‘ராவணா நீர்வீழ்ச்சி’, இலங்கை நாட்டின் அகன்ற நீர்விழ்ச்சிகளில் ஒன்று. Nine Arch Bridge இலிருந்து பதினைந்து நிமிடங்களும் பிடிக்காது. ஏற்கனவே திட்டமிட்டபடி அவர்கள் பயணம் அதை நோக்கியதாக இருந்தது.
கூட்டமாகக் கலகலவென்று வந்தவர்கள் இருவர் மூவராக நின்று தீவிரமாகக் கதைவழிப்படுவது என்னவென்று தெரியாவிட்டாலும் தன் கடமையைச் செய்ய வேண்டுமே என்று, சாரதிதான் அவர்களைக் கிளப்பியிருந்தார்.
உயர்ந்த பகுதிப் பயணமாச்சே! செவிகளில் அடைப்பு, அதை விடவும் ஒவ்வொருவர் மனங்களிலும் ஒவ்வொரு வகை உணர்வு. வாகனத்தில் அவ்வளவு இறுக்கம். சாரதி தன்பாட்டில் அச்சுற்றம் பற்றி விளக்கிக்கொண்டே வாகனமோட்டினார்.
சேந்தனுக்கு கவினியைப் பிடித்திருக்காம். செய்தி அவர்களுள் பரவி விட்டிருந்தது. ஏற்கனவே விசயமறிந்த இனிதன் பார்வை, முகமிறுக அமர்ந்திருந்த நிவேதாவில். காதல் என்றதும் எதிர்ப்போ முணுமுணுப்போ இல்லாது ஏற்கப்படுவது இன்னமும் அரிதான விடயம்தான். சிறிது கால அறிமுகமே என்றாலும் சேந்தனில் இருந்த நம்பிக்கை அவனை மகிழ்ச்சி மட்டுமே கொள்ள வைத்தது. கவினிக்கு அழைத்துக் கதைக்க வேண்டும் போலிருந்தது. தாயிடம் இந்த விடயத்தைப் பகிர்ந்து கொள்ளவும் துடித்தான். அங்கிருந்த இறுக்கமான சூழ்நிலை ‘அமைதியா இரடா தம்பி’ என்று, அதட்டல் போட்டதில் ஏற்கனவே வந்த இடமாக இருந்தாலும் சாரதியிடம் சந்தேகங்கள் கேட்டபடி வந்தான்.
பூங்குன்றனின் மனநிலையைக் கேட்கவே வேண்டாம். வாணன் தான் அவளுக்கு என்று மனைவி அடிக்கடி சொல்வதுண்டு. அவருக்கும் வாணனில் நல்ல மரியாதையுண்டு. பிரயாசையானவனும் கூட. கவினிக்கு விருப்பம் இருந்தால் மறுக்கக் காரணம் இல்லை. ஆனால், அவளோ, மிக நல்ல நண்பன் என்றுதான் அறிமுகம் செய்து வைத்திருந்தாள். இன்றளவில் அதே நிலைப்பாடுதான் என்பது அவருக்கு நன்கு தெரியும். இருவருள்ளும் சகோதரங்கள் போன்ற பிணைப்பை உணர்ந்தும் இருக்கிறார். ஏன், சாரல் கூட தம்பி இல்லை என்ற குறையைத் தீர்க்க வந்திருக்கிறீர் என்பாள்.
பெரியவள் திருமணம் முடியவிட்டுத் தாமதிக்காது சின்னவள் திருமணத்தைப் பற்றிப் பார்க்க வேண்டும் என்று மட்டும் முடிவெடுத்திருந்தார்.
அப்படியிருக்கையில், இவ்வளவு நாள் இலங்கையில் இருந்தும் இங்கு வருவது இதுதான் முதல் தடவை என்று யோகனிடம் சொன்னபடி, அந்த ஒன்பது வளைவுகள் கொண்ட பாலத்தையும் அதன் சுற்றத்தையும் ரசித்துக்கொண்டு நின்றவர், “அங்கிள் ஒரு விசயம்.” என்றபடி, சேந்தன் வந்து கரங்களைப் பற்றிக்கொள்ளவும் முறுவலோடு ஏறிட்டிருந்தார்.
யோகன் பார்வையும் மருமகனில்.
“அங்கிள்… எனக்கு உங்கட மகள் கவினியப் பிடிச்சிருக்கு!” அவர் விழிகளையே பார்த்தபடி அவன் சொன்னதை மட்டும் அவர் எதிர்பார்க்கவில்லை.
அந்தக் காலைப்பொழுதும் சூழ்ந்திருந்த இயற்கை யௌவனமும் கம்பீரமாக விருப்புரைத்த சேந்தனும் அவரை அளவில்லாத மகிழ்வில் ஆழ்த்தி விட்டார்கள். அவ்வளவு இலகுவில் உணர்வுகளை வெளிக்காட்டிடாதவர் கண்கள் கூடக் கலங்கிப் போயின. சரேலென்று திரும்பி யோகனைப் பார்த்திருந்தார்.
அவரோ, மருமகனையே பார்த்தபடி நின்றிருந்தார். கவினியில் அவருக்கு எந்தவிதமான மனச்சுணக்கமும் இல்லை. அருமையான கெட்டிக்காரப்பிள்ளை. ஆனால், நிவேதா? திரும்பிப் பார்த்தார். கோபத்தை வெளிப்டையாகக் காட்டியவாறு நின்றிருந்தார், அவர் தங்கை.
பூங்குன்றனுமே மனைவியைப் பார்த்தார். முகமிறுக விமலாவின் கரத்தைப் பற்றியபடி நின்றிருந்தார், மதிவதனி.
