்குமே.. இப்போதே உணவைக் கொடுத்துவிட்டால் நல்லதே என்று யோசித்தபடி, சின்ன டப்பாவில் அடைத்து எடுத்து வந்திருந்த அவனது உணவை ஊட்ட நினைத்தவளுக்கு அடுத்தப் பிரச்சனை வந்து நின்றது.
தகப்பனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் தோளில் முகத்தைப் புதைத்திருந்தான் மகன். யமுனாவோ சந்தோஷோடு கதைக்கிறேன் பேர்வழி என்கிற சாட்டில் கீதனின் அருகில் நின்றிருந்தாள்.
இதில் இவள் உணவூட்டுவது என்றால் அவர்களின் அருகில் செல்லவேண்டும். யமுனாவின் அருகில் செல்ல இவளுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவள் அருகே செல்வது அவனுக்குப் பிடிக்காதே.
உணவை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாது விழித்தவளின் நிலை அவளுக்கே மிகப் பரிதாபமாக இருந்தது. “சந்தோஷ்..! அம்மாவிடம் வா. சாப்பிட்டுவிட்டு திரும்ப அப்பாவிடம் போவாயாம்.” என்று அழைத்தாள்.

