KK – 12 (1)

12
மைத்துனன் ஆதவனின் திருமணம், அதோடு, எல்லாம் சரியாக வந்தால் தனக்கும் பெண் பார்த்து முடிவு செய்துவிடலாம் என்ற எண்ணத்தோடு இலண்டனிலிருந்து வந்திருந்த சேந்தனோ, இன்று என்ன மனநிலையில் இருக்கிறான்? அப்படி அவனை நிலையில்லாது தவிக்க வைத்த கவினியோ, தன் வேலையில் குறியாகச் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தாள்.

வெளிச்சம் நிகழ்ச்சிக்காக, அன்று தெரிவாகியிருக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பமான திரேசா அம்மா வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.

வாகனத்தை நிறுத்திவிட்டுச் சிறிது தூரம் நடந்தபடி அச்சிறிய குடியிருப்புப் பகுதியைப் படம் பிடித்துக் கொண்டார்கள். வானம் கிழிந்து விட்டதோ என்றளவில் பெய்து தீர்த்திருந்த மழையின் கைங்கரியம், குட்டை குட்டையாகத் தேங்கி நின்ற நீர் மட்டுமின்றி, ஒழுங்கான நடைபாதையில்லாத அப்பகுதி சேறும் சகதியுமாக இருந்தது. சட்டென்று பார்க்கையில் ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியின் தோற்றம் போலிருந்தது.

அந்தச் சுற்றத்தில் பதினைந்து குடும்பங்கள் வசிக்கிறார்களாம். ஏற்கனவே வந்து ஒன்று விடாது ஆராய்ந்திருந்த அவர்களின் களப்பணியாளர் குழுவின் அறிக்கை சொன்னது.

அங்கு வசிக்கும் இளம் பெண்கள் பெரும்பாலும் பதினைந்து பதினாறு வயதில் திருமணம் செய்திருந்தார்கள். இப்போது சிலர் இருபதுகளின் இறுதியில், சிலர் முப்பதுகளின் ஆரம்பத்தில் இருந்தாலும் அவர்களுள் இருந்த பொதுத்தன்மை, கணவர்மார்களை இழந்து நின்றார்கள். போராட்டத்தில் வீரமரணம், விபத்து, தற்கொலை போன்ற அகால மரணம், அரசால் காணாமல் ஆக்கப்பட்டோர் என்று, தம் குடும்ப ஆண்களை தாரை வார்த்துவிட்டு அபலைகளாக நின்றார்கள்.

சாதாரணமானதொரு வாழ்வு வாழ்ந்திட மாட்டோமா என்ற மிகப்பெரிய பேராசையோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அங்கவீனம் என்பது மிகச் சாதாரணமாக இருந்தது. நோயும் பிணியும் வறுமையோடு போட்டி போட்டுக்கொண்டிருந்தது. வயதான பெற்றோரோடு இரண்டு, மூன்று, நான்கு சிலர் ஐந்து பிள்ளைகளுக்குத் தாய்.

மழை வெள்ளத்தால் நடந்து வருகையில் கழட்டிக் கையில் பிடித்திருந்த காலணிகளை அணிந்துகொண்டாள், கவினி.
தான் தயார் என்று கண்ணாலே சைகை காட்டியவள், தொண்டயைச் செருமிவிட்டு இயல்பாகக் கதைக்க ஆரம்பித்திருந்தாள்.

“நீண்ட போர், அதன் வலிமிக்க அடையாளங்களாக எம்மில் எத்தனை எத்தனையோ பேர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுடைய ‘வெளிச்சம்’ நிகழ்வில், பலர் தம் வாழ்க்கையைப் பகிர்ந்திருக்கிறார்கள். அதுபோலவே, போர் ஏற்படுத்திய கொடும் வலிதரும் அடையாளமாகவே, இந்தச் சுற்றத்தில் வாழ்கிற பதினைந்து குடும்பங்களையும் சொல்ல வேண்டும்.