தன் பதிலுக்காகக் காத்திருக்கும் சேந்தனைப் பார்த்தவர், “கவினிட விருப்பத்துக்கு நான் எப்பவுமே முட்டுக்கட்ட போட்டதில்ல தம்பி. இது எவ்வளவு மகிழ்ச்சியான விசயம், பயணம் முடிஞ்சு போய்க் கதைப்பமே. பிள்ளையும் வந்திரட்டும்.” மனத்துள் நிறைந்த ஆனந்தத்தை கட்டுப்படுத்திக்கொண்டு நிதானமாகவே சொல்லியிருந்தார்.
நிவேதா, விசுக்கென்று அருகில் வந்திருந்தார். மனத்தில் கனன்ற கோபம் அவர் கட்டுப்பாட்டை மீறியிருந்தது.
“அண்ணா, அவன் தான் அலட்டல் கதை கதைக்கிறான் எண்டா நீங்க என்ன சொல்லுறீங்க? ஆதினிக்கு , அவவிட குடும்பத்துக்கு நாங்கள் நம்பிக்கை குடுத்திருக்கிறம். உங்களுக்கு அதெல்லாம் தெரியாதோ?” அடிக்குரலில் கேட்டவர் உடல் மொழியே அவர் விருப்பின்மையை பூபாலனுக்கு எடுத்துரைத்திட்டு. என்ன பதில் சொல்வார்? அவரை யோசிக்க விடாது தொடர்ந்தார், நிவேதா.
“அல்லது உங்கட மகளப் பற்றித்தான் தெரியாதோ? கொள்ளிக்கட்டையால தலை சொறிய நான் ஒண்ணும் மென்டல் இல்ல. தேவையில்லாமல் விசர்க் கதைகள் கதைக்காதீங்கோ சரியோ!” என்றுவிட்டுக் கோபத்தோடு மகனைப் பார்த்தார். அவன் வாய் திறக்க முனைய அனுமதிக்காது சீறினார்.
“உனக்கு நாங்க வேணும் எண்டா இப்பவே இந்த இடத்திலயே இந்தக் கருமம் பிடிச்ச நினைப்புக்கு முழுக்குப் போட்டிரு சேந்தன் ! அவ்வளவும் தான் சொல்லுவன். சொந்தத் தாயே அந்தப் பிள்ளேட குணநலன் பற்றி எங்களிட்டச் சொல்லி இருக்கிறா. தன் மூப்பும் பிடிவாதமும் நான் எண்ட அகங்காரமும் குடும்ப வாழ்க்கைக்குச் சரிவராது சேந்தன். தள்ளி நிண்டு பாராட்ட மட்டும் தான் அதெல்லாம் சரிவரும். பிறகு நீ நிண்டு பிக்கல் பிடுங்கல் பட்டால் எங்களுக்கும் தான் துன்பம்.” மூச்சுவிடாது பொரிந்தவர் விசுக்கென்று விலகிச் சென்றுவிட்டார்.
முகத்தில் செருப்பால் அடி வாங்கிய உணர்வில் வேரோடிப் போயிருந்தார், பூங்குன்றன். அதுவும் அவ்வளவு பேர்கள் முன்னால் நிவேதாவின் பார்வையும் உடல் மொழியும் துப்பிய வார்த்தைகளும் அவரைக் குன்றிப் போக வைத்திருந்தது. அண்ணா என்றதற்கு மேல் கதைக்காதவர், இன்று? பயங்கரமாகச் சினம் கொண்டார். யாரில்?
சரேலென்று திரும்பி மனைவியைப் பார்த்தார். சூனியக்காரி போல் தெரிந்தார். விடுவிடுவென்று அவரை நோக்கி நடந்தார், பூங்குன்றன்.
“பெத்த பிள்ளைக்குத் தாய் வாங்கிக் குடுத்திருக்கிற பெயர்கள் என்ன என்ன? என்ர அம்மாவில நீ வச்ச வஞ்சத்தத் தீர்க்க நீ பெத்தெடுத்த பிள்ளையப் பலியாக்கிட்டியே! மனிசப் பிறப்பா நீ! இதோட உனக்கும் எனக்குமான தொடர்பு அறுந்து போயிற்று!” வார்த்தைகளைத் துப்பியவர், மனைவியை அந்தத் தண்டவாளத்தில் வீழ்த்தி உழக்கிவிடும் ஆத்திரம் உந்தித் தள்ள, கையோங்கி விட்டார்.
ஒரு புறம் இனிதன், மறுபுறம் சேந்தன் பிடித்து நிறுத்தாவிட்டால் அறைந்து தள்ளியிருப்பார். தங்கையைக் கோபமாகப் பார்த்தார், யோகன்.
“கதைக்க முதல் என்ன ஆரோட கதைக்கிறம் எண்டு யோசிச்சுக் கதை நிவி!”என்றபடி, பூங்குன்றனை நோக்கி வந்தார்.
“போற வாறவே எல்லாம் பாக்கினம் மாமா. தயவு செய்து கொஞ்சம் கோவப்படாதீங்க!” என்றுகொண்டு நின்றான், இனிதன்.
உண்மையில் நிற்கும் இடம் எல்லாம் அவர் நினைவில் இல்லவே இல்லை. மனைவியை அப்படியே போட்டு மிதித்துவிடும் உணர்வில் கொந்தளித்தவர், “கைய விடு இனிதன், இவள்… இவளால கண்ட கண்டதுகளும் என்ன வார்த்தை சொல்லினம் பாத்தியோ!” குரல் கமறியது அவருக்கு.