போர் நிறைவுற்று பதினான்கு ஆண்டுகள் முடிவுற்றும் இவர்கள் வாழ்வு மட்டும் ஊசலாடிக்கொண்டே இருக்கிறது. தெருவில் அநாதரவாக, பசிக்கொடுமையோடு அலைந்து திரியும் நாய்க்கு, எச்சில் இலையே அதிகம் என்ற வகையில் அரசால் கிடைக்கும் உதவிகள் வெறும் கண்துடைப்பாகவே இருந்து வருகிறது.

இல்லாமையும் உடல் உபாதைகளும் திறவுகோள்களாக இருக்க, இந்த எளிய மக்களின் நாளாந்த வாழ்வின் ஒவ்வொரு கணமும் மிகவும் கனமானதாகக் கடந்து செல்கின்றன. இதையெல்லாம் என் வார்த்தைகளால் சொல்வதைவிட நீங்களே நேரில் பாருங்களேன்!”

கணீரென்ற கனத்த குரலில் சொன்னபடி, நான்கு பனம்கருக்கு மட்டைகள் மட்டும் தொங்கி நிற்க, படலை என்றபெயரில் அரைகுறையாகத் தொத்தி நின்றதை அருகில் சரித்து வைத்துவிட்டு உள்ளே நடந்தாள், கவினி. பின்னால் படபிடிப்புக் குழு.

“வாங்கோ தம்பிமார், தங்கச்சி வாங்கோ ஆச்சி!” காவியேறிய பற்கள் தெரியச் சிரித்தபடி ஓடி வந்து வரவேற்றார், திரேசா அம்மா.

ஒட்டி உலர்ந்து நின்றவர் வாய் நிறைய வெற்றிலை , கழுத்தில் கறுப்புச் செபமாலை, கரங்கள் இரண்டிலும் கறுப்புக் கண்ணாடிக் காப்புகள் , மூளியான நெற்றியும் சோணைகளும், கசங்கிய வெளுத்த பற்றிக் சோட்டி, நைந்து சுருங்கிக் கிடந்த அக்கோபா பாவாடை…கண்களிலோ வயோதிபத்தை எதிர்க்கும் சவால்!

ஒளிப்படக் கருவி, அவரை ஆழ்ந்து உள்வாங்கிக்கொண்டது. சற்றே வெட்கத்தோடு நெளிந்தார்.

“குடிக்கச் சோடா வாங்கச் சொல்லவோ?” உண்மையில் ஒற்றைச் சதம் இல்லை, இருந்தபோதும் விருந்தோம்பல் செய்தார். மறுத்துவிட்டாள், கவினி.

“அதெப்பிடி வீட்டுக்கு வந்திட்டுச் சும்மா போவீங்களோ?” உரிமையாகக் கேட்டார்.

“சரி, வெளிக்கிடேக்க ஏலும் எண்டா வெறுந்தேத்தண்ணி தாங்கோம்மா. இப்பக் கதைப்பமா? உங்களுக்கு எத்தினை வயது?” தாமதியாது, வந்த வேலையை ஆரம்பித்திருந்தாள், அவள்.

“சொன்னால் நம்ப மாட்டீங்கள் தங்கச்சி, எழுபத்தி ஒன்பது.” வாயைப் பொத்தி முறுவலித்தார், திரேசா. சற்றே நெளிந்து வளைந்து அவர் வெளிப்படுத்திய வயோதிக வெக்கம் பார்க்கையில் அவ்வளவு ரசனையாக இருந்தது. ஆழ்ந்து பார்ப்போரின் விழிகளில் கசிவை உருவாக்குவதாகவும். ஒளிப்படக்கருவியின் கண் அவரின் ஒரு ஒரு அசைவையும் பொத்திப் பிடித்துக்கொண்டது.

“உண்மையாவா? ஐம்பது எண்டுதான் சொல்லலாம்.” கண்ணடித்தபடி சொன்னாள், கவினி. படப்பிடிப்புக் குழுவினர் சிரித்தார்கள். திரேசா அம்மாவும் சேர்ந்து வாய்விட்டுக் கெக்கலி கொட்டிச் சிரித்தார்.

 

error: Alert: Content selection is disabled!!